அதிகாரத் திமிர்+பேராசை = தனியார் பள்ளிகள்!

- சாவித்திரி கண்ணன்

”இந்தப் பூமிப் பந்தில் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர் யார்?” எனக் கேட்டால், பல பெற்றோர்கள் ”தனியார் பள்ளிகளின் பிரின்சிபால்” என்பார்கள்! அடிமைகளை உருவாக்கி பயிற்றுவிக்கும் நிறுவனங்களாக  இவை  எப்படியெப்படி நுட்பமாகச் செயல்படுகின்றன எனப் பார்த்தால்.., மக்களின் முட்டாள் தனமே இவர்களின் மூலதனமாகிறது;

கல்வி என்பது தனி நபர் வளர்ச்சி, தனி நபர் ஆதாயம் என்பதாகச் சுருக்கி புரிந்து கொண்டதன் வீழ்ச்சியாகத் தான் தனியார் பள்ளிகளின் வளரச்சியாகவும், அதிகரமாகவும் மாறி நிற்கிறது. மாறக, கல்வி என்பது சமூகத்தின் நன்மைக்கானது, தனி நபர் மனதை, குணத்தை மேம்படுத்துவது என்ற புரிதலே இன்றைய அவசியமாகிறது.

பகட்டான கட்டிடங்கள், பளபளப்பான வகுப்பறைகள், டிப் டாப்பான உடைகள், நுனி நாக்கு ஆங்கிலம், தேர்ச்சி விகிதங்கள், அதிகாரத் தோரணை மிக்க நிர்வாகம்.. இதில் ஏதோ ஒரு ஈர்ப்பு நம் மக்களுக்கு!

ஆனால், உண்மையில் தனியார் பள்ளிகள் சிறந்த அடிமைத் தனத்தை பயிற்றுவிக்கின்றன. தவறு என உணர்வதையோ, அநீதி என கருதுவதையோ எதிர்த்துப் பேசுவதல்ல, மாற்றுக் கருத்தைக் கூட நீங்கள் அவர்களிடம் கூற முடியாது!

‘இது தான் கட்டணம்’ என்றால், அது தான் கட்டணம். ‘இது தான் டொனேஷன்’ என்றால், அது தான் டொனேஷன். ‘கட்ட முடிந்தால் கட்டலாம். இல்லாவிட்டால் இடத்தை காலி பண்ணலாம்’

பிள்ளைகளை பள்ளியில் சேர்த்துவிட்டால், அந்தப் பிள்ளைகள் மாத்திரமல்ல, அந்த பெற்றோர்களுமே அந்தப் பள்ளிக் கூட நிர்வாகத்திற்கு கொத்தடிமை பத்திரம் எழுதி கொடுத்தது போலத் தான் நடக்க வேண்டியதாகிவிடுகிறது.

அரசு அமைப்புகள் எல்லாம் தனியார் பள்ளிகள் விவகாரத்தில் அமைதியாகிவிடும். மெடிரிகுலேஷன் பள்ளி இயக்குனகரத்திற்கோ, சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயக்குனகரகத்திற்கோ நாம் புகார்கள் கொடுத்தால் அதன் மீது எந்த நடவடிக்கைகளும் இருக்காது. எல்லா அரசு அமைப்புகளும் இவர்கள் வில்லங்கங்களைக் கண்டும், காணாமல் அனுசரணைப் போக்கை அப்பட்டமாய் கடை பிடிக்கின்றன.

காவல் நிலையத்தில் இவர்கள் குறித்து புகார் தந்தால், அது கடுகளவும் மதிக்கப்படாது. மாறாக, புகார் கொடுத்தவரே குற்றவாளியாக்கப்படலாம். கள்ளக் குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதன் மாணவி ஸ்ரீமதி கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட விவகரத்தில், காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு விசாரணை ஆரம்பிக்கும் முன்பே பள்ளிக் கூடத்திற்கு நற்சான்றிதழ் வழங்கியதும், போராடிய மக்களை காவல்துறையினர் பலவித வழக்குகள் போட்டு அலைக் கழித்ததும் வரலாறு!

இது தனியார் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்றோர்களுக்கு அழைப்பு வந்தால் அது நீதிமன்றத்தின் ஆணைக்கும் மேலானது. அந்த அதிரடி அழைப்பை தவிர்க்கவோ, தள்ளிப் போடவோ முடியாது. அழைக்கும் விவகாரம் பிள்ளைகளின் மதிப்பெண் குறித்தோ அல்லது வகுப்பில் ஏதாவது சேட்டைகள் செய்திருப்பது பற்றியதாகவோ இருக்கலாம். இதில் அழைத்த நேரத்திற்கு ஆஜராவதைத் தவிர, பெற்றோர்களுக்கு வேறு வழியே இல்லை. அவர் பெரிய தனியார் நிறுவனத்தில் பெரிய நிர்வாகியாக இருக்கலாம். அரசின் உயரதிகாரியாகக் கூட இருக்கலாம். பத்திரிகை ஆசிரியராக இருக்கலாம். ஆனால், பள்ளிக் கூடத்தை பொறுத்த வரை அவர்  நிர்வாகத்திற்கு கட்டுபட வேண்டிய ஒரு பெற்றோர் தான்!

பிள்ளை குறைவாக மார்க் எடுத்திருந்தால், அதற்கு பெற்றோர்களை கேள்வி கேட்பார்கள்! ”வீட்டில் சொல்லித் தருகிறீர்களா? படிக்க வைக்கிறீர்களா?” என அதட்டுவார்கள்! ஆனால், இவர்கள் பாடம் நடத்தும் விதம் பற்றி பெற்றோர் கேள்வி எழுப்ப முடியாது. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களுக்கே ‘சப்ஜெட்’ சரியாகத் தெரிவதில்லை. பாடத்தின் முழுப் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளும்படி பாடங்களை நடத்துவதில்லை. சும்மா வாசிக்க வைப்பதும், ஓரிரண்டு விளக்கம் சொல்வதுமாக முடித்துவிட்டு, ”நாளை கிளாஷ் டெஸ்ட் இருக்கு, படிச்சுட்டு வந்துடுங்க” என சொல்லி விடுகிறார்கள்! பொருள் தெரிந்து பிள்ளைகள் படிப்பதேயில்லை. இந்தக் கேள்விக்கு இது பதில். இதை மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்துக் கொள்ளும் நினைவாற்றல் ஒன்றே போதுமானது என நம்பி விடுகிறார்கள். இது கற்கும் முறையல்ல. ‘கசடறக் கற்க’ என்றார், வள்ளுவர்.

கற்க, கசடறக் கற்பவை; கற்ற பின்

நிற்க அதற்கு தக

பொருள் புரிந்து பிழையகற்றி, சந்தேகமறக் கற்க வேண்டும். அதற்கு பின் கற்றவற்றின்படி வாழ்க்கையில் நடக்க வேண்டும். இப்போதைய தனியார் பள்ளிக் கல்வி முறையில் இப்படியான கல்வி அணுகுமுறை அரிதிலும் அரிதாகவே உள்ளது.

கல்வியை ஒரு சேவைத் தொழிலாகவும், புண்ணியமான காரியமாகவும் கருதி கற்பிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் அதை அந்தஸ்த்திற்கான மதிப்பீடாகவும், அதிகாரத்திற்கான கருவியாகவும் கையில் எடுத்துக் கொண்டன!

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை ஒரு வகையில்  ‘கட்டணக் கொள்ளை’ என்பதாகவே பொது மக்கள் உணர்கிறார்கள்!

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் குறித்த சர்சைகள், புகார்கள் பல ஆண்டுகளாகவே உள்ளன. இதைத் தொடர்ந்து கருணாநிதி ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையிலான குழுவை நிர்ணயித்தார். துர்அதிர்ஷ்டவசமாக அப்போது முதல் தான், அதிவேகமாக கல்விக் கட்டணங்கள் ஆண்டுக்காண்டு உயரத் தொடங்கின!

இப்போதும் நீதிபதி பாலசுப்பிரமணியன் என்பவர் தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்துள்ளார். அவர் நிர்ணயித்த கட்டணம் என்ன? என்பது குறித்த அறிவிப்பு பொது வெளியில் தெரிவதில்லை. பள்ளி நிர்வாகங்களும் அது குறித்து எதுவும் தெரிவிப்பதில்லை. பெற்றோர்களுக்கும் இது குறித்த விபரம் தெரியாது. ஒரு கல்வி கட்டணத்தை நிர்ணயித்தால் அந்தக் கட்டணம் இது தான் என பள்ளியின் அறிவிப்பு பலகையில் அச்சடித்து ஒட்ட வேண்டிய கடமை அந்தப் பள்ளிக்கு உள்ளது. அதை ஒட்டுகிறார்களா? அதன்படி தான் கல்விக் கட்டணம் வாங்குகிறார்களா? என கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. இரண்டுமே நடப்பதில்லை.

ஆரம்ப வகுப்பு சேர்க்க போகும் பெற்றோர்களிடம் ஐம்பது ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை நன்கொடை நிர்பந்திக்கப்படுகிறது. இது தவிர திருப்பித் தரும் கட்டணம் என்பதாக ஒரு பெரிய தொகை வசூலிக்கிறார்கள்! கல்வி கட்டணமோ ஐம்பதாயிரம் தொடங்கி ஒன்றரை லட்சம் வரை பள்ளிக்கு பள்ளி வேறுபடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கட்டணத்தை ஐந்து முதல் பத்து சதவிகிதம் வரை அதிகரிக்கும் பள்ளிகளை பெற்றோர்கள் சகித்துக் கொள்கிறார்கள்! ஆனால், 20 முதல் 30 சதவிகிதம் அதிரடியாக உயர்த்தும் பள்ளிகளோடு தான் முரண்படுகிறார்கள். இதில் பேச்சுவார்த்தையோ, உரையாடலோ,கெஞ்சலோ எதுவும் நிர்வாகத்திடம் செல்லுபடியாகாது. ”’கட்ட முடியாவிட்டால் டி.சி வாங்கிக் கொள்ளலாம்” எனக் கறாராகச் சொல்லிவிடுவார்கள்!

ஒரு பள்ளியில் முதல் ஆண்டு சேர்க்கும் போது, ஒரு லட்சம் நன்கொடை வாங்கிய பிறகும் இரண்டாம் ஆண்டும் புதிய கட்டிடம் கட்டுவதால் நன்கொடை மீண்டும் ஒரு லட்சம் கேட்டுள்ளார்கள்! திகைத்த பெற்றோர்களிடம், ”முடியாவிட்டால் வெளியேறலாம்” என முகத்தில் அடித்தாற் போலச் சொல்லி விட்டார்கள். வேறு வழியில்லாமல் வெளியேறினர். அந்த வெற்றிடத்தில் மூன்று லட்சம் நன்கொடை வசூலித்து புது ‘அட்மிஷன்களை’ நிரப்பிக் கொண்டது பள்ளி நிர்வாகம்.

இன்னொரு பள்ளியில் அதிரடியாக கல்விக் கட்டணங்களை மிக அதிகமாக உயர்த்தினார்கள்! ”அவ்வளவு பணம் எங்களிடமில்லை” என்றனர் பெற்றோர். உடனே பள்ளி நிர்வாகத்தில் கடன் தரும் நிதி நிறுவனங்களை அறிமுகப்படுத்தி’ ”கடன் வாங்கி கட்டுங்கள். குறைந்த வட்டி தான்” என நிர்பந்தித்து உள்ளார்கள்!

”இந்தக் கல்வி நிறுவனங்கள் கல்வியை வணிகமாக்கிவிட்டார்கள்” என நாம் சொல்லக் கூடாது. ஒரு வணிகத்தில் பின்பற்றப்படும் எந்த ‘எத்திக்ஸும்’ இந்தக் கல்வி நிறுவனங்களிடம் கிடையாது. பொருளின் தயாரிப்பு செலவுக்கும் விலைக்கும் குறைந்தபட்ச நியாயம் இருக்கும். ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வியாபாரி நல்ல மரியாதை தருவார். ஆனால், தனியார் கல்வி நிறுவனங்களில் இவற்றை எதிர்பார்க்க முடியாது. எனவே இவர்கள் கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் செய்வதெல்லாம் சூது! செய்து கொண்டிருப்பதோ அதிகாரபூர்வ பகல் கொள்ளை!

இங்கு தாய் மொழிக் கல்வியை நன்கறியாமல் பிள்ளைகள் படித்து வருகின்றனர். தாய் மொழியில் படிப்பவர்களுக்கு தன்மான உணர்வும், சுய சிந்தனையும் வந்துவிடும் என்பதால் தான் ஆங்கிலக் கல்வியை மட்டுமே முதன்மைபடுத்துகிறார்கள். இரண்டாம் மொழி இந்தியாகவோ, பிரன்சு மொழியாகவோ கற்றுத் தருகிறார்கள்! ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பதெல்லாம் அடிமை குணத்தை உருவாக்கும் சூழ்ச்சியன்றி வேறல்ல.

வெகுதூரம் நடந்து சென்று கல்வி கற்கும் அரசு பள்ளி மாணவிகள்!

இன்றைக்கு இந்த நாட்டையும், மக்களையும், மொழியையும், இந்த மண்ணின் கலாச்சாரத்தையும் ஓரளவேனும் புரிந்து கொண்டு படித்து வருபவர்கள் அரசு பள்ளி மாணவர்களே! இவர்களே அநீதியை எதிர்ப்பவர்களாகவும், இரக்க குணம் படைத்தவர்களாகவும் இயல்பில் உள்ளனர். இங்கு அரசு பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்தவும், போதுமான ஆசிரியர்களை நியமிக்கவும் நிதியின்றி தவிக்கும் மாநில அரசு, கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித ஏழை,எளிய மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுக்காண்டு 350 கோடி முதல் 400 கோடிகள் வரை தனியார் பள்ளிகளுக்கு தருகிறது.

இந்தப் பெரும் நிதியும், அதற்கான திட்டமும் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. எந்த தனியார் பள்ளியும் தங்கள் பள்ளியில் இத்தனை ஏழை, எளிய மாணவர்களுக்கான இடங்கள் உள்ளன என அறிவிப்பு தந்ததில்லை. அரசு இதைக் கண்காணிப்பதே இல்லை. இந்த பள்ளிகளை  தேடிச் செல்லும் பெற்றோர்களுக்கும் பதில் கிடைப்பதில்லை. சில பள்ளிகள் அரசிடம் நிதியைப் பெற்றுக் கொள்வதோடு, ஏழை மாணவர்களிடமும் பணம் பெறுகிறார்கள் என்ற பரவலான புகார்கள் உள்ளன. உண்மையில் அதிக விலை போகக் கூடிய மாணவர் சேர்க்கையில், அரசு 25 சதவிகித கோட்டா நிர்ணயிப்பதை பெரும்பாலான தனியார் பள்ளிகள் விரும்புவதில்லை.

இந்த திட்டத்தில் உண்மையிலேயே ஏழை மாணவர்கள் சேர முடிகிறதா?

சேர்ந்தாலும், இதர கல்விக் கட்டணம் என்ற பெயரிலான கொள்ளைகளில் இருந்து தப்பிக்க முடியுமா?

தலித் மாணவர்களை சேர்க்கிறார்களா?

சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களை கெளரவமாக நடத்துகிறார்களா..?

இந்தப் பிள்ளைகளின் பெற்றோர் நடத்தப்படும் விதம் எப்படி..?

எனப் பார்க்கும் போது, ”இந்த திட்டம் முற்ற முழுக்க வீணானது” என்ற ஒரு வரி பதிலே போதுமானது!

எது உண்மையான கல்வி?

# எந்தக் கல்வி சுய புரிதலையும், சமூக வளர்ச்சி குறித்த அக்கறையையும் மேம்படுத்துகிறதோ,

# எந்தக் கல்வி வாழும் மண்ணையும், மக்களையும் அறிய உதவுகிறதோ, சுற்றுச் சூழல் குறித்த நுண்ணுர்வையும், சக உயிரினங்கள் குறித்த கரிசனத்தையும் கற்பிக்கிறதோ,

# எந்தக் கல்வி சுய நலம் தவிர்த்த பொது நலன் சார்ந்து சிந்திக்கவும், செயல்படவும் தூண்டுகிறதோ அதுவே சிறந்த கல்வி!

இத்தகைய மனித குல மேன்மைக்கான சிறந்த கல்வியை பணப் பேராசையும், சிறுமதியும் படைத்த தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஒரு போதும் பெற முடியாது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time