கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கமான மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கள்ளச் சாராயத்திற்கு வித்திட்டது யார்? இது மக்கள் நன்மைக்கான சட்டமா? இதில் ஆதாயம் யாருக்கு?
கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் விதமாக சட்டத்தை கடுமையாக்கியுள்ளதாகவும், ஏகப்பட்ட பேரை கைது செய்துள்ளதாகவும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்துள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைபட்டுக் கொண்டுள்ளார்.
அங்கீகாரமின்றி விற்கப்பட்ட சாராயம் காரணமாக 60 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதை சாக்காக வைத்து கடுகளவும் தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளாத முதலமைச்சர் ஸ்டாலின், சற்றும் மனசாட்சி இல்லாமல் மேன் மேலும் ஏழை, எளியோர் பாதிக்கும் வண்ணமே தண்டனைகள், அபராதங்கள் என வாள் சுழற்றுகிறார்.
கள்ளச் சாராயம் என நீங்கள் சொல்லும் அங்கீகாரமின்றி விற்கப்படும் சாராயத்தை நோக்கி மக்களை தள்ளுவதே நீங்கள் தானே ஐயா! தமிழ்நாட்டில் சாராயக் கடைகளில் மது விற்பனையை அரசே கையில் எடுத்த பிறகு தானே தனிநபர் சாராய நுகர்வு என்பது 3.5 லிட்டரில் இருந்து 6.3 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஆக, வீதி தோறும் பெண்கள், பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மதுக் கடைகளைத் திறந்து, மதுப் பழக்கத்தை வீரியப்படுத்தியது திமுக, அதிமுக ஆட்சிகள் தானே!

அதன் விளைவாக உலக சுகாதார நிறுவன ஆய்வுப்படி இந்தியாவில் நூற்றுக்கு 31 பேர் குடிப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றால், தமிழகத்தில் 63 சதவிகிதம் பேர் மதுப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தேசிய குடும்ப நல ஆய்வானது நமது நாட்டில் 15-19 வயது இளைஞர்கள் மத்தியில் மதுப் பழக்கம் மிகத் தீவிரமாக வளர்ந்து கொண்டுள்ளது என கவலை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மதுப் பழக்கம் இன்று உருவாகி வலுத்து வருவதற்கு எந்த கள்ளச் சாராய வியாபாரியும் காரணமில்லை. நீங்கள் தலைமை தாங்கும் அரசாங்கம் தான் காரணம். அதுவும் மதியம் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டிய டாஸ்மாக்கை கள்ளத் தனமாக கூடுதல் பணம் வைத்து அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரை நடத்த அனுசரணை செய்துள்ளதும் உங்க ஆட்சி தானே முதல்வரே!
அந்த வகையில் விற்கப்படுவது டாஸ்மாக் மதுவே ஆனாலும், கள்ளச் சாராயம் தானே! இவர்கள் மீது அந்த 10 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் பாயுமா? அப்படிப் பாய்ந்தால் அவர்களை விற்க அனுமதித்த நீங்கள் தலைமை தாங்கும் காவல்துறை அதிகாரிக்கு என்ன தண்டனை? இவை பற்றிய புகார்களை பலமுறை கவனப்படுத்தியும் கண்டு கொள்ளாமல் இருக்கும் முதலமைச்சர் அலுவலக உயர் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?
டாஸ்மாக் விலையே ஒரு கொள்ளை தான்! ஆந்திராவிலும்,கல்கத்தாவிலும் பக்கத்தில் உள்ள பாண்டிச்சேரியிலும் ஒரு பாட்டில் பீர் விலை 90 – 110 தான் விலை. ஆனால், தமிழகத்தின் டாஸ்மாக்கிலோ 170 விற்கிறீர்கள்! இப்படித் தான் விஸ்கி, ரம் விலைகளும் தமிழகத்தில் மட்டுமே மிக அதிக விலையில் உள்ளன. இதையே பிளாக்கில் 250 வரை விற்கிறீர்கள்! அங்கீகாரமற்ற மது விற்பனை கள்ளக் சாராயம் என்றால் டாஸ்மாக் மது கள்ளச் சந்தையில் விற்கபடுவதற்கு மட்டும் அரசு நிர்வாகம் அனுசரணையாக இருக்கும் என்றால், கள்ளச் சாராயம் பற்றிப் பேசுவதற்கோ, நடவடிக்கை எடுப்பதற்கோ ஆட்சித் தலைமையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எந்தத் தார்மீகத் தகுதியும் இல்லை.
சென்ற ஆண்டு தமிழகத்தில் டாஸ்மாக் மதுவை குடித்த சில மணி நேரங்களில் குடிமகன்கள் மரணித்த சம்பவங்கள் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இந்த வகையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஜுன் மாதத்தில் ஆறேழு மரணங்கள் நடந்துள்ளன! ‘அரசு விற்கும் மது என்பதால் ஆபத்திருக்காது’ என்ற நம்பிக்கை அப்போது நொறுங்கிப் போனதே. அந்த நிகழ்வுக்கு யாரை தண்டிப்பது?
”அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகளில் தொடர்ந்து மதுவை வாங்கி அருந்துபவர்கள் உயிரிழந்து வருகிறார்கள்! தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படுவது மதுவா? நஞ்சா? டாஸ்மாக் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தினார் அன்புமணி ராமதாஸ்.
டாஸ்மாக் பார்களில் விஷம் கலந்த கள்ள மதுவா?
இன்றுவரை இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் கிடைக்கும் தரமான, புகழ் பெற்ற பிராண்டுகள் தமிழக டாஸ்மாக்கில் கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் தான் ஆட்சித் தலைமையின் அக்கறை எல்லாம் உள்ளது.
மரக்காணம் மற்றும் கள்ளக் குறிச்சி சம்பவங்களில் இறந்தவர்கள் கூட, கள்ள மதுவை குடித்தவர்கள் தானேயன்றி, கள்ளச் சாராயத்தை குடித்தவர்கள் அல்ல” என முன்னாள் டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்! அதாவது, பற்பல பழங்கள், மூலிகைகள் கொண்டு ஊரல் போட்டு நாட்டுச் சாராயத்தை மெனக்கெட்டு தயாரித்து விற்பவர்கள் எல்லாம் சுலபமாக கள்ள மது தயாரித்து விற்பவர்களாக மாறியது இந்த ஆட்சியில் தான்! ஆகவே, இது குறித்து உண்மையான, நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும்.
எல்லோருக்கும் தண்டனை தருவது இருக்கட்டும். தமிழ்ச் சமூகத்தையே போதை சமூகமாக மாற்றி உள்ளீர்களே..! ஆட்சியாளராகிய உங்களுக்கு என்ன தண்டனை தருவது? உங்களை விசாரணை செய்ய, குற்றவாளி கூண்டில் ஏற்றுவது யார் ?
பாரம்பரியமான பனங்கள்ளு, தென்னங் கள்ளுவையும் கூட கள்ளச் சாராயம் என்று தானே வகைப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்! தமிழகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் பனை,தென்னை மரங்களை வளர்க்கிறார்கள். அந்த விவசாயக் குடும்பங்களில் அவர்களின் பாட்டன்,முப்பாட்டன் எல்லாம் இறக்கி குடித்த தென்னங்கள்ளு, பனங்கள்ளு குடிக்க அவனுக்கு இன்று வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதே! விற்பனைக்கு அல்லாமல் தன் குடும்பத்தின் சொந்த பயன்பாட்டிற்கு கூட கள்ளு இறக்க முடியாத உங்கள் சட்டம் டாஸ்மாக் விற்பனைக்காகத் தானே!
டாஸ்மாக் மதுவால் தமிழகத்தில் லட்சக்கணக்கில் மரணித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் நடைபிணமாகி குடும்பத்திற்கே பாரமாகி உள்ளனர். அப்படிப் பார்க்கும் போது டாஸ்மாக்கும் மெல்லக் கொள்ளும் விஷச் சாராயமே! இந்த விஷச் சாராய விற்பனை லாபத்தில் தான் அரசாங்கமே இயங்கிறது எனச் சொல்வது உலகத்திலேயே தமிழ்நாடு அரசாகத் தான் இருக்க முடியும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மது விற்பனையை நம்பி ஆட்சி செய்வதில்லை. நம்மை விட அதிகமாக மது பானங்கள் புழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட மது விற்பனையை நம்பி ஆட்சி இல்லை. அங்கு மது விற்பனை ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது! அங்கே பல உணவகங்கள் உணவைத் தயாரிப்பது போல மதுவை தயாரிக்கிறார்கள்! அவற்றை அரசாங்கம் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதோடு சரி! மது விற்பனையில் அரசுகள் மூக்கை நுழைப்பதில்லை. அப்படி மூக்கை நுழைத்தால் அவர்கள் ஆட்சி செய்யவே லாயக்கில்லை என்பதே அங்கே எழுதப்படாத தீர்ப்பாகும்.
Also read
இது போன்று ‘கள்ளச் சாராயத்தை ஒழிக்கிறோம்’ என்ற பெயரில் சட்டத்தை கடுமைப்படுத்துவதன் உள்நோக்கமே டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்தி, மேன்மேலும் அரசியல்வாதிகள் தங்கள் சாராய ஆலையின் கல்லா பெட்டிகளை நிரப்பிக் கொள்ளத் தானேயன்றி, மக்களின் உடலையோ, உயிரையோ பாதுகாக்க அல்ல!
மக்கள் நலன் குறித்து உண்மையான அக்கறை அரசுக்கு இருக்குமாயின் மது விற்பனையின் மீதான பற்றுதலை ஆட்சியாளர்கள் முற்றிலும் துறக்க வேண்டும். குடிகாரர்களுக்கான மறு வாழ்வு மையங்களை மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக தமிழகம் தழுவி ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தை போதையில் இருந்து மீட்டெடுக்க மனப்பூர்வமாக களம் காண வேண்டும். இந்த ஏழை, எளியோரின் சாவுகளை முடிவுக்கு கொண்டுவர சரியான தீர்வு இதுவாகத் தான் இருக்க முடியும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
முதலில் மது விற்பனையை முற்றிலும் நீக்கிவிட்டு பின்பு கள்ள சாராயம் காய்ச்சி விற்றால் தண்டனை என்று சொன்னால் இவன் தான் தான் சிறப்பான ஆட்சி தருகிறான் என்று பொருள். தங்களுடைய பொருள் தங்கு தடையின்றி விற்க வேண்டும் என்பதற்கு என கொண்டு வரப்பட்டுள்ள வரட்டு சட்டம் இது.இவர்களுக்கு சற்று வெட்கம் இல்லையா அல்லது அறிவு வறட்சியான என்று தெரியவில்லை.
அரசு தயாரிப்பு, தரமாக இருக்கும் என்பது உலக அளவில் மக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி தகர்த்தெறிந்து உள்ளது.மூத்தஅமைச்சரே அதுவும் பாரம்பரியமிக்க சட்டசபைக்கு உள்ளேயே முதலமைச்சரை வைத்துக்கொண்டு டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என்று பேசி இருப்பது தரம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.
அரசின் வசமுள்ள கல்வி தொடங்கி அனைத்து துறைகளையும் தரம் இல்லை என்று தைரியமாக சொல்லலாம்.. இது போன்ற குறைபாடு குற்றச்சாட்டுகள் அனைத்து துறைகள் மீதும் உள்ளன. ஸ்டாலின் கள்ளச்சாராயத்தின் சாவின் பிறகும் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள தயாராகவில்லை. அண்ணன் சாவித்திரி கண்ணன் டாஸ்மாக் செய்தியில் சுட்டிக் காட்டி இருப்பது சிறு துளிகளே! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரையும் அமைச்சருக்கு தெரியாது என்றாலும் தெரியும் என்றாலும் இரண்டுமே அவரின் குறைபாடே. இதை நன்றாக உணர்ந்திருந்தும் முதலமைச்சருக்கு அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க துணிவு இல்லை என்பதே உண்மை.
அருமையான கட்டுரை.
ஆசிரியர் சொல்வது எல்லாம் செய்ய வேண்டும் என்றால் மது ஆலை உற்பத்தியில் இருந்து பண வெறி கொண்ட அரசியவாதிகள் முழுமையாக வெளியே வந்தால் தான் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்.
இன்றைய கள்ள சாராய எதிர்ப்பிற்க்கு தமிழக முதல்வர் நடவடிக்கை என்பது முலுமுற்றாக கந்துடைப்பு நாடகம் தான்.
ஆக மொத்ததில் சீனி சக்கரை சித்தப்பா சீட்டில் எழுதி நக்கபா என அவர் கட்சிகாரார் லியோனி பேசியதுதான் நினைவுக்கு வருகிறது
சாராயம் விற்று சமுதாயத்தை சீரழிக்கும் ஸ்டாலின் அரசை சுட்டி காட்டிய விதம் மிக சிறப்பு.
அரசின் மதுபானமே கள்ளச்சாராயம் விஷச்சாராயதுக்கு நிகரானதே.தமிழகத்தின் மதுபானங்கள் அருகில் உள்ள புதுவை முதல் பிறமாநிலங்களில் கொள்முதல் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய மனித உடலை கெடுக்கத்தக்கது. இதைத் தயாரிக்கும் பெருமக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.ஏ ல் ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர் பெருமக்களே.
ஒருவேளை மக்களை திட்டமிட்டு ஒழிக்கவும் அழிக்கவும் மக்கள் தொகை குறைப்புக்கு செயல்படுத்தலின் முயற்சியோ?.