உள்ளாட்சிகளை ஊனப்படுத்திய மேயர் நியமனங்கள்!

-சாவித்திரி கண்ணன்

எப்படியான தகுதிகள் உள்ளவர்களுக்கு மேயர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்பதற்கு கோவை, நெல்லை மேயர்களே அத்தாட்சியாகும். வலுவான தலைவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வந்துவிடக் கூடாது என நினைக்கும் ஆட்சியாளர்கள், தாங்கள் மேய்க்கத் தோதானவர்களை மேயராக தேர்ந்தெடுத்து ஆட்டுவிக்கிறார்கள்;

ஒரு மாநகரத்தையே வழி நடத்திச் செல்லும் மகத்தான தலைமை பொறுப்புக்கே மேயர் என்ற அடைமொழி வழங்கப்படுகிறது. மேயர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் போது தகுதி, திறமை, நேர்மை, தலைமைப் பண்பு மக்கள் சேவையில் ஆர்வம் ஆகியவை அளவுகோளாக கருதப்படாமல் கட்சித் தலைமைக்கான விசுவாசம்  மட்டுமே அளவுகோளாக பார்க்கப்படுகிறது என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது.

1992ல் உள்ளாட்சிக்களை வலுப்படுத்துவதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு 1993 முதல் நடைமுறைக்கு வந்த பிறகு, நடந்த முதல் உள்ளாட்சி தேர்தலில் 1996-ல் மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்தனர். அது வரை கவுன்சிலர்கள் தான் மேயரை தேர்ந்தெடுத்தனர். இதன்படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

2001-ம் ஆண்டும் மேயர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது சென்னை மாநகராட்சி மேயராக 2-வது முறையாக வென்ற மு.க.ஸ்டாலின் மேயராகத் தொடர்வதை விரும்பாத அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரே நபர் இரு அரசு பதவிகளில் இருக்கக் கூடாது என சட்ட திருத்தம் கொண்டு வந்தார். இதனால் மேயர் பதவியில் தொடர்ந்தால் ஜெயலலிதா அடுத்தடுத்து இடையூறுகள் தருவார் எனக் கருதி மேயர் பொறுப்பை ராஜுனாமா செய்துவிட்டு எம்.எல்.ஏ. பதவியில் மட்டும் நீடித்தார், மு.க.ஸ்டாலின்.


2006-ல் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறையை ஜெயலலிதா ரத்து செய்தார். ‘மக்களால் தேர்தெடுக்கப்பட்டு வருபவர் என்ற ஹோதாவில் மேயர் தனக்கு கீழ்படியாமல் போகலாம்’ என அவர் நினைத்ததே இதற்கு காரணம்! ஆனால், அதே ஜெயலலிதா அரசு 2011-ல் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. பிறகு மீண்டும் பல்டியடித்து 2016-ல் ஜெயலலிதா அரசே, மேயர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்ய சட்ட திருத்தமும் கொண்டு வந்தது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாத நிலை இருந்தது. முந்தைய அதிமுக அரசும் உள்ளாட்சி தேர்தலக்ளை முறையாக நடத்தாமல் பலமுறை நீதிமன்றத்தின் கண்டணங்களை பெற்றது. பிறகு 2021 பதவிக்கு வந்த ஸ்டாலினும் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்த வண்ணம் இருந்தார். இந்த சூழலில் உச்ச நீதிமன்றம் கெடு வைத்து நெருக்கடி தந்ததை அடுத்து தான் ஸ்டாலின் நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு முன்பு வலியுறுத்திய மேயர்கள், நகராட்சித் தலைவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் வழிமுறையை மீண்டும் கொண்டு வரும் என்றே அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ஸ்டாலின் ஜெயலலிதா பாணியையே தானும் எடுத்துக் கொண்டார்! இத்தனைக்கும் ஜெயலலிதாவை இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தவர் ஸ்டாலின்.

சென்னை மேயராக ஸ்டாலினுக்கு பிறகு பொறுப்புக்கு வந்த ம.சுப்பிரமணியனும்,சைதை துரைசாமியும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நல்ல ஆளுமை கொண்டவர்கள்! குறிப்பிடத்தக்க சாதனையும் படைத்தார்கள்!

ஆனால், நேரடி தேர்தலைத் தவிர்த்து ஸ்டாலின் நடத்திய நகர்புற உள்ளாட்சித் தேர்தலையடுத்து திமுக தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான மேயர்கள் அதிர்ச்சி ரகம். கவுன்சிலர் அனுபவம் கூட இல்லாத புதியவர்கள். முதன் முறை கவுன்சிலர் தேர்தலில் வென்ற நிலையில் கட்சித் தலைமையால் அதிரடியாக மேயராக்கப்பட்டனர்.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் எத்தனையோ தகுதி வாய்ந்த கவுன்சிலர்கள் இருக்க, அனைவரையும் புறக்கணித்து பிரியா என்ற இளம் பெண்ணை கவுன்சிலராக்கினார் ஸ்டாலின். மேயர் பொறுப்புக்கே மரியாதை இல்லாத வகையில் இந்த தேர்வு அமைந்தது. இதே போலத் தான் மற்ற மாநகராட்சிகளிலும் நடந்தன. அந்த வகையில் தற்போது பல மாநகராட்சிகள் அல்லோகலப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஆற்றலாளர்களை புறக்கணித்து, தங்களுக்கு அடக்கமானவர்கள் இருந்தால் போதும் என ஸ்டாலின் கருதினார்.

சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்த காலத்தில் ம.சுப்பிரமணியன் மிகவும் சிறப்பாக செயல்பட்ட போது, அதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த ஸ்டாலினின் போதாமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டார். இது ஸ்டாலினை அப்போதே மிகக் கடுமையாக உறுத்தியதால், தற்போது தன் மகன் உதயநிதியை விஞ்சும் அளவுக்கு எந்த திறமையாளரும் எந்தப் பதவியிலும் இல்லாதவாறு பார்த்துக் கொண்டதன் விளைவே, மாநகராட்சிகளின் மேயர் தேர்வுகளாகும்.

அதில் கோவை, நெல்லை மாநகராட்சி மேயர்கள் தற்போது வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகளாகும். இன்னும் சிலர் எப்போது வேண்டுமானாலும் வீழ்த்தப்படும் நிலையில் ஊசலாடிக் கொண்டுள்ளனர்!

மேற்படி இரு மேயர்களின் தேர்வும் அந்தந்த மாநகர மக்களுக்கே அதிர்ச்சி தந்த ஒன்றாகும். குறிப்பாக கோவை மேயர் தேர்வு என்பது அந்த மாவட்டத்திற்கே சம்பந்தமில்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் பரிந்துரையில் ஸ்டாலின் தாரை வார்த்ததாகும்.

கர்வம் தலைக்கேறிய கல்பனா;

முற்றிலும் பக்குவமற்ற, தராதரம் இல்லாத ஒரு மேயராக கல்பனாவை அந்தக் கட்சியின் சக கவுன்சிலர்களே உணர்ந்தனர் என்றாலும், தலைமைக்கு கட்டுப்பட்டு சிறிது காலம் தாக்குப் பிடித்தனர். ஆனால், கல்பனாவோ, அற்பனுக்கு பதவி கிடைத்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிக்கச் சொல்லுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிகார போதை தலைக்கேற ஆட்டம் போட்டார்.

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தன் தாயாரின் மருத்துவ உதவிக்கு முன்பு அவசரத்திற்கு கடன் தந்த பக்கத்துவீட்டு பெண்மணி, அந்தக் கடனை திருப்பிக் கேட்ட ஒரே காரணத்திற்காக தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு இன்னல்களை செய்து கதறடித்தார். மாநகர மேயர் பதவி என்பதே கொள்ளையடிக்கத் தரப்பட்ட லைசென்ஸ் என்பதைப் போல நடந்து கொண்டார். அனைவரையும் அனுசரித்தும், அரவணைத்தும் போகும் பக்குவம் அறவே இல்லாத நிலையில் எதிரிகளை சொந்தக் கட்சிக்குள்ளேயே அதிகமாக்கிக் கொண்டார்.

தொல்லையாகிப் போன நெல்லை மேயர்;

இதே நிலைமை தான் நெல்லை மேயர் சரவணன் விவகாரத்திலும் நடந்துள்ளது. மாநகராட்சி மொத்த உறுப்பினர்கள் 55 பேரில் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டு 51 பேரை தன்னகத்தே கொண்டுள்ள அதீத பெரும்பான்மை இருந்தும், சரவணன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை வெளியேற்ற முடிவு செய்தது வெளிக் கட்சியினர் அல்ல, சொந்தக் கட்சிக்காரர்களே தாம்! அந்த அளவுக்கு அரவணைத்து செல்ல முடியாத தன்மை கொண்டவர்.

யாரால் தனக்கு வாய்ப்பு கிடைத்ததோ அந்த சகாவையே துச்சமாக மதித்துள்ளார். சர்வாதிகாரியாக மாறப் பார்த்த சரவணன் தற்போது சரணகதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர் நடத்திய மாநகராட்சி கூட்டங்களை அந்தக் கட்சி கவுன்சிலர்களே கலந்து கொள்ளாமல் நிராகரித்துள்ளனர். அமைச்சர் தங்கம் தென்னரசு செய்த சமரச முயற்சி படுதோல்வி அடைந்தது. தகுதி இல்லாதவர்கள் கட்சித் தலைமையால் வலிந்து திணிக்கப்படும் போது, அது சொந்தக் காசில் தாங்களே தங்களுக்கு வைத்துக் கொள்ளும் சூனியம் என்பது ஏனோ அவர்களுக்கு தெரிவதில்லை. தனக்கு அடிவருடி சேவகம் செய்வது ஒன்றே தகுதி என நினைத்து கட்சித் தலைமையானது பெரிய பதவிகளில் சின்ன புத்தி மனிதர்களை நிர்பந்திப்பது என்பது, ஒரு வகையில் மன்னராட்சி மனோபாவத்தின் எச்சமேயாகும்.

மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டி மத்திய அரசிடம் போர்க் கொடி தூக்கும் ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளை ஊனப்படுத்தும் விதமாக தலைமைப் பொறுப்புக்கு நேரடி தேர்தலை தவிர்த்ததோடு, திறமையும், அனுபவமும் வாய்ந்தவர்களை புறக்கணித்து, தலையாட்டி பொம்மைகளை தேர்ந்தெடுத்து தற்போது தலைவலியை பெற்றுள்ளார். தலைவலி, அவருக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தான்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time