பாரதியார், சிங்கார வேலர், பெரியார்.. போன்றோர்களின் உற்ற நண்பராக செயல்பட்ட விடுதலைப் போராளி தான் கிருஷ்ணசாமி சர்மா! எழுச்சிமிக்க பேச்சாளர், முற்போக்கு சிந்தனையாளர், அறிவார்ந்த எழுத்தாளர், ஆற்றல் மிகு களப் போராளி.. எனச் சுற்றிச் சுழன்ற கிருஷ்ணசாமி சர்மாவின் வாழ்க்கை சவால் நிறைந்தது;
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றினை அறிந்தவர்களுக்கு கிருஷ்ணசாமி சர்மா பரிச்சயமான பெயராகத் தான் இருக்கும்.
1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வஉசி யும், சுப்பிரமணிய சிவாவும் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டபோது திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஏற்பட்ட பேரெழுச்சி மட்டுமல்லாமல், கரூர் நகரத்திலும் எழுச்சிக் குரல் ஒன்று எழும்பியது. அந்தக் குரலை எழுப்பியவர் தான் கிருஷ்ணசாமி சர்மா. அதன் காரணமாக அவர் மீது கரூர் சதி வழக்கு என்ற பெயரில் ராஜநிந்தனை வழக்கு போடப்பட்டு மூன்றாண்டு சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.
1921 ஆம் ஆண்டில் பாரதி மறைந்த போது அவருடைய இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சொற்ப நபர்களில் இவரும் ஒருவர்.
1923 ஆம் ஆண்டில் தோழர் சிங்காரவேலர் சென்னையில் முதன்முதலாக மே தின விழா கொண்டாடிய போது கிருஷ்ணசாமி சர்மாவை விழாத் தலைமை ஏற்க வைத்து சிறப்பித்திருக்கிறார்.
பெரியாரின் குடியரசு பத்திரிகையின் 1925 ஜூன் 28 ஆம் தேதிய இதழில் எழுதப்பட்டிருந்த உப தலையங்கத்தின் தலைப்பு தான் இது.
“தேசம் தற்பொழுதுள்ள நிலைமையில் பாரதத் தாயின் உண்மை மக்கள் ஒவ்வொருவராக மடிந்து வருவது நாட்டின் தீவினையேயன்றி வேறல்ல.
சர்மா சாய்ந்தார்” என்று பெரியாரை ஆற்றொணாத் துயருக்குள்ளாக்கியது காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மாவின் மறைவுச் செய்தி.
“வ.வே.சு.அய்யரின் குருகுல விவாதத்தில் பிராமண சமூகத்தாரிலேயே நமதண்பர் சர்மா ஒருவர் தான் தனது அபிப்பிராயத்தை தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறியவர். இப்பேர்ப்பட்ட ஒரு பக்தரை, தமிழ்நாடு தனது சோதனை காலத்தில் இழந்தது பெருத்ததோர் நஷ்டமாகும்” என்று பெரியாரால் எழுதப்பட்ட காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மாவின் நினைவு நாள் இன்று. காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு அவர் முப்பத்தெட்டு வயதில் மறைந்தார்.
கிருஷ்ண சுவாமி சர்மா தனது பதினெட்டாம் வயதிலேயே விடுதலைப் போர்க்களத்தில் குதித்தவர். இளம் பேச்சாளராகத் தமிழகம் முழுவதும் வலம் வந்தவர். விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிக்க சொற்பொழிவாளர் படையில் சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார், கிருஷ்ணசாமி சர்மா போன்றோர் மிக முக்கியமானவர்கள்.
இந்தச் சொற்பொழிவாளர்கள் தமிழ்நாடெங்கும் பரவலாகப் பயணம் செய்து, சுதேசியம் பற்றியும் அந்நிய பொருட்களைப் புறக்கணிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சுயராஜ்ஜியம் பற்றியும் மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள்.
கைத்தறி நெசவாளர்கள் அதிகம் இருந்த கோவை, சேலம், ஈரோடு, கரூர் பகுதிகளில் சுதேசியம் பேசும் கிருஷ்ணசாமி சர்மாவின் சொற்பொழிவுகளுக்கு நிறைய ரசிகர்களும் ஏற்பாட்டாளர்களும் இருந்தார்கள். பாரதியும், வ.உ.சி யும் வெண்தலைப்பாகை வேந்தர்கள் என்றால், இவர் இளஞ்சிவப்பு நிறத்தில் பஞ்சாபியர் டர்பன் அணிவது போன்று தலைப்பாகை கட்டி கம்பீரமாக மக்கள் மத்தியில் ஆவேச உரையாற்றிப் புகழ் பெற்றார். அவருடைய ஆழ்ந்த அறிவும் புத்திசாலித்தனமான பேச்சும், உணர்ச்சிகரமான குரலும் மக்களை வெகுவாக கவர்ந்தன. இவருடைய சொற்பொழிவுகளைக் குறிப்பு எடுத்து மொழிபெயர்க்க நுண்ணறிவு போலீசார் மிகவும் சிரமப்பட்டார்கள்.
திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் எழுச்சி ஏற்பட்ட 1908 மார்ச்சில் கிருஷ்ணசாமி சர்மா கரூர் பகுதியில் சுதேசி பிரச்சாரம் செய்யவும் சுதேசி கப்பல் கம்பெனி பங்குகளை வாங்க மக்களை வற்புறுத்தியும் சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். பிரச்சினைக்குரிய சொற்பொழிவு அவரால் மார்ச்சு 17ஆம் நாளன்று பசுபதீசுரன் கோயிலுக்கு முன்புறம் நிகழ்த்தப்பட்டது. அவர் பேசும்போது
“ தூத்துக்குடியில் பரதேசிகளுக்கு எதிராக மாபெரும் சுதேசி எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. பரங்கியரின் அதிகார மையங்களான கலெக்டர், முன்சீபு கோர்ட், போலீஸ் ஆகிய அலுவலகங்களை எல்லாம் தகர்த்தெறியும் அளவுக்குத் தூத்துக்குடியில் சுதேசிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இங்கே கரூரில் எவ்வித உற்சாகமும் இன்றி இருக்கிறீர்கள். நீங்களும் ஏன் அவ்வாறு செய்யக்கூடாது?
நம்முடைய மக்களே குறைந்த ஊதியத்துக்கு இங்குள்ள வெள்ளைக்காரனின் பட்டாளத்தில் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் ஏன் சுதேசிய இலட்சியத்துக்குப் பாடுபடக்கூடாது?” என்று கேட்டதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.
“பட்டாளத்தில் இருக்கும் நம்மவர்கள் வெள்ளை மூஞ்சிக் காரர்களைச் சுடுவதற்குத் தமது துப்பாக்கிகளைப் பயன்படுத்தித் தமது தாய்நாட்டுக்கு ஏன் உதவக் கூடாது? அவர்கள் அவ்வாறு செய்தால் நாம் சுயராஜ்ஜியத்தைப் பெற்றுவிட முடியாதா?” என்று உணர்ச்சி பொங்க கேட்டார்.
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த கிருஷ்ணசாமி என்கிற காண்ட்ராக்டர் ஒருவர் “நீர் இப்படி பேசுவது ராஜ நிந்தனை ஆகாதா? துரைமார்களுக்கு எதிராகப் பட்டாளத்தாரைத் தூண்டி விடுவது தவறல்லவா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கிருஷ்ணசாமி சர்மா “அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். நீர் உட்காரும். நான் இவ்வாறு பேசுவதற்காகச் சிறை செல்லத் தயாராகவே இருக்கிறேன்” என்று உரத்த குரலில் பதிலிறுத்தார். அப்போது அவருக்கு இருபத்தியொரு வயது. இதுதான் கிருஷ்ணசாமி சர்மாவின் மேடைப் பிரசங்க பாணி.
சுதேசிப் பிரச்சாரம் எல்லாம் முடித்து விட்டு அவர் சென்னை சென்ற பிறகு கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் நீதிமன்ற விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருடைய சிறைத் தண்டனைக் காலமும் வ.உ.சி. அடைக்கப்பட்டிருந்த கோயம்புத்தூர் சிறைச்சாலையில் அதே சமயத்திலேயே கழிந்தது.
விடுதலைக்குப் பிறகு அவர் முழுமூச்சாகத் தன்னை தேச விடுதலைப் பணியிலும், பத்திரிகைத் தொழிலிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.
இந்தியச் செல்வம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் எவ்வாறு சுரண்டப் பெற்று பிரிட்டனுக்குக் கொண்டு போகப்படுகிறது, என்பதைப் புள்ளி விவரங்கள் கொண்ட துண்டறிக்கை ஒன்றினை ‘ஸ்வதர்மா’ எனத் தலைப்பில் வெளியிட்டார்.
1917-இல் போர்க் காலத்தில் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என்ற அடக்கு முறைச் சட்டம் வந்த போது, அச்சட்டத்தின் கீழ் முதல் நடவடிக்கை சர்மாவின் மீதுதான் எடுக்கப்பட்டது. அதன்படி அரசாங்கத்தின் முன் அனுமதியில்லாமல் சர்மா கூட்டங்களில் பேசவோ, எழுத்துப் பணியில் ஈடுபடவோ கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் வரலாற்றைக் கூறும் ”பாரத ஜன சபை” என்னும் நூலின் முதல் பாகத்தை 1918 இல் பாரதியார் எழுதிட, இந்நூலின் இரண்டாம் பாகத்தை 1920-இல் காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா தான் எழுதினார் என்று வரலாற்றாய்வாளர் பெ.சு.மணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
1921ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் பங்கேற்றதால் சர்மா இரண்டாவது தடவையாகச் சிறைவாசத்தை அனுபவித்தார். வேலூர் சிறையிலும், கடலூர் சிறையிலும் இருந்த பொழுது அவர் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய அரசியல் மற்றும் உலக அரசியல் பற்றியும் உலகெங்கிலும் உள்ள மாபெரும் ஆளுமைகளைப் பற்றியும் நூல்களை எழுதிக் குவித்தார். தமது
நூல்களை வெளியிடுவதற்கென்றே “அரசியல் ஞான போதினி”,
“காங்கிரஸ் விளம்பர சபை” என்னும் இரு பதிப்பகங்களையும்
சென்னையில் தொடங்கினார்.
இந்திய மாதர்களின் நிலைமை, இந்தியாவில் கல்வி, இராஜரீக சாஸ்திரம், இந்தியா இழந்த தனம், ஸ்வராஜ்யம், மகாத்மா காந்தியின் ஆன்ம சக்தியும், சாந்தி நிலையும் எனப் பல்வேறு தலைப்புகளில் அவர் எழுதிய அரசியல் நூல்களைப் பற்றிப் பெரியார் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சர்மா அரசியல் நூல்கள் எழுதுவதில் மிகத் தேர்ச்சி உடையவர். தற்பொழுது நமது கிராம மக்கள் அரசியல் அறிவுபெற அவரது நூல்களே ஆதாரமாகும்”.
மகாத்மா காந்தி, முகமதுஅலி ஷவுக்கத், சித்தரஞ்சன்தாஸ், லாலா லஜபதிராய் சிவாஜி மகாராஜர், டால்ஸ்டாய், சரோஜினி தேவி, மோதிலால் நேரு ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் விரிவாக எழுதியுள்ளார். நெப்போலியன் வாழ்க்கை வரலாற்றினைக் கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்களில் எழுதியுள்ளார். அரசியல் நூல்கள் மட்டுமல்லாமல் புத்தர் ஜாதகக் கதைகள் மற்றும் துருவன் என்கிற நாடகத்தையும் எழுதியுள்ளார். ‘எழுத்திடைச் சேவை செழித்த செம்மல்’ எனத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களால் பாராட்டப்பட்டார்.
கிருஷ்ணசாமி சர்மா ‘இந்தியா இழந்த தனம்’ என்கிற அரசியல் பொருளாதார நூலின் முன்னுரையை 29/09/1922 அன்று கடலூர் சிறையிலிருந்து எழுதியுள்ளார். அதில் இந்தியாவின் பொருளாதார நிலைமையை ஒவ்வொரு தமிழரும் அறிவதற்கு ஏற்றபடி பொருளாதார நூலை மூன்று பாகங்களாக எழுத உத்தேசித்துள்ளேன். முதல் பாகத்தில் இந்தியா இழந்த தனத்தைப் பற்றியும் மகா ஜனங்களின் வாழ்க்கையைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் இந்தியாவின் கைத் தொழில்களின் உன்னத நிலை, அவைகள் அழிந்த விதம், வியாபாரப் பெருக்கு, தனவிருத்தி, விவசாய மேம்பாடு, இந்தியாவில் பூர்வ மன்னர்களின் வரி நிர்ணயம், முதலியவைகள் கூறப்படும். மூன்றாவது பாகத்தில் தற்கால வரி நிர்ணயம், அரசிறை திரட்டும் வழி, பொருள் நூலின் தத்துவம், இராணுவச் செலவு முதலிய பல விஷயங்களையும் கூறப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
“உலக இராஜீய வியவகாரங்களில் அறிவு உண்டாவதற்கும், பிரபஞ்ச இயக்கத்தின் தன்மை நன்கு விளங்குவதற்கும் பல இராஜீய நூல்களும் மற்ற சரித்திர நூல்களும் அவசியமானவை. அரசாங்கத்தார் எனக்குச் சிறைவாசங் கொடுத்து இவ் வழியில் தீவிரமாக வேலைபுரிய அவகாசங் கொடுத்ததற்கு யான் நன்றி பாராட்டுகின்றேன்” என்று குறிப்பிடுகிறார்.
இராஜரீக சாஸ்திரம் என்கிற நூலின் முன்னுரையில்,
“மக்களை அரசியல் படுத்தும் நூல்கள் இன்றியமையாதனவென்பது ஒரு புற மிருப்பினும், இராஜீய போராட்டமே எனக்கு முக்கிய கருத்தாதலால், ஒழிந்த நேரங்களில் புத்தகங்களை எழுதுவது எனக்கு ஓர் விளையாட்டுக் கருவியாகும். இராஜீயப் போராட்டத்தில் இன்னும் எத்தனை தடவைகள் சிறைவாசம் புக நேரினும் அதற்கு என் வாழ்க்கையை ஒப்புவித்து விட்டபிறகே புத்தகங்கள் எழுதுவதற்கு என் காலத்தை ஒப்புவிப்பேன்’’ என்று தன்னை ஒரு களப் போராளியாகவே முன் நிறுத்துகிறார்.
கிருஷ்ணசாமி சர்மாவைப் பற்றி முழுமையான வரலாற்று நூல் எதுவும் எழுதப்படவில்லை. பெ.சு.மணி அவர்களுடைய கட்டுரைகளில் இருந்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பத்திரிகைக் குறிப்புகளில் இருந்தும் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.
தனது முற்போக்கு சிந்தனைகளாலும் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளினாலும் தனது உறவினர்களிடமிருந்தும் சொந்த சாதியினரிடம் இருந்தும் கடும் வெறுப்பை மட்டுமே சம்பாதித்த இவர் அவர்களால் முழுமையாக விலக்கம் செய்து வைக்கப்பட்டவராகவே வாழ்ந்திருக்கிறார். தன் கடைசி காலத்தில் மனம் பிறழ்ந்த நிலையிலேயே இருந்திருக்கிறார்.
முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காய்ச்சல் ஏற்பட்டு நிவாரணம் பெறாமல் மறைந்திருக்கிறார். தம் நண்பர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 24 6 1925 அன்று மறைந்ததாகவே குடிஅரசு பத்திரிகையில் பெரியாரும் பதிவு செய்திருக்கிறார்.
மறைந்த பிறகும் கூட உறவினர்கள் யாரும் வராமல் புறக்கணித்தனர். கே.எஸ். பார்த்தசாரதி என்கிற கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் சர்மாவின் உடலை ஒரு மாட்டு வண்டியில் மயானத்துக்கு எடுத்துச் சென்றதாகவும் சர்மாவின் மனைவி சிதைக்குத் தீ மூட்டியதாகவும் நாம் அறியக் கிடைத்துள்ள செய்திகள் வெட்கப்பட வேண்டிய விஷயம் தான்.
பெரியாரின் இரங்கலுரையில் சர்மாவின் தியாக வாழ்வு பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read
“ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டுத் தீவிரமாக உழைத்ததின் பயனாக நமது அரசாங்கத்தாருக்கு ஜாமீன் கொடுக்க மறுத்து ஓராண்டு சிறையில் வதிந்தார். அவர் அகில இந்திய காங்கிரஸிற்கு அரிய தொண்டாற்றி வந்திருக்கின்றார். கிலாபத்துக்காகவும் அதிக சேவை செய்துள்ளார். ஒத்துழையாமையின் ஒவ்வொரு தத்துவத்திலேயும் அவர் உண்மையான நம்பிக்கை கொண்டவர். பெல்காம் காங்கிரஸில் ஒத்துழையாமையை அடியுடன் ஒழிக்கும் வரை பூரண ஒத்துழையாதாரராகவே இருந்து முடிவு வரை தமது தொண்டை ஆற்றி வந்தவர். காங்கிரஸின் தற்கால நிர்மாணத் திட்டமாகிய கதர், தீண்டாமை இவ் விரண்டையும் மேடைத் திட்டமாய்க் கொள்ளாமல் உண்மைத் திட்டமாகவே கருதி மனப்பூர்வமாக ஏற்று உழைத்தவர். குருகுல விவாதத்தில் பிராமண சமூகத்தாரிலேயே நமதன்பர் சர்மா ஒருவர்தான் தனது அபிப்பிராயத்தை தைரியமாகவும், வெளிப் படையாகவும் கூறியவர். இப்பேர்ப்பட்ட ஓர் பக்தரை, தமிழ்நாடு தனது சோதனை காலத்தில் இழந்தது பெருத்ததோர் நஷ்டமாகும்”
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தோழர் காஞ்சி அமுதன் தியாகி கிருஷ்ணசாமி சர்மாவின் நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டம் நடத்தி வருவதுடன் சர்மாவிற்கு காஞ்சிபுரத்தில் சிலை அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வரும் செய்தி தியாகங்கள் என்றென்றும் எங்கேனும் கௌரவிக்கப்படாமல் போவதில்லை என உறுதிபட நம்ப வைக்கிறது.
கட்டுரையாளர்; முத்துக்குமார் சங்கரன்
சிறப்பான. கட்டுரை. நம்பகத்தன்மை மிக்க தகவல்கள். வாழ்த்துகள்.
படித்தேன் நன்றி தோழர்
படித்தேன் நன்றி தோழர்
அரிய தகவல் களை வெளிக்கொணர்ந்த முயற்சிக்கு கோடான கோடி நன்றிகள்
மிக சிறப்பு தன் கணவனின் சிதைக்கு மனைவி தீ மூட்டிய செயல், அடுத்து இப்போதிருக்கும் காங்கிரஸ் (ஒற்றுமை கட்சி) தலைவர்களுக்கு இவரை பற்றி தெரியுமோ?
ஒற்றுமை இல்லா கட்சிக்கு ஒற்றுமைன்னு பெறுவேற……….