ஆட்சி மாற்றம்! – இங்கிலாந்துக்கு சோதனை காலமே!

-ச.அருணாசலம்

ரிஷி சுனாக் ஏன் இங்கிலாந்து மக்களால் தூக்கி எறியப்பட்டார்? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? லேபர் பார்ட்டியின் வெற்றி அங்கு மாற்றங்களை ஏற்படுத்துமா? ஏமாற்றங்களை பரிசளிக்குமா..? புதிய பிரதமராகவுள்ள கியெர் ஸ்டாமரின் கொள்கையில்லா கோமாளித்தனங்கள் உணர்த்துவதென்ன..?

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஒரு பகுதி அயர்லாந்து அடங்கிய யு. கே. (United Kingdom) என்றழைக்கப்படும் பிரிட்டனின் தேர்தல் முடிவுகளால் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பதினான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் (பழமைவாத கட்சி) கட்சியின் ரிஷி சுனாக் தலைமையிலான ஆட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி (Labour Party) கியெர் ஸ்டார்மர் தலைமையில் 412 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.

ஜூலை 4ல் நடந்த தேர்தலில் அன்றிரவே வாக்குகள் எண்ணப்பட்டு ஜூலை 5 காலை ஒன்பது மணி அளவில் அனைத்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ரிஷி சுனாக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, 250 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி முன்பிருந்ததைவிட 211 இடங்களை அதிகம் பெற்று 412 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

லிபரல் டெமாக்ரட் என்றழைக்கப்படும் தாராளவாத கட்சி தனது எண்ணிக்கையை 4லிருந்து 71 ஆக உயர்த்தி கன்சர்வேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கியை சரித்துள்ளது.

குடியேற்ற எதிர்ப்பு கட்சியான (anti immigrant Reform UK Party) சீர்திருத்தக் கட்சி 5 இடங்களில் வென்றாலும், தனது வாக்கு சதவிகித்த்தை 14 % ஆக உயர்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது!

கடந்த 14 ஆண்டுகள் ஆட்சிகட்டிலில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சியின் -கடைசி பிரதமரான ரிஷி சுனாக் காலம் வரை – ஆட்சியில் பிரிட்டனின் சமூக அடித்தளமே பெரும் மாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் உள்ளானது.

ஒருகாலத்தில் மிகவும் பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்ட பிரிட்டன் நாட்டின் தேசிய சுகாதார வசதிகள் (National Health Service) சுருக்கப்பட்டு, குடிமக்களுக்கான சமூக பாதுகாப்பு வளையத்தை முற்றிலுமாக சிதைத்தது!

அதுவரை மிக சிறப்பாக செயல்பட்டு வந்த போக்குவரத்து, சுகாதார துறைகள் உட்பட  அனைத்து பொதுத் துறைகளையும் தனியார் மயமாக்குவதின் மூலம் வேலை வாய்ப்பை குறைத்தது.

தொழிலாளர் உரிமைகளை மறுத்து, அவர்களது யூனியன் மற்றும் ஸ்டிரைக் உரிமைகளையும் கன்சர்வேட்டிவ் ஆட்சி பறித்தது!

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை ஆதரித்த – பிரக்சிட் (BREXIT) இயக்கத்தை முன்னெடுத்து அமல் செய்த கன்சர்வேட்டிவ் கட்சி பிரிட்டனின் தொழில்துறையை வெகுவாக பாதித்தது.

அதே சமயம் கன்சர்வேட்டிவ் கட்சியினர் கடைபிடித்த குடியேற்ற எதிர்ப்பு கொள்கை நடவடிக்கைகள் சமுதாயத்தில் காயங்களை ஏற்படுத்தின. புதிதாக குடியேறுபவர்களை ருவாண்டாவிற்கு (Rwanda) நாடு கடத்தும் திட்டமும் இவற்றில் ஒன்று!

பிரிட்டன் மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாத கன்சர்வேட்டிவ் கட்சி மேற்கூறிய கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாக்கினர். உணவுப் பொருட்களின் விண்ணை முட்டும் விலையேற்றம் பசியையும், பட்டினியையும் பிரிட்டன் மக்களுக்கு பரிசளித்தது.

பிரிட்டனின் இளஞ்சிறார்கள் தேவையான சத்துணவு இன்றி, வளர்ச்சியும் உயரமும் குன்றி இருப்பதை கண் கூடாகக் காண முடிகிறது! இவை ஆவணங்களிலும் பதிவாகியுள்ளன.

கோவிட் பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்களான போரிஸ் ஜான்சன்,  ட்ரஸ் மற்றும் ரிஷி சுனாக் ஆகியோரின் முட்டாள் தனமான அரசியல் செயல்பாடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு , மாற்றத்தை ஏற்படுத்த காத்துக் கிடந்தனர்.

தேர்தல்கள் வளமையாக அடுத்த ஆண்டு தான் -2025- நடைபெற வேண்டுமென்றாலும் ரிஷி சுனாக்கின் தப்புக் கணக்கினால் இந்த ஆண்டே -2024லிலேயே தேர்தல் நடத்தப்பட்டது. சந்தர்ப்பத்திற்காக காத்துக் கிடந்த பிரிட்டிஷ் மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியை மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர்.

ஆக, இந்த முடிவுகள் தொழிலாளர் கட்சியின் வெற்றி என்பதைவிட கன்சர்வேட்டிவ் கட்சியினரின் தோல்வி என்பதே பொருத்தமாக இருக்கும் .

இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நாம் கூற முடியும். ஒன்று, கன்சர்வேட்டிவ் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 23.7% ஆகவும், தொழிலாளர் கட்சி பெற்ற வாக்குகள் 33.8% ஆகவும்,

சீர்திருத்தக்கட்சி(Reform UK Party) 14.3% ஆகவும், லிபரல் கட்சி 12.2% ஆகவும்,

உள்ள நிலையில் தொழிலாளர் கட்சி முன்பிருந்ததைவிட சுமார் 1.7% வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்று 412 இடங்களை கைப்பற்றியுள்ளது.

இரண்டாவதாக , “மாற்றத்தை நோக்கி” என தொழிலாளர் கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் முழக்கம் வைத்தாலும், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை கை கழுவி, தனியார் மயத்தையும், தாராள மயத்தையும் தீவிரமாக ஆதரிக்கிறார்.

மாற்றத்தை பேசும் கியெர் ஸ்டார்மர்.

இதன் மூலம் தொழிலாளர் கட்சி தனக்கான தனித் தன்மையை இழந்து கன்சர்வேட்டிவ் கட்சியின் கண்ணோட்டத்திற்கு வந்துள்ளது என்பது தான் கவனிக்கத்தக்கது. இது கன்சர்வேட்டிவ் கட்சி ஆதரவாளர்களை வென்றெடுக்க கியெர் ஸ்டார்மர்  செய்த தந்திரமாகும். ஆனால், இதனால் தொழிலாளர் கட்சியின் முக்கியஸ்தர்களான ஜெர்மி கோர்பின் போன்ற முற்போக்காளர்கள் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறும் நிலை உருவானது.

தொழிலாளர் கட்சியை அதன் இயல்பான இடது சாரிப் பாதையிலிருந்து மாற்றி பழமைவாதிகளும் ஏற்றுக் கொள்ளும் இரண்டுங்கெட்டான் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டார், கியெர் ஸ்டார்மர் எனக் கூறப்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் மற்றும் குடியேறிகளின் (immigrants) ஆதரவை தொழிலாளர் கட்சி இழந்துள்ளது.

தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட இடது சாரித் தலைவர்கள் ஜெர்மி கோர்பின் உள்ளிட்டோர் இத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் , இவர்கள் கியெர் ஸ்டார்மர் செய்து வரும் கொள்கை சமரசங்களை  கடுமையாக விமர்சிப்பர். குறிப்பாக  NHS அமைப்பை தனியார் மயமாக்குவதை எதிர்ப்பது, தொழிலாளர்  விரோத போக்கு, புலம் பெயர்தோர் மீதான வெறுப்பு, போர் ஆதரவு, நேட்டோ ஆதரவு-எனச் செயல்படத் துடிக்கும் கெய்ர் ஸ்டாமருக்கு செக் வைப்பார்கள்!

முற்போக்கு சிந்தனையாளர் ஜெர்மி கோர்பின்

வெளிநாட்டு உறவு மற்றும் நிலைப்பாடுகளில் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமெரிக்க மற்றும் நேட்டோ நாடுகளின் நிலைப்பாட்டை கூச்ச நாச்சமின்றி ஆதரிப்பதும்,

பாலத்தீனப் பிரச்சினையில், குறிப்பாக இஸ்ரேலின் காசா போர்க் கொடுமைகளை , இன ஒழிப்பு நடவடிக்கைகளை எதிர்க்காமல் இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு  ஆதரவு அளித்ததும், அமெரிக்காவின் உண்மை முகத்தை தோலுரித்த ஊடகவியலாளர் ஜுலியன் அசாஞ்சேவை  தண்டிக்க துடித்ததும் தொழிலாளர் கட்சியின் அடிப்படை கோட்பாடுகளில் இருந்து கியெர் ஸ்டார்மர் வெகுவாக விலகி விட்டதை உணர்த்துகிறது.

புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள கியெர் ஸ்டார்மர் , “ புதிய அரசு கொள்கைச் சுமைகளில் இருந்து விடுபட்ட அரசாக , மக்கள் நலனில் மட்டுமே அக்கறையுள்ளதாக இருக்கும்” என்று கூறியுள்ளார். கொள்கையை சுமை என்பது எவ்வளவு கோணல் பார்வை!

தொழிலாளர்களுக்கும், உழைப்பாளர்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளை தமது அரசு முதல் நூறு நாட்களுக்குள் முன்னெடுக்கும் , அனைவருக்குமான சுகாதார வசதி, சுத்தமான எரிசக்தி, பாதுகாப்பான தெருக்களும் , எல்லைகளுமே எமது இலக்கு என வாய்ஜாலம் செய்துள்ளார்.

பதினான்கு ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பிரிட்டனின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளி, மக்களின் வாழ்வாதாரங்களை புதைகுழியில் தள்ளிய கன்சர்வேட்டிவ் கட்சி இன்று தோல்வியை சந்தித்து சிதறுண்டு கிடக்கிறது. பதினான்கு ஆண்டுகளில் ஐந்து பிரதமர்களை மாற்றிய இக்கட்சி இன்று தனது வாக்கு வங்கியை தீவிர வலது சாரிகளிடம் (Reform UK) பறி கொடுத்துள்ளது.

தொழிலாளர் கட்சியோ, தனது வாக்கில் ஒரு பகுதியை இடது சாரிகளான சுயேட்சை வேட்பாளர்களிடம் இழந்துள்ளது.

மாற்றம் என்று மார்தட்டினாலும், தொழிலாளர் கட்சியின் இன்றைய வெற்றி உண்மையில் பிரிட்டன் அரசின் கொள்கைகளில் பெயரளவிற்கே மாற்றத்தை கொண்டு வரும் என்றே கணிக்கப்படுகிறது.

ரஷியாவிற்கெதிராக அமெரிக்கா கூறுவதை அப்படியே பின்பற்றுவது, நேட்டோ கூட்டமைப்பை முற்றிலுமாக ஆதரிப்பது, மத்திய கிழக்கு பகுதிகளில் அமெரிக்க நலன்களை தமது நலன்களாக தூக்கி பிடிப்பது, இஸ்ரேலின் இன ஒழிப்பு போரை வலிந்து ஆதரிப்பது,

ஆயுத உதவி மூலம் இஸ்ரேலின் போர் குற்றங்களை ஊக்குவிப்பது, சீனத்திற்கெதிராக அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றுவது …போன்ற கன்சர்வேட்டிவ் கொள்கை முன்னெடுப்புகளில் புதிய அரசு எந்த மாற்றத்தையும் கொண்டு வராது!

உள்நாட்டில் பொதுத்துறையை வலுப்படுத்தி, மக்களின் உரிமைகளை மற்றும் சமூக பாதுகாப்பை கூட்ட புதிய அரசு முயற்சிக்குமா என்பது சந்தேகமே! கொள்கை மாற்றத்தை துணிச்சலாக முன்னெடுக்காத அரைகுறை முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தருமா..? என்பதை பொறுத்திருந்து கவனிக்க வேண்டும்.

இந்திய வமிசவளியை சார்ந்தவரும், தன்னை ‘இந்து ‘ என அடையாளப்படுத்திக் கொண்டவருமான ரிஷி சுனாக்கை கிறித்துவ நாடான இங்கிலாந்து தனது பிரதமராக ஏற்று பெருமிதம் அடைந்தது.

ரிஷி சுனாக் இன்போசிஸ் அதிபர்  நாராயண மூர்த்தியின் மகளை மணந்த மருமகனான போதிலும், ரிஷி சுனாக் தம்பதியரின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் பிரிட்டன் மக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தினாலும் , ரிஷி சுனாக்கை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கன்சர்வேட்டிவ் கட்சி தயங்கவில்லை. ரிஷி சுனாக்கை தங்களது பிரதமர் என பிரிட்டன் மக்கள் ஏற்றுக் கொள்ள தயங்கவில்லை!

ஆனால், ஒரு ‘இந்து’ பிரிட்டனின் பிரதமராகிவிட்டார் என மகாத்மியம் பேசிய சங்கிகள்,

சுதா நாராயணமூர்த்திக்கு நாடாளுமன்ற மேலவை பதவியும் கொடுத்து மகிழ்ந்த பாஜக,

இந்திய நாட்டின் 15 சதவிகித இஸ்லாமிய மக்களை ஒதுக்கி வைத்து, அந்த பாரபட்சத்தில் பெருமிதம் கொள்வது எத்தகைய முரண்?

கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநாறு ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள இங்கிலாந்து சமூகம் இவ்வாறு ‘பன்முகத்தில் ‘ (pluralism) பெருமை கொள்ள முடியமென்றால் , பல்லாயிரமாண்டு பலவகை நாகரீகங்கள் தழைத்து கலந்து வளர்ந்த இந்திய மண்ணில் பன்முகத்தன்மை உச்சத்தில் இருக்க வேண்டாமா?

இந்த தேர்தல் முடிவுகள் கன்சர்வேட்டிவ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தாலும், பிரிட்டன் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவு காலம் உடனடியாக கிடைக்குமா என்பது சந்தேகமே!

கிடைத்த வெற்றியை பயன்படுத்தி தங்களது உரிமைகளுக்கும், நலன்களுக்கும் உரிய குரல்களை உண்மையான தலைவர்கள் மூலம் எழுப்புவதன் மூலமாக பிரிட்டன் மக்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்த முடியும்!

கட்டுரையாளர் ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time