மருத்துவர்கள் தினம்! மருத்துவச் சூழல்களோ ரணம்!

-சாவித்திரி கண்ணன்

வேறெப்போதையும் விட தற்போது மருத்துவர்களின் தேவையும், முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.  இன்றைக்கு மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் தழைத்தோங்கின்றன! அரசு மருத்துவமனைகளும், மருத்துவர்களும் போதாமைகளால் திணறும் நிலை குறித்த ஒரு அலசல்;

மக்கள் மருத்துவராகவும், மகத்தான மக்கள் தலைவராகவும் திகழ்ந்த மேற்கு வங்கத்தின் மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் நினைவாக ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தை பொறுத்த அளவில் அரசு மருத்துவர்கள் நிலை என்பது கொண்டாட்டத்திற்கு ஆனதாக இல்லாமல், திண்டாட்டத்திற்கானதாக உள்ளது என்பதே நிதர்சனம்!

வியாதிகள் அதிகரிக்கின்றன! மக்கள் நோய்வாய்ப்படுவது இயல்பாகிவிட்டது. அதே சமயம் மருத்துவ சேவை என்பது ‘ஹைடெக்காகி’ வருகிறது. மருத்துவம் என்பது சேவை என்பதைக் கடந்து, ‘லாபகரமான வணிகம்’ என்ற புரிதலில் உலகம் போய்க் கொண்டு இருக்கிறது. இதனால் நம்மைப் போன்ற ஏழை, எளியோர்கள் அதிகம் வாழும் நாட்டில், அரசு மருத்துவமனைகளிடமே மக்கள் சரணாகதியாகிறார்கள்! நிர்கதியாக உள்ள ஏழை,எளியோருக்கு அரசு மருத்துவமனைகளே தாய்வீடாகிவிடுகிறது. அரசு மருத்துவர்களே கண் கண்ட தெய்வங்களாகத் தெரிகின்றனர்.

இந்திய மருத்துவ சேவையின் அடையாளம் டாக்டர் பி.சி.ராய்!

தனியார் மருத்துவமனைகளின் அதிகமான கட்டணங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல், நாளுக்கு நாள் அரசு மருத்துவமனைகளை நோக்கி மக்கள் அதிகம் வருகின்றனர். அதே சமயம் அரசு மருத்துவமனைகள் இத்தகைய மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறுகின்றன.

எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் மருத்துவத் துறை என்ற சுகாதாரத் துறையை எடுத்துக் கொண்டால், மொத்தம் 330 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இது தவிர, 18 மாவட்டத் தலைமை மருத்துவமனை எனப்படும் பெரிய ஆஸ்பத்திரிகள் உள்ளன! 2,748 ஆரம்ப சுகாதார மையங்கள் அம்மா கிளினிக், இ.எஸ்.ஐ..என மொத்தம் 13,211 அரசு மருத்துவ மையங்கள்  உள்ளன!

இவை 26,61,000 வெளி நோயாளிகளையும், 11,27,000 உள் நோயாளிகளையும் எதிர் கொள்கின்றன.

தமிழக மருத்துவ மனைகளில் வந்து குவியும் மக்களுக்கு சேவை செய்வதற்கு  மொத்த மருத்துவர்கள் 19,000 பேர் மட்டுமே உள்ளனர். நியாயப்படி மருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு இருந்தால் மட்டுமே – அதாவது, 57,000 மருத்துவர்கள் இருந்தால் தான் – உரிய நேரத்தில் தரமான மருத்துவ சேவை என்பது சாத்தியமாகும்.

தமிழகத்தில் 25 வருடத்திற்கு முன்பு 12 அரசு மருத்துவக் கல்லூரிகளே இருந்தன! 15 வருடத்திற்கு முன்பு என எடுத்துக் கொண்டால் கூட 17 மருத்துவ கல்லூரிகளே இருந்தன. ஆனால், இன்றோ 37 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. சென்னை அண்ணாசாலையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை ஆகியனவும் வந்துள்ளன. ஆனால், இதற்கேற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகப்படாமல் தொடர்ந்து தேக்க நிலையிலேயே உள்ளன. 15 வருடத்திற்கு முன்பு 17,000 இருந்த மருத்துவர்கள் எண்ணிக்கை தற்போது 19,000 என்ற அளவுக்கே உயர்ந்துள்ளன.

புற நோயாளர்கள் பிரிவில் நோயாளிகள் வந்து குவிகிறார்கள்! நீண்ட வரிசையில் கால் கடுக்க நிற்கிறார்கள். ஒவ்வொரு மருத்துவரும் நூற்றுக்கணகான நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அவல நிலையில் போதுமான நேரத்தை நோயாளிகளுக்கு தர முடியாத நெருக்கடி உள்ளது.

அதே போல உள் நோயாளிகள் பிரிவிலும் நோயாளிகளை பரிசோதிக்கவும், தொடர்ந்து கண்காணிக்கவும் உரிய எண்ணிக்கையில் மருத்துவர்கள் இல்லாததால் இருக்கும் மருத்துவர்கள் 12 மணி நேரம் ,மற்றும் 14 மணி நேரம் வேலை பார்த்து பெரும் சோர்வுக்கு ஆளாகிறார்கள்! இந்த வேலைப் பளுவானது சிகிச்சை தரும் மருத்துவர்களையே காலப் போக்கில் நோயாளியாக்கி ‘காவு’ வாங்கி விடுகிறது.

மிகக் குறைவான மருத்துவர்கள் எண்ணிக்கையைப் போலவே செவிலியர்கள் எண்ணிக்கையும் வெறும் 38, 000 மட்டுமே உள்ளது. ‘எட்டு படுக்கைக்கு ஒரு செவிலியர் இருக்க வேண்டும்’ என்பது விதி. ஆனால், 32 படுக்கைக்கு ஒரு செவிலியர் இருப்பதால், மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 1,90,000 செவிலியர்கள் தேவைப்படும் இடத்தில், ஐந்தில் ஒரு பங்கே இருக்கிறார்கள். அதே போல கடை நிலை ஊழியர்கள் இரண்டு லட்சம் பேர் இருக்க வேண்டிய இடத்தில், 60,000 தான் இருக்கிறார்கள்! போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் மருத்துவர்கள் திண்டாடுகிறார்கள்!

இந்தச் சூழலில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் உள்ள மருத்துவர்களுக்கு தான் குறைவான ஊதியம் தரப்படுகிறது என அரசு மருத்துவ சங்கங்கள் வேதனை தெரிவிக்கின்றன. 15 ஆண்டுகளாக இவர்களின் ஊதியம் உரிய மாறுதலுக்கு உள்ளாகாமல் பின் தங்கியே உள்ளது என்பதும் கவனத்திற்கு உரியதாகும்.

அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை கூடுதலாக்க வேண்டி உள்ளதோடு, அதற்கேற்ப செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டி உள்ளது. உதாரணத்திற்கு தமிழகத்தில் அரசு பல் மருத்துவமனைகள் சென்னை பிராட்வேயில் ஒன்றும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒன்றுமாக மொத்தம் இரண்டே இரண்டு தான் உள்ளன. ஆனால், அரசு பல் மருத்துவமனை என்பது மாவட்டத்திற்கு ஒன்று அவசியமாகிறது.

மாற்று மருத்துவம் எனப்படும் இந்த மண்ணின் மருத்துவமான சித்த மருத்துவத்திற்குமே கல்லூரியோடு கூடிய மருத்துவமனை என சென்னை மற்றும் பாளையம்கோட்டை என இரண்டு அரசு இடங்களே உள்ளன. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கும் கூட இரண்டே அரசு மருத்துவமனைகளே உள்ளன.

ஆக, மருத்துவ கட்டமைப்பு பலப்பட வேண்டும். இவ்வளவு தேவைகளை நிறைவேற்ற பெரும் நிதி தேவைப்படும் இந்தச் சூழலில் அரசு மருத்துவனைகளுக்கான நிதியை இன்சூரன்ஸ் திட்டங்கள் போட்டு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் தரக் கூடாது. அரசே நேரடியாக செலவழிக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time