தாமரை, தீரா நோய்களை தீர்க்கும் மூலிகை!

-அண்ணாமலை சுகுமாரன்

பற் பல மதங்களிலும் தாமரை ஒரு தெய்வீக மலராக அறியப்படுகிறது. இது மலர் மாத்திரமல்ல, ஒரு மூலிகையுமாகும் இதன் வேர், தண்டு, இலை, விதை அனைத்துமே பயனுள்ளது. தாமரை  சேற்றில் இருந்தாலும்  மாசுபடுவதில்லை. இதை பலவாறாக சமைக்கலாம். தாமரைப்பூ தேனீர் மருத்துவ குணம் கொண்டதாகும்;

நமது நாட்டைப் பொறுத்த வரை தாமரை ஒரு மூலிகை என்பதைவிட ஒரு மங்கலப் பொருளாகவே மதிக்கப்படுகிறதேயன்றி, அது ஒரு மூலிகை என்பதே பலருக்கு தெரியாது.

இன்று பலருக்கும் பிளட் பிரஷர் எனப்படும் ரத்த கொதிப்பு பிரச்சினை உள்ளது. இரத்தக் கொதிப்பு கட்டுப்பட, வெண் தாமரை இதழ்களை நன்கு உலர்த்தி, பொடி செய்து கொண்டு, 1½ தேக்கரண்டி அளவு, தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும்.

தாமரை மலர்களில், வைட்டமின் பி, சி, ப்ரோடீன், இரும்புச் சத்துகள் காணப்படுகின்றன. அதிலும் தாமிர சத்து அதிகம் இருப்பதால், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு பெரிதும் உதவுகிறது.

வெண் தாமரையானது இதய மற்றும் மூளை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

செந்தாமரை உடலின் மூல உஷ்ணத்தை மட்டுப்படுத்தி, சீராக்க பெரிதும் பயன்படுகிறது.

தாமரை ஒரு   நீண்ட நாள் வாழும்  நீர்வாழ்  தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். தாமரை பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்டதாகவும்   எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டு வழிபாட்டுக்கு பயன்பட்டதாகக் கூறப்படுகிறது.  இந்தியாவில் வேதத்திலே  தாமரை குறிப்பிடப்படுகிறது.


சோம என்பது தாமரையை  குறிக்கும் என நிறுவப்பட்டிருக்கிறது. டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆண்ட்ரூ மெக்டொனால்ட் என்ற தாவரவியலாளர் சோம தேவதையின் மேற்கூறிய வேத விவரணத்  தரவுகளின் அடிப்படையில் சோமத் தாவரத்தைக் கண்டடைய முயற்சி செய்தார். வேதம் சொல்லும் தாவரம் நிச்சயமாக இந்திய பண்பாட்டு மண்டலத்தில் ஒரு மிக முக்கியமான, மையமான இடம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அவரது முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும்.

இதன் அடிப்படையில் அவர் சிந்து சமவெளி பண்பாட்டிலிருந்து பிற்காலத்திய சைவ, வைணவ, பௌத்த பண்பாடுகளை ஆராய்ச்சி செய்யலானார். இத்தகைய முழுமையான பண்பாட்டு ஆராய்ச்சியின் விளைவாக அவர் சோமத்  தாவரம் என்பது வேறெதுவும் அல்ல, தாமரை (Nelumbo nucifera) தான் என முடிவு செய்தார்.

இந்த வேத ஆன்மிகத்தின் மைய உருவகத்துக்கும் சிந்து-வெளி பண்பாட்டின் முத்திரைகளில் காணப்படும் சித்திரங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அவர் சுட்டிக் காட்டுகிறார்:

சிந்து வெளி பண்பாட்டு முத்திரைகளில் காணப்படும் இலச்சினை சித்திரத்தில் புனிதத் தாமரை மிக அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது. தாமரைப் பூவின் தூண் போன்ற பீடம் முக்கியப்படுத்தப் பட்டுள்ளது. இதன் இருபுறமும் காட்டப்பட்டுள்ள கொம்புள்ள பூத நாகங்கள் போன்ற விலங்குகள் ரிக்வேத தொன்மத்தை ஒத்துச் செல்கின்றன.

திருமகள் அமரும் ஆசனமாகவும்  செல்வ வளத்தை குறிக்க இரு கரங்களிலும் தாமரை ஏந்தியிருப்பதும்  ஓவியங்களில் காணலாம். வெள்ளை தாமரையில் சரஸ்வதி வீற்றிருபதான ஓவியமும் பார்த்துள்ளோம். கூறப்படுவது.  இவை போல்  அதிக தேவதைகள் மற்றும் கடவுளர்  கரங்களில்  தாமரை இடம் பெற்றுப்பதும் நோக்கத்தக்கது.

பாப்பிரஸ் என்பது எகிப்தில் உள்ள நைல் நதியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பூக்கும் தாவரமாகும். அது தாமரையை ஒத்த தாவரம்  எகிப்தின் ராமேஸ் II சகாப்தத்தின் சுமார் 1250 கி.மு தாமரை பயன்பாட்டில் இருந்த வரலாற்று குறிப்பு உள்ளது. பாப்பிரஸ் மற்றும் தாமரை இரண்டும் பண்டைய எகிப்தியர்களால் புனிதமாகக் கருதப்பட்டது.

மேலும் புத்த மதத்திற்கும் தாமரையுடன் நெருங்கிய  தொடர்பு  உண்டு. புத்தர் தாமரையில் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களை நாம் பரவலாகப் பார்க்கலாம். பொதுவாக தாமரை ஒரு ஆன்மீக மலராக விளங்குகிறது.


தாமரை வெள்ளை, சிவப்பு என இரண்டு வகைப்படும். ஆனால், அல்லியில் பல நிற வண்ணங்கள் உண்டு.தாமரை தான் இந்தியாவின் தேசிய மலர்!  வியட்னாமுக்கும் அதுவே தேசிய மலர்!

விஷ்ணுவை  பத்மாநாபா என்று அழைக்கிறோம். அதாவது நாபியில் இருந்து வரும் தாமரையை உடையவர் .அதில் பிர்மா  வீற்றிருப்பார்.

விஷ்ணுவின் கண்கள் தாமரையுடன் ஒப்பிட்டு  பேசப்படும். (கமலக் கண்ணன்)

தாமரையின் வேர்கள்  தரையில் சேற்றில்  இருந்தாலும் அதன் மலர்கள் நீரின் மட்டத்தில் காணப்படும். இலையும் மலரும் நீரின் மட்டத்தில் அமையும் இதை திருவள்ளுவர்.
’’எப்படி நீரின் மட்டத்திற்கு தகுந்த படி தாமரை தண்டின் உயரம் மாறுமோ அப்படியே மாந்தர்களின் உள்ளத்தின் அளவே அவர்களின் உயர்வு’’ என்கிறார் வள்ளுவர். பகவத்கீதையில், ‘’தாமரை சேற்றில் இருந்து கிளம்பினாலும் எவ்வாறு அதன் மலர் மாசுபடாமல் இருக்கிறதோ, அவ்வாறே பற்றின்றி காரியங்கள் செய்பவனை பாபங்கள் பற்றுவதில்லை’’ என கண்ணன் கூறுகிறார்.


இவை எல்லாம் தாமரை இந்தியர் வாழ்வில் நீண்ட காலமாக இடம் பெற்றுள்ளன என்பதை சுட்டும் சில சான்றுகள்.

தாமரையில் ,வெண் தாமரை, செந்தாமரை, ஆகாசத் தாமரை, கல்தாமரை என நான்கு வகைகள் உள்ளது.

வெண்மையான இதழ்கள் கொண்டது வெண்தாமரை, சிவந்த இதழ்கள் கொண்டது செந்தாமரை என்றும், நீரில் அந்தரமாய் வேரோடி கொத்தாக இருப்பது ஆகாசத் தாமரை என்றும் கூறப்படுகிறது.
கல்தாமரை என்பது மலர் அல்ல, கற்பாறைகளின் வெடிப்புகளில் வளருவதால், இவை கல்தாமரை என்று அழைக்கபடுகிறது.

கல் தாமரை

இதன் இலையை தான் பயன்படுத்த முடியும்.அது அபூர்வ பலன்களைத் தரும்  மூலிகை!

இதன் வேறு பெயர்கள் கமலம், பத்மம், அம்பாள், சூரியா, அம்புஜா, கணவால் முதலியன.

இதன் பூ, தண்டு, இலை, விதை அனைத்தும் பலனுள்ளது.

தாமரை மலரின் நடுவில் இருக்கும் மகரந்த பகுதியை உடைத்துப் பார்த்தால் அதனுள் விதைகள் காணப்படும். இவைகள் மிகப் படினமாக இருக்கும். இந்த விதைகளை  உடைத்து, அதில்  உள்ளே இருக்கும் பருப்பை சாப்பிட இதய நோய் தீரும். இதயம் பலப்படும். சிறுநீரகங்களை வலுப்படுத்தும். உலர்ந்த தாமரை விதைகள் மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கிடைக்கின்றன. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தாமரை விதைகளை  தண்ணீரில் ஊற வைத்து சூப்புகள், சாலட்டுகள் செய்து உண்ணலாம். பாப்கார்னை போல் வறுத்து நொறுக்கு தீனியாகவும் சாப்பிடலாம்.

தாமரை விதைகள்!

மூலிகைகளின் பலனை அறிய  ஒரு சின்ன சுருக்கு வழி கூட இயற்கை  சுட்டிக் காட்டியிருக்கிறது. ஒரு ரகசியம் கூறுகிறேன். ஒரு மூலிகை வடிவில்  எந்த  மனித உறுப்பில் எதை  ஒத்து இருக்கிறதோ, அந்த உறுப்புக்கு அந்த மூலிகை நிவாரணமாக பயன்படும்.  இது பெருவாரியாக ஒத்து வரும்.

அதே போல் மூடிய தாமரை ஒத்திருக்கும் நமது உடலின் முக்கிய இதயத்தை தாமரை வலுவாக்கும். தாமரை தண்டுகள் நார்சத்து நிரம்பியவை   விட்டமின் சி, பொட்டசியம்,  பாஸ்பராஸ், விட்டமின்  B6, தாமிர சத்து  இவைகளுடன் மாங்கனீஸ் இவைகள் அடங்கியது. இதில் மிக முக்கியமானது இதில் சக்கரையும் கொழுப்பும் சிறிது கூட இல்லை.


தாமரைத் தண்டின்  மேல் தோலை சீவிவிட்டு, மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவி பயன்படுத்தவும். தண்டு இளசாகவோ அல்லது முற்றியதாகவோ எப்படிருந்தாலும் சமைத்தாலும் ஒரே மாதிரி நறுக் நறுக் என்று தான் இருக்கும். இதைக் கூட்டாக அல்லது பொறியலாக சாப்பிடலாம். இதன் தண்டை பச்சையாகவே சாப்பிட்டால்  கூட நன்றாகயிருக்கும்.

உப்பு எப்படி தான் போட்டாலும் தண்டில் ஏறாது, உப்பில்லாமல் சப்புன்னு இருக்கும்.  தாமரைத் தண்டை தோல் சீவி மெல்லிய வட்டங்களாக நறுக்கி கழுவவும். அதனுடன் உப்பு, மிளகாய்த் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன், கார்ன் மாவு – 1 டீஸ்பூன், கடலை மாவு – 1/2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் அனைத்துப் பொருட்களும் சேர்த்து பிசிறி 1/2 மணிநேரம் அப்படியே விட்டுவிடவும் பின்  எண்ணெய்விட்டு வறுக்கவும்: இது வாழைக்காய் வருவல் மாதிரி இருக்கும்.

தாமரை மலர்களின் இதழ்களை நிழலில் காய வைத்து  அவைகளை தேநீர் செய்து சாப்பிட்டால் இதய நோய்கள் கட்டுப்படும்.


தாமரைத் தண்டை விளக்கில் திரியாக உபயோகிப்பார்கள். இந்த வழக்கம் தற்போதும் உள்ளது.
இதன் இலை பண்டைய நாள் முதல் உணவருந்த பயன்பட்டு வருகிறது. தாமரை இலையில் சாப்பிட்டாலே பல வியாதிகள் தீரும். முக்கியமாக நரை விரைவில் வராது.

தாமரை விதைகள் அஸ்ட்ரிஜென்ட் என வகைப்படுத்தப்பட்டு சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கிறது. அஸ்ட்ரிஜென்ட் சிறுநீரக தூய்மைக்கு  உதவுகிறது.  இதன் விதைகள் ஆண்களில் பலவீனமான பாலியல் செயல்பாடு மற்றும் பெண்களில் லுகோரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகின்றன.

இதன் விதைகள் அமைதியின்மை, படபடப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. விதையின் உள்ளே இதயத்திற்கு நன்மை செய்யும் பச்சை கரு உள்ளது.
இதயம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு தாமரை விதைகள் உதவியாக இருக்கிறது.

இது காளான் விஷத்திற்கு ஒரு மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது.
இலைகள் மற்ற மூலிகைகளுடன் இணைந்து  சூரிய வெப்ப தாக்குதல் , வயிற்றுப் போக்கு, காய்ச்சல் மற்றும் இரத்த வாந்தி போன்றவற்றுக்கு
சிகிச்சை அளிக்கப் பயன்படுகிறது.


வெண்தாமரையில் 20 பங்கு தாமிர சத்தும், செந்தாமரையில் மற்றும் ஆகாச தாமரையில் 15 பங்கு தாமிர சத்தும், கல்தாமரையில் மற்றும் மொத்தம் 59 பங்கு தாமிர சத்து உள்ளது. வெண்தாமரை, செந்தாமரை இரண்டிற்கும் ஒரே மருத்துவ தன்மை கொண்டுள்ளது.
மேலும் இதன் கிழங்கு, கொட்டை, தண்டு, இலை ஆகிய எல்லாம் பலனளிக்கின்றது.

இந்திய அரசு வழங்கும் உயர் விருதுகள் எல்லாம் பத்மம் என பத்மஸ்ரீ, பத்மபூஷன் மாதிரி  தாமரையுடன் ஒன்றியே வரும்.

அது என்னவோ உலகம் முழுவதும் எல்லா மதத்திலேயும் தாமரை ஒரு ஆன்மீக மலராகத் தான் மதிக்கபடுகிறது. அது  உலகம் முழுவதும் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது  ஆனால் கொண்டையில் வைக்க முடியாத பூ ! (இத்தகைய கட்டுரைகளை காணொளியாக காண iniyatamilamirtham யூ டுயுப் பாருங்க)

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்


நம்ம ஊரு மூலிகைகள் உள்ளிட்ட நூலின் ஆசிரியர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time