உலக மனசாட்சியை உலுக்கி எடுத்த அசாஞ்சே!

-ச.அருணாசலம்

ஊடகத்தின் வலிமையை உலகிற்கு உணர்த்திய ஜூலியன் அசாஞ்சேவின் செயல்கள் துணிச்சலானவை! தன் சுய நலத்திற்காக அமெரிக்கா  எப்படி பிற நாடுகளை ஏய்த்துப் பிழைக்கிறது என்பதை ஆவணங்களை கொண்டு அம்பலப்படுத்தியதே அவரது குற்றம்! உண்மைக்காக 15 வருடத்தை  தொலைத்த அசாஞ்சே ஒரு பார்வை!

இந்த உலகத்தில் மறைக்கப்பட்ட மாபெரும் உண்மைகளையும், appaavi மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் தனி ஒரு மனிதனாக அம்பலப்படுத்தியவர் தான் அசாஞ்சே!

அவரது விடுதலைச் செய்தி உலகெங்கிலுமுள்ள முற்போக்காளர்களையும் , விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்க வல்லரசுக்கு எதிராக சிறையிலிருந்தவாறே போராடிய அசாஞ்சேயை ஒரு நிபந்தனையின் பேரில் விடுதலை செய்ய அமெரிக்க அரசு ஒத்துக் கொண்டது. இதனால் ஜூன் 24 அன்று பிரிட்டனின் பெல்பார்ஷ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அசாஞ்சே மேற்கு பசிபிக் பிரதேசத்தில் உள்ள வடக்கு மரியானா தீவு நகரமான சாய்பானில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராகி ‘தகவல்களை வெளிட்டதை ஒப்புக் கொண்டு’ விடுதலையானார் அசாஞ்சே. அவர் மீது போடப்பட்ட 18 குற்றங்களும் , அதற்காக அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் (extradition) திட்டமும் இத்துடன் கைவிடப்பட்டு அவர் தனது தாய்நாடான ஆஸ்திரேலியா செல்ல அனுமதிக்கப்படுகிறார்.

உலக வல்லரசான அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த, அசாஞ்சே செய்த குற்றம் தான் என்ன?

அவர் மீது தேசத் துரோக குற்றமும் , நாட்டிற்கெதிராக வேவு பார்த்தார் என Espionage Act ன் கீழ் எங்கு பிடிபட்டாலும், அவரை நாடு கடத்தி நூறாண்டுகளுக்கு மேல் சிறை வைப்போம் என்று அமெரிக்க அரசு கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தது ஏன்?

அமெரிக்க சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக குற்றம் இழைத்தாரா அசாஞ்சே?

அல்லது உலக மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் எதிராக அமெரிக்க ஆட்சியாளர்கள் இழைத்த துரோகங்களை, ஏமாற்று வேலைகளை பத்திரிக்கையாளன் என்ற முறையில் அம்பலப்படுத்தினாரா ?

யார் இவர்?

ஆஸ்திரேலியாவில், குவின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள டவுன்ஸ்வில்லி என்ற நகரில் 1971 ம் ஆண்டு பிறந்த ஜூலியன் அசாஞ்சே, படிக்கும் பருவத்தில் கணினிகளை பெரிதும் நேசித்தார். அதில் சிறந்த தேர்ச்சியும் பெற்றார். 1990களில் ஆஸ்திரேலியாவின் தலை சிறந்த கணினி வல்லுனர்களில் (hackers) ஒருவராக மாறினார் அசாஞ்சே!

2006 -ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் என்ற இணையதள அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்பில் ரகசியமாக வைக்கப்பட்டு ஆனால் சிலரால் கசியவிடப்பட்ட ‘ பொது விவரங்களை ‘‘ விக்கிலீக்கில் வெளியிட்டு உலகிற்கு உண்மையை வெளிச்சமிட்டு காட்டினார்.

ஆட்சியாளர்களின் ,அரசு அமைப்புகளின் , ரகசியங்கள் இதன் மூலம் அம்பலமாயின.

ஆனால், 2010ம் ஆண்டு ஈராக் நாட்டுத் தலைநகரான பாக்தாதில் அமெரிக்க படைகளின் அட்டூழியத்தை – இரண்டு ராய்ட்டர் நிறுவன பத்திரிக்கையாளர் உட்பட 12 அப்பாவி மக்களை , நிராயுத பாணிகளை அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் ‘அப்பாச்சி’  ஹெலிகாப்டரில் இருந்து குண்டுகளை வீசிக் கொன்றதை வீடியோ காட்சியாக வெளியிட்டு உலகத்தினரின் கவனத்தை ஈர்த்தார். அதுவரை அத்தகைய குற்றச்சாட்டினை மறுத்துவந்த அமெரிக்க அரசு இந்த வீடியோ வெளியீட்டின் மூலம் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டது!

வெட்கித் தலைகுனிய வேண்டிய அமெரிக்க அரசு, அடிபட்ட புலியாக இந்த வீடியோவை விக்கிலீக்கிற்கு கொடுத்த இடித்துரைப்பாளர் (whistleblower) செலசீ மானிங் என்ற அமெரிக்க ராணுவ வீர்ரை கைது செய்தனர்.

ஆனால், ஈராக்கில் பொய்யான காரணங்களை கூறி, அத்துமீறி நுழைந்து ,ஆக்கிரமிப்பில் இறங்கிய அமெரிக்க அரசு , ஈராக்கில் இழைத்த போர் குற்றங்கள் அனைத்தையும் ‘அமெரிக்க ஆவண ஆதாரங்களை’ வெளியிட்டு அம்பலப்படுத்தினார் ஜூலியன் அசாஞ்சே.

 

இதன் மூலம் உலகெங்கிலுள்ள முற்போக்காளர்களின் கவனத்தையும், பத்திரிக்கையாளர்களின் பாராட்டுதலையும் பெற்றார்.

இது போன்று 2009 – ல் ஐவரி கோஸ்டு நாட்டில் ஐந்து லட்சம் லிட்டர் நச்சுக்கழிவை கொட்டியதனால் லட்சக்கணக்கான மக்கள் – வாந்தி பேதி, உடல் எரிச்சல் மற்றும் சாவுக்கு காரணமான கார்ப்பர்ரேட் நிறுவனத்தை – அம்பலப்படுத்தியது விக்கிலீக்.

ஆப்கனில் 2001 முதல் அமெரிக்கா நடத்தி வரும் பயங்கரவாதத்தை எதிர்த்த போரில் , அமெரிக்கப் படைகளின் அட்டூழியத்தையும், அமெரிக்க அரசின் பொய்த் தகவல்களையும் அமெரிக்க ஆவணங்களை வெளியிட்டு தோலுரித்துக் காட்டினார் விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே!

2010ம் ஆண்டு Public Library on United States Diplomacy என்ற 33லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க தூதரகத் தகவல் பரிமாற்றக் குறிப்புகளை(diplomatic cables) 274 அமெரிக்க தூதரகங்களின் ஆவணங்களை தொகுத்து வெளியிட்டார். இதில் தூதரக அதிகாரிகள் அமெரிக்க வெளுயுறவுத் துறையின் தலைமையிடமான ஸ்டேட் டிபார்ட்மென்ட்டுடன் நடத்திய தகவல் பரிமாற்றங்களையும் வெளியிட்டு அமெரிக்க அரசின் “இரட்டை நிலைப்பாட்டை “ உலக அரங்கில் அம்பலப்படுத்தினார்.

கேபிள் கேட் ( Cable Gate) என உலகெங்கிலும் அழைக்கப்பட்ட இந்த தகவல் பரிமாற்றங்களை உலகிலுள்ள அனைத்து முக்கிய பத்திரிக்கைகள் ஊடகங்களுக்கு கொடுத்து அனைத்து நாட்டு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்போடு அமெரிக்க அரசை அதற்கு துணை போன மற்ற நாட்டு ஆட்சியாளர்களை அசாஞ்சே அம்பலப்படுத்தினார்.

முதலில் வெளியிட்ட 2,50,000 கேபிள்களில் , அமெரிக்க அரசு தங்களின் கூட்டாளி நாட்டுத்தலைவர்களை வேவு பார்ப்பதும் , சில அதிகாரிகள் அமெரிக்க அரசின் போக்கை கண்டு நொந்து போயிருந்ததும் உலகிற்கு அம்பலமாயிற்று.

ஆப்கானித்தான் யுத்த கோப்புகள் (Afganistan war files)90000/- ரகசிய ஆவணங்களையும், இராக் யுத்த கோப்புகள் ( war files) கிட்டத்தட்ட 4 லட்சம் ரகசிய தகவல் ஆவணங்களையும் உள்ளடக்கியது. இவற்றில் அமெரிக்க தாக்குதலில் பலியான அப்பாவி பொது மக்களின் எண்ணிக்கையின் உண்மை நிலவரம் துல்லியமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அரசு வெளியிட்ட பத்திரிக்கை குறிப்புகளில் இந்தச் சாவு எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே கூறப்பட்டுள்ளன.

மறைக்கப்பட்ட மரணங்களையும், அமெரிக்காவின் அப்பட்டமான பொய்களையும் இந்த கேபிள் கேட் தோலுரித்து காட்டியது.

இதனால், உலக மக்கள் மட்டுமின்றி அமெரிக்க மக்களே தங்களது அரசின் பித்தலாட்டங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

குவான்டனாமா கோப்புகள்

ஏப்ரல் 2011ல் விக்கி லீக்ஸ் , ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை அனுப்பி வைத்தது.

இதில் 2002 முதல் 2008 வரையில் 800 க்கும் அதிகமான கைதிகளை ஜெனீவா ஒப்பந்த மரபுகளை மீறி, விசாரணை ஏதுமின்றி ரகசியமாக குவாண்டனாமா தீவு சிறையிலடைத்து சித்திரவதை செய்து வருவதை வெளியுலகிற்கு இதன் மூலம் தெரிவித்தார் ஜூலியன் அசாஞ்சே!

இந்தக் கைதிகளில் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் நிரபராதிகள், அப்பாவி பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கன் நாட்டினராவர்.

என் எஸ் ஏ திறுவனம் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூனின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதும், அவர் ஜெர்மன் அதிபர் ஆஞ்செலா மார்க்கெலுடன் நடத்திய உரையாடலை ஒட்டுக் கேட்டு பதிவிட்டதையும் வெளிப்படுத்தினார் . இச்சம்பவம் சர்வதேச உறவுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் ரீதியாக அமெரிக்க அரசின் செயல்கள் கடும் கண்டனத்திற்குள்ளானது. அமெரிக்கர்களின் பேச்சை நம்ப யாரும் தயாரில்லை என்ற நிலை தோன்றியது!

2016 -ல் அமெரிக்க ஆளுங்கட்சியான ஜனநாயக்க்கட்சி ( Democratic Party) தலைமையின் 19,252 மின்னஞ்சல்களையும் , அதன் தொகுப்புகளான 8,034 ஆவணங்களையும் வெளியிட்டு கட்சித் தலைமையின் இரட்டை நிலைபாட்டை ( பெர்னி சாண்டர்ஸ்க்கு எதிரான நகர்வுகள்) வெளிப்படுத்தினார்.

ஒரு பத்திரிக்கையாளன் என்ற முறையில் ஆட்சியாளர்களின், அரசுகளின் உண்மையான செயல்களை – அவை பொதுமக்களிடமிருந்து மறைத்து பாதுகாக்கப்பட்டாலும்- அம்பலப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சரியான தகவல்களை அளிப்பதற்கு தன்னை அர்ப்பணித்தார் ஜூலியன் அசாஞ்சே.

அசாஞ்சேவின் மனைவி மற்றும் இரு குழந்தைகள்!

ஆனால், ஆளும் வர்க்கமோ  இந்த ரகசியங்கள் வெளியிட்டதை தேசத் துரோகமாக சித்தரித்து பல இடித்துரைப்பாளர்களை (whistleblowers) கைது செய்து தண்டித்தது. அசாஞ்சே வை கைது செய்து அமெரிக்காவிற்கு கடத்த முயன்றது. இதற்காக அமெரிக்க அரசு உறுதியுடன் காய்களை நகர்த்தியது.

இதன் வெளிப்பாடே ஸ்வீடன் அரசு ஜூலியன் அசாஞ்சே மீது இரண்டு பாலியல் புகார்கள் அடிப்படையில் அசாஞ்சேயைக் கைது செய்ய வாரண்டு பிறப்பித்தது. இவை யாவும் அமெரிக்க அரசின் தூண்டுதலின் பேரில் போடப்பட்ட வழக்குகளே.

2010 -ல் புனையப்பட்ட ஸ்வீடன் பாலியல் வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டு மூலம் அசாஞ்சே கைது செய்யப்படும் நிலையில், அவர் ஸ்வீடனுக்கு அனுப்பப்படுவார் என பிரிட்டன் கோர்ட் கூறிய நிலையில் பிரிட்டனில் இருந்த ஜூலியன் இக்குவேடர் நாட்டு (Ecuador) தூதரகத்தில் அரசியல் புகலிடம் வேண்டினார்.

அதை, இக்குவேடர் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதால் பிரிட்டிஷ் போலிசார் கைது செய்வதிலிருந்து தப்பினார்.

2019 வரை அங்கு இருந்த அசாஞ்சேவை வெளிக் கொணர அமெரிக்க அரசு பல நெருக்கடிகளை இக்குவேடர் அரசுக்கு கொடுத்தது. இறுதியில் அங்கு கம்யூனிஸ்ட் ஆட்சி பதவி இழந்ததால் 2019ம் ஆண்டு அசாஞ்சேக்கு அளித்த புகலிடத்தை இக்குவேடர் அரசு ரத்து செய்தது. இதனால், அங்கு நுழைந்த பிரிட்டன் போலீசார் அசாஞ்சேவை கைது செய்தனர் .

ஸ்வீடன் அரசு அசாஞ்சே மீது போடப்பட்ட பாலியல் புகார் வழக்குகளை 2017ம் ஆண்டே விலக்கிக் கொண்டது. ஆனால், பிரிட்டிஷ் கோர்ட் பிறப்பித்த வாரண்ட்டிற்கு ஆஜராகாத குற்றத்திற்காக அவர் கைது ( இக்குவேடர் தூதரகத்தில்) செய்யப்பட்டார் . அவரை அமெரிக்காவை வேவு பார்த்த குற்றத்திற்காக , அமெரிக்காவிற்கே கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அசாஞ்சே பிரிட்டன் கோர்ட்டின் நெடிய கதவுகளை தட்டினார் .

2021 -ல் பிரிட்டிஷ் கோர்ட் அசாஞ்சேவை அமெரிக்க கொண்டு செல்ல அனுமதித்து உத்தரவு போட்டது.

இதை எதிர்த்து அசாஞ்சே மேல் முறையீடு செய்ய அனுமதி கேட்டு மீண்டும் கோர்ட் கதவுகளை தட்டினார்.

பத்திரிக்கை சுதந்திரம், தனிமனித உரிமை, ஜனநாயகம் என பலவாறாக வாய் கிழியப் பேசும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அசாஞ்சேவின் விவகாரத்தில் கடைப் பிடிக்கும் வழிமுறைகள் அவர்களது போலித் தனத்தையே காட்டுகிறது.

 

 

உண்மைகளை உலகிற்கு உணர்த்திய பத்திரிக்கையாளனது செயல் எவ்விதத்தில் ஜனநாயக கொள்கைகளுக்கும் நாட்டு பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிப்பதாக அமைய முடியும் என்ற கேள்விக்கு அவர்களிடம் எந்த பதிலுமில்லை.

ஆனால், அசாஞ்சேயும் அவரது குடும்பமும் அனாதைகளில்லை.

உலகெங்கிலுமுள்ள சுதந்திர ஆர்வலர்களும், மனித நேயர்களும் , உழைக்கும் மக்களும் அசாஞ்சேக்கு உறுதுணையாக குரல் கொடுத்தனர்.

உலகின் முற்போக்கான தலைவர்களான பிரேசில் நாட்டதிபர் லூலா, மெக்சிகோ அதிபர் மானுவல் லோபஸ் ஓப்ரடார், கொலம்பிய நாட்டதிபர் கஸ்டாவோ பெட்ரோ ஆகியோர் அசாஞ்சேயின் விடுதலையை கோரி நீண்ட நாட்களாக குரல் எழுப்பி வருகின்றனர்.

அசாஞ்சேயை விடுதலை செய் என்ற குரல் அமெரிக்காவிலும் எழம்பத் தொடங்கியது. ஆஸ்திரேலிய மக்களோ. சக நாட்டுக்கார்ரான அசாஞ்சேவை விடுவிக்க வீதிகளில் திரண்டனர்.

அசாஞ்சேயை தண்டிப்பதன் மூலம் அமெரிக்கா என்ன செய்ய விரும்புகிறது? அசாஞ்சேயை தண்டிப்பதில் பொது நலன் (public interest) எங்கிருக்கிறது என்ற கேள்விகளை ஆஸ்திரேலிய மக்கள் அமெரிக்க, ஆஸ்திரேலிய அரசுகளின் முன் வைத்தனர்.

ஆஸ்திரேலிய மக்களின் குரலை தட்ட முடியாத ஆஸ்திரேலிய அரசு . அமெரிக்க அரசை நிர்ப்பந்திக்க பல முயற்சிகளை எடுத்தது. ஆஸி. பிரதமர் அந்தனி அல்பனேஸ் திரை மறைவில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

பிரிட்டன் நாட்டிலும் , அரசியல் கட்சிகள் குறிப்பாக தொழிலாளர் கட்சித்தலைவர் கிர்க் ஸ்ட்ரம்மரும் அசாஞ்சேவின் விடுதலையை ஆதரித்தனர். க்ரௌன் ப்ராசிக்யூஷன் தரப்பும் மேல்முறையீட்டு மனுவிற்கு அனுமதி வழங்க சம்மதித்தது.

இதன்மூலம் அமெரிக்க அரசு அமெரிக்க அரசமைப்பு சட்டத்தின் முதல் சட்ட திருத்தப்பிரிவின் பலனை அசாஞ்சேக்கு வழங்க – பேச்சுரிமை(free speech) – வேண்டும். ஆஸி. குடிமகனான அசாஞ்சே இந்த திருத்த பலனை அனுபவிக்க அமெரிக்க அரசு மறுக்க கூடாது என்பதை உறுதிப்படுத்தியது.

சில நாட்கள் பிடி கொடுக்காமல் இருந்தாலும், இறுதியில் அமெரிக்கா நிலைமையை புரிந்து கொண்டு – ஆஸி. மற்றும் பிரிட்டன் அரசுகளின் எதிர்ப்பு, அமெரிக்க மக்களின் எதிர்ப்பு- நிபந்தனையின் பேரில் வழக்கை முடித்து வைக்க – நாடு கடத்தாமலேயே வழக்கினை கைவிட்டு அசாஞ்சேயை விடுதலை செய்ய – ஒத்துக்கொண்டது, அதிபர் பைடனின் நிலை அப்படி.

ஆனாலும், கௌரவத்தை முற்றிலும் இழக்காமல், அசாஞ்சே ஒரே ஒரு குற்றத்தை- ரகசிய ஆவணங்களை பெற்று அதை வெளியிட்ட குற்றத்தை – ஒத்துக் கொண்டால் இதுவரை அவர் அனுபவித்த சிறைவாசமே அவரது தண்டனையாக கருதி மற்ற வழக்குகளை கைவிட்டு அவரை விடுவிக்க அமெரிக்க அரசு ஒத்துக் கொண்டது.

அமெரிக்கா நாட்டிற்கு செல்ல மறுத்த அசாஞ்சே அமெரிக்க சாம்ராஜ்ஜியத்தின் ஏதோ ஒரு மூலையிலுள்ள தீவில் உள்ள கோர்ட்டில் ஆஜராகி குற்றத்தை ஒப்புக் கொள்ள சம்மதித்தார்.

அதன்படி ஜூன் 26 அவர் ஆஜராகி , “அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை பத்திரிக்கையாளன் என்ற முறையில் விரும்பி பெற்று அதை மக்கள் நலன் கருதி வெளியிட்டேன் . இச்செயலுக்கான பாதுகாப்பை அமெரிக்க அரசியல் சட்ட முதலாம் திருத்தம் வழங்குகிறது (First Amendment) என நான் நம்பினேன் “ என்று அச்செயலை(குற்றத்தை) ஒப்புக் கொண்டதன் பேரில் அவருக்கு தண்டனையாக சிறைவாசம் அளித்து அச்சிறைவாசத்தை அவர் ஏற்கனவே அனுபவித்து விட்டதால் மற்ற குற்றச்சாட்டுகளை கைவிட்டு, அவரை அமெரிக்க அரசு விடுதலை செய்தது !

ஜூலியன் அசாஞ்சே செய்தது குற்றமே இல்லை. அதனால், குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்க கூடாது என்று எண்ணுவோரும் இல்லாமல் இல்லை.

ஆனால், விடுதலையைக் கொண்டாடாதோர் யாரும் உண்டா?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time