தாக்கப்படும் கிறிஸ்துவர்கள்! தகர்க்கப்படும் மத உரிமை!

சாவித்திரி கண்ணன், ச.அருணாசலம்

தேவபூமி எனப்படும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதர் நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி எனும் நான்கு கோவில்களின் உறைவிடமான  ஆன்மீக பூமியை வன்மமும், வெறுப்பும் மிகுந்த நரகமாக மாற்றி வருகின்றனர் பாஜகவினர் என்பதற்கு அதிர்ச்சி தரும் இந்த சம்பவமே சாட்சியாகும்;

உத்தராகாண்ட் மாநில தலைநகரான, டேராடூனில் ஜுலை 14 அன்று கிறித்துவர்களின் வழி பாட்டுத்தலமான ஒரு சிறிய தேவாலய இல்லத்தில், முப்பதுக்கும் மேற்பட்ட இந்து மத தீவிரவாதிகள்  புகுந்து அங்கிருந்தோரை தாக்கி, காயப்படுத்தி அங்கிருந்த பொருட்களையும் உடைத்து நொறுக்கி நாசப்படுத்தியுள்ளனர்.

டேராடூனின் நேரு காலனியில் ஒரு சிறிய தேவாலய இல்லத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் பிரார்த்தனை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்த பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்துபவர் ராஜேஸ்பூமி எனும் பாதிரியாராவார். வழக்கம் போல கடந்த ஞாயிறன்று பிரார்த்தனைக் கூட்டம் நடை பெற்ற போது தேவேந்திர பூபால் என்ற ஆர்.எஸ்.எஸ்காரர் தலைமையில் அதிரடியாக அங்கு வந்த இந்துத்வா கும்பல், ”இங்கு மதமாற்றமா செய்கிறீர்கள்..? பிரார்த்தனைக் கூட்டமெல்லாம் நடத்தக் கூடாது. எல்லோரும் உடனே வெளியேறுங்கள்..”என கத்தி சத்திமிட்டு மிரட்டியுள்ளனர்.

அதற்கு பாதிரியார், ”ஐயா இங்கு மதமாற்றமெல்லாம் நடக்கவில்லை. பிரார்த்தனை மட்டுமே நடந்து கொண்டுள்ளது. உங்கள் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை. நாம் அமைதியாக உட்கார்ந்து பேசுவோம். நீங்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் நான் பதில் கூறுகிறேன். தயவு செய்து எங்கள் பிரார்த்தனை செய்ய அனுமதியுங்கள்” எனக் கேட்டுள்ளார்.

ஆனால், அந்த ஆர்.எஸ்.எஸ்காரரோ, ”இந்த எதிர்ப் பேச்செல்லாம் வேண்டாம். இங்குள்ள பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்காமல் உள்ளனர். இது ஏர்க முடியாதது. உங்களுக்கு வாயிலே சொன்னால் புரியாது..” என தன்னுடைய தொண்டர் படைக்கு சிக்னல் தந்துள்ளார். அவர்களோ பெண்கள், சிறுமிகளைக் கூட விட்டு வைக்காமல் ஓட, ஓடத் தாக்கியுள்ளனர். தலையில் ஓங்கி அடித்துள்ளனர். அனைவரும் உயிருக்கு பயந்து வெளியே ஓடிய நிலையில் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது இந்துத்துவா குழுவினர்.

இத்தகைய காட்டுத் மிராண்டித் தனமான தாக்குதலில் ஏழு பேர் மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு காயமாடிந்துள்ளனர்.  இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அந்த ஆர்.எஸ்.எஸ்காரர் தேவேந்திர பூபால் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பது  இந்திய ராணுவத்திற்கு பெருமை தரும் செய்தி அல்ல. இது போன்ற வன்முறைகள் ஒரு சிவில் சமூகத்தில் சிறு பான்மையினரிடையே மிகுந்த அச்சத்தையும், கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தவே செய்யும். மத மோதலுக்கும் வழி வகுக்கும்.

இங்கு மதமாற்றம் நடப்பது உண்மை என்ற பட்சத்தில் ஆட்சியில் பாஜக அரசின் காவல்துறை மூலமாகவே அதை விசாரித்து உண்மையை கண்டறிய முடியுமே! காவல்துறை மூலம் உரிய எச்சரிக்கையும் தந்திருக்க முடியுமே!

உள்ளூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்பீர் சிங் ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்ட போது ”அங்கு கிறிஸ்த்துவ பிரார்த்தனை கூட்டம் தொடர்ந்து நடைபெறுவதை நாங்கள் அறிவோம். மதமாற்றம் எதுவும் அங்கு நடந்ததாக செய்தியும் இல்லை. புகாரும் இல்லை. இந்த விவகாரத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடந்து கொண்ட முறை தவறானது” எனக் கூறியுள்ளார்.

”இது போன்றத் தாக்குதல் தற்பொழுது உத்தரகாண்ட மாநிலத்தில் தொடர் கதையாக தொடர்கிறது. இந்த வருடத்தின் ஜனவரி தொடங்கி ஜுன் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே கிறிஸ்துவர்கள் மீதான 361 தாக்குதல்கள் நடந்துள்ளன. இது மட்டுமின்றி மதமாற்றம் செய்வதாக 237 கிறிஸ்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்கிறார் ஐக்கிய கிறிஸ்துவ கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஏ.சி.மைக்கேல்.

பதினேழாம் நாற்றாண்டு முதலே கிறித்துவர்கள் டேராடூனில் வாழ்ந்து வருகின்றனர். மத வெறுப்பை போற்றும் ‘இந்துத்துவா’ கொள்கை காலூன்ற ஆரம்பித்து கடந்த இருபது ஆண்டுகளில் சிறுபான்மை மதத்தினர் மீது வலிந்து தாக்குதல் நடத்துவதும், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த எத்தனிப்பதும் அதிகரித்துள்ளது. பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் இத்தகைய தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் தவிர்ப்பதன் மூலம் அவர்கள் மேலும் ஊக்கம் பெற்று வன்செயல்களைச் செய்கின்றனர்.

இத்தகைய தாக்குதல்கள் ஆளும் பாஜக கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது என்பதை உத்தரகாண்ட காவல்துறையின் நடவடிக்கைகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும் .

இஸ்லலாமியர்களின் வீடுகளை x குறியிட்டு அடையாளப்படுத்தி தாக்கி விரட்டுவதும், இஸ்லாமியர் மற்றும் கிறித்துவர் வணிக தலங்களை புறக்கணிக்க மக்களுக்கு அறிவுறுத்துவதும் அரசின் கவனத்திற்கு வராதது போல பாசாங்குத்தனம் செய்வது தான் வேதனையளிக்கிறது. வருவதில்லை. இத்தகைய வன்முறையாளர்களுக்கு உத்தரகாண்ட் காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறது! பாஜக வினர் வன்முறையாளர்களை வீர இந்துக்கள் என பட்டங்கள் சூட்டி பாராட்டுகின்றனர்.

இது போதாதென்று உத்தரகாண்ட் பாஜக அரசு இந்தியாவில் வேறெந்த மாநிலமும் செய்யத் துணியாத யூனிபார்ம் சிவில் கோடை அம் மாநிலத்தில் சட்டமாக்கி தனது கோணல் புத்தியை உலகிற்கு காட்டியது.

2022 ஆம் ஆண்டு நவம்பரில் உத்திரகாண்ட் அரசு மதச் சுதந்திர மசோதா ஒன்றை தாக்கல் செய்தது. இது 2018 ஆ ஆண்டு இதே போல கொண்டு வரப்பட்ட சட்டத்தை விடக் கடுமையானதாகும். இந்தச் சட்டமானது ஆசைகாட்டியோ, நிர்பந்தப்படுத்தியோ, ஏமாற்றியோ மதமாற்றம் செய்தால் கைது என எச்சரிக்கிறது.

மத வெறுப்பு கொள்கையையும், இந்துத்துவ அரசியலையும், சர்வாதிகார ஆட்சி முறையையும் 2024 தேர்தலில் இந்திய மக்கள் ஓரளவு நிராகரித்துள்ள நிலையிலும், இடைத் தேர்தல்களில் (உத்தரகாண்டில்) பாஜக தோல்வியை தழுவிய பின்னரும் சிறு பான்மையினர் மீதான இந்த  தாக்குதல்கள் தொடருகின்றன.

மிகச் சமீபத்தில் தான் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் உள்ள மசூதி மீதும் இஸ்லாமியர்களின் வீடுகள் மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்திய செய்தியைப் படித்தோம்.

இவர்களது செயலை நியாயப்படுத்தும் விதமாக , கிறித்துவர்கள் மீது ‘ மத மாற்ற’க் (conversion) குற்றச்சாட்டையும், இஸ்லாமியர்கள் மீது ‘ லவ் ஜிகாத்’ (love jihad) புகாரையும் இவர்கள் உடைந்து போன ரிக்கார்டு போல கூறுகின்றனர்.

இந்திய அரசமைப்பு சட்டம் கூறுவதென்ன?

இந்தியர்களாகிய நமக்கு மத சுதந்திரம் உண்டா ?

நாம் ஒவ்வொருவரும் அவரவர் விரும்பிய மதத்தை- மார்க்கத்தை – பின்பற்றும் உரிமை உள்ளதா? இல்லையா?

நாம் விரும்பும் இல்லறத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளதா? இல்லையா?

மத சுதந்திரம் அரசமைப்பு பிரிவு 25 மூலமும், தனி மனித சுதந்திரம் அரசமைப்பு பிரிவு 19 மற்றும் 21 மூலமும் இந்தியர்களாகிய நமக்கு மத சுதந்திரமும், தனி மனித வாழ்க்கை சுதந்திரமும் அடிப்படை உரிமைகளாக வழங்கப்பட்டுள்ளது!

மத சுதந்திரம் என்றால், விரும்பிய மத்த்தை பின்பற்றுவதோடன்றி ஏற்றுக் கொண்ட மதக்கோட்பாடுகளை பிறரிடம் எடுத்துக் கூறுதலும் ஆகும்.

அரசமைப்பு பிரிவு 25 , ஒருவருக்கு விரும்பிய மதத்தை பின்பற்றவும் , ஏற்றுக் கொண்ட மத்த்தை பரப்புவதற்கும் – right to freely profess and propagate religion – உரிமை கொடுத்துள்ளது.

இதைப் போன்றே திருமணத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. இவை யாவும் அடிப்படை உரிமைகள் (fundamental rights) ஆகும்.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் வெகுவாக விவாதிக்கப்பட்டு, இவற்றை டிசம்பர் 6,1948 அன்று அரசியல் பிரிவு 25 ஆக அங்கீகரித்தது, அரசியல் நிர்ணய சபை . அப்படி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட  அச் சொற்றொடர் இது தான்.

மத சுதந்திரம்: மனச் சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும் சுதந்திரமாக சமயதெறி ஓம்புதலும், ஒழுகுதலும் ஓதிப் பரப்புதலும்.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சொல் ஓதிப் பரப்புதல் என்பது தான் . ஓதிப் பரப்புதலின் (propagate) உள்ளார்ந்த நோக்கமே மன மாற்றந் தான் என்பதை முதுபெரும் தலைவர்களான கே.எம். முன்ஷியும், டி.டி. கிருஷ்ணமாச்சாரியும் ஏற்றுக் கொண்டு தான் ஒப்புதல் அளித்தனர்.

அதே சமயம் ஆசை காட்டியோ, நிர்பந்தப்படுத்தியோ மதமாற்றம் செய்வதை சட்டமும், சமூகமும் ஏற்பதில்லை.

மதப் பிரச்சாரத்தின் நோக்கமே மதச் சேர்க்கை தான்.  இது ஒவ்வொரு மனிதனின் சுதந்திரமான செயலைப் பற்றியது, மனசாட்சியைப் பற்றியது .இதை கிரிமினல் குற்றமாக  அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள்  கருதவில்லை.

பாஜகவினரின் தொடர்ச்சியான மதவெறி பிர்ச்சாரத்தின் விளைவாக இன்று அரசமைப்பு கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளை நாம் அனுபவிக்க அரசு அமைப்புகளே தடையாக உள்ளன!

மத மாற்றத்தையும், மரபு மீறிய சாதி, மத மறுப்பு திருமணங்களையும் குற்ற நடவடிக்கைகளாக சித்தரித்து தடை செய்பவையாக இன்றைய காவல் துறை விளங்குகிறது.

சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் சாதி மறுப்பையும் நோக்கி நாம் முன்னேற வேண்டுமெனில், தேர்தல் வெற்றிகள் மட்டும் போதாது.

சமுதாயத்தில் சுதந்திரத்திற்காக , சமத்துவத்திற்காக , சாதித் தளையை வேரறுக்க நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகளை நன்குணர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலமே அது முடியும்.

தூரம் அதிகமென்றாலும் முயற்சியைக் கைவிடோம்.

சாவித்திரி கண்ணன், ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time