ஆருத்ரா, பாஜக, அண்ணாமலை, ஆம்ஸ்டிராங் கொலை!

-சாவித்திரி கண்ணன்

‘ஆருத்ரா கோல்டு மோசடியை நூல் பிடித்துச் சென்றால், ஆம்ஸ்டிராங் கொலைக் குற்றவாளிகளை சுலபத்தில் பிடித்து விடலாம்’ என்பது தான், இன்றைக்கு பலமாக பேசப்படுகிறது. ஆருத்ரா மோசடிக்கும், குற்றவாளிகளின் கூடாரமாகியுள்ள பாஜகவிற்கும் உள்ள நெருக்கத்தை விவரிக்கிறது இந்தக் கட்டுரை;

அண்ணாமலை பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழக பாஜக குற்றவாளிகளின் கூடாராமாக மாறிக் கொண்டிருக்கிறது! தமிழ்நாட்டில் மிக முக்கிய குற்றங்களில் சம்பந்தப்பட்ட சுமார் 160 அடையாளப்படுத்தப்பட்ட ரவுடிகளை –காவல்துறையின் அதி மோசமான ரவுடிகள் லிஸ்டில் உள்ளவர்களை – அண்ணாமலை பாஜகவில் சேர்த்துள்ளார். இதன் மூலம் தவறு செய்யும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க முனையும் காவல்துறைக்கு நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்படுகின்றன.

உதாரணத்திற்கு சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்க பல கோடிப் பணத்தை வசூலித்து ஆட்டையப் போட்டு கைதான கார்திக் கோபிநாத், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர் என்பதால், வழக்கு நீர்த்துப் போக வைக்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் அவரை விடுவித்துவிட்டனர்.

ஆருத்ரா மோசடி விவகாரத்திற்கு வருவோம்;

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2,438 கோடி ரூபாயை ஆருத்ரா கோல்டு நிறுவனம் மோசடி செய்தது. இந்த வழக்கில் பா.ஜ.கவின் விளையாட்டுப் பிரிவு மாநில செயலாளர் ஹரிஷ் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார்  கைது செய்யப்பட்டார்.

பாஜக நிர்வாகி ஹரீஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரிஷ் எந்தவித சொந்த வருமானமும் அவருடைய பெயரில் இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து தனது வங்கிக் கணக்குகள் மூலம் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு அனுப்பியதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கூறுகிறது.

இவர் தனது பெயரிலும் தனது உறவினர்கள் பெயரிலும் சுமார் 30 சொத்துகளை வாங்கியிருப்பதைக் கண்டறிந்த பொருளாதார குற்றப் பிரிவு, இந்த சொத்துகளையும் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தான் பாஜகவுக்கும், ஆருத்ரா மோசடிகளுக்குமான தொடர்பு உருவாகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், ”என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, எதுக்கும் பயப்பட வேண்டாம். காவல்துறை உங்க மேல கைய வைக்காமல் இருப்பதற்கு நான் கேரண்டி. அதே சமயம் பெண்களிடம் மட்டும் தவறாக நடந்து கொள்ளாதீங்க. அது சென்சிடிவ்வான சமாச்சாரம். பப்ளிக்கே நம்மளை உதைப்பான். மற்றபடி ஊரை அடிச்சு உளையில் போட்டாக் கூட தப்பில்ல..” என்ற ரேஞ்ச்சுக்கு பேசுகிறார். இதைக் கேள்விப்பட்ட ஹரிஸ் தன்னை தற்காத்துக் கொள்ள பாஜகவில் தஞ்சமடைகிறார்.

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருந்த நேரத்தில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரீஷ், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மாநில செயலராக 2022 ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு, பொதுமக்கள் தந்த அழுத்ததின் காரணமாக ஆருத்ரா மோசடியில் ஹரீசை காவல் துறை கைது செய்தது. அப்போது ஹரிஸ் தனது வாக்குமூலத்தில் பா.ஜ.க விளையாட்டு பிரிவில் முக்கிய பொறுப்பை பெறுவதற்காக  பாஜக நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், பொது மக்களிடம் ஏமாற்றிய பணத்தை கொடுத்து தான் பா.ஜ.கவில் பொறுப்பு வாங்கியதாகவும் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனரான ஹரீஷ் வாக்குமூலம் கூறிய போது தான் பாஜகவின் தொடர்புகள் மெல்ல,மெல்லத் தெரிய வந்தது.

பாஜகவில் சேர்ந்த ஹரீஸ் தன்னை தற்காத்துக் கொள்வதோடு நில்லாமல், மற்ற இயக்குனர்களையும் பாஜக தலைவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்தனர். அவரிடமும், ஹரிஷிடமும் விசாரணை நடத்தியதில், இந்த மோசடி வழக்கில் நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஆர்.கே.சுரேஷ் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வழக்கை மத்திய பாஜக அரசின் செல்வாக்கில் அரசின் மூலம் நீர்த்துப் போக வைக்க ரூ.15 கோடி கொடுத்துள்ளனர், ஆருத்ரா இயக்குனர்கள். கைது செய்யப்பட்ட இதன் இயக்குனர் ராஜசேகர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ள ரூசோ ஆகியோரின் வங்கி கணக்குகளில் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கிற்கு கோடிக் கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதன் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டது.

‘மோசடி நபர்களுக்கு, ஆர்.கே.சுரேஷ் உடந்தையாக இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். பின்னர், ஆர்.கே.சுரேஷால் எதுவும் செய்ய முடியாத நிலையில் பணத்தை திருப்பி ஒப்படைக்க வில்லை’ என ரூசோ  விசாரணையின் போது வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையுடன் ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷும், ஹரிஸும் அண்ணாமலைக்கு மிக நெருக்கமானவர்கள். இதனால் தான் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை டெல்லியில் வைத்து சில மாதங்கள் வரையிலும் காப்பாற்றினார் அண்ணாமலை.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஹரிஸ் அந்த நிறுவனத்தில் இயக்குநராகவும் இல்லை, பங்குகள் எதையும் வைத்திருக்கவும் இல்லை என அண்ணாமலைக்கு நெருக்கமான அமர் பிரசாத் ரெட்டி அதிரடியாக பொய் சொன்னார். இது தொடர்பாக ட்விட்டரிலும் அவர் விளக்கம் தந்தார்! ஆருத்ரா நிர்வாகிகளை காப்பாற்ற அமர்பிரசாத் ரெட்டியும் ஈடுபாடு காட்டியுள்ளார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அண்ணாமலையும், அமர்பிரசாத் ரெட்டியும் ஆருத்ரா மோசடியில் சுமார் 400 கோடிகள் பணம் பெற்றனர் என்பதாக ஒரு பிரபல புலனாய்வு இதழ் விரிவான கட்டுரை வெளியிட்டு இருந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இதற்கு மறுப்போ, எதிர்வினையோ பாஜக தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக, 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருப்பதாக தகவல் வெளியானது. 500 ஏஜெண்டுகளில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் முடக்கினர். ஏஜெண்டுகளின் 100 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டது.

2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.5 கோடியே 69 லட்சம் ரூபாய் பணமும், 1 கோடி 13 லட்சம் மதிப்பிலான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டன. முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விருவதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொது மக்களுக்கு தரவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்ற ஆண்டு வரையும் ஆருத்ரா மோசடியில் ஓரளவு நடவடிக்கை போய்க் கொண்டு இருந்தது. ஆனால், ஜனவரி முதல் வாரம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சந்தித்து கேலோ இந்தியா போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். பிரதமரும் வந்து கலந்து கொண்டார். அதில் இருந்து ஆருத்ரா மோசடி தொடர்பான விசாரணை மிகவும் தொய்வாகிவிட்டது.

ஆருத்ரா மோசடியில் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோர் பலர் தற்கொலை செய்து இறந்துள்ளனர்! பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆம்ஸ்டிராங் ஆருத்ராவிற்கு அழுத்தம் கொடுத்து சிலருக்கு பணமும் பெற்றுத் தந்துள்ளார்.  தொடர்ந்து ஆருத்ராவிற்கு ஆம்ஸ்டிராங்  அழுத்தம் தந்ததே அவர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த வகையில் எதிரிக்கு எதிரி நண்பன்  என்ற வகையில் ஆம்ஸ்டிராங்கின் பரம விரோதிகளை ஆருத்ரா மோசடியாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர் எனச் சொல்லப்படுகிறது.

இவற்றில் எல்லாம் தமிழக அரசுக்கும், முதலமைச்சர்  ஸ்டாலினுக்கும் தான் மக்கள் மத்தியில் பெரிய அளவு கெட்ட பெயர் உருவாகி உள்ளது. இவ்வளவு குற்றப் பின்னணி கொண்ட அண்ணாமலை தமிழக அரசையும், முதல்வரையும் தாறுமாறாக விமர்சிக்கிறார்.

தமிழக முதல்வரின் நிர்வாக உறுதிப் பாடின்மை தான் இந்த தைரியத்தை அண்ணாமலைக்கு தந்துள்ளது. அண்ணாமலையின் அதி மோசமான குற்றப் பின்னணி குறித்த தகவல்களை தமிழக உளவுத் துறை விரல் நுனியில் வைத்துள்ளது. ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் தன்மானத்தை இழந்து, பதவி பறிபோய்விடுமோ, நம் ஊழல்களை வைத்து மத்திய அரசின் நடவடிக்கை பாயுமோ என அஞ்சி அமைதி காக்கின்றனர். இது தான் இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time