தனியார் பள்ளி முதலாளிகளுக்கு விழா எடுக்கும் அரசு!

-இளவெயினி 

அரசு பள்ளிகள் பல அடைப்படை வசதிகள் இன்றி அல்லாடிக் கொண்டுள்ளன! ஆனால், இங்கு தமிழக அரசோ, தனியார் பள்ளிகளை போஷிக்கிறது. கல்லா கட்டும் கல்வி வியாபாரிகளான தனியார் பள்ளி முதலாளிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில் பாராட்டு விழா! விருதுகள்! இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

கடந்த வியாழக்கிழமை 11/07/2024 அன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட ஒரு செய்திக் குறிப்பை கூர்ந்து கவனித்தால், அதிர்ச்சி அளிக்கிறது! ஆம், தமிழ்நாடு அரசு  கடந்த கல்வி ஆண்டில், பொதுத் தேர்வில் 10&12 ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாராட்டு விழா நடத்தத் திட்டமிட்டுள்ளது. 04/08/224 அன்று, நடக்கும்  இந்த நிகழ்வுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தான் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு விருது தந்து கெளரவிக்கப் போகிறவர்கள்!

நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களைப் பாராட்டுவதில் தவறென்ன இருக்கப் போகிறது..? என நமக்குத் தோன்றலாம். ஆனால், நமது கல்வித் துறையில் இத்தனை ஆண்டுகள் இல்லாத புதிய நடைமுறை ஏன்? எதற்காக இந்த நிகழ்வு? இதற்கு பின்னுள்ள நோக்கங்கள் என்ன..? என்று பார்க்க வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் காலம் காலமாக 100% தேர்ச்சி பெற்றுத் தரும் ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால், எந்த ஒரு வருடமும் நேரடியாக அரசு விழா எடுத்துப் பாராட்டியதில்லை. இந்த வருடம் அரசுப் பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மட்டும் அழைத்து ஒரு பாராட்டு விழாவை அரசு நடத்தியது. ஆனால், பாட ஆசிரியர்களோ  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியரால் தான் கவுரவிக்கப்பட்டனர். ”தலைமை ஆசிரியரைப் பாராட்டினாலே அனைவரையும் பாராட்டியதற்கு சமம்” என தமிழக முதல்வர் வியாக்கியானமும் தந்தார்.

எனில், அரசு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கான பாராட்டு விழாவிலும் பள்ளிகளின் தலைமை ஆசிரியரை மட்டுமே அழைத்து தானே பாராட்ட வேண்டும்? இங்கு பள்ளி முதலாளிகளையும் பாராட்டுவார்களாம். ஒவ்வொரு ஆசிரியரையும் பாராட்டுவார்களாம்! மாணவர்களையும் பாராட்டுவார்களாம்!

இங்கு மட்டும் என்ன கூடுதல் அக்கறை…? என நாம் விசாரித்தால், ”எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணி.. ” என்கிறார்கள்!

இந்த விழாவில் பாராட்டு பெற இருக்கும் சுமார் 3,950 பள்ளிகளில் ஒரு தனியார் பள்ளிகளுக்கான அசோசியேசன் சார்பில் தலா ஐந்து லட்சம் வசூலித்து இருக்கிறார்களாம்! இதை வசூலித்து ஒருங்கிணைத்து மொத்த பணத்தையும் ஆளும் தரப்பு வசம் தந்துள்ளவர் முன்பு பாஜகவில் இருந்து விட்டு தற்போது திமுக விசுவாசியாக மாறி இருப்பவராம்!

மக்கள் வரிப் பணமான அரசு பணத்தை அள்ளி இறைத்து தனியார் பள்ளி முதலாளிகளை பாராட்டி, சீராட்டி, விருதுகள் வழங்கி, அவர்கள் வசூலித்து தரும் பணத்தை கட்சி கஜானாவிற்கோ, குடும்ப கஜானாவிற்கோ கொண்டு போகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்!

தனியார் பள்ளிகளில் மாநில/தேசிய/சர்வதேச அளவில் விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவர்களுக்கும் விழா நாளன்று சான்றிதழ் வழங்கி பாராட்டுகிறார் விளையாட்டுத் துறை அமைச்சர்.

கல்வியை கடைச் சரக்காக்கியதோடு மட்டுமின்றி, நியாயத்திற்கு புறம்பான கட்டணங்களை வசூலித்து, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைத்து தரப்பையும் அடிமைகளாக நடத்துகின்றனர், தனியார் பள்ளிகள்.

தனியார் பள்ளிகள். எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்ற வசதியான வீட்டுக் குழந்தைகளைத் தான்  சாதனையாளராக மாற்றுகின்றனர்‌.

ஆனால், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இன்னமும்  நிரந்தர விளையாட்டு ஆசிரியர்கள் கிடையாது. ஆட்சிக்கு வந்தது முதல் இவர்கள் ஒரு விளையாட்டு ஆசிரியரைக் கூட புதிதாக நியமிக்கவில்லை. ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் தான் விளையாட்டு ஆசிரியர்களாக  இருக்கின்றனர். அதோடு, உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 700 மாணவர்கள் இருந்தால் தான் ஒரு விளையாட்டு ஆசிரியர் என்று விதிமுறைகளை வகுத்துவிட்டனர். அரசு பள்ளிகளில் விளையாட்டு ஆசிரியரே வேஸ்ட் என நினைக்கும் அரசு தனியார் பள்ளிகளை தலை மேல் வைத்துக் கொண்டாடுவதா?

தமிழ்நாட்டில் எந்த ஒரு தொடக்கப் பள்ளியிலும் விளையாட்டு ஆசிரியர் கிடையாது. இன்றைக்கு கிட்டத்தட்ட ஒரு முதல்வர் அதிகாரத்துடன் வளம் வந்து கொண்டிருக்கும் உதய நிதி ஸ்டாலினுக்கு இதில் அக்கறை வேண்டாமா? தனியார் பள்ளிகள் விளையாட்டில் சாதனை நிகழ்த்துகிறது என்று சொல்லி, அவற்றுக்கு விருது வழங்கி கொண்டாட ஓடோடிச் செல்லும் உதய நிதி ஸ்டாலின் அரசு பள்ளி மாணவர்களை அம்போ என கைவிடுவதை எப்படி ஏற்பது?

இது ஒரு உதாரணம் தான். பாட ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள், தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகள் , தூய்மைப் பணியாளர்களே இல்லாத பள்ளிகள் என அரசுப் பள்ளிகளில் அத்தனைப் பிரச்சனைகள். இல்லை, இல்லை எனச் சொல்லிச் சொல்லியே அரசு பள்ளிகளையே சிறிது காலத்தில் இல்லாமலாக்கிவிடுவார்களோ என்ற அச்சமே மேலோங்குகிறது. அரசு பள்ளிகளை அனாதையாக விட்டுவிட்டு, எதையும் கவனிக்காமல் தனியார் பள்ளிகளை தூக்கி நிறுத்த ‌வேலை பார்க்கின்றனர், இந்த இரு அமைச்சர்களும்! இது கண்டிக்கத்தக்கது.

கல்வியும், மருத்துவமும் அரசு கட்டணமின்றித் தர வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதுவே, அவசியமும். ஆனால் ‌கல்வியை முழுவதும் தனியார் மயமாக்க முயன்று வருகின்றனர், திராவிட மாடல் ஆட்சியாளர்கள்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்களைப் புறம் தள்ளி, தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையான தாரக மந்திரத்தைக் கையில் எடுத்து வருகிறது தமிழ்நாட்டு அரசு.தனியார் மயத்தை கல்விக்குள் கொண்டு வரும் வேலையைத் தான் நமது மாநில அரசு தனது அஜெண்டாவாகக் கொண்டு செயல்படுகிறது.

கல்வியை மக்களுக்கான அரசியல் பார்வையில் எடுத்துச் செல்லாமல்  தனியார் கல்வி முதலாளிகள் மேலும் சுரண்டிக் கொழுக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருகின்றனர். ஆம், தனியார் பள்ளியின் இயக்குநரகம் என்பது தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தி நிர்வகிக்க மட்டுமே இருக்கிறது. அரசு செலவில் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க அல்ல, என்பதை உணர வேண்டும். மக்கள் அதை உணர்ந்த வேண்டும்.

ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டிய மாணவர்களை, தங்கள் செலவில் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறது அரசு.  தனியார் பள்ளிகளில் 25% மாணவர்களுக்கு அரசு தான் கல்விக் கட்டணம் கட்டி வருகிறது. ஆண்டுக்கு சுமார் முந்நூறு கோடி  நிதியை, மக்களின் வரிப் பணத்தில் இருந்து  தனியார் பள்ளிகளுக்குத் தாரை வாய்க்கிறது அரசு. இது கல்வி உரிமைச் சட்டத்தின் பெயரால் நடக்கும் அநீதியாகும்.

இதன் பல  மோசமான விளைவுகளுள் சில, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவு. புதிய ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு இன்மை உள்ளிட்டவை. இன்னும், ஏராளமான சவால்கள் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு செயல்பாடுகளையும் வடிவமைக்கும் தமிழக அரசு மக்களுக்கான அரசாக எப்படி இருக்க முடியும்?

மத்திய பாஜக அரசு பல வழிகளில் கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்து நாட்டை  தனியாருக்கு கூறு போட்டு விற்கிறது என்று கூச்சல் போடுகிறோம் நாம். ஆனால், அதே வேலையை நமது மாநில அரசும் புதுப்புது வழிகளில் பின்பற்றுகிறது என்பதே உண்மை.

கட்டுரையாளர்; இளவெயினி 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time