திட்டமிட்ட அலட்சியமா? ஆம்ஸ்ட்ராங் படுகொலை!

-சாவித்திரி கண்ணன்

அதிரவைக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையை அவதானித்துப் பார்க்கையில் ஆட்சித் தலைமையும், காவல்துறையும் மனது வைத்தால் தடுத்திருக்கக் கூடிய ஒன்றே என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது. ‘முடியட்டும் ஆம்ஸ்டிரங்கின் அரசியல் பயணம்’ என நினைத்ததற்கான காரணத்தை தேடுகிறது இந்தக் கட்டுரை;

ஒரு பழுத்த நாத்திகக் குடும்ப பின்னணியோடு, அறிவுத் தேடலோடு தீரா வாசிப்பு பழக்கமும் கொண்டவர் மட்டுமல்ல, தன்னை சுற்றிலுமுள்ளவர்களையும் அறிவார்ந்தவர்களாக உருவாக்குபவராக இருந்துள்ளார் என்பது தான் ஆம்ஸ்டிராங் மற்ற தலித் தலைவர்களிடம் இருந்து வேறுபடும் புள்ளியாகும். வேறெந்த தலித் தலைவர்களையும் விட உண்மையிலேயே கல்வியில் ஏழை, எளியோரை உயர்த்த வேண்டும் என்ற அக்கறை கொண்டவர் ஆம்ஸ்டிராங்!

எங்கு தலித் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அங்கு இவரது உதவிக் கரம் நீளும். ஆணவப் படுகொலைகள் பலவற்றுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். தமிழக அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாவுவின் மகள் ஒரு தலித் இளைஞனை கரம் பிடித்த போது, சேகர் பாபு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை டார்ச்சர் செய்த போது, அந்த தம்பதிகளுக்கு பாதுபாப்பு தந்து அரவணைத்தவர் ஆம்ஸ்டிராங்க்!

ஆருத்ரா கோல்டு ஹவுஸ் என்ற நிறுவனம் ஏழை, எளிய, நடுத்தர பிரிவு மக்களிடம் சுமார் 1,500 கோடி ரூபாய் ஏமாற்றி விட்டு பாஜகவின் அண்ணாமலை, அமர்பிரசாத் ரெட்டி மூலம் பாதுகாப்பு பெற்ற போது, அவர்களுக்கு அடியாளாக இருந்த ஆற்காடு சுரேஷுடன் மோதியவர் ஆம்ஸ்டிராங்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே செல்வாக்காகத் திகழ்ந்த பால் கனகராஜ் பாஜகவிற்கு சென்ற பிறகு, அவரது செல்வாக்கை குறைத்து, பார் கவுன்சிலுக்கு அமல்ராஜ் வருவதற்கு காரணமானவர் ஆம்ஸ்டிராங்!

முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் தலித் மக்களின் செல்வாக்கு மிக்க தலைவராக வளம் வந்தவர் ஆம்ஸ்டிராங்.

ஆம்ஸ்டிராங்கை கொல்வதற்கு மூன்று முறை ‘ஸ்கெட்ச்’ போட்டு தோற்றுள்ளது கொலைகாரக் கூட்டம். ‘ஆம்ஸ்டிராங் குறி வைக்கப்பட்டுள்ளார்’ என்பது காவல்துறைக்கு, குறிப்பாக உளவுத் துறைக்கு தெளிவாகவே தெரியும்.

இப்படியான சூழலில் விழிப்புணர்வோடு பாதுகாப்பை பலப்படுத்தாமல் காவல்துறை அலட்சியம் காட்டியதன் பின்னணி என்ன? ‘ஆம்ஸ்டிராங்கிற்கு ஒரு முடிவு ஏற்பட்டால், அது நடக்கட்டுமே..என தீர்மானித்தது காவல்துறையா? அல்லது ஆட்சித் தலைமையில் உள்ளவர்களா..?’

‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் ஸ்டாலினுக்கு பாஜக அரசியலுக்கு முற்றிலும் எதிரான திசையில் தன் அரசியல் செயல்பாட்டை உணர்வுபூர்மாக அமைத்துக் கொண்ட ஆம்ஸ்டிராங்கை பற்றி எந்த அளவுக்கு தெரியும்..?

ஆம்ஸ்டிராங்கின் அப்பா கிருஷ்ணன் தீவிரமான பெரியாரிஸ்ட்!. அம்மா கிறிஸ்துவ பின்னணி கொண்டவர்! ஆனால், ஆம்ஸ்டிராங்கோ அம்பேத்தாகாரால் ஈர்க்கப்பட்டு தீவிர பெளத்தரானார்! தன் வீட்டருகிலேயே பெளத்த விகார் ஒன்றையும் உருவாக்கினார். புத்தரின் அந்த சமத்துவ கோவில் திருவிழாவில் உலகமெங்கும் உள்ள புத்த பிக்குகளை அழைத்து மிகப் பெரிய விழாக்களையும் நடத்தி உள்ளார்.

வெட்டுக் குத்து, அரிவாள் வீச்சு, கேங்க் சண்டை என உழலும் வட சென்னை அடித்தட்டு மக்கள் வாழ்வியலில் ஆம்ஸ்டிராங்கும் தன் வாலிப பருவத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு குத்துச் சண்டை வீரராகத் தன்னை தகுதிபடுத்திக் கொண்டார்.

இந்தச் சூழலில் தான் அவர் அன்றைய திமுக எம்.எல்.ஏவான ரங்கநாதன் கண்களில் படுகிறார்! தன் அடாவடி அராஜக, அரசியலுக்கு இந்த இளைஞன் பயன்படுவான் என கணக்குப் போட்டு நெருக்கமாக வைத்துக் கொண்டார். இதற்கிடையில் பூவை மூர்த்தி பழக்கம் ஏற்பட்டவுடன் புரட்சி பாரதம் கட்சியில் தனக்கு அடுத்த முக்கியத்துவத்தை வழங்கி தன்னோடு வைத்துக் கொண்டார். இந்தக் காலகட்டங்களில் தான் காவல்துறையால் கூட தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மக்கள் இவரை நாடினார்கள். எனவே, அதற்கான பஞ்சாயத்து, தேவைப்பட்டால் வன்முறை ஆகியவற்றை கையில் எடுத்திருக்கிறார். வெகு சீக்கிரம் புரட்சி பாரதத்தில் இருந்தும் விடுபட்டார்.

2006 சென்னை மாநகராட்சி தேர்தலில் 99 வது வார்டில் சுயேட்சையாக வெற்றி பெறுகிறார்! இந்தத் தேர்தலில் திமுக பலத்த வன்முறைகளை அரங்கேற்றி, அதிமுகவையே அலறவிட்டது. இது நீதிமன்றத்தின் பலத்த கண்டனத்தை பெற்றது. இத்தனை அராஜகங்களுக்கு இடையிலும் அஞ்சா நெஞ்சனாக ஒரு சுயேட்சையாக களம் கண்டு, வெற்றி வாகை சூடி அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டவர் தான் ஆம்ஸ்டிராங்க்.

இந்த தேர்தலில் சுயேட்சையான அவருக்கு கிடைத்த சின்னம் யானை! அப்போது தமிழ் நாட்டில் பகுஜன் கட்சியில் இருந்தவர்கள் இவரை அணுகி தங்கள் கட்சியில் சேரும்படி வேண்டுகோள் வைக்கிறார்கள்! அதனை ஏற்று அந்தக் கட்சியில் சேர்கிறார். இந்தியும், ஆங்கிலமும் நன்றாக தெரிந்த ஆம்ஸ்டிராங் மாயாவதியுடனான முதல் சந்திப்பின் உரையாடலிலேயே அம்பேத்காரியத்தில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை பூரணமாக வெளிப்படுத்துகிறார். உடனே மாநிலத் தலைவராகிறார்!

இவரையடுத்து விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய செல்வ பெருந்தகையும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வரவும் பகுஜன் சமாஜ் கட்சியில் அவர் முக்கியத்துவம் அடைகிறார். இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டாலும், ஆம்ஸ்டிராங்கின் அரசியல் தீவிரத்தின் முன்னே செல்வ பெருந்தகையால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர் காங்கிரஸ் கட்சிக்கு செல்கிறார். மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரானார் ஆம்ஸ்டிராங்க்!

2008 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவர்களை தென் தமிழகத்தின் முக்கிய ஜாதியைச் சேர்ந்த சில மாணவர்கள், ‘தேர்வே எழுதக் கூடாது’ எனத் தடை போடுவதோடு, பல விதங்களில் அவமானப்படுத்துகிறார்கள்! பாதிக்கப்பட்ட மாணவர்கள் துவண்டு விழுந்து செய்வதறியாது திகைத்த போது ஆம்ஸ்டிராங் கவனத்திற்கு வருகிறது.

”நான் தேர்வு எழுதுவேன். முடிந்தால் தடுத்துப் பார் என சொல்லுங்கள். அடித்தால் திருப்பி அடியுங்கள்! என்ன நடந்தாலும் சரி, நான் இருக்கிறேன்.” என நம்பிக்கை ஊட்டுகிறார்.

இதையடுத்துத் தான் சட்ட கல்லூரி வளாகத்தில் இரு தரப்பு மாணவர்கள் இடையிலும் பெரும் மோதல் நடக்கிறது. அஞ்சிக் கிடந்த தலித் மாணவர்கள் ஆவேசமாக சேர்ந்து தாக்குகிறார்கள். இந்த சண்டையில் எந்த தலையீடும் செய்யாமல் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்து இயக்கினார் என ஆம்ஸ்டிராங்கும் கைதாகினார் என்றாலும், உடனே விடுதலை ஆனார்.

இதையடுத்து தான் தலித் மாணவர்களின் உயர் கல்விக்கு குறிப்பாக சட்டப் படிப்புக்கு தாராளமான உதவிகளை அள்ளி வழங்கினார் ஆம்ஸ்டிராங்! கடந்த 16 ஆண்டுகளில் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் சட்டம் படிக்க உதவி உள்ளார் ஆம்ஸ்டிராங்! தானும் திருப்பதி வெங்கடேஸ்வரா சட்டக் கல்லூரியில் முறையாகப் படித்து பட்டம் பெற்றுள்ளார். அம்பேத்கரின் அரசியல் சட்ட புத்தகத்தை ஒரு வேத நூல் போல பாவிக்க கூடியவர் ஆம்ஸ்டிராங் என்றும், அடிக்கடி அதில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசுவார் என்றும் அவரோடு பழகிய நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்!

”பழங்குடி மாணவர்கள், நலிந்த, ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் படிப்புக்காக அவரை சில முறை அணுகியுள்ளேன். உடனே தயக்கமின்றி உதவி உள்ளார். நான் எழுதிய, ‘ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும், மறுக்கப்பட்ட நீதிகளும்’ என்ற நூலை படித்ததாகக் கூறி என்னை அழைத்துப் பேசி அதன் ஆயிரம் பிரதிகளை வாங்கி தன் கட்சியின் நிர்வாகிகளுக்கு தந்து படிக்க வைத்தார். தமிழகம் தழுவிய அளவில் அடித்தள மக்களுக்காக உழைக்கும் அனைத்து களச் செயற்பாட்டாளர்களுடனும் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது” என்கிறார் சமூக செயற்பாட்டாளர் அருள்!

”மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா சட்ட திருத்தம் நிறைவேற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு வேண்டி அவரை சந்தித்தேன். மலர்ந்த முகத்துடன் வரவேற்று ஆழமாக உள்வங்கிக் கொண்டு ஆவன செய்தார். இன்றைக்கு தமிழகத்தின் எந்த அரசு கல்லூரி அல்லது பல்கலையில் நுழைந்தாலும் அவரது உதவியால் படிப்பவர்களையோ, அவரால் படித்து பேராசிரியர் ஆனவர்களையோ பார்க்கலாம். அந்த அளவுக்கு விரிவான கல்வி உதவிகள் வழங்கி உள்ளார்” என்கிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இன்றைக்கு சென்னை பார் கவுன்சில் தேர்தல் நடந்தால் ஆம்ஸ்டிராங்கின் தயவில்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது என்ற அளவுக்கு இவரது செல்வாக்கு உள்ளது என்றால், வேறென்ன சொல்வது?

இவ்வளவு தூரத்திற்கு கேட்பவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய அவருக்கு ஏது பணம்? என்ற கேள்விக்கு, ”அவர் கட்ட பஞ்சாயத்து செய்வதில் கிடைத்த பணத்தை தான் இப்படி பல நல்ல காரியங்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார்” என சில தரப்பில் சொல்கிறார்கள்! மற்றொரு பக்கம் ‘மாயாவதி இவருக்கு தாராளமாக பணம் தந்திருக்கலாம்’ என்கிறார்கள்!

சரணடைந்த போலிக் குற்றவாளிகள்!

சென்னை புறநகர் பகுதிகள், இ.சி.ஆர் ரோடு, ஓ.எம்.ஆர் ரோடு பகுதிகள். வட தமிழ்நாடு தழுவிய அளவில் ஏற்படும் பல நிலப் பிரச்சினைகளுக்கு கட்ட பஞ்சாயத்து செய்து, தீர்த்து வைக்கும் வகையில் வல்லவராகத் திகழ்ந்தார் ஆம்ஸ்டிராங்க். ”அவர் ஒரு விவகாரத்தில் தலையிட்டாரென்றால், மிக நிதானித்து இரு தரப்பில் சொல்வதையும் உள்வாங்கிக் கொண்டு தீர்க்கமாக முடிவு எடுப்பார். அந்த முடிவை யாரும் மாற்றவும் முடியாது! இவரை மாட்டி வைக்கவும் முடியாது. சட்டத்திற்கு உட்பட்டுத் தான் சர்வாதிகாரத்தையும் நிலை நாட்டுவார்” என்கிறார்கள்!

அதிமுக, திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள்,. அரசு அதிகாரிகள் ஆகியோரில் கணிசமானோர் அதிகார துஷ்பிரயோகம் செய்து நில அபகரிப்பு, ஊழல், முறைகேடுகள் என ஏமாற்றி அரசியல் செய்யும் சூழலில், அதற்கு எதிர்வினையாக அடித்தள மக்களில் இருந்து ஒருவன் உருவாவது அதிசயமல்ல. அதிகார மையத்திற்கு நாட்டமில்லாதவராகவும், புகழ் வெளிச்சத்தை விரும்பாதவராகவும் ஆம்ஸ்டிராங் இருந்தது தான் இவர்களுக்கு பிளஸ் பாயிண்டாகிவிட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறை பலத்த பின்னடைவை கண்டு வருகிறது. “”காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?” எனக் கேட்காதவர்களே கிடையாது. கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட கேட்கும் நிலைமை உருவாகிவிட்டது.

‘முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாக அறிவு அறவே இல்லை’ என்பது அவருக்கே தெரியும். ஆனால், காவல்துறை எனும் அதிகாரமிக்க படையை தனக்கு விசுவாசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அற்ப ஆசைக்காக தனக்கு கீழ் வைத்துள்ளார் ஸ்டாலின். ஆனால், இதில் படுதோல்வி அடைந்துவிட்டார். காவல்துறையை நிர்வகிக்க 24 மணி நேரமும் விழிப்புணர்வுள்ள துடிப்பான நடுத்தர வயது அமைச்சர் ஒருவரிடம் அவர் ஒப்படைப்பது தான் நாட்டுக்கும் நல்லது. ஆட்சிக்கும் நல்லது.

இது சாதாரணக் கொலையல்ல, அரசியல் படுகொலை! அவர் இழப்பினால் ஆதாயம் அடைபவர்கள் யார்? அவரை பழி தீர்க்க துடித்தவர்கள் யார்? எனப் பட்டியல் போட்டு விசாரணை நடத்தினால் விடை கிடைத்து விடும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time