துணிச்சலுக்கு பேர் போன பத்திரிகையாளர்! மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகப் பேசும் தைரியம் இவரது பலம்! சுற்றி வளைத்து நாசூக்காக சொல்வது என்பதெல்லாம் இல்லை. எதற்குமே நேர்பட சொல்லிவிடுவார். இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து தனக்கே உரிய அழுத்தமான பாணியில் அறம் இணைய இதழுக்கு சவுக்கு சங்கர் தந்த நேர்காணல்.
சசிகலா டிசம்பர் மாதத்திற்குள் விடுதலையானால் பிஜேபி உடன் சமாதானம் ஆகிட்டாங்க என்று அர்த்தம். திமுக தோற்கிறது என்றால் அதற்கு உதயநிதி ஸ்டாலினும் முக்கிய காரணம். வரும் சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு இல்லையென்றாலும் பரவாயில்லை தன் இரண்டாவது மகனுக்கு சீட்டு வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் ஓபிஎஸ். பீகார் தேர்தல் உத்தியை பிஜேபி தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம். சசிகலாதான் முதல்வர் பதவியை எடப்பாடிக்கு கொடுத்தவர் என்றாலும், சசிகலாவை அதிமுகவில் எடப்பாடி சேர்க்கமாட்டார். தேமுதிகவை ஸ்டாலினும், எடப்பாடியும் சேர்த்து கொள்ளாமல் தனித்துவிட வாய்ப்பு உண்டு. ரஜினி சரி என்று சொல்லியிருந்தால் எடப்பாடி ஆட்சியை கலைத்து இருப்பார்கள். டிடிவி தினகரனின் சத்தம் இனி அதிகம் இருக்காது. 2% சதவிகித ஓட்டு உள்ள பிஜேபி இந்த தேர்தலில் பெரிய வேலையை பார்க்கும்!
பீகார் தேர்தலில் பிஜேபி மிகப் பெரிய வேலையை செய்துள்ளது. மக்கள் செல்வாக்கு அதிகம் இருந்த ஆர்.ஜே.டியுடன் சிறிய கட்சிகளை சேர விடாமல் பார்த்துக் கொண்டது. அதன் பலனாக பல தொகுதிகளில் மிக சில ஓட்டுகளில் தோற்றது ஆர்.ஜே.டி!. இதே உத்தியை 2016 தமிழக தேர்தலில் ஜெயலலிதா செய்தார். விஜயகாந்தை திமுகவுடன் சேரவிடாமல் தோற்கடித்தார். பீகார் நிலையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஆயத்தம் ஆகி கொண்டு இருக்கிறது பிஜேபி. சிறு கட்சிகளை திமுகவுடன் சேரவிடாமல் தடுக்கும்.
இது ஸ்டாலின் மிக கவனமாக செயல்பட வேண்டிய தேர்தலாகும். இப்பொழுது கூட்டணியில் இருக்கும் கட்சிகளை சிதறவிடாமல் கொண்டு சென்றாலே போதும் ஜெயித்துவிடலாம். ஆனால் ஒரு விஷயத்தை கவனம் கொள்ள வேண்டும் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து பல ஆயிரம் கோடிகளை சேர்த்து வைத்து உள்ளது அதிமுக. அதே பத்து ஆண்டுகள் பணத்தை செலவழித்து நிற்கிறது திமுக. பணம் நிச்சயம் இந்த தேர்தலில் அதிகம் விளையாடும். ஆளும் கட்சி கொடுக்கும் பணத்திற்கும் எதிர் கட்சி கொடுக்கும் பணத்திற்கும் வித்தியாசம் உண்டு. எதிர்கட்சி பணத்தை வெளியே எடுத்தால் உடனே அதிகாரிகள் அதனை கைப்பற்றி விடுவார்கள். அந்த பிரச்சனை ஆளும் கட்சிக்கு குறைவு.
ஸ்டாலின் ஜெயிக்க வேண்டும் என்பதை விட மதவாத சக்திகளை நுழையவிட கூடாது என்பதில் தமிழகம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து எதிர் கட்சிகளும், மக்களும் முழுவீச்சில் செயல்பட வேண்டும். இல்லையென்றால் இன்று அனைத்து துறைகளும் தன் கட்டுப்பாட்டில் வைத்து உள்ள பிஜேபி வட மாநிலங்களில் காட்டியது போல் தமிழகத்தில் தன் வேலையை காட்டும் என்பது உறுதி.
அதிகாரமையமான உதய நிதி
இன்று திமுகவில் ஸ்டாலினுக்கு நிகராக அதிகாரம் படைத்த நபர் என்றால், அது உதயநிதியாகும். அதற்கு ஒன்றை உதாரணமாக சொல்லலாம். கட்சியில் மூத்த தலைவர், திருச்சி என்றால் இவர்தான் என்று நிலையில் உள்ள நேரு சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று உதயநிதியை சந்தித்து தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற்றார். அதனை படங்களுடன் பதிவும் செய்து உள்ளார். இதை விட வேறு என்ன வேண்டும். உதயநிதி வயது என்ன? நேரு அனுபவம் என்ன?. உதயநிதி ஐந்து படங்கள் நடித்து கட்சிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாமல் நேரடியாக இளைஞர் அணி தலைவராக வந்து உள்ளார் என்றால் அது ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை. அந்த பதவிக்கு கட்சிக்கு எந்தவித பங்களிப்பும் செய்யாத ஒருவரை, புதியவரை ஸ்டாலின் நியமிப்பாரா? இதைத்தான் அழகிரி கேட்டார் உன் மகனுக்கு பங்கு கொடுத்தது போல் என் மகனுக்கும் பங்கு கொடு என்று.
ஒரு வாக்காளாராக என்னால் எந்தவித உழைப்பும் செலுத்தாமல், மக்களை நோக்கி சிறிதும் நெருங்கி வராத உதயநிதியை நான் ஏன் ஆதரித்து திமுகவுக்கு ஓட்டு போடவேண்டும்? இதேதான் பல தொண்டர்களின், மக்களின் மனநிலையுமாகும். இன்று திமுக தோற்றால் அதற்கு உதயநிதியும் ஒரு முக்கிய காரணம். முன்பு இதே அதிகாரம் ஸ்டாலின் மருமகன் சபரீசனிடம் இருந்தது இன்று உதயநிதி வருகை சபரீசனின் அதிகாரத்தை குறைத்துள்ளது என்று சொல்லாம்.
ஒரு சீட்டுக்கு காத்திருக்கும் ஓபிஸ்
அதிமுகவை எடுத்து கொண்டால் அங்கு இரண்டு மூன்று அணிகளாக இருந்தாலும் இன்று எடப்பாடி முழு அதிகாரத்தையும் கைப்பற்றி உள்ளார் என்பதுதான் நிஜம். முன்பு போல் பன்னிர்செல்வத்திற்கு டெல்லி உதவி கிடைப்பதில்லை. இன்று ஓபிஎஸ் கவனம் முழுவதும் வரும் சட்டமன்ற தேர்தலில் தன் இரண்டாவது மகன் ஜெயப்பிரதிப்க்கு ஒரு சீட் வாங்க வேண்டும் என்பதே. மற்றும் முதல் மகனுக்கு டெல்லியில் மந்திரி பதவி. இதை நோக்கியே அவர் கவனம் இருக்கிறது. இதற்கு எடப்பாடி உதவி வேண்டும். அதனால் இவற்றை நிறைவேற்றவே ஜெயலலிதா இருந்தபொழுது கட்சியில் எங்கு இருந்தார் என்று தெரியாத எடப்பாடியை முதலவர் வேட்பாளராக நியமிக்க ஒத்து கொண்டு இருக்கிறார். தர்மயுத்தம் ஒன்றை நடத்திய போது இருந்த மக்கள், தொண்டர்கள் செல்வாக்கை இன்று முற்றிலும் இழந்து நிற்கிறார் ஒபிஎஸ். இன்னும் சொல்ல போனால் தனக்கு சீட்டு இல்லையென்றாலும் பரவாயில்லை தன் இரண்டாவது மகனுக்கு சீட்டு வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்.
ஸ்டாலினுக்கு நிகராகவே எடப்பாடி இன்று இருக்கிறார், தன்னை உருவாக்கி கொண்டார். 2017ல் அவர் பதவி ஏற்கும்பொழுது அனைவராலும் பேசப்பட்ட வார்த்தை இன்னும் எத்தனை மாதங்கள் இவர் முதல்வராக இருப்பாரோ. இரண்டு மாதம் அல்லது ஆறு மாதம் இருந்தாலே அதிகம் என்று தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. ஆனால் இன்று முழு ஆட்சியையும் நிறைவு செய்ய போகிறார். இது அவரின் மிகச் சரியான திட்டமிடல் என்று சொல்லலாம். அதனை முழு வேகத்தில் நடைமுறைபடுத்தி வந்தார். கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு இருந்த ஆளுமை நிச்சயம் ஸ்டாலினுக்கு இல்லை அதே தான் எடப்பாடிக்கும். அவர்கள் ஆளுமை இல்லயென்றாலும் ஸ்டாலினுக்கு நிகராகவே இருகிறார். அதனால் மிக கடுமையான போட்டியை நிச்சயம் உருவாக்குவார். அதிகாரம், அளப்பரிய பணம், டெல்லி உதவி அனைத்தும் இருக்கிறது.
ஜெயலலிதா இருந்தபொழுது 100 ரூபாய் கமிஷன் என்றால் 75 சதவிகிதம் கார்டனுக்கு செலுத்தனும் 25 சதவிகிதம் கொடுப்பவர் எடுத்து கொள்ள வேண்டும். அதுவும் 100 ரூபாயை மொத்தமாக கார்டனுக்கு கொடுத்துவிட வேண்டும். பிறகு 25 சதவிகிதம் பிரித்து கொடுப்பார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை மொத்தமும் அவரே எடுத்து கொள்ளலாம். அதனால் இன்று பதவியில் இருக்கும் அனைவரும் பல ஆயிரம் கோடிகள் சேர்த்து கொண்டனர். அபரிதமாக பணம் சேர்ந்து விட்டதால் வரும் சட்டமன்ற தேர்தலில் பணத்தை கொண்டு மிக பெரிய நெருக்கடியை எதிர் கட்சிகளுக்கு ஏற்படுத்துவார்கள். இவ்வளவு பணம் இருப்பதை பாதுகாக்க வேண்டும். அதற்கு டெல்லி தயவு வேண்டும். அதனால் சசிகலாவை பிஜேபி ஏற்று கொள்ளாத வரை இவர்களும் ஏற்று கொள்ள மாட்டார்கள். அப்படி ஏற்று கொண்டால் அனைவரின் இடங்களிலும் ரெய்டு நடக்க தொடங்கிவிடும். இதை எடப்பாடி நன்கு உணர்ந்து இருப்பதால் சசிகலாவை ஏற்று கொள்ள மாட்டார்.
அது மட்டும் இல்லாமல் டிடிவி தினகரனை தலைவராக ஏற்று செயல்பட எடப்பாடி விரும்பவில்லை. முதல்வர் பதவியை ருசி கண்டுவிட்டதால் மற்றவர்களுக்கு முதல்வர் வேட்பாளர் என்ற தகுதியை கொடுக்க அவர் விரும்பவில்லை! அது சசிகலாவே என்றாலும் இதே மனநிலை தான். அரசியலில் நியாயம் பார்த்து செயல்பட முடியாது. அதனால் முதல்வர் பதவி வழங்கினார் எனபதற்காக சசிகலாவை ஏற்று செயல்பட விரும்பவில்லை என்பதே எடப்பாடி நிலைப்பாடு.
ரஜினி சரி என்றால் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து இருக்கும்
பிஜேபி மிக தெளிவாகவே இந்த தேர்தலை அணுகும். அவர்களிடம் அனைத்து திட்டங்களும் தயார் நிலையில் உள்ளது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் சில MLA ஜெயிக்கவும் வாய்ப்பு உண்டு. அதற்காக அதிமுக கட்சியுடன் சேரலாம் அல்லது தனித்தும் செயல்படலாம். இவர்களின் பெரிய எதிர்பார்ப்பு ரஜினி. ரஜினி சரி என்று சொல்லியிருந்தால் எடப்பாடி இன்று ஆட்சியில் இருந்து இருக்க முடியாது. இந்நேரம் கலைத்துவிட்டு இருப்பார்கள். எடப்பாடி அதிர்ஷ்டம் ரஜினி ஒத்து கொள்ளாததே என்று சொல்லலாம். பிஜேபியில் இருந்து அதிக அழுத்தம் ரஜினிக்கு கொடுத்து பார்த்தார்கள்.
2017 ஆண்டு கடைசி மாதம் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று ரஜினி சொன்னபோது ரஜினிக்கு அரசியல் ஆசை இருந்தது என்பது உண்மை. ஆட்சியை பிடித்துவிடலாம் என்றும் நினைத்து இருந்தார். பிறகு நிர்வாகிகளை நியமித்து கட்சி தொடர்பான செயல்பாடுகள் நடத்தி வரும்பொழுதான் அவரையே ஏமாற்ற தொடங்கிவிட்டனர். இப்பொழுதே இவ்வளவு நடக்கிறது என்றால் கட்சியாக மாறிவிட்டால் இவர்களை எப்படி கையாள்வது என்ற குழப்பத்திற்கு வந்துவிட்டார் ரஜினி என்றே உறுதியாக சொல்லலாம்.
Also read
மற்றும் இரண்டு சிறுநீரகம் செயலிழந்து, புதிய சிறுநீரகம் மாற்றப் பட்ட ஒருவரை இவ்வளவு பெரிய செயல்பாடுகளில் எப்படி ஈடுபடுத்த முடியும். நம் வீட்டு 70 வயது தாத்தா இருந்து அவரை அழைப்போமா. சில நாட்கள் முன்பு ரஜினி பெயரில் கடிதம் ஒன்று வெளிவந்து அவற்றை யாரோ வெளியிட்டு உள்ளார்கள் என்றும் ஆனால் அதில் உள்ள மருத்துவ தகவல்கள் உண்மை என்று சொன்னார் ரஜினி. ஆனால் அந்த கடிதத்தை ரஜினி தான் வெளியிட்டு உள்ளார் என்பதும் உண்மை. அரசியலுக்கு வரவில்லை என்பதை இதைவிட அவரால் சொல்ல முடியவில்லை. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார்.. அவரை விட்டுவிடுவோம் அவர் பாவம். இன்னும் நிறைய படங்கள் நடிக்கட்டும். அதோடு அவர் இருந்து கொள்ளட்டும்.
ராமதாஸின் அரசியல் பேரம்
கட்சி ஆரம்பிக்காத ரஜினி ஒரு பக்கம் என்றால், நிறைய சிறு கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. அதிலும் முதல்வர் வேட்பாளர்கள் உண்டு. அதில் முதன்மையாக இருப்பது பாமக. அதில் எப்பொழுதும் அன்புமணி முதல்வர் வேட்பாளர். ஆனால் தேர்தலில் பேரம் பேசுவதற்கு ராமதாஸ் செய்யும் தொடர் வேலை இது. அதிமுக அணியில் ராமதாஸ் சேரவே வாய்ப்பு அதிகம். பணம் முதன்மை என்றாலும், சட்டமன்றத்தில் நுழைய வேண்டும் என்ற எண்ணமும் ராமதாசுக்கு உண்டு. கேட்கும் பணம் கொடுக்க அதிமுகவால் முடியும். மற்றும் வட தமிழகத்தில் சீட்டு பெற்று அதில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது ராமதாஸ் எண்ணம். ஒரு வேலை காங்கிரஸ் திமுகவில் இருந்து வெளியேறினால் ராமதாஸை சேர்க்க வாய்ப்பு உண்டு. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. இப்போதைக்கு பாமக அதிமுக அணிக்கே செல்லும்.
கமல் ஒரு நியூசென்ஸ்
அன்புமணி ராமதாஸ் போல் தன்னை அடுத்த முதல்வர் வேட்பாளர் என்று நினைத்துகொண்டு செயல்படும் கமல் பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர் ஒரு ’நியூசென்ஸ்’ என்றும் சொல்லாம். எப்பொழுது கட்சி ஆரம்பித்தாரோ, அப்பொழுதே நடிப்பதை நிறுத்தி இருக்க வேண்டும். முழு வீச்சில் மக்களை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும். விஜயகாந்த், எம்ஜிஆர் எப்படி ஒதுங்கினார்கள். ஆனால் படம் நடிப்பது, பிக்பாஸ் தொகுத்து வழங்குவது என்று கவனம் செல்வது மக்களிடம் இருந்து விலகச் செய்துவிட்டது. சில ஓட்டுக்களை சில தொகுதிகளில் வாங்குவார் அவ்வளவுதான் சொல்ல முடியும். கமல், சீமான் எல்லாம் ஒரே ரகம்தான்.
தேமுதிகவில் பணப் பிரச்சனை வெடித்துள்ளது
அதே நிலைமைதான் இன்று தேமுதிகவுக்கு ஏற்பட்டுள்ளது. 8 சதவிகிதம் மேல் வாங்கிய கட்சி இன்று 2 சதவிகிதம் ஓட்டுகள் இருக்கா என்றே சந்தேகம். அதைவிட அவர்கள் குடுமபத்தில் ஏற்பட்டுள்ள பணம் தொடர்பான பிரச்சனைகள் சுதீசுக்கும்-பிரபாகரனுக்கும் அதிகம் என்று சொல்லலாம். விஜயகாந்த் அளவு பிரேமலதா பிரபலமா என்றால் நிச்சயம் இல்லை. இனி பிரச்சாரம் செய்யும் நிலையில் விஜயகாந்த் இல்லை. அதனால் வாக்குவங்கியும் இல்லை என்பதே உண்மை. தேர்தல் நேரத்தில் பாமக போல் பேரம் பேசி பணம், சீட்டு வாங்குவார்கள். இன்று அப்படி கேட்க முடியாத நிலை தேமுதிகவிற்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதை நன்றாக பார்த்தோம். ஒரே நேரத்தில் திமுக, அதிமுக உடன் பேரம் பேசினார்கள். கடைசியில் கொடுப்பதை வாங்கி அதிமுகவில் இணைந்தார்கள். அதற்கு எடப்பாடி முக்கிய காரணமாகும். அனைவரும் எடப்பாடியிடம் கேட்ட கேள்வி இரண்டு அணியிலும் பேசி கொண்டு இருக்கும் அவர்களை ஏன் இழுத்து பிடிக்கிறீர்கள் என்று. ஆனால் எடப்பாடி கணக்கு வேறு. அவருக்கு நாடாளுமன்றம் தேவையே இல்லாத ஒன்று 22 சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தல்தான் ஆட்சியை நிர்ணயிக்க கூடியவை அதற்கு தேமுதிக அவசியம். சில ஓட்டுகள் என்றாலும் வெற்றி பெற அவை உதவும் என்று சாதுரியமாக தேமுதிக இழுத்த இழுப்புக்கு எல்லாம் எடப்பாடி சென்றார். இன்று அந்த நிலையை தேமுதிக முற்றிலும் இழந்து இருப்பதால் கடைசியில் கொடுப்பதை வாங்கி அதிமுகவில் இணைந்துவிடுவார்கள். இல்லையென்றால் தனித்துவிட வாய்ப்பும் உண்டு.
டிடிவி தினகரன் இனி அதிகம் குரல் எழுப்ப வாய்ப்பில்லை.. நாடாளுமன்ற தேர்தல் பிறகு அவர் ஊடகங்களை சந்தித்தது கிடையாது அல்லது மிக மிக குறைவு என்று சொல்லாம். சசிகலா வகுத்து கொடுக்கும் திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் டிடிவி உள்ளார். சசிகலா பிரச்சாரம் செல்லமாட்டார் என்று நினைக்கிறேன். மிகச் சிறிய கட்சிகளின் பட்டியலில் வந்துவிட்டது அமமுக.
இன்றைய நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சியுடன் போட்டியிட்டால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு. அதற்கு சமமான போட்டியாக இருப்பார் எடப்பாடி. இந்த முறை பிஜேபி சட்டமன்றத்தில் நுழைய அதிக வாய்ப்பும் உண்டு. அதற்கான அனைத்து திட்டங்களும் அவர்களிடம் உண்டு.
இவை தற்போதைய நிலைமைகள். இந்த வருடம் முடிந்து புது வருடத்தில் காட்சிகள் மாறலாம்..!
நன்று ! கேள்வி – பதில் வடிவில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் .