டிரம்பை ஆதரித்தவர்கள் யார்?

சாவித்திரி கண்ணன்

இன்னும் கூட தன் தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் சட்ட போராட்டம் நடத்தப் போவதாக சொல்கிறார்…! அகில உலகமும் ஒரு உண்மையை ஒப்புக் கொண்ட போதும் அதை தான் மட்டும் ஏற்க முடியாது என்று டிரம்ப் பிடிவாதம் காட்டுகிறார் என்றால், அது ஏதோ அவர் இப்போது தான் அப்படி சொல்வதாக நினைத்து விடக் கூடாது!

அவருடைய கடந்த கால வரலாறுகளை பார்த்தால், அது, ’தான் திருடன் பிறரை நம்பான் கதை’யாகத் தான் இருக்கிறது!

’’பிராடுத்தனம் என்பது ரொம்ப,ரொம்ப பொதுவானது, சகஜமானது தானே..’’ என்பது தான் டிரம்ப் வாயிலிருந்து அடிக்கடி வெளிவரும் சொல்லாகும்!

ஒரு கிரிமினல் கண்ணுக்கு மகாத்மா காந்தியைக் கூட கிரிமினலாக மட்டுமே பார்க்க முடியும். அவன் மனது அப்படியே சிந்தித்து பழக்கப்பட்டது தான் காரணம்!

டிரம்ப்பின் இயல்பே அடாவடித்தனமாக உண்மையை ஏற்க மறுப்பது தான். ஒபாமா வெற்றிபெற்ற போது, ஒபாமா ஒரு அமெரிக்கனே கிடையாது. அவர் வெற்றியை ஏற்க முடியாது’’ என்றார்! இது அவரது கடந்த காலத்தை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்! 2016 ல் குடியரசுக் கட்சிக்குள் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கு இவரோடு மோதியவர் டெட் குஷ் என்பவராவார். லோவா என்ற இடத்தில் தன்னைக் காட்டிலும் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன என்பதை அறிய வந்த போதும் இப்படித்தான், ‘’லோவா, டெட் குஷாவினால் திருடப்பட்டுவிட்டது’’ என்று சொந்த கட்சிக்காரனையே பழித்தார். அதே போல 2016-ல் அதிபருக்கான பொது தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹீலாரி கிளிண்டன் பிரதிநிதிகள் ஓட்டுகளை பெறுவதில் தோல்வியடைந்தாலும், டிரம்பைக் காட்டிலும் அதிக மக்கள் ஹீலாரி பெற்றிருந்தார். அப்போதும் ’குருக்குடு’ஹீலாரி என்று அவதூறாகப் பேசினார்!

அதே ஸ்டைலில் தான் இப்போதும் பேசிவருகிறார். அண்டப் புளுகன்,ஆகாசப் புழுகன் வரிசையில் தற்போது அமெரிக்க புழுகன் டிரம்ப்பும் இடம் பெற்று விட்டார்!

ஈக்கு விஷம் தலையில்! தேளுக்கு விஷம் நாக்கில்! டிரம்புக்கு விஷம் நாக்கில்!

’’ஜனநாயக கட்சியினர் வெற்றி பெறவில்லை அவர்கள் வெற்றியை திருடிவிட்டனர்.அமெரிக்க வரலாற்றிலேயே தவறுதலாகவும்,மோசடியாகவும் நடந்த தேர்தல் இது தான்’’

’’மக்கள் எனக்குத் தான் வாக்களித்தனர். ஆக,ஓட்டுகளை சரியாக எண்ணியிருந்தால் நான் தான் ஜெயித்திருப்பேன்’’ என்றார்.

பத்து வருடத்திற்கு முன்பு செத்தவனெல்லாம் எழுந்து வந்து ஓட்டு போட்டுள்ளான். குடிஉரிமை இல்லாமல் அகதியாக அலைபவனெல்லாம் வாக்களித்துள்ளான்’’ என்றார். ஆனால், இதற்கெல்லாம் அவரிடம் எந்த அதாரங்களும் இல்லை.

அவர் தான் ஆட்சி செய்கிறார். அவருடைய நிர்வாகத்தை மீறி அவருக்கு யாரும் கெடுதல் செய்து விட முடியாது! எதிர் கட்சி புலம்பினால் கூட அதில் நியாயமிருக்கும். ஆள்பவரே புலம்பினால் என்ன அர்த்தமாகும்? அவருக்கு ஆளத் தகுதியில்லை என்பது தான் அர்த்தமாகும்!

டிரம்பின் புலம்பல்களும், குற்றச்சாட்டுகளும் அமெரிக்க மக்களையும்,அமெரிக்க ஜனநாயகத்தையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. ஆகவே டிரம்ப் இன்று உலக அரங்கில் அமெரிக்காவின் தேசிய அவமானமாக காட்சியளிக்கிறார்! அமெரிக்காவில் இப்போது யாரும் அவரை எந்த நிகழ்விற்கும், விழாவிற்கும் அழைப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டனர்..

டிரம்பின் குணாதிசயங்கள் பற்றி நாம் ஏற்கனவே  நமது அறம் இணைய இதழிலில்,

’கோமாளியா? வில்லனா? கோல்மால் டிரம்ப்’   என எழுதியிருந்தோம்!

அமெரிக்க தலைமை தேர்தல் அதிகாரியே அதிபரை மறுத்துப் பேச வேண்டிய நிர்பந்தத்தை டிரம்ப் உருவாக்கிவிட்டார்! ‘’தேர்தல் நேர்மையாகவும்,பாதுகாப்பாகவும் நடந்தது. ஓட்டுகள் அழிக்கப்பட்டதாகவோ,மாற்றப்பட்டதாகவோ, எங்கும் சமரசத்திற்கு ஆளானதாகவோ எந்த ஆதாரமும் இல்லை’’ என அவர் கூறியுள்ளார்!

டிரம்ப் கட்சி எம்.பிக்களில் கணிசமானவர்களே பைடனுக்கு வெளிப்படையாக தங்கள் வாழ்த்தை தெரிவித்துவிட்டனர்! அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சியோ,’’ யதார்த்தை டிரம்பும்,அவரது கட்சியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார்!

செனட்டின் சிறுபான்மை தலைவர் சக்ஸ்கூம்பர், ’’உண்மையை ஏற்க மறுப்பது கோழைத்தனம் என அதிரடியாகப் பேசியுள்ளார்.அமெரிக்காவின் மிக முக்கிய தன்னாட்சி பெற்ற அமைப்புகளின் தலைவர்கள் பலரும் டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பேசி வருகின்றனர். வெள்ளை மாளிகையின் நிர்வாகம் அடுத்த அதிபருக்காக நிர்வாக ரீதியாக தன்னை தயார்படுத்த தொடங்கிவிட்டது.

உலகின் மிகப் பெரும்பான்மையான நாடுகள் பைடனின் வெற்றியை அங்கீகரித்து அவரை வாழ்த்திவிட்டன! இதில் சீனாவும்,ரஷ்யாவும் மட்டும் விதிவிலக்காக பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ’நாம் வாழ்த்தப் போக அது பைடனை சந்தேகப்படுவதற்கான துருப்பு சீட்டாக்கிவிடுவார் டிரம்ப்’ என்பதால் அவர்கள் அமைதி காக்கின்றனர் என்பது என் அனுமானம்!

இவ்வளவு ஏன்? அவரது மனைவி மெலனியாவே டிரம்ப் சொல்வதை ஏற்கவில்லை. மகள் இவான்கா டிரம்ப்பும்,மருமகன் குஷ்னரும் டிரம்ப் தோல்வியை ஒத்துக் கொள்வதை தவிர வேறுவழியில்லை’’ எனக் கூறிவிட்டனர்.

ஆனாலும் டிரம்ப் நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமும் டிவிட்டரில் அதிரடியாக தெரிவித்து வரும் கருத்துகள் நிற்கவில்லை. ஆக, தன்னை தீவிரமாக கண்மூடித்தனமாக ஆதரிக்க ஒரு கூட்டத்தையும் அவர் தயார் செய்து வைத்துள்ளார்.

இந்தச் சூழலில் மக்கள் தன் பக்கம் இருப்பதை உணர்ந்து உணர்ச்சிவசப்படாமல் நிதானம் காட்டிவரும் ஜோபைடன் மக்கள் மத்தியில் ஒரு ஹீரோவாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் டிரம்ப்பை தீவிரமாக ஆதரித்த இந்துத்துவ ஆதரவாளர்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும். இவர்கள் டிரம்பின் வெற்றிக்கு யாகமெல்லாம் நடத்தினார்கள். வெள்ளையின வெறி கொண்ட டிரம்பை இவர்கள் ஆதரிப்பதன் உளவியல் பின்னணி நமக்கு தெரியாதது அல்ல! ஆனால், இவர்கள் அதற்கு ’’டிரம்ப் வெற்றி பெறுவது தான் இந்தியாவிற்கு நல்லது’’ என்று சப்பை கட்டு கட்டினர்கள். உண்மையில் அமெரிக்காவிற்கு யார் அதிபராக வந்தாலும் இந்தியாவிற்குத் தான் நெருக்கமாக இருப்பார்கள். அது தான் அமெரிக்காவிற்கு நல்லது என்பதால்! ஆனால்,டிரம்பை ஆதரித்த மேட்டுக் குடியினர் தற்போது மெல்ல பைடன் பக்கமும், கமலா ஹாரீஸ் பக்கமும் நகர்ந்து வருகின்றனர்.

இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்க தேர்தல் முடிவுகள்  தெளிவாக உறுதிபட்டதாக அமெரிக்க ஊடகங்களே எழுதிய நிலையிலும், நவம்பர் ஆறாம் தேதி தினமணியில் எழுதப்பட்ட தலையங்கம் ’’டிரம்பின் குற்றச்சாட்டுகளை ஆதரித்தும், ஜனநாயக கட்சியின் வெற்றியை உறுதிபடுத்த முடியாது’’ என்றும் ஆணித்தரமாக எழுதப்பட்டது. பாஜக பக்தர்களாக,மோடி ஆதரவாளர்களாக தங்களை வெளிப்படையாக காட்டிக் கொண்டவர்களாகட்டும்,  மறைமுகமாக ஆதரித்து நடு நிலையாளர்களாக தோற்றம் காட்டும் வைத்தியநாதன் போன்றவர்களாகட்டும்’ டிரம்ப் வெற்றி பெற வேண்டும்’ என்று பிரயத்தனப்பட்டது மட்டுமின்றி, அவரது தோல்வியை ஏற்க மறுத்து பிடிவாதம் காட்டினர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுவும் அமெரிக்காவில் இருந்த இந்திய மேட்டுக்குடியினர் டிரம்பின் வெற்றிக்கு கடுமையாக உழைத்தனர்.அவர்கள் கமலா ஹாரிஸை கூட ஒரு கறுப்பின பிரதிநிதியாகவே பாவித்தனர். அவரது நடவடிக்கைகளும் அவர்களை அவ்வாறு பாவிக்க வைத்தது! கமலா ஹாரிஸின் பூர்வீகப் பின்னணியில் பிராமண அடையாளம் இருந்தாலும், அவர் சாதியைக் கடந்தவராகவே உருவாகி ஒரு உலக பொது மனுஷியாக தன்னை தகவமைத்துக் கொண்டார். ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள பிராமண ஊடகங்களும், வைத்தியநாதனைப் போன்ற வைதீகப் பார்ப்பனர்களும் அவரை ’நம்மாத்துப் பொண்ணு’ என்ற பிம்பத்தை கட்டமைக்கும் வண்ணம் எழுதி வருகின்றனர்.

அதாவது, இவர்கள் எதிர்க்கமுடியாத எதிரிகளை தங்களவாக்களாக்கி நெருங்கி உரிமை பாராட்டுவது காலங்காலமாக நடப்பது தான்! பாரதியாரை உயிரோடு இருக்கும் போது வெறுத்து ஒதுக்கினார்கள். இறந்த பாரதியின் எழுத்துகளின் வீரியத்திற்கு உலகில் பெரும் மரியாதை ஏற்பட்ட உடனேயே அவர் புகழைப் பாடி உரிமை கொண்டாடத் தொடங்கி விட்டார்கள். முற்போக்கு பிராமணர்கள் – சமூகத்திற்கே முன்னோடிகளாக தங்கள் வாழ்வை கட்டமைத்துக் கொண்டவர்கள் – எல்லா காலங்களிலும் இருந்து கொண்டு தான் உள்ளனர். பிழைப்புவாத பெருங்கூட்டதிற்கிடையிலிருந்து விலகி, பின்பற்றத்தக்க வாழ்க்கை கொண்டவர்களை நாம் தான் அடையாளம் காண வேண்டும்! இந்த பிற்போக்குவாதிகள் அவர்களை விழுங்கி செறித்துவிடாமல் பாதுகாக்கவும் வேண்டும்.

அமெரிக்காவில் பைடன் தற்போது வெற்றி பெற்றதற்கும்,அவர் வெற்றியை அங்குள்ள ஊடகங்கள் அங்கீகரித்து துணிச்சலாக செயல்படுவதற்கும் அங்குள்ள ஊடகங்களை வெள்ளையின ’லாபி’ யால் விலைபேச முடியவில்லை என்பதாகவே  நான் பார்க்கிறேன். அப்படியொரு நேர்மையான ஊடகச் சூழல் இந்தியாவிலும் ஏற்பட்டால் தான் அநீதியான அரசியல்வாதிகள் அனைவருக்கும் தோல்வி உறுதிப்படும்!

’அறம்’சாவித்திரி கண்ணன்

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time