ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் அரச மரம்!

-அண்ணாமலை சுகுமாரன்

அரச மரம் என்பது நம் மரபில் வழிபாட்டுடன் தொடர்புடையதாக அறியப்பட்டுள்ளது. இதனை வழிபடுவதன் பின்னணியில் ஒரு ஆரோக்கிய அணுகுமுறை உள்ளது. ஆரோக்கியத்தை தருவதில் அரசனாக இருப்பதால் இது அரச மரம் என்றழைக்கப்படுகிறது. ‘அரசமரம் இருக்கும் இடங்களில் ஆரோக்கியம் உத்திரவாதம்’ என ஏன் சொல்லப்படுகிறது..?

பொதுவாக மரங்கள் அறிவியல் ரீதியாக பகலில் பிராண வாயுவையும், இரவில் கரிமில வாயுவையும் வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள். ஆனால், அரச மரம் பகலிலும், இரவிலும் பிராண வாய்வை மட்டும் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது!

அரச மரம் தூய்மையான ஆக்ஸிஜனை வெளி விடுவதால் நம் நுரையீரல், கல்லீரல் போன்றவை வலுப்படுகின்றன; அரச மரத்தடியில் பிள்ளையாரையோ, நாகவடிவ லிங்கத்தையோ வைத்து வழிபடச் சொன்ன நம் முன்னோர்கள் அரச மரத்தின் ஆரோக்கியத்தை பெறும் விதமாகவே இந்த வழிபாட்டு வழக்கத்தை நமக்கு கற்பித்துள்ளனர்.

அரச மரத்தை திருமூலர், ‘படமாடும் கோயில்கள்’ என்று குறிப்பிடுகிறார்.  ஆலயங்கள் தோன்றி அதில் தெய்வங்களின் சிலைகள் வணங்கப்படுவதற்கு முன் மக்கள் மரங்களை தெய்வமாக வழி பட்டிருக்கிறார்கள். அப்போது தெய்வீக சக்தி வாய்ந்ததாக சில மரங்களை கண்டடைந்து இருக்கிறார்கள்!  அவைகளில், ஆல மரம், அரச மரம் போன்றவை முக்கியமானவை!

இம் மரத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை!  இவை வயிற்றுப் போக்கு, சீதபேதி, தீப்புண், தோல் தொற்றுப் பாதிப்புகள், புண் வடுக்கள், வெள்ளைப்படுதல், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.


உடலின் மிக முக்கிய உள்ளுருப்பான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த இலைகளின் சாறு குடித்தாலே போதும். மஞ்சள் காமாலை நோய் அறிகுறி தென்பட்டாலும், இந்த இலைச்சாறுடன், பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் 3 முறை குடித்தாலே பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

நலம் தரும் பஞ்ச பூதங்களில்

அரச மரம் ஆகாயத்தையும்,

ஆலமரம் மண்ணையும்,

வாதநாராயண மரம் காற்றையும்,

வன்னி மரம் அக்கினியையும்,

நெல்லி மரம் தண்ணீரையும்

குறிப்பதாக கூறப்படுகிறது.

அரச மரத்தடியில் எங்கும் விநாயகரை காணலாம். பௌத்தர்கள் அரச மரத்தடியில் புத்தரை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. ஆலமரமும்,  அரச மரமும் பௌத்தர்களின் புனித மரங்கள்!


அரச மரம், பெரிதாக வளரக் கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது. இது இந்தியா, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது.

இதன் இலை நீண்ட கூரிய முனையுடன் கூடிய இதய வடிவம் கொண்டது. இது சமஸ்கிருதத்தில் ‘அஸ்வத்தம்’ என அழைக்கப்படுகிறது அரசமரம்.

அரச மரக் குச்சிகள் இல்லாத ஹோமம், யாகமில்லை. இதன் கிளையிலிருந்து உண்டாகும் அக்னியே அக்னி ஹோத்ரத்திற்குப் பயன்படும். அரச மரத்தை  வேறு விதமாக வெட்டவோ, எரிக்கவோ கூடாது.

அரச மரத்திற்கு அரணி என்ற பெயரும்  உண்டு. அசுவம் என்றால் குதிரை. இந்த அரச மரத்திற்கும், குதிரைக்கும் சம்பந்தம் இருக்கிறது.

புராணங்கள் அரச மரத்தை மும்மூர்த்தி சொரூபமாகப் போற்றுகின்றன. அடிப்பகுதி பிரம்ம வடிவம், நடுப்பகுதி விஷ்ணு சொரூபம், மேல் பகுதி சிவ வடிவம் என்கிறது ஒரு சுலோகம்.


அரச மரம் தனுசு ராசி மண்டலத்துடன் தொடர்பு கொண்டது. இந்த நட்சத்திரக் கூட்டத்தின் நல்ல மின்காந்த கதிர்வீச்சுக்களை ஈர்த்துத் தன் உடலில் நிரப்பி வைத்துக் கொண்டு, அதைத் தொடுபவர்களுக்கும், சுற்றுபவர்களுக்கும் வழங்குகிறது.

இம்மரம் திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் போன்ற ஏராளமான சிவத் தலங்களில் வணங்கப்பட்டு வருகிறது. பாண்டிநாட்டு 18 திருப்பதிகளில் நான்காவது திவ்ய தேசமாக விளங்குகிறது – புல்லாரண்யம் என்ற திருப்புல்லாணி. வேறெங்கும் காணவியலாத அரச மரமும், நாகத்தின்மீது நர்த்தனிக்கும் ஸ்ரீசந்தான கிருஷ்ணனும், மூலிகை சக்தி ததும்பிய சக்கரத் தீர்த்தமும் இத்தலத்தின் சிறப்பம்சங்களாக விளங்கி வருகிறது.

நாட்டு மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் மருத்துவ மரங்களில் முதன்மையானது அரச மரமாகும்.

அரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து
வெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி
தாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்
வேக முத்தோ டம் போக்கும் மெய்

என்கிறது அகத்தியர் குண பாடம்.


இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. அரச மரத்தின் பட்டையை பொடியாக்கி, கஷாயமிட்டுக் குடித்து வந்தால், மூலம், மூலத்தால் வரும் பாதிப்புகள் கட்டுப்படும். காயங்கள், புண்,  சிரங்குகள், வெடிப்புகள் இருந்தால் அரச மரத்தின் இலைகளைக் கொண்டு கட்டுக் கட்டலாம்.

இதன் இலையை கஷாயமிட்டு குடித்தால், பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், சிறுநீர்ப்பை குறைபாடுகள் நலம் பெறும்.

அரச மரத்தின் பழம், இலைக் கொழுந்து, தண்டுப்பகுதி, வேர் இவற்றைச் சம அளவில் எடுத்து பாலில் கொதிக்க வைத்து சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

அரச மரத்தின் தண்டுப் பகுதியைத் தனியாக எடுத்து, நிழலில் காய வைத்து, அரைத்துப் பவுடராக்கி புண், வடுக்களின் மீது போடலாம். பசையாக்கி பற்றிடலாம்.

அரச மரத்தின் வேர்ப் பட்டையைக் கஷாயமிட்டு, உப்பு மற்றும் வெல்லம் கலந்து குடித்தால் நாள்பட்ட, தீவிர வயிற்றுவலி கட்டுப்படும்.


அரச மரத்தின் கட்டையை கஷாயமிட்டு கக்குவான் இருமலுக்கு மருந்தாகத் தரலாம். ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்றவற்றிற்கும் நல்ல மருந்தாக இவை விளங்குகின்றன.

‘அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்’ என்கிறது பழமொழி. அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.

‘அரசனை நம்பி புருஷனை கை விடவேண்டாம்’ என்றும், ஒரு பழமொழி உண்டு. இதிலும் அரசன் என்பது அரச மரத்தையே குறிக்கும். இதுவும் கணவன்மார்களை காக்க வந்த பழ மொழிதான்.

அரச  மரத்தை சுற்றி  வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாக , இன்னமும் நம்பப்படுகிறது. அரசு மற்றும் வேம்பு  மரத்தின் இலைகளின் நுனி நிலத்தை நோக்கியே இருக்கும். காரணம், அந்த  மரங்களிலிருந்து வெளிவரும் ஆக்ஸிஜனில் சக்தி வாய்ந்த ஓசோன் கலந்திருக்கும். இந்த காற்று கருப்பையில் உள்ள குறைகளை நீக்க வல்லது. இதனால்தான் அரச மரத்தை சுற்றினால் மலட்டுத்தன்மை நீங்கும் என்ற நம்பிக்கை நாடெங்கிலும் உள்ளது.


நன்றாக வளர்ந்த அரச மரம், தினமும் 1,808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி, 2,400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் அதிகம் கலந்து இருக்கும் காலை நேரங்களில்
இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளை தூண்டுகிறதாம். அரச  மரத்தை சுற்றி வருவதற்கும் இது தான் காரணம்.

அரச மரத்திலிருந்து வெளிப்படும் காற்றில், பெண்களின் மாதச் சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரச மரத்தை சுற்றினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது இதனால் தான்!

அரச மரத்தின் பட்டை, வேர், விதை போன்றவற்றை பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பிறகு, தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே தாது விருத்தியடையும் என்பார்கள்!

இம்மரத்தில் வளரும் புல்லுருவியை அரைத்து, ஒரு எலுமிச்சை அளவு, பிள்ளையில்லாத பெண்களுக்கு தர , தூரம் போவதற்கு முன் முன்று நாள் தந்தால் சூல் அமையும். இந்த மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, மாதவிலக்கு நேரத்திலும் கஷாயம் போல செய்து குடித்தால், மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.


இதன்  இலைகளில், டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. இதைத் தவிர ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்புகள், பாக்டீரியா எதிர்ப்புகள், நீரிழிவு எதிர்ப்பு பண்புகள்,
இப்படி ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி உள்ளன.  இவைகள் , நோய்கள் நம்மை தாக்காமல் அரணாக காத்து நிற்கின்றன. இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதின் வடிவம் அரச மர இலைகள் தாம்!

அரச  மரத்தின் இலைகள் அல்லது கொழுந்து இலைகள் இவைகளை இடித்து வைத்துக் கொண்டு அதில் பல் தேய்த்து வந்தால், பற்கள் பளிச்சிடும். பல் வலி நீங்கிவிடும். அல்லது இந்த இலைகளில் வாய் கொப்பளித்து வந்தாலும், வாய் துர்நாற்றம் நீங்கி, ஈறுகள் பலப்படும். பற்களில் கறைகள் படிந்திருந்தாலும், மெல்ல மெல்ல நீங்கிவிடும்.

அதேபோல, இந்த இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கலந்து குடித்தால் வயிற்றுக் கடுப்பு உடனே தீர்ந்துவிடும். இந்த  மரத்தின் இலைகளை இரவு தூங்கும் முன்பு ஒரு பாத்திரத்தில் நீரில்  போட்டு வைத்து விட்டு,மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும். அரிப்புகள், நமைச்சல், தடிப்புகள், வீக்கங்கள் இருந்தாலும் நீங்கிவிடும். இதன் கனிகளை பறவைகள் விட்டு வைப்பதில்லை. பொதுவாக அரச மரங்கள் பறவைகள் கூடுமிடங்களாகவும் உள்ளன!


இன்னமும் நிறைய  சொல்ல இருக்கிறது. எப்படி இருந்தாலும் மரங்களின் அரசன், அரச மரம் தான்.  என் கட்டுரைகளை படிக்கும்  வாசகர்கள் கட்டுரையின் கீழ் உங்கள்  கருத்துகளை பின்னூட்டமாக பதிவிட்டால் அறிந்து மகிழ்வேன். அடுத்து எழுத அது ஊக்கமளிக்கும்.

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

‘நம்ம ஊரு மூலிகைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time