ஜியோ அதிரடி கட்டண உயர்வால் BSNL தழைக்குமா?

-இளஞ்செழியன்

போட்டியாளர்களை வீழ்த்தி, தொலை தொடர்புத் துறையில் தனிப்பெரும் ராஜாங்கம் செய்யும் ஜியோவின் அதிரடி கட்டண உயர்வால் 6 நாட்களில் ஒரு கோடிப் பேர் பி.எஸ்.என்.எல்லுக்கு மாறியுள்ளனர். ஆனால், பெரும் பாய்ச்சலில் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களை பி.எஸ்.என்.எல் தக்க வைக்குமா..? ஒரு அலசல்;

பத்து வருடங்கள் முன்பு இந்தியாவில் BSNL, Airtel, Aircel, Vodafone, Uninor, Idea, Tata, Mtnl மற்றும் இன்னும் சில மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் களத்தில் இருந்தன. ஏறக்குறைய  10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்தது. அன்று  Incoming அழைப்புகள் இலவசம், outgoing அழைப்புகள் 1 நிமிடத்திற்கு 1 ரூபாய் என்று அளவில் வசூல் செய்தார்கள். மற்றும் இணைய செயல்பாடுகளுக்கு Net Pack 1GB- 250 ரூபாய் வரை மக்கள் நெட்ஒர்க் நிறுவனங்களுக்கு கொடுத்தார்கள்.

You tube 1 மணி நேரத்திற்கு மேல் பார்த்தாலே Net Pack காலியாகிவிடும். அதனால் அனைவரும் சில நிமிடங்கள் whats app, face book பார்த்து இணையத்தை அணைத்துவைத்து விடுவார்கள். மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கே மக்களுக்கு பணம் அதிகம் செலவானது. இப்படித் தான் அன்றைய மொபைல் நெட்ஒர்க் நிறுவனங்கள் செயல்பாடு இருந்தது.

இத்தகையை நேரத்தில்தான் புது வரவாக Reliance Jio வந்தது. எடுத்தவுடனே மக்களுக்கு மிக பெரிய தூண்டில் போட்டது. Incoming-outgoing அழைப்புகள் இலவசம் மற்றும் இணைய net pack முற்றிலும் இலவசம். அதுவும், தினம் 1 GB பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிப்புடன் இந்திய மொபைல் சந்தையில் ஜியோ நுழைந்தது. ஜியோ சிம் கார்டு வாங்க மக்கள் மிக நீண்ட வரிசையில் சாலையில் நின்றார்கள். ஊர் முழுவதும் ஜியோ குறித்தே பேச்சு இருந்தது. குறுகிய மாதங்களிலேயே முதல் நிறுவனமாக மாறியது.

முதல் முறையாக இந்த நிறுவனம்தான் அடையாள அட்டையாக ஆதார் கார்டு வாங்க தொடங்கியது.  அதன் பிறகு Xerox எடுக்கும் கடையில் கூட எதற்கு எடுத்தாலும் அடையாள அட்டை என்றால் ஆதார் கேட்க தொடங்கினார்கள். பிறகு உச்சநீதிமன்ற ஒரு வழக்கில் அனைவரும் ஆதார்  அட்டையை கேட்க கூடாது என்று கூறியது.

Reliance ஜியோ வருகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள்! அதுவரை மற்ற மொபைல் நிறுவனங்களுக்கு செலுத்திய பணம் மிச்சமானதே அந்த மகிழ்ச்சிக்கு காரணமாகும்.

எல்லாம் இலவசம் என்று தந்திரமாக துண்டில் போட்ட ஜியோ நெட்ஒர்க்கிற்கு மாறிய மக்களுக்கு தற்போது ஜியோ  தனது கட்டணத்தை  12% லிருந்து 25% விலையை உயர்த்தி பெரிய இடியை இறக்கி உள்ளது. உதாரணமாக 1.5 ஜிபி டேட்டா உடன் 28 நாள்கள் வரை நீடிக்கும் 239 ரூபாய் பேக்கானது 299 ரூபாயாக உயர்ந்துள்ளது. பத்து வருடம் முன்பு என்ன நிலையோ அதே நிலைக்கே இன்று ஜியோ மக்களை கொண்டு சென்றுவிட்டது.. இதை பார்த்த உடன் ஓசிமின் தான் நினைவுக்கு வருகிறார்.

பழைய விலையில் விற்பனை செய்தாலே ஜியோ நிறுவனத்திற்கு இருபதாயிரம் கோடி லாபம் வருகிறது.. இனி புதிய விலையில் விற்பனை  செய்தால் இன்னும் எவ்வளவு லாபம் உயரும்?  ஆக, லாபத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்தவே இந்த விலை உயர்வாகும்! போட்டியாளர்களை ஒழித்துக்கட்டிவிட்டோம். இனி நாம் வைத்தது தான் விலை எனச் செயல்படுகிறது.

சமீபத்தில் நடந்த  10ஆவது அலைக்கற்றை ஏலத்தில் 973 கோடி ரூபாய் கொடுத்து அதை ஜியோ நிறுவனம் எடுத்தது. ஜியோ தலைவரான ஆகாஷ் அம்பானி ஜியோ டிஜிட்டலின் நன்மைகளை ஒவ்வொரு இந்தியரும் பெற வேண்டும் என்றார். உண்மையில் இந்த வாசகத்தை அரசு நிறுவனமான BSNL சொல்லி இருக்க வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல்லை ஏற்கனவே எழுந்து நிற்க முடியாதபடிக்கு பாஜக அரசு அழுத்தி மூலையில் கிடத்தி உள்ளது.

ஜியோ வருகையால் நாட்டில் இருந்த சிறு நெட்ஒர்க் நிறுவனங்களும் இல்லாமல் போனது.  இந்தியவில்  10 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஜியோ நொறுக்கி காலி செய்துவிட்டது.  இன்று Airtel, Vodafone-Idea, JIO என்று 3 நிறுவனமாக சுருங்கி விட்டது. ஜியோவின் முன்பு மற்ற நிறுவனங்கள் தாக்கு பிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் முக்கிய நெட்ஒர்க் நிறுவனமாக இருந்த Aircel ஜியோவால் அழிந்தே போனது. அரசு நிறுவனமான BSNL இன்று எங்கோ ஓர் மூலையில் நோஞ்சானாக செயல்பட்டு கொண்டு இருக்கிறதேயன்றி முழு வீச்சில் இயங்குகிறது என்று சொல்ல முடியாது. ஆனால், அரசு நிறுவனம் BSNL வளராமல் போனதற்கு ஜியோவை வளர்க்கத் துடித்த பாஜக அரசும் ஓர் காரணமாகும். அதனால் தான் 4ஜி,5ஜி அலைக்கற்றைகள் BSNL க்கு கிடைக்கவிடாமல் தடுத்துவிட்டது.

BSNL மிக அதிக டவர்களை வைத்துள்ளது! ஆனால், எடுக்க துப்பில்லாதவன் இடுப்பிலே எக்கச்சக்க அரிவாள் இருந்தாதாம் என்ற சொல்வழக்கு தான் நினைவுக்கு வருகிறது. நாட்டில் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டவர்களை  நிறுவி உள்ளது BSNL. இந்த டவர்களை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கு மத்திய அரசால் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல் டவர்களை ஜியோ, ஏர்டெல், வோடபோன் முறையே 8363, 2779 and 1782 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தி கொள்கின்றன. இவ்வளவு கட்டமைப்பு வசதிகள் BSNL வசம் இருந்தும் மக்களை தன் பக்கம் வைத்து கொள்ள வேண்டிய 4G, 5G அலைக்கற்றைக்கு மாறவிடாமல் பாஜக அரசு அழுத்தி வைத்துவிட்டது.

வேகம் வேகம் என்று வளர்ந்து வருகிற தொழில்நுட்ப காலத்தில் 15 வருடம் பின்தங்கி இருக்கிறது BSNL. 4G யில் இருந்து   5G நெட்வொர்க் மாறி தனியார் நிறுவனங்கள் செயல்படுகிறது. ஆனால், BSNL இன்னும் 3G அலைக்கற்றையில் உள்ளது. அரசு நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை கொடுக்காமல் ஏன் அரசு தாமதப்படுத்துகிறது?

4 ஜி யானது 2009 ஆண்டிலேயே நடைமுறைக்கு வந்துவிட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இண்டர் நெட் சேவை கிடைக்கிறது. மேலும் நிறைய சாதனங்களை இத்துடன் இணைக்கும் வசதியும் உள்ளது. இதனால் அதி வேக ஸ்ட்ரீமிங் வசதி, மொபைலில் துல்லியமான காட்சியோட்டங்கள், உயர் துல்லிய(HD) விடியோக்கள் பார்க்கும் வசதி ஆகியவை சாத்தியப்படுகிறது.

இதே போல 5 ஜியானது 2019 ஆம் ஆண்டே நடைமுறைக்கு வந்துவிட்டது.

இது 4ஜி யை விட பேராற்றல் கொண்டது. மிக அதி வேக இன்டர்நெட் வசதி இதில் மட்டுமே சாத்தியம்! மேலும் அதிக ஆற்றல் வாய்ந்த சாதனங்களை இதில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். அதிக சாதனங்களை இணைக்கும் பிரத்தியேக வசதியும் இதில் மட்டுமே சாத்தியம்.

ஆக, என்ன தான் விலையேற்றம் செய்தாலும் ஜியோவிடம் மண்டியிட்டு கிடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற அளவுக்கு நம்மை முட்டுச் சந்தில் நிறுத்திவிட்டது, மத்திய பாஜக அரசு.

தனியார் நிறுவனங்கள் இப்படி விலை ஏற்றும் போது அரசு நிறுவனங்களை நோக்கித் தான் மக்கள் வருவார்கள். ஆனால், அப்படி வருபவர்களுக்கு ஏற்ற நிலை BSNLலில்  அதிவேக தொழில்நுட்ப வசதி இல்லை என்பதால் வெறுப்பாக சகித்து கொண்டு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திலேயே இருக்கும் சூழல் தான் மக்களுக்கு ஏற்படுகிறது.

இன்றைக்கு வேகத்தையும், துல்லியமான சேவையையும் வாடிக்கையாளர்களுக்கு உத்திரவாதப்படுத்த அதற்கு 4ஜி மற்றும் 5 ஜி அலைக்கற்றைகள் இன்றி சாத்தியமில்லை.

# பேசிக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி கட் ஆனாலோ,

# வீட்டின் உள்புறத்தில் இருந்து பேச இயலாமல் தாழ்வாரத்தில் நின்று பேசினால் மட்டுமே டவர் கிடைக்கும் என்ற நிலை இருந்தாலோ,

# சில நேரங்களில் எத்தனை முறை முயற்சித்தாலும் தொடர்பே கிடைப்பதில்லை என்ற சூழல்கள் உருவானாலோ..,

# வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்லை சகித்துக் கொள்வார்கள்  என்பதற்கு உத்திரவாதமில்லை.

”ச்சே இதென்னடா தொல்லை…! கட்டண உயர்வு என்றாலும் பரவாயில்லை. தரமான சேவை தான் எனக்கு தேவை” எனச் சொல்லிவிடுவார்கள்! அந்த தரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு தருவதற்கு போர்கால நடவடிக்கையாக 4ஜி, மற்றும் 5ஜிக்களை வழங்கியாக வேண்டும். பாஜக அரசு செய்யுமா? தெரியவில்லை.

கட்டுரையாளர்; இளஞ்செழியன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time