மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள்!

-அண்ணாமலை சுகுமாரன்

மஞ்சள் என்றால், மங்களம் என்பது தமிழர் மரபு .! மஞ்சளின் மகிமைகள் சொல்லில் அடங்காது! நம் பாரம்பரிய ஆரோக்கிய வாழ்வில் மஞ்சளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. உடல் பாதுகாப்பில் மஞ்சளுக்கு ஈடில்லை! ஆயிரக்கணக்கான நவீன விஞ்ஞான ஆய்வுகள் மஞ்சளின் பெருமைகளை பட்டியலிட்டுள்ளன..!

மஞ்சள் இல்லாமல் எந்த சுப நிகழ்வும் தமிழர் வாழ்வில் இல்லை. எந்த ஒரு காரியம் துவங்கும் போதும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து தொடங்குவதற்கு பின்னணியில் ஆரோக்கியம் சார்ந்த ஒரு நுட்பமான அர்த்தம் பொதிந்துள்ளது.

ஒரு கோப்பை நீரை கொதிக்க வைத்து, அதில் ½ டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் கலந்து ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து, பின் வெது வெதுப்பான சூட்டில் குடித்தாலே கூடப் போதும், நம் உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அழிந்துவிடும்! உடலில் ஏற்படும் சிறு காயங்களின் வழியே கிருமிகள் நுழைந்துவிடாமல் இருக்க, காயம்பட்ட இடத்தில் மஞ்சளைப் பூசுவது நம் மரபில் உள்ளது.

வண்ணங்களிலும் மஞ்சள் தான் முதலிடம்!  நெடுஞ்சாலை அறிவிப்பை பார்த்தீர்களா? அது மஞ்சளில் தான் இருக்கும். காரணம், மஞ்சள் நீண்ட தூரம் தெரியும் ஒரு வண்ணம்.

திரைப் பாடல்கள் பல காதலியின் பெருமையை மஞ்சளோடு இணைத்து எழுதப்பட்டுள்ளன.

“மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக”
“மஞ்சக் காட்டு மைனா எனைக் கொஞ்சி கொஞ்சிப் போனா”

“மஞ்சள்பூசும் மஞ்சள்பூசும் வஞ்சிப்பூங்கொடி”

என்று சில பாடல்கள்  சிலருக்கு நினைவு வரலாம்.

பெண்கள் பூப்படைவதைக் கொண்டாடும் சடங்கை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று கூறுவர். மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாதலால், மஞ்சள் கலந்து குளிக்கச் செய்வதால், இந்த பெயர் போலும்.
மஞ்சள் பூசிக்  குளிக்காத தமிழ் பெண்ணே அனேகமாக இருக்க முடியாது.
உண்மையான குங்கும் என்பதுமே கூட மஞ்சளில் இருந்து செய்யப்படுவது தான்!

மஞ்சள் ஆசியா பகுதிக்கே உரியது. உலகின்  80% சதவிகித மஞ்சள் இந்தியாவில் விளைகிறது.மஞ்சள் ஒரு நறுமண மருத்துவ தாவரமாக பழங்காலத்திலிருந்தே இந்தியர்களுக்குத் தெரியும். பல வரலாற்றாசிரியர்கள் தெற்காசியா மஞ்சளின் அசல் தாயகம் என்று வாதிடுகின்றனர். இது, இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளில் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். இப்படியாக இருந்தும் அதன் உரிமையை பறி கொடுக்க இருந்தோம்.

மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது ஒரு மீட்டர்   உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச் செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும்.  மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர் தான் மஞ்சள் கிழங்கு.

மஞ்சளில், மஞ்சள் நிறத்தை தருவது, அதில் உள்ள,”கர்குமின்’  உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது; புற்றுநோய் கட்டி ஏற்படாமல் தடுக்கிறது; ரத்தக்குழாய்களில் அடைப்பு வராமல் தடுக்கிறது;  பாக்டீரியா தாக்குதலை முறியடிக்கிறது.

மஞ்சளில் உள்ள “கர்குமின்’ உடலில் உள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இந்தக் குர்குமின், COX-2 போன்ற அழற்சி புரதத்தின் செயல்பாட்டைத் தடுப்பதோடு, முடக்கு வாதத்துடன் தொடர்புடைய மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த குளுக்கோஸைக் குறைப்பதன் மூலமும், இன்சுலின் அளவை மேம்படுத்துவதன் மூலமும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். மஞ்சள் அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக நீரிழிவு நோயுடன் தொடர்புடைய புண்கள், காயங்கள், சிறுநீரக பாதிப்பு போன்ற செல் சேதத்தையும் தடுக்கலாம்.

“ஜீன்’களில் உள்ள குரோமோசோம்களில் கோளாறு இருந்தால் தான், இதய வால்வுகள் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. அங்கேயே அந்த கோளாறுகளை, மஞ்சள் சத்து தடுத்துவிடுகிறது.


மைசூரில் உள்ள, மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி மைய நிபுணர்கள், மஞ்சள் மகிமை பற்றி ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். அவர்கள்  கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மஞ்சள் பயன்படுகிறது;  மஞ்சள் சேர்ந்த உணவை சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள  கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது’ என்று தெரிவித்துள்ளனர் .

மாரடைப்பு வராமல் தவிர்க்க, மஞ்சள் போதும்’ என்கின்றனர், மருத்துவ நிபுணர்கள். கனடாவில் உள்ள, சுவாசக் கோளாறு ஆராய்ச்சி மைய நிபுணர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர்.

மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.

மஞ்சள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.  பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.

மஞ்சளானது சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.

இது வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.  இந்திய சமையலில் மஞ்சள் நிரந்தர இடம் பிடித்துள்ளது.

மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் வயது  முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோய்  மூளையில் ஏற்படும் கெடுதி தரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்க நிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே, தினசரி குறைந்த அளவு மஞ்சள் தூள் உணவில் சேர்த்துக் கொள்வது வயது அதிகமானவர்களுக்கு மிகுந்த பலன் அளிக்கும்.


இப்போது புற்று நோய் வராமல் தடுக்கும் மருத்துவ குணமும் மஞ்சளுக்கு இருப்பதாக அமெரிக்க அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆசிய உணவுப் பண்டங்களுக்கு நிறமும், மணமும் தரப்பயன்படும் மஞ்சள், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய புரதத்தை தடுக்கக் கூடியது என்கிறார்கள்.

லுக்கேமியா எனப்படும் ரத்தப் புற்றுநோய் விரைப் புற்றுநோய், சருமப் புற்று நோய், குடல் புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருத்துவ குணம் மஞ்சள் தூளுக்கு உண்டு என்பதை உலகளாவிய சான்றுகள் மூலம் நிரூபிக்க அமெரிக்காவின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் மோரிஸ்ட்டன் மருத்துவமனையிலும் ஆராய்ச்சிகள் நடை பெறுகின்றன.

மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும். பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

மஞ்சளைச் சுட்டு எரிக்கும் போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.

மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

 

மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும்.

நீரிழிவு நோய் என்பது, வாதத்தின் அதிகரிப்பு மற்றும் பலவீனமான செரிமானத்தின் காரணமாகும். பலவீனமான செரிமானம் கணைய செல்களில்  நச்சு  குவிவதற்கு வழிவகுக்கிறது மற்றும் இன்சுலின் செயல்பாட்டை பாதிக்கிறது. மஞ்சள் அதன் பசியை உண்டாக்கி, செரிமானம் ஏற்படச் செய்யும் பண்புகளால் கழிவுகளை அகற்ற உதவுகிறது. மேலும், மோசமான வாதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள உயர் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். என்று ஆயுர் வேத நூல்கள் கூறுகின்றன.

மருத்துவ குறிப்பு:
1. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி எடுக்கவும்.
2. 100 மிலி நெல்லிக் காய் சாற்றில் கலக்கவும்.
3. உணவு எடுத்து 2 மணி நேரம் கழித்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.
4. சிறந்த முடிவுகளுக்கு 1-2 மாதங்களுக்கு இதைத் தொடரவும்.

சமையலில் சேர்க்கப்படும் மஞ்சள் நிறம் சுவை மட்டுமின்றி, ஜீரணத்தை எளிதாக்கி, உணவில் நச்சுத்தன்மை இருந்தால் அதையும் நீக்குகிறது. ரோமங்களையும் நீக்கும் தன்மை மஞ்சளுக்கு  உள்ளதால் மஞ்சள் முகப்பூச்சு கிரீம்களில் அதிக இடம்பிடிக்கிறது.


மஞ்சளில் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கிறது. மஞ்சளின் வழக்கமான பயன்பாடு வீக்கம் மற்றும் இரத்தம் தொடர்பான பிற கோளாறுகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். மஞ்சள் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது!

நீண்ட காலமாக மஞ்சள் தமிழர் வாழ்வுடன் இயைந்து உள்ளதால், இன்னும் ஆயிரக்கணக்கான பயன்பாடுகளை அனுபவப் பூர்வமாக ஒவ்வொரு குடும்பத்திலும் கொண்டிருக்கிறது!

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன்

நம்ம ஊரு மூலிகைகள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time