சரவெடி ராகுலும், சமாளிக்கத் திணறிய மோடியும்!

-சாவித்திரி கண்ணன்

10 ஆண்டுகளில் யாருக்குமே பதில் சொல்லியிராத மோடி முதன்முறையாக ராகுல் காந்தியின் ஷார்ப்பான பேச்சுக்கு பதில் சொல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்! எதிர்கட்சி உறுப்பினர்கள் அர்த்தம் செறிந்த உரையை தெறிக்க விட்டனர். மோடியோ தற்பெருமை, ஆத்திரம், அளவுக்கு மீறிய பொய்கள்..என கலந்தடித்தார். ஒரு அலசல்;

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த உரையில் மக்களவையில் ராகுல் காந்தி பேசிய பேச்சு மிகவும் கூர்மையாகவும், தெளிந்த பார்வையுடனும் அமைந்திருந்தது. ஒரு சிறிய தடுமாற்றமோ, தடங்கலோ கூட ராகுல் உரையில் வெளிப்படவில்லை. அர்த்த செறிவுடன் அமைந்த பேச்சில் இடையிடையே நக்கலும், நையாண்டியும் இயல்பாக வெளிப்பட்டன.

ஆதி சிவன் படத்தை காட்டி அவர் பேசும்போது, சிவனை அச்சமின்மையின் அம்சமாக வர்ணித்த விதம் அருமை! “ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் சிவனின் உருவத்தில் இருந்து பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தின் பாம்பு உண்மையை ஏற்றுக் கொள் என்பதையும், அதில் இருந்து பின்வாங்கதே என்பதையும் வலியுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் நாங்கள் போராடி வருகிறோம். இந்த சிந்தனை எங்களை எதிர்க்கட்சியாக மட்டுப்படுத்தியுள்ளது. நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாக உணர்கிறேன். எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மை தான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம்”

இவ்வாறு தன் உரையைத் தொடங்கிய ராகுல் சிவனின் தோற்றத்துக்கு வித்தியாசமான கோணத்தில் விளக்கம் அளித்தது சிறப்பு. ‘’சிவனின் இடது புறமாக திரிசூலம் பிடித்திருக்கிறார். திரிசூலம்  வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அது அகிம்சையின் சின்னம். அதனால் தான் இடதுபக்கம் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுபுறம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை” என்றார்.

# உண்மை, தைரியம் என்பது அகிம்சையில் இருந்து வெளிப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் அபய் முத்ராவைக் கொண்டுள்ளது. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள்.

# கடவுளுடன் நேரடி தொடர்பு கொண்டவராக தன்னை சொல்லிக் கொள்கிறார் மோடி. பரமாத்மாவுடன் நேரடியாகப் பேசும் பிரதமர் மோடி, அவர் சொல்லித் தான் பண மதிப்பிழப்பை அறிமுகப்படுத்தினாரா? காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்தியை உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார். காந்தி உயிருடன் இறக்கவில்லை. உங்கள் அறியாமையை என்னென்பது?

# ஒரு மதம் மட்டுமே தைரியத்தை போதிக்கவில்லை.  இஸ்லாம், சீக்கியம் உள்ளிட்ட அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்களை பிரதிபலிக்க முடியாது.

# அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.

# அக்னிவீரர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல; மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. பிரதமர் மோடிதான். அக்னிவீரர் திட்ட வீரர்களின் உயிரிழப்பை வீர மரணங்களாக பாஜக அரசு ஏற்குமா? ‘USE AND THROW’ முறையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முறை தான் அக்னிபாத் திட்டம்.

# மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. அம்பானி மற்றும் அதானிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக அங்குள்ள ஏராளமான மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஆனால், அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

# நீட் தேர்வு வியாபார  ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் பிள்ளைகளுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு  நிகழ்வுகள் நடந்துள்ளன. பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற அவல நிலை உருவாகியுள்ளது”

இவ்வாறு ஆவேசத்துடன் பேசிய போதும் அர்த்தமுள்ள உரையை, அழுத்தமாக ராகுல் பேசி முடித்த போது கைத்தட்டலில் சபையே அதிர்ந்தது.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு மோடி,  அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ராகுல் பேசும்போதே இடைமறித்து பேசிய பிரதமர் மோடியும், அமிஷாவும் “இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று குதர்க்கமாகக் கூறினார்.

தங்களை அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அம்பலப்படுத்திவிட்ட ராகுல் மீது பாஜவினர் பாய்ந்து குதறியது அதிசயமல்ல. அவர்கள் தங்களை ஒரு போதும் மறு பரீசீலனை செய்யத் தயார் இல்லை. அது மட்டுமல்ல, ராகுல் பேச்சின் பெரும் பகுதியை அவை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டனர். ஆனால், அவை மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. வரலாற்றில் நிலைக்கும் பேச்சு அது!

ராகுல் காந்தி மட்டுமல்ல, திரிணமுள் காங்கிரசின் மஹுவா மொய்த்ரா, கல்யாண் பானர்ஜி, சி.பி.எம்மின் சுவெங்கடேசன், ஆ.ராஜா, திருச்சி சிவா ஆகியோர் ஷார்ப்பாக பேசினர். இந்தப் பேச்சுகள் அனைத்தும் அன்றைய தினம் ஜனநாயக விரும்பிகளுக்கு விருந்தாக அமைந்தன!

அடுத்த நாள் ராகுலின் நீக்கப்பட்ட உரைக்கு பதில் உரை பேச வந்த மோடி தன்னுடைய ஆட்சியைப் பற்றி தானே எல்லை மீறு புகழ்ந்து கொண்டு புளகாங்கிதம் அடைந்தார். ஆனால், தன்னையும் மீறி ஒரு உண்மையை ஒப்புக் கொண்டார். அது,’’பாபா சாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்புச் சட்டத்தால் என்னைப் போன்று பலர் இங்கு வர வாய்ப்பு கிடைத்துள்ளது’’ என்பதே!

மற்றபடி மோடி பேசியவை யாவும் அவரது சகிப்பின்மையையும், வன்மத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்தன. இதனால் தான் மோடி பேசும் போது எதிர்கட்சி உறுப்பினர்கள் “மணிப்பூர்… எங்களுக்கு நீதி வேண்டும்… சர்வாதிகாரம் பலிக்காது… இந்தியாவை ஒன்றிணையுங்கள்…” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

குறிப்பாக ராகுல்காந்தியின் பேச்சு அவரை நிம்மதி இழக்க வைத்துள்ளது என்பது தெளிவாகவே வெளிப்பட்டது.

” ராகுல் காந்தி பேசியதை தீவிரமாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பேச்சுக்கு பின்னால் உள்ளவை நல்ல நோக்கங்களை கொண்டிருக்கவில்லை. அவை நாட்டுக்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்தப் போக்கு தொடரக் கூடாது. இப்படியே போனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. இந்தச் செயல்களை ‘சிறுபிள்ளைத்தனம்’ என்று சொல்லி புறக்கணிக்கக் கூடாது,” என்று மோடி பேசியது தங்கள் அதிகாரத்தைக் கொண்டு இந்தப் பேச்சுக்களை ஒடுக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை சார்ந்ததாக இருந்தது.

மேலும் காங்கிரஸ் குறித்து பேசிய மோடி “நாட்டில் அராஜகத்தைப் பரப்பக் காங்கிரஸ் திட்டமிட்ட நடக்கிறது. புதிய பரப்புரைகள் செய்யும் காங்கிரஸ் கட்சி தாங்கள் விரும்பிய பலனை அடையாவிட்டால் ஜூன் 4-ஆம் தேதி நாடு முழுவதும் அராஜகத்தை நடத்த உள்ளது. அராஜகத்தைப் பரப்புவதே அவர்களின் நோக்கம்,” என்றார்.

இத்துடன், ’’விவசாய விளை பொருட்களுக்கு பாஜக ஆட்சியில் குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்தோம்’’ என அதிக விலை நிர்ணயித்துவிட்டதாக அப்பட்டமாக பொய் உரைத்தார்!

சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது. ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறோம்…என்றெல்லாம் மோடி பேசிய போது மோடியின் அகராதியில் ஏழைகள் என்பவர்கள் அதானி, அம்பானி, டாடா, பிர்லா என்பதை புரிந்து கொள்ள முடியதவர்களா நம் மக்கள்!

பிரதமர் மோடி பொய்க்கு மேல் பொய்யாக அடுக்கிக் கொண்டே போவதை எதிர்த்து கோஷமிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.

ஆனால், பிரதமர் மோடியோ வெளிநடப்பு செய்த எம்பிக்களை பார்த்து, ‛‛பொய்யை பரப்புவோருக்கு உண்மையை கேட்கும் சக்தி இல்லை. உண்மையை கேட்க விரும்பாமல் வெளி நடப்பு செய்வோர் ராஜ்ய சபாவை அவமதிக்கின்றனர்” எனக் கூறியது உச்சபட்ச ஹைலைட்!

சாத்தான்கள் ஓதுவதெல்லாம் வேதமாகிவிடுமா என்ன?

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time