திராவிட மாடலைப் புரிந்து கொள்வோம் -3
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ஸ்டாலின் என்னென்ன பேசினார்..! அந்தப் பேச்சுக்களை தற்போது மீளவும் பார்க்கையில் உண்மையிலேயே சிலிர்க்கிறது..! ‘நம்மை ஆட்சி செய்வது ஒரு தேவ தூதனோ.! இவர் நம்மை பொற்காலத்திற்கு கொண்டு செல்ல உள்ளாரோ’ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது; சில உதாரணங்கள்;
கடந்த 2021-ஆம் ஆண்டு யூலை 9 அன்று தமிழக பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழ் நாட்டில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சி தான் ‘திராவிட மாடல்’ என்று விவரித்தார். “அந்த நோக்கத்துடன் தமிழ்நாடு வளர வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை” என்றும் அவர் தெரிவித்தார்.
மேற்படி கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. குழு உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரெஸ், எஸ். நாராயணன், அப்போதைய தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அப்போதைய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, அப்போதைய நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது குறித்து அந்தக் குழு விவாதித்தது.
“இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித் தன்மை வாய்ந்தவர்கள்” என்று புகழ்ந்த முதல்வர், “சமூக நலன் சார்ந்த வளர்ச்சி தான் தமிழ்நாட்டை இந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறது என்பதை இந்தக் குழுவைச் சேர்ந்த நிபுணர்கள் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் புத்தகங்களில் குறிப்பிட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். மேற்படிக் குழு உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கங்களாக சிலவற்றை முதல்வர் குறிப்பிட்டார்:
* பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கைகளில் பொதுவான வழி காட்டுதல்களை வழங்க வேண்டும்.
* சமூகநீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தர வேண்டும்.
* பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்குச் சமமான வாய்ப்புரிமை வழங்க ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
* மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மேம்பாடு தொடர்பான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
* மாநிலத்தின் மொத்தமான நிதிநிலையைப் பாதுகாப்பதற்கான ஆலோசனைகள் தர வேண்டும்.
* மக்களுக்குச் சேவை செய்வதற்கான மாநிலத் திறனை மேம்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும்.
* புதிய திட்டங்கள் மற்றும் நிறைவேற்றக்கூடிய தீர்வுகளுக்கான ஒரு வலுவான ஆலோசனை மையமாக நீங்கள் திகழ வேண்டும்.
* எவ்வித பிரச்னைக்கும் ஆராய்ந்து சாத்தியப்படக்கூடிய சிறந்த சமூக, பொருளாதாரத் தீர்வுகளை வழங்க வேண்டும்.
தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்டக் கனவுகளைப் பட்டியலிட்ட முதல்வர், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக வேண்டும். வேலைவாய்ப்புகள் அதிகமாக வேண்டும். தனிநபர் வருமானம் அதிகமாக வேண்டும். மக்களின் சமூக மரியாதை உயர வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமைய வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும் அந்தக் “கனவுகள் சாதாரணமாக நிறைவேறி விடாது என்று எனக்கும் தெரியும்” என்று நேர்மையுடன் ஒத்துக் கொள்ளவும் செய்தார்.
திரு. எஸ். நாராயணன் எழுதிய “Dravidian Years” நூலை மேற்கோள் காட்டிப் பேசிய முதல்வர், “அரசியல், வளர்ச்சி, நிர்வாகம் ஆகியவற்றின் இடையில் நெருக்கமான, உயிர்ப்புள்ள ஒரு உறவை உருவாக்குவதில் கருணாநிதி யுகம் வெற்றி கண்டது. பிற்காலத்தில் அது போன்ற பல திட்டங்களை உருவாக்குவதற்கு அது அடிப்படையாக அமைந்தது” என்று கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ்நாடு அரசு 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனில் இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் 2 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் இருக்கின்றன. நிதி ஆதாரம் என்பது விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசில துறைகளின் மூலமாக மட்டும் தான் வருகிறது. வரி வசூலிலிருந்த மாநில உரிமைகளை ஒன்றிய அரசு ஜி.எ.ஸ்டி மூலமாகப் பறித்து விட்டது. அதனால் வரி வசூலை நம்ப முடியாது. நமது வளங்களைக் கொண்டு நம்மை வளப்படுத்திக்கொள்ளும் நிலைமையில் இருக்கிறோம். அதற்கென உள்ள வழிமுறைகளைத் தமிழ்நாட்டு அரசுக்குக் காட்டுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.
“சமூக நீதி – சமத்துவம் – சுயமரியாதை – மொழிப் பற்று – இன உரிமை – மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்களின் அடிதளத்தில் நிற்கும் இயக்கம் தான் திமுக” என்று பெருமைப்பட்டுக் கொண்ட முதல்வர், “நமது வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி – சமூக மாற்றம் – கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் – கல்வி – சமூகம் – சிந்தனை – செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அது தான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி!” என்று தெரிவித்தார்.
பின்னர் பிப்ருவரி 28, 2022 அன்று தன்னுடைய தன்வரலாற்று நூலை வெளியிட்டுப் பேசிய முதல்வர் “திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதை தனது பணியாக மேற் கொள்ளவிருப்பதாகத்” தெரிவித்தார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை குறிக்கும் வகையில் பேசிய முதல்வர், “ஆளும் திமுக கூட்டணிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி எங்களது ஒன்பது மாத கால ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குத் தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
“எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர்” என்றறிவித்த முதல்வர், அது பற்றி மேலும் விவரித்தார்: “’மாடல்’ என்பது ஆங்கிலச் சொல் தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால், ‘திராவிடவியல் ஆட்சிமுறை தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை. கல்வியில் – வேலை வாய்ப்பில் — தொழில் வளர்ச்சியில் — சமூக மேம்பாட்டில் — இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். பால் பேதமற்ற — ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு” என்றார்.
மேலும், விவரித்த முதல்வர், “அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பது தான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அனைத்து மாநிலங்களும் சுயாட்சித் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இப்படியாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய திராவிட மாடலை இந்தியப் பெருவெளிக்கு எடுத்துச் சென்றார்: “ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்தில் எழுந்து நின்று “India is a union of states” என்றும்; “BJP can never ever rule over the people of Tamil Nadu” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது. இத்தகைய மனமாற்றத்தை அகில இந்தியத் தலைவர்கள் அடைய வேண்டும் என்று தான் அண்ணாவும் கருணாநிதியும் விரும்பினார்கள். அவர்கள் காலத்தில் அடைய முடியாத மாற்றம் இப்போது தெரியத் தொடங்கி இருக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் – அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி’ என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதைத் தான் ராகுல் காந்தி அவர்களும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தார். அதே போல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் – சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதிக் கூட்டமைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்தியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய உரையை முடித்தார் முதல்வர்.
அண்மையில் (யூலை 2024) நடந்து முடிந்திருக்கும் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தன்னுடைய தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், “கலைஞர் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் –- இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து திமுகவிற்கு மகத்தான வெற்றியை [மக்கள்] வழங்கி” இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். விக்கிரவாண்டி வாக்காளர்களை “திமுக நிர்வாகிகள் வீடுவீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை” எடுத்துச் சொன்னதாக பெருமிதம் கொண்டார் முதல்வர். ஆனால், இந்த வெற்றிக்காக திமுக கொடுத்த விலை அதிகம். ஆக, தன்னுடைய ஆட்சிக் காலத்தைத் தான் முதல்வர் திராவிட மாடல் அரசு என்று குறிக்கிறார்.
முதல்வரைத் தொடர்ந்து திமுக அமைச்சர்கள் மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் ‘திராவிட மாடல்’ பற்றிப் பேசுகிறார்கள். ஏப்ரல் 10, 2022 அன்று ஒரு நிகழ்வில் பேசிய அமைச்சர் எ. வ. வேலு, “மக்களுக்கு என்ன தேவையோ அதனை பார்த்து, பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். மகளிருக்கு இலவச பஸ், மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்டத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும் கோவில்களில் கடகால் போடுவது முதல் கருவறை வரை வேலை பார்த்தவர்களை வெளியேப் போ என்பதை திராவிட மாடல் ஆட்சி எதிர்க்கிறது. இதனால் தான் கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தோம்” என்றார் அவர்.
Also read
முதல்வரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் பரந்து பட்ட திராவிட அரசியலின் கூறுகளை கோடிட்டுக் காட்ட முயன்றாலும், பிறர் பேசும் கருத்துக்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்தையே நினைவூட்டுகின்றன. திராவிட மாடலின் தத்துவார்த்தப் பின்புலம், சமூக-பொருளாதார-அரசியல் வெளிப்பாடுகள், அன்றாடச் சேவை நடைமுறைகள் பற்றியெல்லாம் ஏராளமானக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுகின்றன. முதல்வர் ஸ்டாலின் பேசியவற்றுக்கும், தற்போதைய ஆட்சி நிர்வாகம் செல்லும் பாதைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்;
[கட்டுரையிலுள்ள மேற்கோள்கள் அனைத்தும் திமுகவினர் நடத்தும் தினகரன் நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டவை.]
கட்டுரையாளர் ; சுப. உதயகுமாரன்
அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.
மறதி ஒரு சமூக நோய் என்பதை அறிந்தவர் திராவிடவியல் முதல்வர். தான் வெல்ல வேண்டும் என்பதற்காக கோடிகளைக் கொட்டி தேர்தல் ஆலோசகர்களை வைத்துக் கொண்டவர். அவர்கள் சொல்லித் தந்த, தேர்தல் கால வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படும் நேரத்தில், அதை பதிவு செய்து திருப்பி அடிக்கும் முறை.. எழுத்து வர்மம். நாஞ்சில் நிலம் வர்மக் கலைக்கு பேர் போனது.
அண்ணன் சுப உதயகுமாரின் மூன்றாவது கட்டுரை.இதில் முழுவதும் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்களின் மேற்கோள்கள் தான். இதை அவ்வப்போது நானும் படித்திருக்கிறேன். (தினகரனில் அல்ல) மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது.
அப்போது மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நாட்கள் கூட நீடிக்க வில்லை. அடுத்தடுத்து அத்தியாவசிய பொருட்களில் தொடங்கி ஒவ்வொரு துறை அமைச்சரும் அவரவர் துறைகளில் விலைகளை ஏற்றினர். சொத்து வரி உயர்த்தப்பட்டது மின் கட்டணம் உயர்ந்தது பால் விலை மேலும் அதிகரித்தது.
வாட்ஸ் அப் குழுக்கள் இன்ஸ்டாகிராம் இணையதளம் உள்ளிட்ட பொது வெளிகளில் கடுமையாக விமர்சிக்கப் பட்டதோடு கேலியும் செய்யப்பட்டது.
கூட்டணி கட்சியினரும் பெயரளவுக்கு கண்டன அறிக்கை வெளியிட்டனர். ஆனால் விளைவு 0.
ஆனால் முக.ஸ்டாலினோ மக்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண்பதாக மார்தட்டிக் கொண்டார்.தீவிரமான திமுகவினரும் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அந்த வெற்றி எப்படி கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
வெற்றி முதல்வரின் கண்ணை மறைத்திருக்க வேண்டும்.ஊசி முனை அளவு கூட மக்களைப் பற்றி சிந்திக்காமல் மீண்டும் மின் கட்டணத்தை அதுவும் பின் தேதி யிட்டு உயர்த்தி இருக்கிறார். இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. கூட்டணி கட்சியினர் எதிர்க்கட்சியினர் அறிக்கைகள் வெளியிட்டனர். அந்த அறிக்கைகளின் விளைவு மீண்டும் 0.
இது தொடருமேயானால் மக்களுக்கும் தெரியும் 0.