டாஸ்மாக்கின் தவறுகளே கள்ள சாராயத்திற்கு காரணம்!

-சாவித்திரி கண்ணன்

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயச் சோக நிகழ்வு தமிழக அரசின் இத்துப் போன மதுபான கொள்கையில் சில மாற்றங்களை கோருகிறது. மது விற்பனையில் தரமற்ற சரக்குகள், மட்டுமீறிய லாபம், சர்வாதிகார போக்குகள், ஆட்சியாளர்களின்  பேராசை ஆகியவற்றை மறு பரிசீலனைக்கு வேண்டுகிறது இந்தக் கட்டுரை;

#  டாஸ்மாக் என்ற பெயரில் மது விற்னையை அரசே தனியுரிமையாக்கிக் கொண்ட பிறகு, தரமற்ற மெல்லக் கொல்லும் சரக்குகளை மக்களிடம் திணித்தவாறு,”கள்ளச் சாராயம் விற்காதே” எனச் சொல்வது எப்படி? அப்படிச் சொல்லும் தார்மீகத் தகுதியே முதலில் நம் தமிழ்நாட்டு அரசுக்கு கிடையாது! ‘மது வருமானமே பிரதானம்’ என அரசே 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், அது நல்ல சாராயம். மற்றவர்கள் விற்றால், அதுவே, கள்ளச் சாராயம்!

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இது வரை கள்ளச் சாராயத்தில் இறந்தவர்கள் மிகச் சொற்பமே! ஆனால், டாஸ்மாக்கால் இறந்தவர்கள் லட்சங்களில் இருக்கக் கூடும்.

# 15 ரூபாய் சரக்கை அரசு 150 ரூபாய்க்கு விற்கிறது! கேட்டால், அதிக விலை வைத்தால் தான் குறைவாகக் குடிப்பார்களாம்! ஒகோ, ‘ஜனங்க அதிகமாகக் குடிக்கக் கூடாது’ என்பதற்காகத் தான் ஆட்சியாளர்கள் பொது மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் விற்கிறார்களோ..! பள்ளிக் கூடம், கல்லூரி, கோவில், மார்க்கெட்.. என மக்கள் ‘வேண்டாம் டாஸ்மாக் ‘எனச் சொல்லி போராடும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக் திறப்பது, ‘மக்கள் குறைவாக குடிக்க வேண்டும்’ என்ற உன்னத நோக்கத்தில் என்பது தெரியாமல் போய்விட்டதே!

# ஒரு பொருளை உற்பத்தி செலவை விட, பத்து மடங்கு விலை வைத்து விற்பதற்கு பெயர் வணிகமா? பகல் கொள்ளையா?

# கள்ளச் சாராயத்தை நோக்கி சென்ற அனைவரும் முதலில் டாஸ்மாக் மூலமாகத் தான் மது பழக்கத்திற்கு ஆளானார்கள்! தொடர்ந்து மது அருந்துவதற்கு டாஸ்மாக் விலை கட்டுப்படி ஆகாததினால் கள்ளச் சாராயத்தை நாடுகின்றனர். ஆகவே, டாஸ்மாக்கால் மதுப் பழக்கத்திற்கு ஆளான எளியவர்கள் ஒரு கட்டத்தில் கள்ளச் சாராயத்தை நோக்கி தள்ளப்படுகின்றனர். ஆகவே, குடிமகன்களின் மதுப் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போடுவது எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் டாஸ்மாக் கடைகளும், பார்களும் தாம்!

# டாஸ்மாக்கிலே விற்கப்படுவது எல்லாம் உசத்தி சரக்கு என நினைத்தால், அது தான் உலகத்திலேயே பெரிய அறியாமையாக இருக்கும். உசத்தியான சரக்கு ஒன்றுமே கிடைக்காத இடம் தான் நமது தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் என்றால், மிகையாகாது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், புகழ்பெற்ற Mansion House என்ற பிராண்ட் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்கில் கிடைக்காது. ஆனால், இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கிடைக்கிறது. ஏன் நம் பாண்டிச்சேரியில் கூட கிடைக்கிறது.

# நல்ல சரக்குகளை – விருப்பப்படும் பிராண்டுகளை – வாங்கி அருந்தி பழக்கப்பட்ட மற்ற மாநிலத்தாரோ, வெளி நாட்டாரோ தமிழகம் வந்தால், நல்ல மது கிடைக்காமல் அயர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார்கள்! மது என்பது அனுமதிக்கப்பட்டுவிட்ட பிறகு, எந்த மதுவை வாங்கி அருந்துவது என்பது நுகர்வோர் விருப்பம் தானே! அதை மறுப்பதும், ”நாங்கள் கொடுப்பது எவ்வளவு மட்டமாக இருந்தாலும் அருந்த வேண்டியது உன் தலை எழுத்து” என்று சொல்வது அராஜகமல்லவா? என அவர்கள் கேட்கிறார்கள்!

”தமிழ் நாட்டிற்கு வரும் போதெல்லாம் விருப்பமில்லாத சரக்கை வேறு வழியின்றி வாங்கிக் குடித்து உடல் நலனே கெட்டு விடுகிறது” என்பது டூரிஸ்ட்கள், வெளியில் இருந்து வரும் விருந்தினர்கள் அடிக்கடி வைக்கும் குற்றச்சாட்டாகும்.

# தமிழ்நாட்டில் மக்கள் சந்தோஷத்திற்காக நடத்தப்படுவதல்ல, டாஸ்மாக்! அது ஆட்சியில் உள்ளவர்களின் லாபத்திற்காக நடத்தப்படுவது! அரசியல்வாதிகள் நடத்தும் சாராய ஆலைகளில் இருந்து மட்டுமே கொள்முதல் செய்வதற்காக உருவாக்கப்பட்டதே டாஸ்மாக்காகும்.

# தமிழக அரசு நடத்தும் நிறுவனங்களிலேயே மிக அதிக லாபம் தரக் கூடியது டாஸ்மாக் தான்! ஆனால், சரக்கோ ரொம்ப சுமார் தான்! டாஸ்மாக் பார்களோ சொல்லவே வேண்டாம், எதிலும் அடிப்படை வசதிகள் கூடக் கிடையாது. சுத்தம் கிடையாது! பணியாளர்களுக்கு கண்ணியமான சம்பளம் கிடையாது. இதனால் தான் அவர்கள் ஒவ்வொரு சரக்கிகிலும் பத்து, இருபது ரூபாய் கூடுதலாக வாங்குகிறார்கள். இது குறித்து அரசிடம் எவ்வளவு புகார்கள் கொடுத்தாலும், எந்த மாற்றமும் கிடையாது. காரணம்,  தவறைத் தட்டிக் கேட்கும் தார்மீகத் தகுதியை அரசே இழந்து விட்டது!

# அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் லோக்கல் மது தயாரிப்புக்கு தடை ஏதும் கிடையாது. ஒவ்வொரு ஹோட்டலுக்கும், பாருக்கும் மது ருசி வித்தியாசப்படும்!

# நமது நாட்டில் ஆதி காலம் தொட்டே பனங்கள்ளு புழக்கத்தில் இருந்துள்ளது. கிட்டதட்ட இதையும் ஒரு வகை உணவாகவே மக்கள் கருதினார்கள்! பழச்சாறுகள் மற்றும் அரிசி, பார்லி போன்றவற்றின் சாற்றிலும் மது தாயாரிக்கும் பழக்கங்கள் பன் நெடுங்காலமாக இருந்துள்ளது. மூலிகைச் சாற்றிலும் கூட ஆரோக்கிய மது பானங்கள் அன்று சித்தர்கள் தயாரிப்பில் இருந்துள்ளன!

”இவை அத்தனையையும் தடை செய்து பேராசைக்கார அரசியல்வாதிகளின் சரக்கை மட்டுமே சாப்பிடச் சொல்வது சர்வாதிகாரமல்லவா..?” என்பதே குடிமகன்கள் பலரது கேள்வியாக உள்ளது.

# டாஸ்மாக்கை முதலில் ஜனநாயப்படுத்துங்கள்! முதலில் அரசாங்கத்தின் அகோரப் பிடியில் இருந்து அது விடுவிக்கப்பட வேண்டும். நுகர்வோர்கள் விரும்பும் சரக்கு அங்கே இருக்க வேண்டும். மிக முக்கியமாக நியாயமான விலைக்கு சரக்குகள் கிடைக்க வேண்டும். இவை தனியார் கைகளுக்கு செல்லும் போது தான், அங்கு நுகர்வோர் மரியாதையாக நடத்தப்படுவார். ஒரு நல்ல வணிகரானவர் நுகர்வோரை கண்ணியமாக நடத்துவார். இடத்தையும் அழகான ரசனையோடு, சுத்தமாகப் பேணுவார்.

மது விற்பனையில் அரசு செய்து கொண்டிருப்பது பகல் கொள்ளை!  ‘நான் கொடுப்பதை மட்டுமே நீ அருந்த வேண்டும்’ எனும் சர்வாதிகாரம்!

‘அவரவர் உணவு அவரவர் உரிமை’.

நியாயமான விலைக்கு தரமான மது மக்களுக்கு கிடைக்க இன்று அரசு தான் தடையாக உள்ளது! மதுவுக்கு 83 சதவிகித வரியை எடுத்துவிட்டு, 30 சதவித வரி வைக்க வேண்டும். இயற்கையான, பாரம்பரியமான மதுபானத் தயாரிப்புகளுக்கு அனுமதி தந்து முறைப்படுத்தி கண்காணித்தாலே போதுமானதாகும்.

‘ஒரே நாடு’, ‘ஒரே தேர்தல்’, ‘ஒரே கல்வி’, ‘ஒரே கலாச்சாரம்’ என்பதை நாம் எப்படி ஏற்க மறுக்கிறோமோ.., அதே போல டாஸ்மாக் தருவது மட்டுமே மது என்பதும் ஏற்க முடியாததே! நிச்சயம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மது விவகாரத்தில் ஆட்சியாளர்கள் மன்னராட்சி மனோபாவத்தில் இருந்து விடுபட்டு, மக்களாட்சி கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தாலே கள்ளச் சாராயம் காணாமல் போகும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time