சாராயம் பல வகை! சர்ச்சைகளும் பல வகை!

-சாவித்திரி கண்ணன்

கள்ளச் சாராயம், நல்ல சாராயம், விஷச் சாராயம் இந்த மூன்றுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமலே இந்த வார்த்தைகள் ஊடகங்களாலும், மக்களாலும் பயன்படுத்தப்படுகின்றன! இன்றைய தலைமுறை அனேகமாக நல்ல மதுவை பார்க்காத தலைமுறை! பாரம்பரிய மது குறித்த பரிச்சியமே இல்லாதவர்களுக்கு இதோ  ஒரு அறிமுகம்:

பொது புத்தியைப் பொறுத்த அளவில் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது நல்ல சாராயம் என்பதாகவும், கிராமங்களில் அல்லது எங்கோ ஒதுக்கு புறங்களில் காய்ச்சப்படுவது கள்ளச் சாராயம் என்பதும், உயிர் பலி கேட்பது விஷச் சாராயம் என்பதுமே புரிதல்!

இது பற்றி ஒரு தெளிவான பார்வை இன்று அவசியப்படுகிறது.

அரசாங்கத்தின் டாஸ்மாக்கில் விற்கும் மதுவை நல்ல சரக்கு என நினைப்பதும் ஒரு வகை அறியாமை தான்! இதில் நேச்சுரல் இன்கிரிடன்ஸ் எதுவுமில்லை. வெறும் கெமிக்கல்ஸ் தான்! சுமார் 42 சதவிகித ஆல்ஹாகால் உள்ளதாகச் சொல்கிறார்கள்! இது ஒரு வகையில் மெல்லக் கொல்லும் விஷம் தான்! தினசரி டாஸ்மாக் மது அருந்துபவர்கள் ஐந்தாறு வருடத்திற்கு மேல் நிச்சயமாக தாக்குப் பிடிப்பதில்லை. கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலோ அல்லது வீட்டிலேயே ஒரு மூலையில் நடை பிணமாகவோ கிடந்து அந்தக் குடும்பத்திற்கு நிரந்தர பாரமாகிவிடுகிறார்கள்!

நல்ல மது தயாரிப்பு என்பது பழங்களில், தானியங்களில், மூலிகை சாறுகள், தேன் போன்றவற்றின் கலவையில் உருவாக்கப்படுவதாகும். பழங்கள் என்பவை இடத்திற்கு தக்க வேறுபடும். திராட்சை, ஆப்பிள், முந்திரிப் பழம், பிளம்ஸ், செர்ரி, பெர்ரி போன்ற பழங்கள் இந்த மது தயாரிப்புக்கு மூலமாகும். இது தவிர பார்லி, சோளம், அரிசி போன்ற தானியங்களைக் கொண்டும் சிறந்த மது தயாரிக்கபடும்! இதையெல்லாம் நம் டாஸ்மாக்கில் நாம் எதிர்பார்க்க முடியாது.

தமிழகத்தில் முந்திரி பழங்கள் கேட்பாரற்று பல்லாயிரம் டன்கள் பயனின்றி வீணடிக்கப்படுகின்றன! இதில் இருந்து ஆரோக்கியமான மதுபானம் தயாரிக்க முடியும்! அதில் நமக்கு ஆர்வம் இல்லாததால் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும் பலன் இல்லாமல் அழிகின்றன. இவற்றை பயன்பத்தி மது தயாரிகக் கோரி ஒரு முறை நமது சட்டமன்ற நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வீணாகும் முந்திரி பழத்தை பயன்படுத்தி பழச்சாறு மற்றும் மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க முன் வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இந்த கோரிக்கை பரிசீலிக்கபடும் எனக் கூறினார். பின்னர் இந்த விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.

இப்பவெல்லாம் பல டாஸ்மாக்குகளில் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து படு சின்சியராக 24 மணி நேரமும் ’சேவை’ செய்கிறார்கள்! குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து நீங்கள் வாங்கும் சரக்கிற்கு அவங்க வைத்தது தான் விலை. இந்த சரக்கு விற்பனை அரசு கணக்கிலே வராது. பொதுவாக மது விற்பனையில் 83 சதவிகிதம் அரசு வரியாகும். இந்த விற்பனையில் ஒரு நயா பைசா கூட அரசு கஜானாவிற்கு போகாது. இதுவும் ஒரு வகையில் கள்ளத் தனமாக விற்கப்படுவதால் கள்ளச் சாராயமே! இதுவும் மேலிடத்திற்கு தெரியாமல் நடப்பதில்லை.

அடுத்து ஊரின் ஒதுக்குபுறத்தில் காய்ச்சி விற்கப்படும் மதுவை ‘கள்ளச் சாராயம்’ என பெயரிட்டு அழைக்கிறார்கள். இது அரசுக்கு வரி தராமல் கள்ளத் தனமாக விற்பனை செய்யப்படுவதால் சட்ட விரோதச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச் சாராயம் என்று சொல்லப்படுவதில் பனங் கள்ளும், தென்னங் கள்ளும் கூட அடக்கமாகும். குறிப்பாக பனங் கள்ளில் நல்ல மருத்துவ குணங்கள், ஆரோக்கிய அம்சங்கள் உள்ளதால், அப்படியான அயிட்டங்களை காவல்துறை அதிகாரிகளே கூட கேட்டு வாங்கி, எடுத்துச் செல்வார்கள்! பனங்கள்ளை அஎஅசு அனுமதிக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர் நல்லுசாமி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்! இது நடைமுறைக்கு வந்தால் பல லட்சம் விவசாயிகளும், பல்லாயிரம் பனையேறிகளும் பயன் பெறுவார்கள். குடி மகனுக்கும் தரமான மது கிடைக்கும்.

முன்பெல்லாம் நமது சிற்றூர்களிலும், கிராமங்களிலும் மது தயாரிப்பில் பெரிய, பெரிய நிபுணத்துவம் பெற்றவர்கள் எல்லாம் இருந்தார்கள். இவர்கள் அரிய பல அயிட்டங்களையும். சத்துள்ள சாமாச்சாரங்களையும் அதில் சேர்ப்பார்கள் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.! கிரமங்களில் இருக்கும் பெரிசுகளிடம் கேட்டால் நிறையவே சொல்வார்கள்! ஒவ்வொரு ஊருக்கும் அந்தந்த மண்ணில் கிடைக்கும் நல்ல மூலிகைகளின் சேர்மானமும் இதில் கலப்பார்களாம். அன்று இந்த சாராயத்திற்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பல கிலோ மீட்டர்கள் பயணித்து வேலை மெனக்கிட வந்து அதை அருந்திச் செல்பவர்களும் இருந்தனர்! “கள்ளச் சாராயத்தை ஒழிக்கிறோம்” என்ற பெயரில் இவர்களையும் சேர்த்தே அரசின் நிர்வாகமும் ,காவல்துறையும் வேட்டையாடியதில் அனேகமாக இவர்கள் தற்காலத்தில் காணாமலடிக்கப்பட்டுவிட்டனர்.

பீகாரில் இலுப்பை பூவைக் கொண்டு அருமையான இனிமையான மலிவான மது தயாரிக்கிறார்கள் எளிஅ தலித் மக்கள்! மலைப் பிரதேசங்களில், காட்டுப் பகுதிகளில் பழங்குடிகள், ஆதிவாசிகள் போன்றோருக்கு மிக நுட்பமாக மது தயாரிக்கும் நிபுணத்துவம் இன்றும் உள்ளது. பல மெனக்கிடல்களின் விளைவாக மிக அற்புதமான மதுவை அவர்கள் தயாரிப்பதாக சாப்பிட்டவர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். இதன் சுவை அலாதியானது, மறக்க முடியாதது என சிலாகித்து நம் எழுத்தாளர்கள் சிலர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக குடியின்றி அமையாது உலகு என்ற நூலே வந்திருக்கிறது. நமது அரசாங்கத்தின் அளவுகோல்படி இதுவும் கள்ளச் சாராயமே! ஆனால், உண்மையிலேயே மிக நல்ல மது இது தான்!

அசாம் போன்று பழங்குடிகள் வாழும் மாநிலங்களில் ரைஸ்பீர் எனப்படும் ஆரோக்கிய மதுபானத்தை வீட்டுக்கு வீடு பெண்களே தாயாரிக்கிறார்கள்! இது விற்பனைக்கல்ல. அவரவர் குடும்ப பயன்பாட்டிற்கு! அங்கு இது குற்றமாக கருதப்படுவதில்லை.

 

 

இப்பவெல்லாம் கள்ளத் தனமாக சாராயம் தயாரிப்பவர்களுக்கு எந்த நிபுணத்துவமும் இல்லை. இவர்களுக்கு ஆளும் தரப்பிலோ, அதிகாரத் தரப்பிலோ சிஸ்டமெட்டிக்காக ஸ்பிரிட் மெத்தனால் கிடைக்கச் செய்கிறார்கள். சம்பளப் பணம் தவிர்த்து இதில் காவல்துறையினர் ஒரு அமவுண்ட்டை கமிஷனாக ரெகுலர் வருமானமாக்கிக் கொள்கின்றனர். டாஸ்மாக் மதுவின் விலையில் மிரண்டு போன ஏழை, பாளைகள் இதை ஒரு பெரிய வரப்பிரசாதமாகப் பார்க்கிறார்கள்!

டாஸ்மாக் மது விலையை தாறுமாறாக வைப்பது ஏழை, எளியோர்களின் மதுப் பழக்கத்தை குறைக்கவே என அரசு தரப்பில் சொல்கிறார்கள். மதுப் பழக்கத்தை குறைப்பது தான் நோக்கமென்றால், டாஸ்மாக் கடைகளை மக்கள் எதிர்க்கும் இடங்களிலோ, கல்விக் கூடங்கள், கோவில்கள் அருகிலோ இருக்காமல் செய்வதே சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும்.

இந்த கள்ளத் தனமான மது உற்பத்தி என்பது ஊருக்கு ஊர் ரெகுலராக, முறையாக நாள் தோறும் நடக்கிறது. என்றாவது, ஒரு நாள் தாறுமாறாக இதில் ஸ்பிரிட்டை, மெத்தனாலை கலந்து விடும் போது அது சாப்பிட்டவர்களின் உயிரை காவு கேட்டு விடுகிறது. இதுவே ’விஷ’ சாராயம் என்ற அடைமொழிக்கு பொருந்தி விடுகிறது.

இது விபத்தா? அலட்சியமா? தொழில் எதிரிகளின் சதியா? என்பது இடத்திற்கு இடம் மாறுபடக் கூடும்.

ஆக மொத்தத்தில் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் மது விற்பனையை மையப்படுத்தி தங்கள் பையை நிரப்பிக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல மதுவானது குடி மக்களுக்கு கிடைப்பதிலும், அதன் விற்பனையை சமூக ஒழுங்கும், குடும்பச் சூழலும் கெடாமல் இருக்கும்படி முறைப்படுத்துவதிலும் காட்டுவதில்லை என்பது தான் வேதனையாகும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time