கல்வித் துறைக்கே இழுக்கு! ரகசியம் எதற்கு?

-சாவித்திரி கண்ணன்

தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக தமிழ் மண்ணுக்கான கல்வி கொள்கையை வகுப்போம் என்றவர்கள் அறிக்கையை வெளியிடாமல் பம்முவது ஏன்?  குழுவில் உள்ள கல்வியாளர்களுக்கே காட்டப்படாத இறுதி அறிக்கை! பொதுவெளியில் வைக்க தயக்கம் ஏன்?  நீதிபதி ஊடகங்களிடம் பேசப் பயந்து ஓடியது ஏன்?

இன்றைக்கு தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து மாநில கல்வி கொள்கைக்கான அறிக்கையை கல்வியாளர்கள் குழு தந்தது! வழக்கமாக இது போன்ற அறிக்கையின் முழு வடிவமோ அல்லது முப்பது பக்கங்கள் கொண்ட சாராம்சமோ ஊடகங்களுக்கு தரப்படும். இவை தரப்படவில்லை. குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவதும் வாடிக்கை. ஆனால், அவர்களோ, பதற்றத்துடன், ”எங்களை பேசக் கூடாது என அரசு கூறிவிட்டது” எனச் சொல்லி கடந்து விட்டனர்.

இவ்வளவு பூடகமாக இந்த அறிக்கையை மறைப்பானேன்? ஏன் வெளிப்படைத் தன்மையுடன் இவர்கள் செயல்படவில்லை? எனக் கேள்விகள் எழுந்ததன.

இதையடுத்து இந்த மாநில கல்வி திட்ட அறிக்கை எப்படி தயாரிக்கப்பட்டது என நாம் புலனாய்வு செய்த போது, ஜவகர் நேசன் ராஜுனாமாவைத் தொடர்ந்து குழு உறுப்பினர்கள் யாருமே கல்வி திட்ட உருவாக்கத்திற்கு மெனக்கிடத் தயார் இல்லை. காரணம், இதில் செயல்படும் கல்வியாளர்கள் யாருக்குமே ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. நீதிபதிக்கு மட்டுமே மாதம் மூன்று லட்சம் சம்பளம் மற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், அவருக்கு கல்வி கொள்கை குறித்த ஞானமே இல்லை.

இந்தச் சூழலில் நீதிபதி முருகேசன் அவுட் சோர்சிங்காக பல நபர்களை அழைத்து கல்வி கொள்கை உருவாக்கத்தை எழுதி வாங்கியுள்ளார். இறுதியில் குழு உறுப்பினர்களை அழைத்து, ”கல்வி திட்டம் தயாராகிவிட்டது. கையெழுத்து போடுங்கள்” எனக் கேட்டுள்ளார். ”அதை பார்க்க வேண்டுமே” எனக் கேட்ட உறுப்பினர்களிடம், ” இந்தாங்க சில பாயிண்ட்ஸ் மட்டும் தாறேன். அதைத் தான் விரிவுபடுத்தி உள்ளோம். முழுமையாக காட்ட முடியாது. அரசின் மேல்மட்டத்தில் எந்த செய்தியும் வெளியே போகக் கூடாது எனச் சொல்லிவிட்டனர்” என கறார்த்தனம் காட்டி கையெழுத்து பெற்றுள்ளார்.

சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக சொல்லப்படும் மோடி அரசு கூட தேசிய கல்விக் கொள்கையை மக்கள் பொது விவாதத்திற்கு வைத்தே உருவாக்கியது. ஆனால், குழு உறுப்பினர்களுக்கே சரியாகத் தெரியாமல் உருவாக்கப்பட்ட ஒரு கல்விக் கொள்கை உலகத்திலேயே இதுவாகத் தான் இருக்கும். தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதைத் தானே தற்போதும் செய்து கொண்டுள்ளது ஸ்டாலின் அரசு!

ஒரு பக்கம் பாஸிச பாஜகவை எதிர்க்கிறோம் என சொல்லிக் கொண்டே மறுபுறம் தமிழக பள்ளி, கல்லூரிகளில் தேசிய கல்வி திட்டத்தை கமுக்கமாக நடைமுறைப்படுத்தி வருகிறது ஸ்டாலின் அரசு என்ற யதார்த்தம் மக்களுக்கே தெரியும் தானே!

”தமிழகத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவோம்” என தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார் ஸ்டாலின். ஆனால், பதவி ஏற்று சுமார் ஓராண்டுகள் கழித்து ஓய்வு தான்  பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டார் ஸ்டாலின்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக ஆசிரியரும், முற்போக்கு எழுத்தாளருமான மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராக பணியாற்றிய கல்வியாளர் ஜவஹர்நேசன்,  பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையின் ஜெயஸ்ரீ தாமோதரன்,  அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.பாலு ஆகிய 12 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த குழு அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இவர்கள் செயல்படுவதற்கு என ஒரு அலுவலகமே தராமல் அலட்சியம் காட்டப்பட்டது. ஆனால், கல்வியாளர் ஜவகர் நேசனின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகு ஒரு அலுவலக ஏற்பாடு நடந்தது. உலக அளவிலான கல்வியாளர்கள் பற்பல முக்கிய துறைகளை சேர்ந்த அறிஞர்கள், களச் செயற்பாட்டாளர்கள் பலதரப்பட்டவர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார் ஜவகர் நேசன்.

கல்வியாளர் ஜவகர் நேசன்

இது நல்லவிதமாக உருவாகி வந்த நிலையில், இந்தக் குழுவில் இருந்த பேராசிரியர் இராமானுஜம், அருணா ரத்னம், ஜெயஸ்ரீ தாமோதரன், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, (சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எந்த கூட்டத்திலும் பங்கு பெறவில்லை) பேராசிரியர் இராம சீனுவாசன் ஆகிய ஐவரும் வரும் ஒரு குழுவாக சேர்ந்து, ”தேசிய கல்விக் கொள்கையையே அங்குமிங்கும் சிற்சில வரிகளை மாற்றி அப்படியே எழுதி தந்துவிடலாம்” என்ற நோக்கத்தில் மறைமுகமாகப் பல அழுத்தங்கள் தந்து ஒருங்கிணைப்பாளர் ஜவகர் நேசனை வலியுறுத்தினார்கள்! ஆனால், ஜவஹர் நேசன் இதற்கு உடன்பட மறுத்து, ”தமிழ் மக்களுக்கான கல்வி கொள்கை உருவாக்கத் தானே இந்தக் குழு அமைக்கப்பட்டது” என வாதிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஜவகர் நேசனை அழைத்து, அவரை ஒருமையில் பேசி,”இந்த கொள்கை எல்லாம் பேசாதீங்க.. நான் என்ன சொல்றேனோ அதை நீங்க செய்தா போதும். உங்க குழுவின் தலைவர் நீதிபதி வேஸ்ட். ஒன்னும் தெரியாதவர். இந்த குழுவில் உள்ள ஐவர் குழுவைக் கேட்டு அவங்க சொல்றபடி நடந்துகோங்க. இல்லையின்னா குழுவை கலைத்து விடுவேன் ஜாக்கிரதை..” என மிரட்டும் தொனியில் சொல்கிறார். அப்போது ”யார் அந்த  குழு?” என பார்க்கையில் அந்த  ஐவருமே ஆதிக்க மனோபாவம் கொண்ட பார்ப்பனர்கள் எனத் தெரிய வந்தது.

இதனால் எந்த சம்பளமோ, சன்மானமோ பெறாமல் அர்ப்பணிப்புடன் தான் உருவாக்கித் தந்த 258 பக்க அறிக்கையை சமர்பித்துவிட்டு, ஜவகர் நேசன் வெளியேறிவிட்டார்.

தமிழில் 600 பக்கங்களிலும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களிலும் தயாரிக்கப்பட்டு  தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதியரசர் முருகேசன், வழங்கியக் கல்விக் கொள்கையின் ஒரு சில அம்சங்கள் மட்டுமே ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளது. அவற்றை  தற்போது பார்க்கலாம்.

#  இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

# பள்ளியில் ஆரம்ப வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு 3 வயது முடிந்திருக்க வேண்டும்.

# ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு 5 வயது இருக்க வேண்டும்.

# பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வுகள் கூடாது.

# 10 ஆம் வகுப்பில் மட்டுமே பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அதற்கு முன்னதாக எந்த வகுப்பிலும் பொதுத்தேர்வு கூடாது.

# “ஸ்போக்கன் இங்கிலீஷ்” தவிர “ஸ்போக்கன் தமிழ்” மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.

#  11, 12 ஆம் வகுப்பு பாடங்களை பெயரளவுக்கு நடத்திவிட்டு, பிற நுழைவுத் தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப் படுத்துவதை தடை செய்ய வேண்டும்.

# தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று, உயர் கல்வியிலிருந்து பாதியில் வெளியேறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முறையை கடைப்பிடிக்கக் கூடாது.

இதில் பெரும்பாலானவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை தாம்! மற்றவற்றில் ஒரு சில முற்போக்கு அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன.

ஆனால், தாய் மொழியாம் தமிழ் வழிக் கல்வியானது வற்புறுத்தப்படவில்லை என்பது கவனத்திற்கு உரியது. ஸ்போக்கன் ஆங்கிலத்தை தவிர, ஸ்போக்கன் தமிழும் இருக்க வேண்டுமாம்! தாய் மொழியில் பிழையற எழுதவும், பேசவும், சிந்திக்கவும் கற்றுத் தராத கல்வி என்ன கல்வி?

# நீட் தேர்வை எதிர்ப்பது போலவே சயின்ஸ் ஆர்ட் உள்ளிட்ட படிப்புகளுக்கு திணிக்கப்பட்டு கியூட் தேர்வை இந்த மாநில கல்விக் கொள்கை ஏன் எதிர்க்கவில்லை.? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

 

மேலும், தமிழக மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் அம்சங்கள் இதில் அதோ கதியாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அவற்றை கிழே சுட்டிக் காட்டி உள்ளோம்;

# கல்வி துறையில் கார்ப்பரேட்களின் வணிக சூதாட்டத்தை  தவிர்ப்பது,

# எளிய பிரிவினர் ஏற்றம் பெற்று வருவதற்கான சூழல்களை உருவாக்குவது,

# ஏற்றத் தாழ்வுகளற்ற சமூக கண்ணோட்டத்தை வலுப்படுத்துவது

# தமிழ் மண் மற்றும் மக்களின் நலன் சார்ந்த கல்வி திட்டத்தை உருவாக்குவது,

# பாடத் திட்டத்தில் மூட நம்பிக்கை கொண்ட சனாதன கண்ணோட்டத்தை திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையைத் தவிர்த்து அறிவியல் பூர்வமாக பாடதிட்டங்களை உருவாக்குவது,

# தேசத்தந்தை காந்தி, நேரு, அபுல்கலாம் ஆசாத் ஆகியோரை முற்றிலும் புறக்கணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறுப்பது,

# ஒடுக்கப்பட்ட எளிய பிரிவினர் கல்வி கற்காதவாறு சூழ்ச்சியாக தேர்வு முறைகளை கட்டமைப்பது.

ஆகியவற்றை முதன்மை நோக்கமாக கொண்டதே மாநிலக் கல்வி கொள்கை! இந்த இலக்கை இந்த இறுதி அறிக்கை எய்தியதா..? என யாரும் தெரிந்து கொள்ள முடியவில்லை.

முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்த குழுவினர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. பத்திரிக்கையாளர்களை சந்திக்கக் கூடாது என அரசு கூறியதாக குழுவின் தலைவரான நீதிபதி முருகேசன் பேசியது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை தான் தற்போது தமிழகத்தின் பள்ளி, கல்லூரிகளில் வெவ்வேறு வடிவங்களில் சூட்சுமமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது என்ற யதார்த்தத்தை உணர்ந்தோருக்கு ஸ்டாலின் அரசின் கயமைத்தனம் ஆச்சரியப்படத்தக்கதல்ல.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time