நீதியரசர் சந்துருவின்  பரிந்துரைகளும், சர்ச்சைகளும்!

-ஏர் மகாராசன்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, இன வேறுபாடுகளை களைவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. அந்தப் பரிந்துரைகளை இந்து அமைப்புகள் எதிர்க்கின்றன.பாஜக எதிர்க்கிறது. கடும் விமர்சனங்களை பெற்றுள்ள பரிந்துரைகள் சரியானது தானா?

பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு பல பரிந்துரைகள் தந்துள்ளார். அவற்றுள் சில வரவேற்க தக்கன. இன்னும் சில விவாதிக்க வேண்டியன!

நாங்குநேரி சம்பவத்தையும், அது போன்ற சம்பவங்களின் சமூகப் பின்புலத்தையும் மையமாகக் கொண்டு நான் எழுதிய, ‘மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து’ எனும் நூலில் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நிறைய கவனப்படுத்தி உள்ளேன். இந்நிலையில், நீதியரசர் சந்துரு தந்துள்ள பல்வேறு பரிந்துரைகளில் மிக முக்கியமானதாகக் கருத வேண்டியது, கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதி அடையாளம் எதுவும் இருக்கக் கூடாது என்பதாகும்.

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள் என, அனைத்து வகைப் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகள் என்பதாக மட்டுமே அழைத்தல் வேண்டும். அதே போல, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் சாதிப் பெயர்  இடம்பெறுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை.


அதாவது, எந்த ஒரு கல்வி நிறுவனத்தையும் தொடங்குவதற்கான அனுமதியளிக்கும் போது, சாதி அடையாளப் பெயர்கள் இருக்கக் கூடாது. அதே போல, ஏற்கெனவே நடைமுறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களின் சாதி அடையாளப் பெயர்களையும் நீக்க  வேண்டும். அவ்வாறு நீக்கத் தயங்கும் கல்வி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை. மேற்குறித்த பரிந்துரைகள் வரவேற்கக் கூடியவை தான். ஏனெனில், சமூக நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும், மானுட அறத்தையும், அறிவையும் பொது சமூக அமைப்பில் போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் சாதி அடையாளங்களைத் தாங்கி நிற்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய சாதி அடையாளங்கள் கல்விப் போதனைகளுக்குப் பயன்படப் போவதுமில்லை.


பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சாதி அடையாளக் குறிகளை வெளிப்படுத்தும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, அவர்கள் அணியும் கயிறுகள், வளையங்கள், பாசிகள் மற்றும் சங்கிலிகள், பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றில் சாதி அடையாளக் குறிகள் கூடாது எனவும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கான ஒழுக்கக் குறியீடு அரசாங்கத்தால் உருவாக்கப்பட வேண்டும். மாணவர்கள் எந்த வகையான வண்ணக் கயிறுகள், மோதிரங்கள் அணிவதையும், நெற்றியில் குறிகள் இடுவதையும் தடை செய்ய வேண்டும் என்கிறது அவ்வறிக்கை.

இது வரவேற்கக் கூடிய பரிந்துரைகளில் ஒன்று தான். எனினும், இதில் மத அடையாளக் குறிகளும் உள்ளடங்கி இருக்கின்றன. சாதி அடையாளங்களை மட்டுமல்ல; மதங்களை அடையாளப்படுத்தும் குறிகளும் பாரபட்சமற்ற முறையில் சுட்டிக் காட்டப்பட வேண்டும். சாதிகள் மற்றும் மதங்களின் குறியீடுகள் எதுவும் இடம் பெறாத வகையில் மாணவர்களின் பொது அடையாளச் சீர்மை ஒழுங்கை வரையறுப்பது மிகவும் சிக்கலானது. ஏனெனில், அது சாதி மற்றும் மத உணர்வுகளோடு தொடர்புடையது. ஆயினும், சாதி மத அடையாளமற்ற மாணவர் பொது அடையாள ஒழுங்கை வலியுறுத்துவதும், அதை நோக்கிய சமூக விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும்.

மாணவர்களிடம் சாதி மதப் பாகுபாடு இல்லாத வகையில், அனைத்துப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் மற்றும் அமைவுகள் கண்டிப்பாக அகர வரிசைப்படி இருக்க வேண்டும் என முன் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய  பரிந்துரை, வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் சார்ந்த பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியதாகும்.

அதாவது, ஒரு வகுப்பறையில் பயிலும் மாணவர்கள் ஒரே மாதிரியான உயரங்கள் கொண்டவர்களாக இருப்பதில்லை. அகர வரிசைப்படி உட்கார வைக்கும் போது உயரமுள்ள மாணவர் முன் இருக்கையிலும், குட்டையான மாணவர் பின் இருக்கையிலும் உட்கார நேர்வது சிரமத்தை தரும். இதனால் அசிரியர் சொல்வதை கவனித்தல், பாடம் கவனித்தல், கரும்பலகைக் கவனிப்பு போன்றவை குட்டையான மாணவர்களுக்கு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும். மாணவர்களின் உயரப்படி அமர வைக்கப்படுவதே கற்றல், கற்பித்தலுக்கு உகந்தது ஆகும்.

பி.எட்  பாடத் திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும், பாடத் திட்டங்களை மதிப்பாய்வு செய்ய  கல்வியாளர்களின் நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும், தவறான பார்வைகள் நீக்குதல் மற்றும் சமூக நீதி மதிப்புகளை மேம்படுத்தும் உள்ளடக்கத்தைக் கொண்ட பாரபட்சமற்ற கருத்துக்களை பரிந்துரைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.

அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத் திட்டங்களில் சமூக நீதியின் அடிப்படையில் பாடத் தலைப்புகளைச் சேர்ப்பது, சாதி அடிப்படையிலான பாகுபாடு இல்லாத பாடப் பொருண்மைகள் அமைப்பது உட்பட பாடத்திட்ட மாற்றங்கள் வேண்டும் எனவும், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான மாணவர்களின் பாடத் திட்டம் மற்றும் பொருத்தமான பரிந்துரைகள்  வழங்கிட கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவை அரசு நியமிக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது மிகவும் கவனிக்கத்தக்க பரிந்துரைகளுள் ஒன்றாகும்.

பாடத்திட்ட உருவாக்கக் குழுக்களில் சமூக நீதி அடிப்படையிலான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான், சமூக சமத்துவம் சார்ந்த கண்ணோட்டங்களைப் பாடத்திட்ட உருவாக்கத்தில் கொண்டுவர முடியும். (இத்தகைய வலியுறுத்தலை மாணவர்கள் சமூக உதிரிகளாகும் பேராபத்து எனும் நூலில் மிக விரிவாக முன்வைத்திருக்கிறேன்).

பாடத்திட்டம் மற்றும் வகுப்பறைச் செயல்பாடு சார்ந்து, நீதியரசர் சந்துரு அவர்களின் பரிந்துரைகளில் மிக முக்கியமான ஒன்று, அறநெறி வகுப்புகள் தொடர்பானது.  அனைத்து வகையான பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வாரந்தோறும் அறநெறி வழங்குவதற்கு ஒரு காலம் ஒதுக்க வேண்டும்.  மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம் போன்றவை உள்ளடக்கிய அறநெறி வழங்கப்பட வேண்டும் என்கிறது. இத்தகைய அறநெறி வகுப்புகள் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவை தான் என்றாலும், அவை பெயரளவுக்கான பாட வேளை ஒதுக்கீடாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அறநெறி சார்ந்த பொருண்மைகள் பெரும்பாலும் மொழிப் பாடம் சார்ந்தவை. அறநெறி மற்றும் மொழிப் பாடங்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட வேண்டும். ஆனால், அவை நடைமுறையில் வலியுறுத்தப்படுவது இல்லை. மற்ற முதன்மைப் பாடங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அறநெறிப் பாடங்களுக்கோ, மொழிப் பாடங்களுக்கோ வழங்கப்படுவதில்லை.

உயர் கல்விப் படிப்புகளில் மொழிப்பாடங்களின் மதிப்பெண்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. உயர்கல்விப் படிப்புகளில் சேர்வதற்கான மதிப்பெண்களில் மொழிப்பாடங்களின் மதிப்பெண்களையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் நிலையில் தான், அறநெறி உள்ளிட்ட மொழிப் பாடங்களையும் மாணவர்கள் நன்கு கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவர். இல்லையெனில், அதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்.

நீதியரசர் சந்துரு அவர்கள் முன்வைத்திருக்கும் பரிந்துரைகளில் இன்னொன்று, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம் மாற்றம் செய்திட வேண்டும் என்கிறது. அதேபோல, சிஇஓக்கள், டிஇஓக்கள், பிஇஓக்கள் போன்ற உயர் பொறுப்பில் நியமிக்கப்படும் அதிகாரிகளை, அவர்கள் சார்ந்த சாதிப் பெரும்பான்மை இருக்கும் ஊர்களில் நியமிக்கக் கூடாது என்கிறது.

ஒரு சில ஆசிரியர்கள் அல்லது ஒரு சில கல்வி அதிகாரிகள்  சாதிப் பாகுபாடு காட்டக் கூடியவர்களாய் இருப்பது கண்டறியப்பட்டால் மட்டுமே அவர்கள் இடம் மாற்றம் செய்யப்படவோ, சட்ட ரீதியாகத் தண்டிக்கப்படவோ செய்திட வேண்டும். மாறாக, ஒட்டுமொத்த ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் கண்டிப்பாக காலமுறையில் இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது மறு பரிசீலனை செய்திட வேண்டிய பரிந்துரையாகும்.


இது போன்று, இருபது வகையான தலைப்புகளின் கீழ் பல்வேறு வகையான உடனடிப் பிரிந்துரைகளையும், மூன்று வகையான தொலை நோக்குத் திட்டங்களின் கீழ் வேறு சில பரிந்துரைகளையும் நீதியரசர் சந்துரு தந்துள்ளார். இவ்வாறான பரிந்துரைகளின் சாராம்சங்கள் ஒவ்வொன்றைக் குறித்தும் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் அரசு அதிகாரிகளும் கூட்டாக விவாதிக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு அரசும் கல்வித் துறையும் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டியது கடமையும் பொறுப்பும் ஆகும்.

கட்டுரையாளர்:  ஏர் மகாராசன்

முனைவர்,

சமூகப் பண்பாட்டியல் ஆய்வாளர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time