ஆம்ஸ்டிராங்கை புறக்கணித்த அரசும், தலைவர்களும்!

-அ.ப. காரல் மார்க்ஸ் சித்தார்த்தர்

ஆம்ஸ்டிராங் கொலையிலும், அதற்கு பிறகான உடல் அடக்க விவகாரத்திலும் தமிழக அரசு காட்டிய காட்டிய அலட்சியங்களும், ஒவ்வாமையும் உணர்த்தும் செய்திகள் என்ன..? பெளத்தத்தை முன்னெடுத்த தலித் சமூக தலைவரின் இறுதி அஞ்சலியை புறக்கணித்த தமிழகத் தலைவர்கள் மன நிலை எப்படிப்பட்டது..?

சமத்துவ தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் அகால மறைவு தலித் அரசியலில் நிரப்பமுடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. புது கண்ணோட்டத்தில் அறிவுசார் விவாதங்களை எழுப்பும் தலித் அரசியலுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக அவரின் பல செயற்பாடுகளை பட்டியலிடலாம்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஏப்ரல் 14 அன்று, சென்னையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் பாபாசாகேப்-ன் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகளை முன்னின்று சாத்தியப்படுத்தியவர் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.

தன் அரசியல் வாழ்க்கை முழுதுமே அரசமைப்பு சட்டத்தை அனைவரும் பயில வேண்டிய புனித நூலாகவே ஆம்ஸ்ட்ராங் அவர்கள் பரப்புரை செய்தார். அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் சட்ட நுணுக்கங்களை பாமர மக்களுக்கு மிக எளிமையாக விளக்கிடும் பேச்சுக்களாகவே அவரது அரசியல் உரைகள் இருந்தன. இதன் வெளிப்பாடாக திராவிட மாடலுக்கு மாற்றாக ‘ஜெய்பீம்’ மாடலை தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களை பட்டதாரிகளாக மாற்றியது மட்டுமல்லாமல், அதற்கான பொருளாதார உதவிகளையும் செய்திடும் அவரின் பண்பு பலர் அறிந்தது. அரசியலில் ஆர்வம் கொண்டு அவரை அணுகும் இளம் தலைமுறையினருக்கு நடுஇரவு வரையில் அம்பேத்கரியத்தை அவர் கற்பிக்கும் வழக்கம் கொள்கையின் மீதான அவரது பிடிப்பை கேட்பவர்களுக்கு ஆழமாக உணர்த்தியது.

பெளத்தத்திற்கும், தலித் அரசியலுக்கும் பின்னடைவு!

பாபாசாகேப் வழியில் தன் குடும்பத்தை மட்டுமின்றி, பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களையும் பவுத்தத்தை நோக்கி அணித்திரட்டிய தனித்துவ மிக்க தலைவராக ஆம்ஸ்ட்ராங் திகழ்ந்தார். சொற்ப அரசியல் அதிகாரத்திற்காக பவுத்தத்தை அரவணைக்க மறுக்கும் இன்றைய தலித் தலைவர்களுக்கு மத்தியில், புத்த விஹார்களை அதிகமாக்கி, பவுத்தத்தை பற்றி மற்ற தலைவர்களும் பேச வேண்டும் என்ற கட்டாய சூழலை ஏற்படுத்திய பங்கு அவருக்கு உண்டு. பண்பாட்டு தளத்தில் அலாதியான பணியையும், பவுத்தர்கள் எப்போதும் நாடிடும் தலைவராகவும் அவர் திகழ்ந்தார்.

அறிவுத் தளத்தின் வெளிப்பாடாக இருக்கும் புத்தக காட்சிகளிலும் கூட அம்பேத்கரியத்தை கற்பிக்கும் பதிப்பாளர்கள் சொற்பமாகவே இருப்பதை கண்டு வேதனையடைந்து தென்னிந்திய புத்த விஹார் என்ற அறக்கட்டளையை ஆம்ஸ்ட்ராங் ஏற்படுத்தினார். பாபாசாகேப் அம்பேத்கரின் புத்தகங்களை மலிவான விலையில் வாசகர்களுக்கு கிடைக்க  செய்ததோடு, புத்தக காட்சிகளிலும் இவ்வறக்கட்டளை தற்போது பங்கேற்று வருகிறது.

தன்னை நாடி வரும் வெகுஜன மக்களின் அன்பை இயல்பாகவே பெற்றிடும் அவரின் பண்பிற்கு  இறுதி ஊர்வலம் சாட்சியாக இருந்தது. மிக முக்கியமாக, ‘ஜெய்பீம்’ என்ற முழக்கத்தையும் அண்ணல் அம்பேத்கரை ‘பாபாசாகேப்’ என்றே அழைக்க வேண்டும் என்ற நல்லறிவையும் தமிழக மக்களிடையே கற்பித்த மிக முக்கிய ஆளுமையாக ஆம்ஸ்ட்ராங்  திகழ்ந்தார். இத்தலைமுறைக்கு அம்பேத்கரியத்தை வந்தடைய செய்த மூத்த அம்பேத்கரிஸ்டுகளை தேடி கண்டடைந்து, அவர்களை முன்னிலைப்படுத்தி, வரலாற்றில் பதியவைத்திடும் தலைவராகவும் அவர் இருந்தார்.

விண்மீன் மறைந்தது

பொது அரசியலில் தலித் தலைவர்கள் போதிய ஆதிக்கத்தோடு செயல்படுவதற்கு பல சவால்கள் இருக்கும் இன்றைய கட்டமைப்பில் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் வளர்ச்சி வியப்புமிகு வரலாறாகவே பட்டியல் சாதியினரால் உணரப்படும்.

பல இன்னல்களுக்கும் சட்டப் போராட்டதிற்கும் பின், மழையுடன் கூடிய எட்டு மணி நேர நெடும் இறுதி ஊர்வலதிற்குப் பின், திருவள்ளூர் மாவட்டத்தில் போத்தூர் கிராமத்தில் பவுத்த முறைப்படி நள்ளிரவு நேரத்தில்,  (08.07.24), ஆயிரக்கணக்கான பற்றாளர்களுக்கு மத்தியில்,  ஆம்ஸ்ட்ராங் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். எதிர்பாரா மரணத்தினால் விண்மீனாய் மறைந்து போயிருக்கும் அவருக்குப் பின் பவுத்தத்தை கையிலெடுக்கும் தலித் தலைவருக்காக தமிழ்நாடு இனி சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது நிச்சயம்.

காவல்துறையின் கபட நாடகம்;

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பே வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழத்தின் சட்ட ஒழுங்கை மீண்டும் ஓங்கி கேள்விக்குட்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்-கை கொன்றுவிட்டு தப்பிப்பவர்களின் சிசிடிவி காட்சிகளை ஊடகங்கள் ஒளிப்பரப்பின. இதில் அனைவரும் இளைஞர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமில்லா உண்மை! அப்படி இருக்க காவல்துறையினர் நடுத்தர வயதுள்ளவர்களை கைது செய்திருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என சாலை மறியல்கள் நடந்தது ஒருபுறமிருக்க, விசிக-வின் தொல்.திருமாவளவன், காங்கிரஸ்-ன் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் உண்மையான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என தமிழ் நாடு அரசுக்கு வலியுறுத்தினர்.

அத்துடன் சென்னை ஜி.ஹெச்சில் உடல் கூறாய்வு நடந்த போதும், இருந்து ஆம்ஸ்டிராங்க் உடல் அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் காவல்துறை தேவையற்ற கடுமையைக் காட்டியது!

தமிழகத் தலைவர்களின் புறக்கணிப்பு

உத்திர பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக ஆட்சி நடத்திய மாயாவதி தனி விமானத்தில் வந்திறங்கி, புறக்கணிக்கப்பட்ட எளிய மக்களின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

ஆனால், தமிழகத்தின் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினும், முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

அவ்வளவு ஏன்? தமிழகத்தின்  பொதுவுடமைத் தலைவர்களான கே.பாலகிருஷ்ணனும், முத்தரசனும்  நேரில் அஞ்சலி செலுத்த வராமல் இரண்டாம் கட்டத் தலைவர்களை அனுப்பி இருந்தனர்.

ஆம்ஸ்டிராங்கின் தந்தை தீவிர பெரியாரிஸ்ட். திராவிட கழகத்தில் இருந்தவர். ஆம்ஸ்டிராங் பல கருத்தரங்க நிகழ்வுகளை பெரியார் திடலில் நடத்தி உள்ளார். ஆனால், தி.க தலைவர் வீரமணியும்  கூட அஞ்சலி செலுத்த வரவில்லை.

இந்த புறக்கணிப்புகள் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆழ்ந்த காயத்தை ஏற்படுத்தும் என்பதை ஏனோ அவர்கள் உணரவில்லை. அதே சமயம் செல்வ பெருந்தகை, சீமான், பிரேமலதா, ஜி.கே.வாசன், தமிழிசை செளந்திரராஜன், எல்.முருகன், ஜவாஹிருல்லா, ஆம் ஆத்மி வசீகரன், திருமுருகன் காந்தி, சுப.உதயகுமார் போன்றோர் வந்தது கவனிக்கத்தக்கது.

‘ஆம்ஸ்ட்ராங்கின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என உளவுத்துறை எச்சரித்திருந்தும் தமிழ்நாடு காவல்துறை அலட்சியம் காட்டி இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டிருக்கும் இடத்திலிருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளியே கே1 செம்பியம் காவல் நிலையம் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. புலனாய்வு விசாரணை முழு வீச்சுடன் நடக்காமல் இருப்பது பெரும் அநீதியாக ஒருபுறம் இருக்க, ஆம்ஸ்ட்ராங் அவர்களை அடக்கம் செய்வதில் எண்ணற்ற சவால்களையும், இன்னல்களையும் ஏற்படுத்தியது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசு நிகழ்த்திய வன்கொடுமை குற்றங்கள்

05.07.24 அன்று மாலை, தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதை அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி ”அவரது உடலை அரசு மரியாதையுடன் அரசு பொது இடத்தில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும்” என பகிரங்க கோரிக்கை வைத்தது.

ஆனால், தமிழ்நாடு அரசு ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்க்கு உரிதான மரியாதையை கருத்தில் கொள்ளவில்லை. அவரை அடக்கம் செய்வதற்கான தகுந்த இடத்தை அளிக்காமல் கள்ள மௌனத்தை கடைப்பிடித்தனர். 06.07.24 அன்று மாலை வரையில் இதற்கான பலத்தரப்பட்ட அரசியல் பேச்சு வார்த்தைகளை திமுகவுடன்  கூட்டணியில் இருக்கும் தலித் அரசியல் தலைவர்கள் நடத்தினர்.

பெரம்பூர் பகுதி மக்களின் பாசமிகுத் தலைவராக ஆம்ஸ்ட்ராங் இருந்தததால் அதே பகுதியில் அமைந்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தாய் ரமாபாய் அரங்கத்தில் அடக்கம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியான பொற்கொடியும், கட்சி பொறுப்பாளர்களும் அவ்வரங்கம் அமைந்துள்ள பகுதி மக்களும் என அனைவரும் சேர்ந்து இக் கோரிக்கையை வைத்தனர். தாய் ரமாபாய் அரங்கம் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு சொந்தமான இடமாகும். ஆனால், இவ்விடத்திலும் அனுமதி மறுத்து தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தியதால், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

கலைஞர் கருணாநிதி மரணமடைந்தபோது சென்னையின் மெரீனா கடற்கரையில்  அண்ணா நினைவிடத்தின் அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின்  வழக்கு தொடுத்தார். இன்று முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின்  தன் தந்தைக்கு இடம் கோரி நடத்திய நீதிப் போராட்டதிற்கு முற்றிலும் முரணாக ஆம்ஸ்ட்ராங் மரணத்தில்  அநீதி இழைத்துள்ளார்.

பட்டியல் சாதி மக்கள் மிகவும் உயர்வாக கருதுகிற காலம் சென்ற தலைவர்களை ஏதேனும் வழிகளில் அவமரியாதை செய்தாலே அது வன்கொடுமை குற்றம் என ‘The Scheduled Castes and Schedules Tribes (Prevention of Atrocities) Act, 1989 சட்டத்தின் பிரிவு (3)(2)(v) கூறுகிறது. தார்மீக ரீதியாக இப்பிரிவு அரசுக்கு எதிராகவும் பொருத்துவோமானால் சரியான நேரத்தில் மரியாதைகுரிய இடத்தில் ஆம்ஸ்ட்ராங்கை அடக்கம் செய்வதற்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்திய ஸ்டாலினின் திமுக அரசு மனித நேயமற்ற வன்கொடுமை குற்றங்களை புரிந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் அவர்களை சரியான நேரத்தில் மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான உரிமை (The Right for a Timely and Dignified Burial) இங்கு பெரிதும் மீறப்பட்டுள்ளது. அவரை கொலை செய்த விதத்தை காட்டிலும் இச்செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திராவிட கட்டமைப்பின் ஓட்டு வங்கியாக மட்டுமே பட்டியல் சாதியினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர். பொறுத்துக் கொண்டார்கள். இந்துத்வா, பாசிச பாஜக ஆகியவற்றை எதிர்க்கும் கடமைக்காக திராவிடத்தை வெற்றி பெறச் செய்தார்கள் பட்டியல் சாதியினர்.

குடிநீரில் மலத்தை கலக்கும் அளவிற்கு வன்கொடுமைகள் நாள் தோறும் தலைவிரித்தாடின. சகித்துக் கொண்டு திராவிட அரசுடனான ஆதரவை தொடர்ந்தார்கள் அவர்கள். வன்கொடுமைகள் தொடர ஓலங்கள் அதிகரிக்க திராவிட அரசின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. திராவிட அரசு கள்ள மௌனம் காத்தது. இவை அனைத்தையும் விட கொடுமையானது ஆம்ஸ்ட்ராங் அவர்களை அடக்கம் செய்வதில் அரசு காட்டிய ஒவ்வாமை ஆகும்.

கட்டுரையாளர்; அ.ப. காரல் மார்க்ஸ் சித்தார்த்தர்

வழக்குரைஞர் மற்றும் எழுத்தாளர்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time