களத்திற்கு வராதது அதிமுகவின் தற்கொலை முயற்சி!

-சாவித்திரி கண்ணன்

எடப்பாடி பழனிச்சாமியின் ஆளுமை ஆட்டம் காண்கிறதா? கட்சியினரின் ஒத்துழைப்பை பெற முடியவில்லையா? எதிர்த்து களம் காணும் ஆற்றல் அறவே போனதா..? விக்கிரவாண்டி களத்தில் இல்லாத அதிமுகவின் பின்வாங்கல் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் என்ன? ஆதாயம் யாருக்கு? சேதாரம் யாருக்கு? 

ஆளும் கட்சியின் அதிகார அத்துமீறல் நடக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் ஒரு அத்துமீறல் நடக்குமானால், அதை எதிர்த்து போராட மக்கள் எதிர்கட்சியைத் தானே எதிர்பார்ப்பார்கள்!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் விக்கிரவாண்டி இடைத் தேர்தலை பிரதான கட்சியான அதிமுக எதிர்கொள்ளாமல் பின்வாங்கி இருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களிடமும், ஆதரவாளர்களிடமும் பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாரில்லை! நான் முதலமைச்சராக வாய்ப்புள்ள தேர்தலில் மட்டுமே எனக்கு அக்கறை என ஒரு பிரதான எதிர்கட்சியின் தலைவர் பின்வாங்கினால், அவரது வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு சக்தி அங்கே தானாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் என்பதே யதார்த்தம்.

திமுக பணத்தை வாரி இறைக்கும் என்றால், அதை இந்த ஒற்றைத் தொகுதியில் எதிர்கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கியஸ்தர்களுக்கு முடியாதா என்ன?

ஆளும் திமுக அரசுக்கு எதிரான அதிருப்திகள்!

மூன்றாண்டு காலத் திமுக ஆட்சியில் மூச்சு முட்டுகிறது. மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் அரசு கஜானாவில் இருந்து அள்ளி வீசப்படும் சில துளிகளைக் கொண்டு மக்களை தங்களின் நிரந்தர வாக்காளர்களாக வைத்துக் கொள்ள முடியும் என திமுக நம்புகிறது! ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அள்ளி இறைக்காதையா ஸ்டாலின் இறைத்துவிட்டார்! இன்றைக்கு அந்தக் கட்சியின் நிலை என்ன? மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு அவமானகரமான தோல்வியை கண்டுள்ளது.

உண்மை என்னவெனில், அரசு வேலையை எல்லாம் ஒப்பந்தக் கூலி முறையாக்கி காண்டிராக்ட், கமிஷன் என போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துனர் தொடங்கி சுகாதாரத் துறை துப்புறவு தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் வரை வேலை வாய்ப்பிற்கு வேட்டு வைத்திருக்கிறது திமுக அரசு.

நகரமயமாக்கம் எனச் சொல்லி கிராமங்கள், நீர் நிலைகள், வயல்வெளிகளை விழுங்கி செறித்து கார்ப்பரேட் கால்களில் தாரை வார்த்து வருகிறது திமுக அரசு. தற்போது அதானி, அம்பானிகளின் வேட்டைக் காடாக தமிழகம் மாறி நிற்கிறது! தற்போது இதை அம்பலப்படுத்தவோ, எதிர்க்கவோ ஆளற்ற நிலை நிலவுகிறது.

இது மட்டுமின்றி, ஓவ்வொரு துறையிலும் ஊழல் தலை விரித்தாடுவதும், இயற்கை வளம் சுரண்டப்படுவதும், குடும்ப நலனை முன்னிறுத்தி மருமகனின் ரியல் எஸ்டேட் நிறுவனம் தமிழ் நிலப்பரப்பின் பெருமளவு நிலங்களை அபகரித்து வருவதும் அனைவரையும் வருத்தம் கொள்ள வைத்துள்ள ஒரு காலகட்டத்தில் எதிர்கட்சியான அதிமுக எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் கிடப்பதோடு, எதிர்வரும் இடைத் தேர்தலையும் புறக்கணிக்கிறது என்றால், அது அரசியல் கட்சியாகவே இயங்க லாயக்கற்றுவிட்டது என்று தான் பொருள்!

அதிமுகவை அடிமை கட்சி என்று சொன்ன திமுக இன்று சகல துறைகளிலும் பாஜகவின் மக்கள் விரோத சட்ட திட்டங்களை அமல்படுத்தி வருவது கண்டு சண்ட மாருதம் செய்யத் துணிவில்லாத அதிமுக இடைத் தேர்தலை எதிர் கொள்ளத் தயங்குவது ஆச்சரியமல்ல.

இத்தனைக்கும் விக்கிரவாண்டித் தொகுதியில் அதிமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது என்பதற்கு கடந்த காலத் தேர்தல்களே சாட்சி!

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவிற்கும், அதிமுகவிற்குமான வாக்கு வித்தியாசம் வெறும் 4 சதவிகிதம் தான்! பிறகு 2019 இடைத் தேர்தலில் அதிமுக திமுக வேட்பாளரை 44,924 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவுக்கும் அதிமுகவிற்குமான வாக்குகள் வித்தியாசம் 9,573 தான். அதே சமயம் தற்போது நடந்த நாடளுமன்றத் தேர்தலில் திமுகவின் பலமான கூட்டணியை எதிர்த்து பாமகவின் கூட்டணி இல்லாமலே போட்டியிட்ட அதிமுக 6,823 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் பாஜக எதிர்ப்பு என்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு திமுக கூட்டணிக்கு வாக்களித்த நிலையிலேயே அதிமுகவானது வெற்றிக்கு நெருக்கமாக வாக்குகள் பெற்றுள்ளது என்ற நிலையில், சட்டமன்ற இடைத் தேர்தலில் மாநில ஆட்சிக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்த மக்களுக்கு ஒரு வடிகால் வேண்டாமா..?

இந்த தொகுதியைப் பொறுத்த அளவில் பாமகவிற்கு ஒரு இருபதாயிரம் ஓட்டுகள் இருக்கின்றன. அவ்வளவே! பாஜகவிற்கோ 2016 வாங்கிய வாக்குகள்படி 072% வாக்குகளே உள்ளன! அதாவது ஒரு சதவிகிதம் கூட பாஜகவிற்கு வாக்கு வங்கி இல்லை. எனவே, பாஜக-பாமக கூட்டணி ஒரு போதும் வெற்றி பெற முடியாது. நாம் தமிழருக்கான வாக்கு வங்கியும் எட்டு சதவிகிதத்துடன் நிற்கிறது. ஆகவே, அந்தக் கட்சியும் வெற்றி பெற முடியாது. அப்படி இருக்க, அதிமுக நின்றால் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள கட்சியாக மக்கள் நம்பி ஓட்டு போடுவார்கள்!

அதிமுக நிற்காவிட்டால்..!

அதிமுக நிற்கவிட்டால், திமுக ஆட்சிக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிப்படுத்த மக்கள் பாமகவையும், நாம் தமிழரையும் நம்பி வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை. பாஜக-பாமக கூட்டணி நோக்கி மக்கள் செல்ல வாய்ப்பு உருவாக்கித் தருவது என்பது சாதி, மத ஆதிக்கம் தமிழகத்தில் வளரவும், காலூன்றவும் செய்யும் உதவியாகவே கருதப்படும். அதிமுக நிற்காததால், இன்னும் சிலர் வாக்குச் சாவடி சென்று ஜனநாயக கடமை ஆற்றுவதையே தவிர்க்கக் கூடும். இதுவும் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

# தமிழகத்தில் அதிமுகவின் இடத்தை அபகரிக்க பாஜக படிப்படியாக காய் நகர்த்தும் சூழலில்,

# திமுக எதிர்ப்பில் அதிமுகவை விட தானே சாம்பியன் என்று பாஜக தன்னை முன் நிறுத்திக் கொள்ளும் சூழலில்,

# 2026 தேர்தலில் பாமகவை தன் அணிக்கு கொண்டு வருவதற்கான அஸ்திரமாக இந்த தேர்தலில் தன் பலத்தை அதிமுக காட்டி மிரட்ட வேண்டிய சூழலில்,

# ஒ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் பாஜக தயவில் பம்மி இருக்கும் சூழலில்,

அதிமுகவும், இரட்டை இலைச் சின்னமும் களத்தில் இருக்காது என்பது அறுபதடி பள்ளம் தோண்டி அதில் அதிமுகவை ஆழப் புதைப்பதற்கு சமமான காரியமாகும்.  கட்சியை வழி நடத்தும் ஆற்றல், எதிர்ப்புகளை எதிர் கொள்ளும் ஆற்றல் எடப்பாடி பழனிச்சாமிக்கு இல்லை என்பதை இந்த தேர்தல் களத்திற்கு வர மறுப்பது நிருபித்து விடும். குறிப்பாக பாஜகவை எதிர்க்கும் துணிச்சலை எடப்பாடி பழனிச்சாமியிடம் இனி எதிர்பார்க்க முடியாது என்பதை இந்த விலகல் உணர்த்துகிறது.

அதுவும் சி.வி.சண்முகம் போன்ற ஒரு துணிச்சலான தளபதி கோலோச்சும் இடத்தில், துள்ளி எழிந்து அதிமுக தொண்டன் களப் பணி ஆற்றக் காத்திருக்கும் வேளையில், அதிமுக பின்வாங்குவது கோழைத்தனமாகவே கருதப்படும்.

”மேலிடத்து மிரட்டலே அதிமுகவின் பின் வாங்கல்” என்றார், ப.சிதம்பரம். இந்தப் பழியை, அவமானத்தை துடைக்கத் துணிவில்லை என்றால், அதிமுக இருப்பதை விட இறப்பதே மேலாகும்.

வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அப்புறம்! போராட்டக் களத்தில் நான் எப்போதும் நிற்பேன் என்பது தான் மக்கள் நலன் காக்க விரும்பும் ஒரு பிரதான எதிர்கட்சியின் நோக்கமாக இருக்க முடியும். போராடித் தோற்றால் தான் என்ன? இழப்பதற்கு சம்மதிக்காதவன் எதையும் பெறுவதற்கு தகுதியற்றவனாகி விடுவான் என்பதே யதார்த்தம். அரசியலுக்கே தகுதியற்ற கட்சியாகப் போகிறதா அதிமுக..?

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time