கள்ளங் கபடமற்ற அப்பாவியின் காதல்!

-பீட்டர் துரைராஜ்

மனவளர்ச்சி குன்றிய ஒருவனின் காதலை மிக நுட்பமாக மன முதிர்ச்சியோடு எடுத்திருக்கிறார் இயக்குனர். மொழிகளைக் கடந்த ரசனைக்குரியது காதல். ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்ட அர்ஜென்டினா நாட்டுக் காதலை அழகியலுடன் சொல்கிறது, கோயோ! மானுட உறவுகளின் மாண்பைச் சொல்லும் படம்;

கோயோ என்பவன் அருங்காட்சியகத்தின்  வழிகாட்டியாக இருக்கிறான். 1..2..3…என்று எண்ணிக் கொண்டே அவன் படிகளில் ஏறுவதில் கதை தொடங்குகிறது. அங்குள்ள கலைப் பொருட்களின் விவரம், தொன்மை போன்ற விவரங்களை மிக நுட்பமாக பார்வையாளர்களுக்கு விவரிக்கிறான். ஆனால், அவன் ஆட்டிசம் என்ற மன வளர்ச்சி்க் குறைபாடு கொண்டவன்.  அன்றாட வேலைகளை திட்டமிட்ட ஒழுங்கின்படி  செய்வதில் அவனுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அவன் காதல் வசப்பட்டால் என்ன ஆகும் ! இது அவனுடைய அன்றாட நிகழ்ச்சி நிரலில் இல்லை.  இது தான் இப்படத்தின் கதை.

அடிக்கும் காற்றில் குடையை விரித்துப் பிடிக்க முடியாமல் சிரமப்படும் ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் பிம்பம் அவன் மனதில் படிந்து விடுகிறது. அவளை கேன்வாசில் வரையத் தொடங்குகிறான். காதல் என்பது அவனுடைய பாடத் திட்டத்தில் இல்லை. அவன் அனைத்தையும் படித்து தான் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பெண்ணோடு  எப்படி பேசுவது, உரையாடலை எப்படி நீடிப்பது என்பதை அவனுடைய சகோதரன் அவனுக்கு சொல்லி விளக்குகிறான். தன் தம்பி எப்படியாவது மகிழ்ச்சியாக இருந்தால் போதும் என அவன் நினைக்கிறான்.

ஈவா என்ற அந்தக் ‘குடைப்’ பெண் அதே அருங்காட்சியகத்தில் காவலாளியாக சேருகிறாள். ஏழையான அவள் கணவனைப் பிரிந்து வாழ்கிறாள். மழையில் பார்த்த பெண், தன்னொடு பணிபுரிவதில் கோயோவிற்கு மகிழ்ச்சி. அவளை பின்தொடர்ந்து, மெட்ரோ ரெயிலில் செல்கிறான். இவன் தனக்குத் தொந்தரவு தருவதாக ஈவா நினைத்துக் கொள்கிறாள். அன்றாட ஒழுங்கிலிருந்து விலகி இரயிலில் சென்ற கோயோ அதனால் பாதிக்கப்பட்டு ரயில் நிலையத்திலேயே சுருண்டு விழுகிறான்.

மறுநாள், தன்னுடன் பணியாற்றுபவன் தான் கோயோ என்பது தெரிந்தவுடன் ஈவாவி்ற்கு அவன் மீது பரிவும், ஈர்ப்பும் உருவாகிறது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான, அவளோடு கோயோ இணைவது சாத்தியமா ? இவையெல்லாம் சராசரியானவர்களின் பிரச்சினைகள்; கோயோவிற்கு இது பிரச்சினை இல்லை.

நெட்பிளிக்சில் ஓடிக் கொண்டிருக்கிருக்கும் இது ஸ்பானிய மொழியில் உள்ள அர்ஜென்டினா படம். மன வளர்ச்சி குன்றியவரின் காதல் என்பதால் இப்படம் வித்தியாசமான ஒன்றாகிறது. ஐஎம்டிபி தரவரிசை 6.4 கொடுத்துள்ளது. ஆனாலும், பார்க்க வேண்டிய ஒன்று. ஒன்றே முக்கால் மணி நேரமும் சாதாரணமாகச் செல்கிறது.

ஈவாவின் இளைய மகன் அருங்காட்சியகத்திற்கு வருகிறான். எதிர்காலத்தில் தான் அர்ஜென்டினாவின் தலைவராக விரும்புவதாகச் கோயோவிடம் சொல்கிறான். படத்தின் இறுதி வரை அச்சிறுவனை அர்ஜெண்டினாவின் தலைவர் என்றே கோயோ குறிப்பிடுகிறான். இது ரசிக்கும்படி உள்ளது. கோயோ போன்றவர்களுக்கு பொய் சொல்லத் தெரியாது. ஏமாற்றத் தெரியாது. எனவே, அவர்களால் காதலை மறைக்கவும் முடியாது. Nircolas Furtado என்ற பிரபல நடிகர் கோயோவாக  நடித்துள்ளார். ஈவாவாக பிரபல நடிகை Nancy Duplaa நடித்துள்ளார்.

இயல்பான வாழ்க்கை நடத்துவதாக நினைத்துக் கொள்ளும் அனைவரும், நன்றாக இருக்கிறார்களா என்பது இந்தப் படம் அடுத்த அடுக்கில் எழுப்பும் கேள்வி ? ஈவாவின் கணவன்  மனைவி மீது நடத்துவது வன்முறை அல்லவா ? கோயோவின் அக்கா பியோனா கச்சேரி நடத்தும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தவள். தன் தம்பியின் காதலுக்கு பயப்படுகிறாள். அவள் செய்வது சரியா ?  அவள் சிறுவயதில் தங்களைப் பிரிந்த தாயோடு நடந்து கொள்வது சரியா ? ஆனால், கோயோ தன் தாயைப் புரிந்து கொள்கிறான். இதில் அவன் சகோதரியைவிட முதிர்ச்சியாக இருக்கிறான்.

கோயோ வீட்டிற்கு ஒருமுறை ஈவா வருகிறாள். அவளை எப்படி வரவேற்க வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது போனில் அழைத்து சகோதரன் சொல்கிறான். அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க அவன் விரும்புகிறான்.

இந்தப் படத்தை ரசிக்கலாம். கச்சிதமான வசனங்கள். வித்தியாசமான கதை. எல்லோரும் நன்கு  நடித்துள்ளனர். Marcos Carnevale  படத்தை  இயக்கி இருக்கிறார்.

” எத்தனை கோடி மக்கள் இருக்கிறார்களோ, அத்தனை கோடி வரையறைகள் காதலுக்கும் உண்டு. இங்கேயும் காதல் தான், மனிதனை சரணடைய வைக்கிறது. சரியா, தவறா என்று கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை என்பதே படத்தின் முடிவு” என்று இந்தப் படம் பற்றி எழுதுகிறார் மனவள ஆலோசகரான காயத்திரி மஹதி.

விக்ரம் நடித்த ‘ தெய்வத் திருமகள்’  திரைப்படம், மனவளர்ச்சி குறைந்த ஒருவனை  நல்லவிதமாக சித்தரித்த ஒன்றாகும். Good Doctor என்ற ஆங்கிலத் தொடரின் நாயகன் மனவளர்ச்சி குன்றியவன் தான். இத்தகைய படங்கள் மாற்றுத் திறனாளிகள் பற்றிய தவறான மதிப்பீடுகளை மாற்றக் கூடும்.

திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time