தனியாரிடம் மினி பஸ் சேவை வெற்றி பெறுமா?

-ஆர். ஆறுமுகம்

போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் மினி பஸ்!  நூறு குடும்பங்களுக்கு மேல்  வசிக்கும் பகுதிக்கு  மினி பஸ் சேவை..! எல்லாம் மகிழ்ச்சி! ஆனால், இதில் தனியாருக்கு மினி பஸ் அனுமதி தந்து, பொதுத் துறையை முற்றிலும் புறக்கணிப்பது சரியா? தனியார் மினி பஸ்களில் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகள் அரசுக்கு தெரியாதா…?

தற்போது 2,950 மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப் பஸ்களின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய விரிவான மினி சிற்றுந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ் நாட்டரசின் அரசிதழில் கூறப்பட்டிருப்பதாவது: தனியார் மினி பஸ்களுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கிமீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கிமீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, போக்குவரத்து சேவை இருக்கும் இடங்களில் அவற்றை 8 கி.மீ இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை கிடைக்கும்.

அதே சமயம் சென்னையின்  மையப் பகுதிகளில் மினி பஸ்கள் இயக்க அனுமதி இல்லை. ஆனால்,புற நகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பஸ்களை இயக்குவது குறித்து பரிசீலனை உள்ளது. புதிய மினி பேருந்து வரைவு திட்டம் குறித்து 30 நாட்களுக்குள் மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

லாப நோக்கத்தில் மட்டுமே செயல்படும் தனியாரை விட , சேவை நோக்கத்தில் செயல்படும் அரசின் கட்டுப் பாட்டில் தான் பயணிகள் பொது போக்குவரத்து இருக்க வேண்டும்.

சுய தேவைகளை நிறைவு செய்ய பயண வசதி இன்றியமையாததாகும். அதுவும்  கடைக்கோடி கிராமம் வரை பயணம் வசதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பொது மக்களுக்கு பயண வசதியை  மேம்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வாழ் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும்  ஏற்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்த சேவையை அரசு தான் செய்ய முடியும்.

பயண வசதி தொடங்கும் போது தனியார் கைகளில் தான்  பேருந்து இயக்கம் இருந்தது. நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள்  ஆரம்பத்தில் அரசு துறையாக இயங்கி வந்தது.

தனியாரால் இயக்கப்படும் பேருந்துகள்  லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. சாதாரண அடித்தட்டு மக்களுக்கான பயண வசதியை தனியாரால் வழங்க இயலவில்லை.

 போக்குவரத்து கழகங்களின் வரலாறு

ஆங்கிலேய அரசு 1944-ம் ஆண்டு பொது போக்குவரத்து வசதி வாய்ப்புகளை ஆய்வு செய்ய  ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு ஆய்வு செய்து  அதில்  தனியார் முதலாளிகள் பொது நலன் கருதி பேருந்தை இயக்கவில்லை, லாப நோக்கமே குறிக்கோளாக  இயக்கி வருகின்றனர் என 1946-ல் அறிக்கை சமர்ப்பித்து,  போக்குவரத்தை தேச உடமையாக்க வேண்டும் என பரிந்துரைத்தது. 1948-ம் ஆண்டு தனியாரால் இயக்கப்பட்டு வந்த 239 வழித்தடங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

1972 -ல் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது சாதாரண அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பெரும்பான்மையான பேருந்துகள் தேச உடமையாகப்பட்டன. அதன் பின்னர் தான்  போக்குவரத்து வசதி மேம்பட்டு, வேலை வாய்ப்புகள் அதிகரித்து சமூகப் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

தற்போது போலவே 1997 ஆம் ஆண்டு  பேருந்து சேவை இல்லாத பகுதிகளுக்கு 16 கி. மீ. தூரமும், பேருந்து சேவை உள்ள ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளிட்டு  மினிபேருந்து இயக்குவதற்கு அனுமதி டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டிருந்தது.1999 ம் ஆண்டு 20 கிலோ மீட்டர் தூரமாக பேருந்து இயக்கம் இல்லாத  4கி.மீ உள்ளிட்டு  அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டது. அப்போது 7,500 பர்மிட்டுகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. மக்களும் பலன் பெற்றனர். ஆனால்,ஜெயலலிதா ஆட்சியில் இது பலவாறாக முடக்கப்பட்டது. டீசல் விலை உயர்வு, தரமில்லாத சாலை, 20கி.மீ என்ற கட்டுப்பாடு போன்றவற்றால் தனியார் கைவிட்டனர் என்பது கவனத்திற்கு உரியது.

இந்த வகையில் தனியார்  மினி பேருந்துகள் சுமார் 4,000 தமிழக முழுவதும் தற்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்கப்பட்டுள்ள வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மாநகர மக்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 200 சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், நஷ்டம் ஏற்படுவதாகச் சொல்லி அதை படிப்படியாக குறைத்து, கொரானா காலத்தில் முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள  2011 ஆம் ஆண்டு மினி பேருந்து  திட்ட அறிவிக்கையை  ரத்து செய்து வழங்கப்பட்டுள்ள  2018 தீர்ப்பின் அடிப்படையில்  2024 ஆண்டு தற்போது தனியார் மினி பேருந்து  புதிய வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் மினி பேருந்து  புதிய திட்ட வரைவு அறிக்கையில் அதிகபட்சம் 25 கிலோ மீட்டர் தூரம் எனவும், பேருந்து சேவை இல்லாத 17 கிலோமீட்டர் தூரம் (70%) வழித் தடங்கள் மற்றும் பேருந்து சேவை உள்ள  கிலோமீட்டர் தூரம் (30%) 20000  அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீர்ப்பில், ஏற்கனவே இதேபோன்று வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு அதில் கருத்து கேட்பு என்பதாக ஒரு சடங்கை நிறைவேற்றினர். அதில் ஆரோக்கியமான கருத்துக்களோ, மாற்றுக் கருத்தோ சொல்லவே அனுமதிக்கபடவில்லை. இது சட்டப்படி தவறாகும். எனவே அரசின் அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களை கண்டறிந்து  மினி பேருந்து அனுமதி வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பயணிகள் பொது போக்குவரத்து யாரிடம் இருந்தால்  மக்கள் பயன் பெறுவார்கள்..?

தனியாரிடம் பயணிகள் போக்குவரத்து இருந்தால் லாப நோக்கம் ஒன்றே குறிக் கோளாக கொண்டு இயக்கப்படும். வருவாயை விட செலவு அதிகரித்தால் இயக்குவதற்கு முன் வர மாட்டார்கள். வாகன பராமரிப்பு   மற்றும்  ஓட்டுநர் நடத்துனர்  ஆகியோர்களுக்கு  வேலை பாதுகாப்பு இருக்காது. சரியான வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கவில்லை எனில்,  பயணிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. கேள்வி எழுப்பினால் தாக்கப்படுவார்கள் என்பதே கடந்த கால அனுபவம். பெண் பயணிகளின் பயணம் பாதுகாப்பானதாக இருக்காது.  (தனியார் பேருந்தில் நிகழ்ந்த நிர்பயா சம்பவம் )

பேருந்து இயக்கம் பொதுத் துறையாக இருந்தால் சேவை நோக்கத்தில் இயக்கப்படும். வருவாய் இழப்பை  அரசு ஈடு செய்யும். பணியாளர்களுக்கு சமூக நீதி அடிப்படையில்  வேலை வாய்ப்பு, பணி பாதுகாப்பு கிடைப்பதோடு சரியான வழித் தடங்களில் இயக்கப்படும். குறித்த நேரத்தில் வரவில்லை எனில்,  மக்கள் கேள்வி எழுப்பி தட்டிக் கேட்க முடியும். அவை துறை ரீதியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு ஏற்பட வழி உண்டு.

என்னதான் தீர்வு ..!

அரசு சேவை நோக்கத்தில் மினி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறையில்  இயக்குவது தான் பொருத்தமாக இருக்கும். மோட்டார் வாகன சட்டம்  பிரிவு 20 -ன் படி மோட்டார் வாகன வரி விலக்கு அளிப்பதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது.

சென்னையில் இயக்கப்படும் சிற்றுந்துகள் மெட்ரோ ரயில் போக்குவரத்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த பயணச்சீட்டு  வழங்குவதற்கான பரிசீலனையும் அரசு முன் வைத்துள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில்  காலி பணியிடங்கள் அதிகம் உள்ளதாலும், தேவையான பேருந்துகள் இல்லாததாலும், பல வழித்தடங்கள்  முடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கிராமம் மற்றும் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும் பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள் செல்வதற்கான பயண தேவைக்காக  பேருந்து, சிற்றுந்து, மினி பேருந்து சேவை  இல்லாத இடங்களில் இயக்கப்படும்  ஆட்டோ,ஷேர் ஆட்டோ, மேக்சி கேப், டிரக்கர், வேன், வசதி வாய்ப்பு உள்ளவர்கள்   டாக்ஸி, கார்,இருசக்கர வாகனம் இவைகளை,பயன்படுத்தி வருகின்றனர்.

பேருந்து சேவை இல்லாத மற்றும் சேவை குறைவாக உள்ள இடங்களில் இருந்து  பயணிகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோ, மேக்சி கேப் போன்றவை வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களால் சிறிய முதலீட்டின் மூலம்  தினமும் வருவாய் ஈட்டி வருகின்றனர். அரசு பொறுப்பேற்று  சிற்றுந்துகளையும், மினி பேருந்துகளையும்  இயக்க முன் வந்து    வேலை வாய்ப்பு பறி போகும்   மேற் சொன்ன இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க முடியும்.

எனவே, மினி பேருந்துகளும், சிற்றுந்துகளும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது தான் மக்களுக்கு பயன் தருவதாக அமையும்.

கட்டுரையாளர்; ஆர். ஆறுமுகம்

பொதுச் செயலாளர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சமமேளனம்  AITUC

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time