ஆரோக்கியம் தழைத்தோங்க உதவும் ஆலமரம்!

-அண்ணாமலை சுகுமாரன்

இதை ஆலமரம்  என்பதை விட ALL மரம்,  எனலாம். அந்த அளவுக்கு ஆரோக்கியத்திற்கு ஆல் ரவுண்டரானது ஆலமரம். இது, நம் நாட்டின் தேசிய மரமாக வைக்கப்பட்டதற்கு ஒரு ஆழமான அர்த்தம் இருக்கிறது. உடலுக்கான ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உள்ளத்தின் நலனையும் தரும் ஆலமரத்தின் சிறப்புகள் குறித்து ஒரு அலசல்:

இந்தியாவில் ஆலமரம் இல்லாத கிராமமே பார்க்க இயலாது . அதுவும்  ஒவ்வொரு ஆலமரமும் மிகப் பழமையாக நூற்றாண்டுகள் பாரம்பரிய தொடர்ச்சி கொண்டவை. ‘ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’  என்பது பழம் மொழி. ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால் பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன்படுகின்றன. ஆலமரத்தின் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகிறது.

‘ஆலமர் செல்வன் அமைந்த ஆலவாய்’ எனும் நகரையே பெயரில் கொண்டவர்கள் நாம் ஆல மரத்தடி தான் அந்த காலத்து பாராளுமன்றம், ஊர் கூடும் சபை. அது !

”நாட்டாமை ! தீர்ப்பை மாற்று”  என  திரைப்படத்தில் வருவது போல் அங்கே தான் அடிக்கடி  இப்படி கூவப்பட்டன.


பெரிய மரமாக அடர்ந்து படர்ந்து இருப்பதினால் மட்டுமே ஆலமரத்தடியில் ஊர்க் கூட்டம் நடத்த படுவதில்லை. மாறாக, இந்த மரத்தடியில் ஊர் கூட்டம் நடத்தினால் மக்கள் அமைதியாக உணர்ச்சிவசப்படாது இருப்பார் என்று நம் முன்னோர் அறிந்திருந்தனர்.

எந்த ஒரு  ஆலமரத்தின் அடியில் சென்று அமர்ந்தாலுமே போதும்,  மனதில் அமைதி தானே வந்து விடும். தியானம் கூடி விடும். இது அனுபவ பூர்வமான உண்மை. இம்மரத்தின் அடியில் தவம் இருப்பவர்களுக்கு ஞானம் பெற்றுத் தருவதில் ஆல மரத்துக்குத் தனி மகிமை உண்டு.

முன்பு ஒரு காலத்தில் எங்கள் வீட்டின் அருகில் இருந்த ஆலமரத்தடியில்  நான் நாற்காலி போட்டு அமர்ந்து நீண்ட நேரம் புத்தகம் வாசிப்பேன். அப்போது அந்த ஆலமரத்தில் ஊரும் நிறைய எறும்புகள் காலை நீட்டி உட்கார்ந்து இருக்கும் என் உடலின் மேலேயும்   ஏறிச் செல்லும்.
ஆனால்,  கடித்ததே இல்லை. நான் ஆன்மீக நாட்டம் அதிகம் கொண்டு  இருப்பதால் அவைகள் கடிப்பதில்லையோ என எனக்குத் தோன்றியது.

ஏன் எனில், ஒரு மனிதன் ஆன்மீக வழியில் செல்ல ஆரம்பித்ததும், அவனிடம் பரவும் அமைதியை, அதை உணருவதில் ஓர் அறிவு, முதல் ஐந்து அறிவுள்ள ஜீவன்களே முதலிடம் வகிக்கும். ஒரு ஆன்மீகவாதியை ஆறாவது அறிவில்லா ஜீவன்களே முதலில் இனம் காணும்.
இதில் ஆறு அறிவுள்ள மனிதன் தான் கடைசியாக இருப்பான்.


ஆனால், பிறகு தான் ஆலமரத்தின் மகிமை உணர்ந்தேன். அதனடியில் வாழும் எறும்பு கூட தனது சுபாவத்தில் இருந்து மாறுபடுகிறது. எப்போதாவது ஆலமாரத்தின் அருகில் செல்லும் போது ஆழ்ந்து உணருங்கள்!  கவனித்துப் பாருங்கள் மனம் அடையும் வித்தியாசத்தை.. உணருங்கள்.

ஆலமரம் புத்தருக்கு போதி மரமாகவும், இந்துக்களுக்கு கோவில் மரமாகவும், ஜைனர்களுக்கு புனித கேவலா மரமாகவும் திகழ்கிறது. மேலும்  மடாதிபதிகள் கையில் வைத்திருக்கும் தண்டமும் ஆல மரத்தில் இருந்தே செய்யப்பட்டதாக இருக்கும். அரச மரத்தை போதி மரம் என்று சொல்கிறோம். இலங்கை அனுராதாபுரத்திலும், தாய்லாந்திலும் உள்ள போதி மரம் ஆலமரம் தான்.


நிம்மதியைத் தேடி அலையும் மனிதன், ஆல மரத்தடியில் சில நாட்கள் தவம் இருந்து பார்க்கட்டும். மனதிற்கு அமைதி கிடைத்துவிடும். இயற்கையான குளுமை தரும் ஏ.சி. மரம் ஆலமரம்.

நமது நாட்டு  மக்கள் ஆலமரத்தைச் சுற்றி வரும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆல் எனும் பெயரில் பல ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளன! ஆலங்காடு, ஆலங்குடி, ஆலப்புழா முதலிவை.

”ஆலம் தான் உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும்(ம்) உடையானை, சிந்திப்பார் அவர் சிந்தை உளானை..”

என சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ளார்.

திரு அன்பிலாலந்துறை, திருப்பழுவூர், திருவாலம்பொழில், திருவாலங்காடு முதலிய சிவத்திருத்தலங்களிலும், திருமெய்யம், திருவில்லிபுத்தூர் முதலிய திருமால் கோயில்களிலும் தலவிருட்சமாக ஆலமரம் வணங்கப்படுகிறது. பாறையையும் துளைத்தெடுத்து பரவி விருடசமாக வளரும் ஆற்றல் கொண்ட ஆலமரங்கள் உள்ளன!

பொதுவாக ஆலமரம் என்றால் Ficus benghalensis எனும் இனத்தையே குறிக்கும்
Botanical Name : Ficus Benghalensis
Family Name : Moraceae
Common Name : Banyan, Vada Tree, Indian Banyan, Figuier Des Pagodes, East Indian Figtree


கனிகள்: நன்றாகப் பழுத்த ஆலம் பழத்தை நிழலில் உலர வைத்துச் சாப்பிட்டால் ஞாபக சக்தி மேம்படும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். ஆலமரத்துக் கனிகளை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால், இந்திரியம் திடப்படும். ஞாபக மறதி நீங்கும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. இதனால் குளியல் சோப்பு  தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

கனியை நிழலில் உலர்த்தி பவுடராக்கி, சம அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை 5 கிராம் அளவில் கொடுத்து வந்தால், மூலம், சிறுநீர்ப்பை சம்பந்தமான குறைபாடுகள் குணப்படுகின்றது.

பூக்கள்: பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரை சேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும். இந்த காலத்திற்கு மிகவும் தேவைப்படும் இயற்கை வழி  மருத்துவம் இது.

விழுதுகள்: தளர்ச்சியான மார்பகங்கள் சீர்படவும், கவர்ச்சி பெறவும் பயன்படுகின்றன. விழுதுகளின் தலைப் பகுதியில் மஞ்சளும், சிவப்பும் கலந்துள்ள பகுதிகளை எடுத்து அரைத்து, மார்பகங்கள் மீது பூசினால் வளர்ச்சி பெறும். ஆலம் விழுதுகளை அரைத்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாப்பிட்டால் நீர்த்த இந்திரியம் கெட்டிப்படும்.

ஆலமர விழுதுகளின் மெல்லிய இலைகள் ஆறு கிராம் அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து வடிகட்டி அதில் வெண்ணெய் கலந்து குடிக்கச் செய்தால் வாந்தி நின்றுவிடும். ஆலமர விழுதுகளை எரித்து தண்ணிரில் சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் தெளிந்த நீரைக் குடிப்பதால் வாந்தி கட்டுப்படுகிறது.

இலைகள்: ஆலம் இலைகளை நிழலில் உலர வைத்து நன்றாக அரைத்துச் சம அளவு கலந்து, மாத விலக்குப் பிரச்னைகளுக்கும், வெள்ளைப்படு நோய்க்கும் தரப்படும் சிறந்த மருந்தாகும்.ஆலமர இலைகளைக் கஷாயமிட்டு, அதனைப் பாகுபோல் செய்துகொண்டு சாப்பிடுவதால் இந்திரியத்தில், உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து போதல், ஞாபக மறதி நோய், கிரந்தி நோய்கள் குணப்படுகிறது.

ஆல இலைகளை எரித்து அதன் சாம்பலை வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிடுவது ,தவறான உடல் உறவினால் வரும் வெட்டை நோய்க்கு நிவாரணமாக அமைகிறது.


ஆலமரத்து வேர்ப்பட்டை 12 கிராம் அளவு எடுத்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமிட்டுக் குடிக்க வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய் குணம் பெறுகிறது.

சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், உடலுறவின் போது வெகு சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், புண், அதிக மாதவிடாய், இரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

இம் மரத்தின் வேர் மீது உள்ள பட்டையை வெட்டி எடுத்து இதைப் பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்தலாம்.


வெட்டை நோயைக் குணப்படுத்த புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வரலாம். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் துரிதஸ்கலிதம் நோயும்,வெட்டை குணம் பெறும்.

புதிய ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றைக் குடிப்பதன் மூலம் சீதபேதியைக் குணப்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மாதவிடாய்க் கழிவதையும் இது தடுத்து நிறுத்துகிறது.


வெட்டை, மூலம், ஞாபக மறதி, இருமல், ஈறு வீக்கம், பேதியைக் கட்டுப்படுத்த பட்டை பயன் அளிக்கிறது.

ஆல மரத்தின் ஒவ்வொரு பாகத்திலும் பால் வடியும். இதைச் சேகரித்து மருந்தாகப் பயன்படுத்தலாம். இது காது, மூக்கு, பல் நோய்கள், சீக்கிரத்தில் இந்திரியம் வெளியாகுதல், மூல நோய், கட்டிகள், வலிகள் நீங்க பயன் தருகிறது.

ஆலமரத்துப் பாலையும், எருக்கம்பாலையும் சம அளவில் கலந்து புண்களின் மீது வைத்துப் பூசுவதனால் புண்கள் ஆற விடுகின்றது.

தெருவுக்கு ஒன்றோ அல்லது ஊருக்கு ஒன்றேனும் ஆலமரத்தை வளர்த்தால் குளுமையும், ஆரோக்கியமும் கிடைக்கும். மேலும், மனப் பதட்டம் நீங்கி, மனதிற்கு அமைதியும் கிடைக்கும்.  ஆலமரம் என்பது மிகவும் சிறப்புமிக்க மரம். ‘ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி’ என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத் தான் குறிப்பிடுவார்கள்.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூலின் ஆசிரியர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time