அரசு நூலகங்களில் ‘திருட்டு’ நூல்கள்!

-சாவித்திரி கண்ணன்

சில புகழ்பெற்ற அறிஞர்களின் நூல்களையும், அப்பாவி எழுத்தாளர்களின் படைப்புகளையும் திருடித் தன் பெயரில் போட்டுக் கொள்ளும் பதிப்பாளர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள்! அம்பலப்பட்ட ஒரு சம்பவத்தை இந்தக் கட்டுரை பேசுகிறது! இன்னும் அம்பலப்படாத ‘யோக்கிய சிகாமணிகள்’ நிறையவே உள்ளனர்..!

நாடாறிந்த அறிவியல் எழுத்தாளர் மணவை முஸ்தபா! 35 ஆண்டுகளாக யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியராக இருந்தவர். என்சைளோ பீடியா பிரிட்டானிகாவின் தலைமை பொறுப்பாசிரியராகவும் இருந்துள்ளார்! சுமார் அரை நூற்றாண்டு காலம் அறிவியல் தமிழுக்காக அயராது உழைத்தவர்! இதன் மூலம் அரிய சாதனையாக சுமார் பத்து லட்சம் அறிவியல் கலைச் சொற்களை தமிழில் உருவாக்கி உள்ளார். மருத்துவத் துறை, கணினி துறை என துறைவாரியாக அறிவியல் கலைச் சொற்களை கண்டெடுத்து நூல்களாகத் தந்துள்ளார்! இவரது நூலை தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியுள்ளது.

இது போல நாட்டுடமை ஆக்குவதன் நோக்கம் அவரது அரிய படைப்புகள் தமிழ் மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான்! அந்த வகையில் யார் வேண்டுமானாலும் அவரது நூல்களை பதிப்பிக்கலாம். தற்போதும் சிலர் அவரது படைப்புகளை பதிப்பித்து விற்பனை செய்து வருகிறார்கள்!

ஆனால், இதில் வனிதா பதிப்பகத்தின் உரிமையாளரும்,பாபாஸியின் முக்கிய நிர்வாகியாக வளம் வந்தவருமான பெ.மயிலவேலன் என்பவரோ, மணவை முஸ்தபா எழுதிய, ‘கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி’ என்ற நூலை தான் எழுதியதாகவே அச்சிட்டு, ‘கணினி கலைச்சொல் அகராதி’ என்ற பெயரில் தமிழ் நாட்டாரசின் நூலக ஆர்டரையும் பெற்று நூலகங்களுக்கு விநியோகித்துள்ளார். இப்படி இவர் செய்த போது மணவை முஸ்தபா அவர்கள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார் என்பதால் அவருக்கு தெரியவில்லை!

தமிழ்நாட்டில் அறிவியல் கலைச் சொற்கள் குறித்து எழுதும் ஆற்றல் விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலருக்கே உள்ளது. நூலக ஆர்டர் வாங்கும் குழுவில் உள்ள அறிவார்ந்த அறிஞர்கள், அதிகாரிகள் எப்படி அறிவியல் துறையில் அறிமுகமில்லாத ஒருவர் நூலை ஆய்வு செய்யாமல் வாங்கினார்கள்? குறைந்தபட்சம் முதல் பத்து பக்கங்களை புரட்டினாலே கூட அவர்களுக்கு தெரிந்திருக்கும், இந்த நூல் ஏற்கனவே நம் நூலகத்தில் நாம் வைத்துள்ள மணவை முஸ்தபாவின் நூலை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து ஆசிரியர் என்ற இடத்தில் மட்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதை! அதுவும் அணிந்துரையைக் கூட மாற்றாமல், அப்படியே வைத்து ஆசிரியர் பெயரை மட்டும் எடுத்துவிட்டு இந்த திருட்டு நடந்துள்ளது.

ஆர்டர் தரப்படும் நூலை மேம்போக்காக பார்த்தாலே கூட, இந்த திருட்டை எளிதில் கண்டுபிடிக்க முடிந்திருக்குமே! ஆக, நூலக ஆர்டர் தருபவர்களின் யோக்கியதை இவ்வளவு தானா? இது தான் இது போன்ற திருட்டை இவ்வளவு அராஜகத்துடன் செய்யும் தைரியத்தை சில பதிப்பாளர்களுக்கு தந்துள்ளதா..? என்ற கேள்விகளும் எழுகின்றன.

நூல் எப்போதோ எழுதியதல்ல, அரசுடமையானது 2010. இந்த அறிவுத் திருட்டு அரங்கேறியதோ 2013 ஆம் ஆண்டு. இந்த காலகட்டத்தில் நூலாசிரியரும் உயிருடன் தான் இருந்துள்ளார் என்பதை எல்லாம் கவனத்தில் கொண்டு பார்க்கையில் நாற்பது, ஐம்பது வருடத்திற்கு முன்பு அரசுடமை ஆக்கப்பட்ட நூலின் நிலை எப்படியோ?

உண்மையான நூலாசிரியர் தன் நூலை 736 பக்கங்கள் அச்சிட்டு மலிவு விலையாக ரூ185 என நிர்ணயித்திருக்கிறார். ஆனால், திருடப்பட்ட நூலோ அங்குமிங்குமாக சில பக்கங்களை தவிர்த்து விட்டு, அரைகுறையாக அச்சிட்டு 336 மட்டுமே அச்சிட்டு 250 ரூபாய் விலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து நம்மை சந்தித்து தன் மனக் குமுறலை வெளிப்படுத்திய மணவை முஸ்தபாவின் மகன் பேராசிரியர், டாக்டர் செம்மல் கூறியதாவது;

நான் சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் பணிபுரிகிறேன். மிகச் சமீபத்தில் தான் இது எனக்குத் தெரிய வந்தது. எங்கள் குடும்பத்தின் வேதனையை வார்த்தைகளில் சொல்ல முடியாது. என் தந்தை இரவெல்லாம் தூங்காமல் உடலைக் கெடுத்துக் கொண்டு உழைத்த உழைப்பை அருகில் இருந்து பார்த்தவன். புத்தகங்களை பதிப்பிக்க அம்மாவின் நகைகளை எல்லாம் விற்று கடனாளியானவர். இன்று அவரது படைப்பு வேறொருவர் பெயரில் இருப்பதை பார்க்கும் போது, இந்த நாட்டில் இந்த அநீதியை தட்டிக் கேட்க யாருமில்லையா..? எனக் கேட்கத் தோன்றுகிறது.

அரசின் மீது நம்பிக்கை வைத்து பொதுவுடமையாக்க வழங்கப்பட்ட நூல்களில் ஆசிரியர் பெயரை நீக்கி அறிவுத் திருட்டு அரங்கேறுமானால், அது படைப்பாளியின் உழைப்பையும், புகழையும் வரலாற்றில் அழித்தொழிக்கும் மாபெரும் அநீதியாகும்!

இந்த அறிவுத் திருட்டை இரும்புக் கரம் கொண்டு தடுத்திட வேண்டும். பல புகழ்பெற்ற சான்றோர்களின் படைப்புகளும் இவ்வாறு தொடர்ந்து திருடப்பட்டு அவர்களின் பெயரும், புகழும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இதனை இன்னமும் பேசாப் பொருளாக தமிழ்ச் சமூகம் தாண்டிச் செல்வது தவறு. பொது சமூகம் இதை உரக்கப் பேசினால் தான் தெளிவான விடைகள் கிட்டும்.

இந்த அறிவுத் திருடர்கள் மூல நூல்களை சிதைத்து குறைவான பக்கங்களில் வெளியிடுகிறார்கள்!  ஏற்கனவே ocr தொழில்நுட்பம் மூலமாக html வடிவில் உள்ள நூல்களை cut copy paste  செய்து அதீத விலையில் நூல்களை வெளியிட்டு கொள்ளை லாபம் பார்க்கிறார்கள்..

இந்த அநீதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றால் பொறுப்பற்ற பதில்களை தருகிறார்கள்!

அதிகாரிகள் கண்டு கொள்ள மாட்டார்கள், அரசும் அமைதியாக இருக்கும் எனில், இனி வரும் காலங்களில் மேலும் அதிகமான அறிவுத் திருட்டுகள் மறைந்த ஆளுமைகளின் புகழை  இருட்டடிப்பு செய்துவிடும்.

பேசாப் பொருளாக உள்ள பல அவலமான முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும். இது ஒரு தனியான படைப்பாளியின் பிரச்சினை அல்ல. இது தமிழ்ச் சமூகத்திற்காக வாழ்ந்து மறைந்தவர்களின்  நூல்களை எதிர்காலத்தில் அரசுகள் நிர்வகிக்கும் கொள்கை முடிவுகளின் மீதான சிந்தனையாகும்.

காலஞ்சென்ற ‘ மணவை முஸ்தபா. அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பெரும் பணியை, தனியொரு மனிதனாக அவர் சாதித்து முடித்தார். அவை தமிழக அரசின் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளன. நாட்டுடமை ஆக்கப்பட்ட அந்த நூல்கள் இணையத்தில் உலகம் முழுவதும் இலவசமாகக் கிடைக்கின்றன.

சமீபத்தில் தான் பெ.மயிலவேலன் என்பவர் எழுதியதாக ‘கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி’ எனும் நூல் ஒன்று, ஒரு நண்பர் மூலம் எனக்குக் கிடைத்தது. இதே தலைப்பில் ஏற்கனவே, என் தந்தையார் ஒரு நூல் எழுதியுள்ளாரே என்பதால்,இரு நூல்களையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுப் பார்க்கையில், எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

அந்தக் காலத்தில் அவர் உருவாக்கிய அந்த அருமையான அகராதி நூலின் உள்ளடக்கத்தில், இடையிடையே சில, பல சொற்களை மட்டும் நீக்கி விட்டு, மற்றவற்றை (நூலின் ஆய்வுரை உட்பட) அப்படியே காப்பி எடுத்து, அதைத் தனது நூல் போல, மயிலவேலன் சிறிதும் தயக்கமின்றி, ஆசிரியர் எனும் இடத்தில் சிறிதும் கூச்சம் இன்றித் தனது பெயரை அச்சிட்டு, புதிய நூலாக வெளியிட்டு இருக்கிறார். இதன் மூலம் அறிவியல் கலைச் சொற்கள் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாத தன்னை அறிவியல் அறிஞராகவும் அரசு செலவில் நிறுவிக் கொண்டார். அரசுக்கு சொந்தமான ஒரு நூலிற்கே  இந்நிலை எனில், தனி மனிதர்கள் விட்டுச் செல்லும் ஆக்கங்கள் என்னவாகும் ?

இன்று நூற்றுக்கணக்கான அரசின் நூலகங்களில் திருட்டு நூல் அரசின் பணத்தால் வாங்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது, அவற்றை பல்லாயிரம் வாசகர்கள் படித்திருப்பார்கள். சரித்திரம் தவறாக எழுதப்படுகிறது. திருட்டு நூல்களை அரசே பணம் கொடுத்து வாங்கி அரசின் நூலகங்களில் வைத்துள்ளது சற்றும் ஏற்க முடியாததாகும். தமிழ்நாட்டு நூலகங்களில் மணவை முஸ்தபாவின் நூலும் உள்ளது. பெ.மயிலவேலனின் திருட்டு நூலும் உள்ளது. உடனடியாக கருத்துத் திருட்டு நூல்கள் அரசு நூலகங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இப்படியான அறிவுத் திருட்டு நபர்களையும், பதிப்பகங்களையும் தமிழக அரசும், நூலகத் துறையும் கருப்பு பட்டியலில் வைத்து, நிரந்தரமாக நிராகரிக்க வேண்டும்’’ என்றார்.

பதிப்பக வட்டாரத்தில் பேசும் போது, ”இங்கு பல பெரிய பதிப்பகங்களும், பல பதிப்பக முன்னோடிகளுமே கூட இது போன்ற குற்றங்களை அஞ்சாமல் செய்து வருகிறார்கள்! அந்த காலத்தில் எழுதப்பட்ட பல அரிய நூல்களை அப்படியே திருடி, அங்குமிங்கும் ஓரிரு மாற்றங்களை செய்து தன் பெயரில் அல்லது தன் மகள், மகன், பேரன், பேத்திகள் பெயரில் போடும் பிரபல பதிப்பாளர்கள் உலா வரும் துறை இது! பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதே படைப்பாளிகளின் கவலையாக உள்ளது’’ என்றனர்.

சாவித்திரி கண்ணன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time