சகல கட்சிகளும் போலே பாபாவிடம் சரண்டர்!

-சாவித்திரி கண்ணன்

121 பேர் சாவுக்கு காரணமான பாபாவை சட்டத்தால் நெருங்க முடியவில்லை. போலே பாபா மீது எப்.ஐ.ஆர் போடுவதற்கு அரசாங்கத்திற்கு துணிவில்லை! துயரத்தில் உழல்வோரை சந்திக்காமல் தலைமறைவான சாமியாரை கைது செய்ய எந்தக் கட்சியும் வலியுறுத்தவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள்! காப்பாற்றப்படும் சாமியார்! நடந்தது என்ன?

”சத்சங் நிகழ்ச்சியில் பங்கேற்ற 121 பேர் இறந்து போனதற்கு சமூக விரோதிகளே காரணம்” என போலே பாபா கூறியுள்ளார். ஆம், அவர் சொல்வது 100 சதவிகித உண்மையே! அந்த சமூக விரோதிகள் வேறு யாருமல்ல, அவரும், அவரது சீடர்களான குண்டர்களும் தான் என்பதை இந்தக் கட்டுரை வாசிக்கும் எவரும் உணர முடியும்.

உத்திரபிரதேசத்தின் ஹத்ராஸின் எல்லையில் அமைந்துள்ள சிறியதொரு புல்ராய் கிராமத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் சத்சங்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் போலே பாபா! இந்த நிகழ்ச்சிக்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு வாங்கிய தேவ் பிரகாஷ் மதுகர் என்ற பிரபல பொறியாளர், ”சுமார் 80,000 மக்கள் தாம் கூடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்! அத்துடன் ‘காவல் துறை சும்மா ஒரு பார்மால்டிக்காக சிலர் வந்து பாதுகாப்புக் கொடுத்தால் போதுமானது. எங்கள் சேவாதிகளே மக்களை ஒழுங்குபடுத்துவார்கள். காவல் துறையை நாங்கள் ஓரளவுக்குமேல் அனுமதிக்க மாட்டோம்’ எனக் கறார் காட்டியுள்ளார்.

இது தான் இவர்கள் நிகழ்ச்சி நடத்தும் ஸ்டைலாகும். கோவிட் நேரத்திலேயே பெரிய கூட்டத்தை திரட்டி நடத்தியவர்கள் தான் போலே பாபா குழுவினர். இது மட்டுமின்றி, இவர்கள் பத்திரிகையாளர்களையும் அனுமதிப்பதில்லை. நிகழ்ச்சியை கவரேஜ் செய்ய வரும் மீடியாக்களை தூர நிறுத்தி தடுத்து விடுவார்களாம்! இதனால், ‘எதற்கு அங்கு போய் அவமானப்பட வேண்டும்?’ என்றே மீடியாக்களும் இவர் நிகழ்ச்சியை தவிர்த்து வந்துள்ளனர். இதே போல சோசியல் மீடியாவிலும் தங்களை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். இப்படியாக தங்களைச் சுற்றி ஒரு இரும்பு வளையத்தை இவர்களே உருவாக்கிக் கொண்டு தனி ராஜ்ஜியம் நடத்தி உள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிகழ்வை எடுத்துக் கொண்டால், ஒரு அத்துவான பிரதேசத்தில் வயல்வெளிகள் உள்ள இடத்தில் சேறும், சகதியும் நிறைந்துள்ள பகுதியில் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. கூட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம், கேமரா என்றெல்லாம் ஏற்பாடு செய்துள்ளார் பாபா! அவரது மேடை மட்டுமே மிகப் பெரிய அளவில் சொகுசாக ஏற்பாடாகியுள்ளது. மேடைக்கு முன்புறம் பெரிய இடைவெளியில் ரெட் கார்பெட் போட்டுள்ளனர். மேடைக்கு வெகு தூரத்தில் இருந்தே பொது மக்கள் பாபாவை பார்க்கும் ஏற்பாடு!

பாபா சரியாக மதியம் 12.30 க்கு வருகிறார். 1.40-க்கு அங்கிருந்து வெளியேறுகிறார்! கூட்டத்தில் கலந்து கொள்ள உ.பி தழுவிய அளவில் மக்கள் வந்துள்ளது மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். வாகன நிறுத்ததிற்கே பெரிய இடம் தேவைப்பட்டுள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், வாகனங்களை சரியான இடத்தில் நிறுத்த செய்யவும் கிட்டத்தட்ட ஆயிரம் சேவாதிகள் எனப்படுபவர்கள் செயல்பட்டுள்ளனர். இவர்களுக்கு ‘பிங்க்’ நிற உடைகள் வழங்கப்பட்டு, கையில் தடியும் தரப்பட்டுள்ளது. இவர்கள் ஒரு நாள் சம்பளத்திற்கு தருவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்குமிடம் உணவு ஆகியவைகளும் தரப்பட்டுள்ளன.

பாபா வரும் போதும், போகும் போதும் அவருக்கு பாதுகாப்பாக 16 கமெண்டோக்கள் கறுப்பு பூனைப்படை பாணியில் வந்துள்ளனர். இவர்களை மீறி பாபாவை யாரும் நெருங்க முடியாது. எனவே, பாபா தங்களை சில மீட்டர் தூரம் கடந்து போன பிறகே, மக்கள் அவர் கால்பட்ட பாத மண்ணை எடுத்து தங்கள் உடலில் பூசிக் கொள்வார்கள்! அந்த வகையில் மக்கள் அவர் பாத மண்ணை எடுப்பது என்பது பாபாவின் பாதுகாப்புக்கு இடையூறு எனக் கருத வாய்ப்பில்லை.

 

அந்தக் கூட்டத்தில் மிகப் பெரும்பாலோர் பெண்களே! அந்த வகையில் கூட்டத்தை மிக மென்மையாகவும், திட்டமிட்டும் அழகாக ஒழுங்குபடுத்தி இருக்கலாம்.

ஆனால், சேவாதிகள் ஏன் பாதமண்ணை எடுக்க பாய்ந்த பெண்களின் மீது தடியை சுழற்றினார்கள் என்பதே கேள்வியாகும். அடிபட்டவர்கள் கீழே வீழ்ந்தனர். மற்றவர்கள் அவர்கள் மீது விழுந்தனர். இந்த வகையில் இறந்தவர்கள் 121 பேரில் 112 பேர் பெண்கள், ஆறு பேர் குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, இரண்டு ஆண்கள் எனத் தெரிய வருகிறது.

இறந்தவர்களில் ஒருவர் கூட பாபாவின் சேவாதிகள் இல்லை. தங்களை தற்காத்துக் கொள்வதில் அவர்கள் வல்லவர்களாகவே இருந்துள்ளனர். கடுமையாக காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் பாபாவின் ஆட்கள் யாரும் உதவவில்லை. சாவுகள் அரங்கேறியதுமே அவர்கள் அனைவரும் அங்கிருந்து தலைமறைவாகி உள்ளனர். இருந்த வெகு சிலரும் உதவ மறுத்து விட்டதாக உள்ளுர் போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாபாவும், அவரது பாதுகாப்புப் படையினரும் மாத்திரமல்ல, அவருக்கு வேண்டப்பட்ட நிர்வாகிகள் எனச் சிலருமாக சுமார் 20 வாகனங்களில் அங்கிருந்து எந்தச் சிறு சிராய்ப்போ சேதாரமோ இன்றி, கிளம்பி தேசிய நெடுஞ்சாலையை அடைந்து சுமூகமாக வெளியேறிவிட்டனர்.

வெள்ளை உடையில் வந்த பாபாவின் காரும் வெள்ளை ‘டயோட்டா போர்டீன்’ காரே! அதில் உள்ள இருக்கைகளுக்கு கூட தூய வெண்ணிறத் துணிகள் அலங்கரிக்கப்பட்டு இருந்துள்ளது. குளிர்பதனக் காரில் வந்ததால், வெளியில் எழுந்த தூசிகளின் புழுதி கூட, அவர் வெள்ளை இருக்கையில் படிய வாய்ப்பில்லாத வகையில் கார் கண்ணாடியை இறக்கி விட்டுத் தான் பாபா பறந்துள்ளார்.

ஆனால், அவர் கார் சென்ற சிறிது மணித் துளிகளில் தான் பெரும் மனிதப் பேரழிவு அங்கே நடந்துள்ளது. இந்த செய்தி நிச்சயமாக அவருக்கு செல்பேசி மூலமாக உடனே தெரிவிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. இதையடுத்தே போலே பாபா தலைமறைவானார்.

சம்பவம் அரங்கேறிய இடத்தில் சில நிமிடங்களில் காற்றைக் கிழித்து, இதயத்தை துளைத்தெடுக்கும் மரண ஓலங்கள்!

பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த சடலங்களாக சிதறிக் கிடக்க, இறந்து போனவர்களின் நட்பு வட்டமும், உறவுகளும் கதறித் துடிக்க, உலகமே பதைபதைக்கும் மானுடப் பேரவலம் அங்கே அரங்கேறியது. செய்தியை கேள்விப்பட்ட ஊடகங்கள் பிறகு தான் களத்திற்கு சென்றன.

பாபா போலே ஒரு உண்மையான ஆன்மீகவாதி என்றால், தன்னை தெய்வத்திற்கு நிகராக நினைக்கும் பக்தர்களின் மரண சம்பவம் அறிந்தவுடன் களத்திற்கு வந்திருக்க வேண்டாமா? இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தந்திருக்க வேண்டாமா? மருத்துவமனைகளில் குற்றுயிரும், குலை உயிருமாய் போராடுபவர்களுக்கு ஆறுதல் தந்திருக்க வேண்டுமல்லவா? அவரை நேரில் பார்த்த மகிழ்ச்சியிலேயே ஒரு சிலர் மரண விளிம்பில் இருந்து மீண்டு இருக்கவும் வாய்ப்புள்ளதே!

எவ்வளவு கள்ள உள்ளம் இருந்தால், இவர் தலைமறைவாகி இருப்பார். ”சமூக விரோதிகளின் செயல்” என நா கூசாமல் பேசுகிறார்! ஓடி ஒளிந்து கொள்வதில் வெட்கமே இல்லையே!

காவல்துறை பாபாவின் சகாக்கள் ஆறு பேரை கைது செய்து வழக்கு போட்டுள்ளது. அந்த வழக்கு, ‘குற்றமற்ற சாவுக்கு காரணமாகிவிட்டனர்’ என்கிறது. அத்துடன் அந்த இடத்தில் பாபா ஆட்கள் வைத்திருந்த சி.சி.டி.வி கேமரா பதிவை எல்லாம் உடனே அழித்து விட்டனர். இதில் இருந்தே இவர்கள் தான் கொலைக் குற்றவாளிகள் என்பது தெளிவாகிறது.

இந்த நிமிடம் வரை போலே பாபாவின் மீது குற்றப் பத்திரிக்கை கூட பதிவாகவில்லை. இது எவ்வளவு கோழைத்தனம்! ஆட்சியாளர்கள் செல்வாக்கான சாமியாரைக் கண்டு பயப்படுகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிப்பதன் வாயிலாக அவரது லட்சோப லட்சம் பக்தர்களின் வாக்கு வங்கி தங்களை விட்டு விலகிவிடுமே என அஞ்சுகின்றனர். பாபாவை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ராகுல் காந்தி உட்பட அனேகமாக எந்த முக்கிய கட்சித் தலைமையிடம் இருந்தும் வெளிப்படவில்லை. நம் அரசியல் கட்சிகளின் யோக்கியாதாம்சம் இவ்வளவு தான்!

இந்த போலிச் சாமியார்களின் டார்கெட்டே ஏழை, எளிய பாமர மக்கள் தாம்! தன்னை கண்மூடித்தனமாக நம்பும் பல லட்சம் மக்களை திரட்டிக் காட்டுவதால் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் போலே பாபா போன்றவர்களை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக அவருக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு, அவரை தங்களுக்கு வேண்டப்பட்டவராகவும் காட்டிக் கொள்வது வழமையாக இருந்துள்ளது.

உ.பியில் மாயாவதி ஆட்சியிலும் இவருக்கு மட்டற்ற மரியாதை காட்டப்பட்டுள்ளது. இதற்கு இவரும் மாயாவதியும் ஜாதவ் என்ற ஒரே சாதிக்காரர்கள் எனச் சொல்லப்பட்டது. அதே சமயம் அகிலேஷ் யாதவும் இந்த சாமியாரோடு நெருக்கம் காட்டி அந்த புகைப்படத்தை தன் சோசியல் மீடியாவில் போட்டுக் கொண்டுள்ளார். யோகி ஆதித்தியநாத் பற்றி கேட்கவே வேண்டாம். இந்து சாமியார்கள் என்றால், அவர்கள் இமாயலய அதிகாரம் படைத்தவர்களாக வலம் வருவதற்கான ஆட்சியைத் தான் அவர் நடத்துகிறார்.

ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி அதன் மூலம் 18 வருடக் கான்ஸ்டபிள் வேலையை இழந்தவர் தான் சூரஜ்பால் சிங் என்ற இந்த போலே பாபா. அதன் பிறகு இறந்து போன தன் வளர்ப்பு மகளை மீண்டும் உயிர்பித்துக் காட்டுகிறேன் என இவர் நாடகமாடிய வகையில் இடுகாட்டில் வைத்து மீண்டும் கைதானவர் தான் இந்த போலிச் சாமியார். நிரந்தரமாக சிறையில் தள்ளி இருக்க வேண்டிய இவரை மீண்டும், மிண்டும் வெளியில் விட்டு வைத்ததோடு, அவரோடு நெருக்கம் பாராட்டவும் ஆர்வப்படுகின்றது அதிகார வர்க்கம்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் தருவதாக மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டு அறிவித்துள்ளன! அந்தப் பணத்தை நூற்றுக்கணக்கான கோடிகளில் புரளும் போலே சாமியாரிடம் வசூலித்து தருவதே நியாயமாகும். இதை எந்தக் கட்சித் தலைவரும் கேட்க மறுக்கின்றனரே!

நடந்த சம்பவத்தின் உண்மைகளை வெளிப்படுத்தி, போலிச் சாமியாரை அம்பலப்படுத்தி கைது செய்யத் துணிவில்லாத இந்த அரசியல், சமூகச் சூழலில் மேன்மேலும் அயோக்கியத்தனம் செய்யும் சாமியார்கள் தான் பல்கி பெருகி வலம் வருவார்கள்!

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time