மத்திய பாஜக அரசுக்கு சாதிவாரி கணக்கு எடுக்கும் விருப்பம் அறவே இல்லை. இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் இருக்கிறதா? அந்தக் கணக்கெடுப்பை நீதிமன்றம் செல்லாதது ஆக்கிவிடுமா? சாதிவாரி கணக்கு அவசியமா? போன்றவற்றை தெளிவுபடுத்துகிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்;
தமிழ்நாடு சட்டப் பேரவை, ‘சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழிந்துள்ளன. இந் நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி அரசியல்,சமூக வரலாற்றுப் பின்னணியில் ஆய்வு செய்வதே இந்த கட்டுரை.
அடிமை இந்தியாவில் 1881 முதல் ஒவ்வொரு பத்தாவது ஆண்டிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பை செய்தது பிரிட்டிஷ் அரசு. அந்த கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பும் அடக்கம்.
பிரித்தானிய அரசு இறுதியாக செய்த சாதி வாரி கணக்கெடுப்பு 1931 ஆம் ஆண்டு ஆகும். இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நடந்ததால்,1941 ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பை பிரிட்டிஷ் அரசு செய்யவில்லை.
1947-இல் விடுதலை கிடைத்தபின் அமைந்த இந்தியாவின் எந்த மத்திய அரசும், சாதி வாரி கணக்கெடுப்பை செய்யவில்லை.
ஆனால், நமது மத்திய அரசு பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை மட்டும் நடத்தியது. அதில் பல விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் பற்றிய கணக்கெடுப்பை உள்ளடக்கிய அந்த கணக்கெடுப்பில் பிற்பட்ட சாதியினர் மற்றும் முற்பட்ட சாதியினர் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறவில்லை.
முதல் முதலாக ,2009 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு 2011 ஆம் ஆண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதாவது பிற்பட்ட வகுப்பினர் பற்றிய விவரங்கள் உட்பட உள்ள சாதிவாரி கணக்கெடுப்பை முதல் முதலில் நடத்தியது.
ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லை. வீரப்பமொய்லி, ஜெய்ப்பால் ரெட்டி ,பருக் அப்துல்லா ,கபில் சிபல் போன்றவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடலாம் என்ற கருத்தை அமைச்சரவையில் கூறியவர்கள். ப.சிதம்பரம் ,ஆனந்த சர்மா ,சரத் பவார் போன்றவர்கள் வெளியிடக்கூடாது என்ற கருத்தை அமைச்சரவையில் கூறியவர்கள். பிரதமர் மன்மோகன் சிங் இப் பிரச்சினையில் ஒரு முடிவு காண்பதற்காக சிறப்பு அமைச்சரவை கூட்டப்படும் என்று தெரிவித்தார் .ஆனால் அதற்குள் அவர்களின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக, காங்கிரஸ் அரசு 2011 இல் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடவில்லை. 2015 ஆம் ஆண்டில் மதவாரியான கணக்கு விவரங்களை வெளியிட்ட பாஜக அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடவில்லை .இது நாள் வரை பாஜக அரசு புதிதாக எடுக்கவும் முன்வரவில்லை. ஆனால், சாதிவாரி விவரங்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழ வேண்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த 2024 தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையிலேயே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வாக்குறுதி தந்தது. ஆனால், அப்படி ஒரு வாக்குறுதியை பாஜக அளிக்கவில்லை.
2021 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்றை காரணமாக்கி மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக அரசு நடத்தவில்லை. கொரானா முடிந்த பிறகும் நடத்தவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் அதில் நடத்தப்பட வேண்டும்.
பிரித்தானிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் சில மக்கள் நல திட்டங்களை , இட ஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை செய்ய முனைந்த போது சுதந்திரத்திற்கு பின் மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்த அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய மறுத்ததன் காரணம் என்ன?.
தந்தை பெரியார் அதற்கான காரணத்தை தெளிவாக கூறினார். பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி அதிகாரம் , சுதந்திரத்திற்கு பின் உயர் சாதியினரிடம் வந்ததன் விளைவே, சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறாததற்கு காரணம் என்றார்.
நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் -கொள்கை முடிவு எடுக்கும் இடங்களில்- உயர் சாதியினரே, அதிலும் குறிப்பாக பிராமணர்களே , சுதந்திரத்திற்கு பின் உள்ளனர். பிரித்தானியர்கள் ஆண்ட போது, அவர்களுக்கு பொதுவாக எந்த சாதி சார்பும் கிடையாது.
மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் பின் தங்கிய சாதியினருக்கு 27% இட ஒதுக்கீட்டை 1990-ஆம் ஆண்டு அளித்ததற்காக பிரதமர் வி .பி .சிங் ஆட்சி இழந்தார் என்பதே இதை தெளிவாக்கும். மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து பாஜக ,காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி என அனைத்தும் ஓரணியில் நின்றன.
இதே நிலைதான் உயர்நீதி துறையிலும் .அதாவது சுதந்திரம் பெற்றபின் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு உரியஅளவில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.அது இன்றளவும் தொடர்கிறது.
அடித்தளத்தில் உழலும் மகக்ள் வாழ் நிலையை புரிந்து கொள்ல, சமூகத்தில் அவர்களுக்கு இருக்கும் அந்தஸ்த்தை மேம்படுத்த, பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. உணவுப் பொருட்கள் விநியோகம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த கணக்கெடுப்பு விவரம் உதவக்கூடும். ஆனால் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த பாஜக அரசு தயாராக இல்லை.
அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணை மத்திய அரசிற்கும், மாநில அரசுகளுக்குமான அதிகார பகிர்வு பற்றி கூறுகிறது .அந்த அட்டவணையின் முதல் பட்டியல் பாராளுமன்றத்திற்கான அதிகாரம் பற்றி கூறுகிறது. முதல் பட்டியலில் வரிசை எண் 69 மற்றும் 94 ஆகிய இரண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு சம்பந்தமான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு அளிக்கிறது.
அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர், நேரு பிரதமராக இருந்தபோது இயற்றப்பட்ட 1948 ஆம் ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் (The Census Act, 1948)கூட மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று பணிக்கிறது. அதன்படி தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை பத்தாண்டுக்கு ஒரு முறை மத்திய அரசு செய்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு,சாதி வாரி கணக்கெடுப்பை செய்ய மறுக்கின்றது!
நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு 2022 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவெடுத்தது .அந்த அரசில் பாஜகவும் பங்கு பெற்றுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த முற்பட்டது.
உடனே, அதனை எதிர்த்து பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று வாதிடப்பட்டது.
அரசமைப்புச் சட்டம் கூறு 15 -ன் கீழ் பல்வேறு மக்கள் நல திட்டங்களை -குறிப்பாக குழந்தைகள் பெண்கள் மகளிர் சம்பந்தமான நலத்திட்டங்கள் மற்றும் கல்வி சம்பந்தமான திட்டங்கள் – நிறைவேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வாதிட்டது பீகார் அரசு. அதே போல அரசமைப்புச் சட்டம் கூறு 16 இன் கீழ் இட ஒதுக்கீடு சம்பந்தமாக முடிவெடுப்பதற்கும் சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என வாதிட்டது. 2008 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட புள்ளியல் சேகரிப்பு சட்டம் (The Collection of Statistics Act, 2008) அளிக்கும் அதிகாரத்தின் கீழ் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று வாதிடப்பட்டது. முதலில் சாதிவாரி கணக்கு எடுப்புக்கு மறுத்தது நீதிமன்றம். பிறகு, பாஜகவுடனான தன் உறவை நிதிஸ்குமார் புதுப்பித்துக் கொண்டவுடன் சூழல்கள் மாறின.
பாட்னா உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆகஸ்ட் -1, 2023 வழங்கிய தீர்ப்பில் பீகார் மாநில அரசிற்கு சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் இருப்பதாக தீர்ப்பளித்தது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதே அந்த தீர்ப்பு. ஆக,மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதே நீதிமன்றத்தின் நிலைபாடு.
பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார்கள். உச்ச நீதிமன்றம் மேற்சொன்ன தீர்ப்புக்கு தடை அளிக்க மறுத்து விட்டது.
சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு பட்டியல் இனத்தவர் ,பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டை 50 % -ல் இருந்து 65% க்கு உயர்த்தியது . இட ஒதுக்கீட்டை உயர்த்திய பீகார் அரசின் உத்தரவை ரத்து செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்! அது வேறு விஷயம். ஆனால்,சாதிவாரி கணக்கெடுப்பை தடை செய்யவில்லை.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் நடத்தலாம் . சமூக தளத்தில் மக்களை மேலும் ஆழமாக புரிந்து கொள்ளவும், பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசே செய்யலாம். இதில் எந்த தயக்கமும் தேவையில்லை. அதே சமயம் சாதிவாரி கணக்கெடுப்பால் சாதிப் பிரிவினைகளும், வாக்கு வங்கி அரசியலும் மேலெழுந்து வராமல் கவனமுடன் கையாள வேண்டும்.
Also read
பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை செய்யும் மத்திய அரசு ,சாதிவாரி கணக்கெடுப்பையும் செய்திருந்தால் தமிழ்நாடு அரசு உட்பட எந்த மாநில அரசுக்கும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அவசியம் எழாது. ‘மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை செய்ய வேண்டும்’ என்று உரத்த குரலில் கோரிக்கை எழப்பும் அதே சமயம் அவர்கள் செய்ய வாய்ப்பில்லாத சூழலில் மாநிலங்களின் உரிமை என்ற முறையில் தமிழ்நாடு அரசேனும் சாதி வாரி கணக்கெடுப்பை அவசியம் செய்தாக வேண்டும்.
கட்டுரையாளர்; ஹரிபரந்தாமன்
ஓய்வு பெற்ற நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
Great
ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுக கல்வி பொருளாதார நிலைமை ஜாதிவாரி அரசுபணியில் உள்ளவர்கள் அரசு அதிகாரிகள் தொழிலதிபர்கள் விவசாயிகள் நிலபிரபுக்கள் வெளிமாநிலத்தில்/வெளிநாட்டில் சம்பாதிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள்
“டேட்டா” வையும் காட்டவேண்டும் 1963-66ல் என்னுடன் கல்லூரியில் படித்த ஓபிசி பிசி எஸ்சி எஸ்டி மாணவர்கள் 1967க்குள் அரசு பணியில் சேர்ந்து உயரதிகாரிகள் ரிடையர் ஆகிவிட்டனர் சலுகைகள் முலம் பலர் ஏற்றுமதியாளராகி விட்டனர்.முற்படுத்தப்பட்ட பிரிவினர் பொருளாதார ரீதியில் முன்னேறவே இல்லை இது உண்மை. பொருளாதார அடிப்படையும் பரிசீலிக்கத் தக்கதே
ஜாதிவாரி கணக்கெடுப்பில் சமூக கல்வி பொருளாதார அரசுப்பணி வர்த்தகம் இவற்றில் அந்த சமூகத்தினர் டேட்டா வும் பதிவு செய்யணும் பொருளாதார அடிப்படையும் நியாயமான அளவுகோள் தான் இன்று பணம்தான் ஜாதிகளை ஒடுக்குகிறது அதிகாரத்தையும் கைப்பற்றுகிறது