வன்முறைகள், கொலைகள் அதிகரிக்க காரணம் என்ன?

-சாவித்திரி கண்ணன்

நாளும், பொழுதும் வன்முறைகள், கொலைகள் நடந்த வண்ணம் உள்ளன! சமுகம் அமைதியற்று  உள்ளது. மனித நேயம் குறைந்து வருகிறது! பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழல்களால் எங்கும் பதற்றம் நிலவுகிறது. சமூக ஒழுங்குமுறைகள் சரிந்து ஆட்டம் கண்டுள்ளன! இந்தச் சூழல்களின் மூல காரணத்தை அடையாளப்படுத்தும் கட்டுரை;

ஒவ்வொரு கொலையும் விதவிதமான முறைகளில் நடக்கின்றன. பட்டப் பகலில் நட்ட நடு ரோட்டில் ஓட,ஓட விரட்டிக் கொள்ளும் சம்பவங்கள்! திட்டமிட்டு வீடு புகுந்து வெட்டும் ரவுடிகள், ரத்தம் தோய்ந்த கத்திகள், சரிந்து விழும் உடல்கள்!

யாரும் அறியாமல் கொலை செய்துவிட்டு ஒன்றுமே தெரியாதது போல அந்தப் பகுதிலேயே நடமாடும் குற்றவாளிகள்! ஓடி ஒளியும் குற்றவாளிகள், தைரியமாக குற்றத்தை ஒப்புக் கொண்டு காவல் நிலையம் வந்து சரணடையும் கொலையாளிகள்!

பணம் தந்தால் கச்சிதமாக கொலை செய்துவிட்டு மறையும் இளம் தொழில் முறை கொலையாளிகள்! 16 வயது தொடங்கி 22 வயதில் உள்ள வாலிபர்கள் தொழில் கொலையாளிகளாக மாறும் அவலம்! அதுவும் மதுரை மாவட்டத்தில் ஒரு தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியில் ஒன்பது வயது சிறுவனுக்கும் 13 வயது சிறுவனுக்குமான சண்டையில் 13 வயது சிறுவன் 9 வயதுள்ள சிறுவனைக் கொன்று தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளான்! கேட்கவே பதைபதைக்கிறது.

மற்றொரு புறம் மது போதையால் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்! குடிக்க பணம் கேட்டு தாய் தகப்பனை கொல்லும் மகன், குடிக்க பணம் கேட்டு மனைவியை கொல்லும் கணவன், குடிபோதையில் மனைவி குழந்தைகளைக் கொல்லும் குடும்பத் தலைவன், குடிபோதையில் நண்பர்களின் வாய்தகராறு முற்றி விழும் கொலைகள..எனச் சொல்லி மாளாது. அதிகரிக்கும் மதுப் பழக்கத்தால் உலகில் அதிகம் விதவைகளைக் கொண்ட நாடாக தமிழ்நாடு உள்ளது.

இப்படியாக நம் சமூகம் வன்முறைக்களமாகி வருகிறது! அதுவும் சமீபத்திய இரண்டாண்டுகளில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் ரொம்பவே அதிகரித்துள்ளன.

இதென்ன பெரிய விஷயம்? எல்லா காலங்களிலும், எல்லா ஆட்சிகளிலும் இது போன்ற சம்பவங்கள் நடக்கத் தான் செய்கின்றன எனச் சிலர் சொல்கிறார்கள்!

உண்மை தான்! ஆனால், ஒப்பீட்டளவில் இவை முன்பைக் காட்டிலும் 300 முதல் 400 சதவிகிதம் அதிகரித்துள்ளன. நாகரீகமும், கல்வியும், அறிவியலும் வளர, வளர ஒரு சமூகம் மேன்மேலும் பக்குபவப்பட வேண்டுமா? அல்லது பாழ்பட்டு சீரழிய வேண்டுமா?

ஆகவே, மாட மாளிகைகள், ஓங்கி உயர்ந்த குடியிருப்புப் பகுதிகள், கண்ணைக் கவரும் கண்ணாடிக் கட்டிடங்கள், பளபளக்கும் தார் சாலைகள் அதிகரித்துள்ள கல்லூரிகள், விஞ்ஞான வளர்ச்சிகளான இணைய வழித் தொடர்புகள், செல்போன்கள், சமூக ஊடகங்கள்..இவற்றால் சமூகம் மேம்பட்டுவிட்டது என நாம் பெருமைபட்டுக் கொள்வதொன்றே போதுமானதா?

சமூகத்தின் ஒரு பகுதியில் வேலையின்மை அதிகரித்துள்ளது! பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எல்லா வேலைகளுக்கும் ஒப்பந்த கூலி முறை அமலாகி வருகிறது. அது பேராசிரியர் பணி இடமானாலும் சரி, துப்புரவு பணியானாலும் சரி..எல்லோரும் ஒப்பந்தக் கூலிகள் தாம்!

மின்வாரியத்தில் 64,000 பணி இடங்கள் காலியாக உள்ளது. நிரப்பக் கோரி தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்! ஆனால், நிரப்பப்படாத பணி இடங்களில் அடிமாட்டுச் சம்பளத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகிறது தமிழக அரசு! ஏன் இப்படி என்றால், சம்பளம் கொடுக்க பணமில்லை என்கிறது தமிழக அரசு!

தெருவிற்கு தெரு மதுக் கடைகளையும், பார்களையும் உருவாக்கி சட்ட விரோதமாக அவை செயல்பட அனுமதித்து கல்லா கட்டுவதிலேயே குறியாக உள்ளனர் ஆட்சியாளர்கள்! மிக அதிக லாபம் சம்பாதிக்கும் டாஸ்மாக்கில் ஊழியர்களுக்கோ அடிமாட்டுச் சம்பளம். ஆனால், டாஸ்மாக் மதுவை அரசு கஜானாவிற்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து ஆட்சித் தலைமையில் உள்ளவர்களே ஆண்டுக்கு ஒரு லட்சம் கொள்ளையடிக்கின்றனர். கேட்டால், மது வருமானத்தில் தான் அரசே நடக்கிறது என்கிறார்கள். உலகத்திலேயே மது வருமானம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது எனச் சொல்லக் கூடிய ஒரு அரசை எங்கு தேடினாலும் பார்க்க முடியாது.

ஆளும் கட்சி ரவுடிகள் ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் மாமூல் கேட்கின்றனர். இது குறித்து பல முறை டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றும் அது செவிடன் காதில் ஊதிய சங்கானது. இதனால் ஊழியர்கள் பத்து ரூபாய் அதிகம் வாங்கியதற்கு மாற்றாக இருபது ரூபாய் அதிகம் வாங்கி மாமுல் கொடுத்து சமாளித்து வருகின்றனர். நடக்கும் ஒரு சிறு தவறைக் கூட தட்டிக் கேட்டு தன் கட்சிக்காரர்களை ஒழுங்குபடுத்தக் கூடிய தார்மீகத் தகுதியை அவர் இழந்துவிட்டார்!

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை வேகவேகமாக சுரண்டி அழிக்கிறார் மூத்த அமைச்சர் துரைமுருகன். அடுத்த தலைமுறைக்கு மலையையோ, ஆற்றையோ காட்ட முடியாத நிலை உருவாகிவிடுமோ என மனம் பதைக்கிறது.

ஏகப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களை நடத்தி கல்வியைக் கடை சரக்காக்கி கல்லா கட்டும் ஒருவர் தான் இங்கு கல்வி அமைச்சர்! இது போதாது என்று அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பேராசியர் பணி இடங்களை நிரப்புவதற்கு பல லட்சம் லஞ்சம் கேட்கிறார் பொன்முடி! மதுரை, காமராஜர் பல்கலைகளில் ஊழியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் சம்பளம் தர முடியாத நிலை தோன்றியுள்ளது. அரசு கல்லூரிகள் ஆசிரியர் பற்றாகுறைகளால் தள்ளாடுகிறது.

மற்றொருபக்கம் மருத்துவக் கல்வியை ‘மாபியா’ கூட்டத்திடம் தருவதற்கான நீட் தேர்வை திணிக்கிறது ஒன்றிய அரசு. நீட் தேர்வு முறையானது மருத்துவத்தில் உள்ள மனிதத்தை தான் முதலில் சாகடிக்கிறது.

படிக்கவும் பணம் தேவை, வேலை கிடைக்கவும் பணம் தேவை, எந்தக் காரியம் அரசு அலுவலங்களில் நடப்பதற்கும் பணம் தேவை…என  சமூகத்தை நிர்பந்தித்து பணம் பார்க்கும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கூட்டுறவால் தான் இளைஞர்கள் வன்முறை பாதைக்கு தள்ளப்படுகிறார்கள்!

மின்வாரியம் பல லட்சம் கடனில் மூழ்கியுள்ளது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு முன்பு இது போலக் கடனில்லை. தற்போது ஏன் வந்தது..? அதுவும் மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்திய பிறகும் ஏன் கடன்?

எப்போது மின் துறைக்குள் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரக் கொள்முதல் ஆரம்பித்ததோ அப்போது முதல் தான் நஷ்டத்திற்கு மேல் நஷ்டங்கள்! இந்தக் கடனுக்கு முழுக்க, முழுக்க காரணம் அதானி தான்! ‘தமிழக மின் வாரியத்தால் குறைந்த செலவில் தயாரிக்க முடிந்த மின்சாரத்தை மிக அதிக விலை கொடுத்து அதானியிடம் வாங்க வேண்டும்’ என மத்திய அரசு கட்டளை இடுகிறது.

போக்குவரத்து துறையிலும் தனியார் மயம் கொண்டு வர காய் நகர்த்தி வருகின்றனர். வாக்கு வங்கி அரசியலுக்காக ஏகப்பட்ட சலுகைகளை அறிவித்து, ஊழல், முறைகேடுகளை ஊக்குவித்து நஷ்டத்தில் தள்ளி ஓட்டுநர், நடத்துனர்கள் சம்பளத்தில் கை வைத்து இன்று இங்கும் ஒப்பந்த கூலி முறை வந்து விட்டது.

மத்திய அரசோ பொதுத் துறை நிறுவனங்களை திவாலாக்கி, தனி முதலாளிகள் செழிக்கவே சட்டங்கள் போட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. பொதுத் துறை வங்கிகளில் உள்ள பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித் தந்து வாரா கடன் என தள்ளுபடி செய்து நாட்டை திவாலாக்கி வருகிறது.

இவ்வாறு அரசு வசம் இருந்த அத்தியாவசிய சேவைகளை தனியார் மயத்திற்கு தள்ளி கட்டணத்தையும் அதிகப்படுத்தி, தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து, தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து தாங்களும் கமிஷன் அடிக்கும் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் தான் வேலையின்மை, வறுமை, திருட்டு, கொலை, கொள்ளை ஆகியவற்றுக்கு காரணம்.

தமிழக திமுக அரசு பாஜக என்ற பூச்சாண்டியை காட்டியே, தமிழகத்தை சூறையாடிக் கொழுக்கிறது. மத்திய பாஜக அரசோ, திமுக அரசு தன் நோக்கங்களுக்கெல்லாம் அடி பணிந்து போகும் காரணத்தால் எதிர்ப்பது போல பாவனை காட்டி எல்லா தவறுகளையும் அனுமதிப்பதோடு, தன் பங்கிற்கான கமிஷனையும் பெற்றுக் கொள்கிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் புத்திசாலி மருமகனுக்கோ பத்து தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் செல்வம் கிடைத்தும் திருப்தியில்லை. அதிகாரமற்ற வசூல் ராஜாவாக தமிழகத்தை ஆட்டுவிக்கிறார். முதல்வர் ஸ்டாலினோ, ‘தன் மகன் உதயநிதியை வருங்கால முதல்வராக்க வேண்டும்’ என்ற ஒற்றை நோக்கத்திற்காக ராஜதந்திரமாக காய் நகர்த்துகிறார்.

ஆட்சியாளர்கள் பேராசைகளை ஓரளவேணும் மூட்டைகட்டி வைத்து மக்கள் நலன் நோக்கி நகர முடிந்தாலே இங்கு பாதிக்கு மேற்பட்ட வன்முறைகள், கொலைகள், துயரங்கள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால், அதை எதிர்பார்க்கும் நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் இல்லை என்பதே யதார்த்தம்.

காவல்துறை கடிவாளமற்று தறிகெட்டு உள்ளது. வழி நடத்தத் தெரியாத அரசியல் தலைமையின் கீழ் அதிகாரம் மட்டுமே குவிந்துள்ளது. காவல்துறையில் உள்ளவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் நட்பும், பிணைப்பும் வலுவாகிவிட்டது. காரணம், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் யோக்கியதைக்கு ஏற்பத் தான் அதிகாரிகள் மனநிலையும் தன்னைத் தான் கட்டமைத்துக் கொள்ளும்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time