‘சுயராஜ் இந்தியா’வின் தலைவரான யோகேந்திர யாதவ் சென்னையின் முன்னணி சமூகச் செயற்பாட்டாளர்களோடு ஒரு உரையாடல் நிகழ்த்தினார். கூர்மையான அறிவாற்றல், பாரபட்சமற்ற பார்வை, எளிமை, நேர்மை ஆகியவற்றின் கலவையாக வெளிப்பட்ட யோகேந்திர யாதவ் பேச்சின் சாரம்சம்;
அறப்போர் இயக்க அலுவலகத்தில் ஜுலை -19 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சமூக இயக்கங்களின் ஆர்வலர்கள் பரவலாக கலந்து கொண்டனர். Making Sense of Indian Democracy: Theory in Practice என்பது போன்ற மக்களாட்சி குறித்த அருமையான நூல்களை எழுதியுள்ள யோகேந்திர யாதவ் பேசியதை கேள்வி பதில் பாணியில் அறம் வாசகர்களுக்குத் தருகிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை எப்படி பார்க்கிறீர்கள்?
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா குறைபாடான ஜனநாயகமாக (flawed democracy) இருந்தது. சிறுபான்மையினரை, இரண்டாம்தர குடிமக்களாக பாஜக அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டது. கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, ஒற்றையாட்சி முறையை நிறுவும் நோக்கில் பாஜக செயல்பட்டது.
நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தல் சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் நடக்கவில்லை. மற்ற அரசியல் கட்சிகளைவிட பாஜகவிடம் நூறு மடங்கு பணம் இருந்தது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் ஆளுகின்ற பாஜகவிற்கு ஆதரவு நிலை எடுத்து நின்றன. ஊடகங்கள் முழுக்க முழுக்க பாஜகவிற்கு ஆதரவாக இருந்தன. தேர்தல் ஆணையம் பாஜகவின் பங்குதாரராக இருந்தது. 400 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிடுவோம் என பாஜக கூறியது. ஆனால் மக்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உறுதியாக கூறிவிட்டனர். உண்மையில் இது பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியே. கூட்டாட்சி தத்துவத்திற்கு, சமூக நீதிக்கு, மதச்சார்பின்மைக்கு ஆதரவாக, அரசியல் அமைப்பை பாதுகாக்க மக்கள் வாக்கு அளித்துள்ளனர். நமக்கு ஜனநாயக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே நாம் கருத வேண்டும்.
ஆர்எஸ்எஸ் நடந்து முடிந்த தேர்தலில் ஆதரவு அளிக்காததால் தான் தோல்வி அடைந்தது என்று சொல்லப்படுகிறதே?
இந்திரா காந்தி காலத்தில் இரண்டு ஆண்டு எமர்ஜென்ஸி முடிந்து நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தல் கூட சுதந்திரமாக நடைபெற்றது. ‘தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும்’ என்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தால் பாஜகவின் வாக்கு சதவீதம் 2 முதல் 3 வரை குறைந்திருக்கும். இதனால் 53 தொகுதிகளை பாஜக இழந்திருக்கும். இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து இருக்கும்.
வெற்றி பெற்றால் ஆர்எஸ்எஸ் – ஆல் வெற்றி பெற்றது என்று சொல்லுவார்கள். தோற்றால் அதற்கு தாம் காரணம் இல்லை என்று சொல்வது அவர்களது உத்தி. இந்த தேர்தலிலும் ஆர்எஸ்எஸ் முழுமையாக பாஜகவிற்கு ஆதரவாக வேலை செய்தது. அதையும் மீறிதான் பாஜக தோல்வி அடைந்துள்ளது. ஆர்எஸ்எஸ் ஆதரவு இல்லையென்பதால் பெரும்பான்மை பெறவில்லை என்று அவர்களே பரப்புகிறார்கள். ஏனெனில், வெறுப்பு அரசியலால் பாஜக தோற்றது; சர்வாதிகார முறையால் பாஜக தோற்றது, வேலையில்லா திண்டாட்டத்தால் பாஜக தோற்றது, வறுமையின் காரணமாக பாஜக தோற்றது என்ற விவாதங்கள் நடைபெறுவதை அவர்கள் விரும்பவில்லை.
தேர்தலுக்குப் பிறகு பாஜக தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் என்று நினைக்கிறீர்களா ?
இந்த தேர்தலினால் பாஜவின் சர்வதிகாரம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பின் நோக்கி நகரவில்லை. பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவான – ஒற்றை ஆட்சி முறைக்கு ஆதரவான – சமூக நீதிக்கு எதிரான அபாயம் இன்னமும் தொடர்கிறது. பிஎம் ஸ்ரீ என்ற திட்டத்தை பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனை ஒரு சில எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, அந்த மாநில அரசுகளுக்கு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்க மாட்டோம் என்று பாஜக சொல்கிறது. அப்படியானால் கூட்டாட்சி தத்துவத்தை அவர்கள் தோல்விக்கு பின்னும் ஏற்கவில்லை என்று தானே நாம் விளங்கிக் கொள்ள முடியும். முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுவது நின்றபாடில்லை.
நீட் தேர்வு என்ற ஊழல் நடந்துள்ளது. இதனைப் பற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க அவைத் தலைவர் அனுமதி மறுக்கிறார். கடந்த காலங்களில் இது போன்ற ஊழல்கள் பற்றிய செய்தி வெளி வந்தால் அரசே விவாதிக்க அனுமதிக்கும். சம்மந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிப்பார்.
எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தலோடு அவர்கள் அரசியல் முடிந்து விட்டது. அவர்களுக்கு வாக்கு அரசியல்தான் முக்கியம். அவர்களின் மாநிலத்தை மட்டுமே பார்ப்பார்கள். ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு கட்டத்தில் பாஜகவோடு சமரசமாக இருந்தவை தான். எனவே, மக்கள் இயக்கங்கள் கருத்தியல் ரீதியாக, அரசியல் அமைப்பை பாதுகாக்க விழிப்போடு இருக்க வேண்டும். தொடர்ந்து பணியாற்ற வேண்டும். ஏனெனில், பாஜகவோடு ஆர்எஸ்எஸ் இருக்கிறது.
நடைபெற்ற தேர்தலில் மக்கள் இயக்கங்களின் பங்கு எப்படி இருந்தது?
உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றவுடன், ராமர் கோவில் கட்டியவுடன் பாஜகவை வீழ்த்தவே முடியாது என்ற நம்பிக்கையற்ற சூழலில் தான் எதிர்க்கட்சிகள் இருந்தன. அப்போது தான் பாஜகவை வீழ்த்தக் கூடிய வலுவான கட்சிகளோடு சேருவது என்ற முடிவை எடுத்தோம். பிறகு இந்தியா கூட்டணிக்கு ஆதரவளித்தோம். தமிழ்நாட்டில் மூன்று பாராளுமன்ற தொகுதிகளையும், இந்திய அளவில் 150 தொகுகளையும் குறிப்பாக ஸ்வராஜ் இந்தியா தேர்ந்தெடுத்து பாஜகவை தோற்கடிக்க வேலை செய்தோம். சமூக வலைத் தளங்களை சிறப்பாக பயன்படுத்தினோம். உத்திரப் பிரதேசத்தில் மக்கள் இயக்கங்களின் பங்கு பலவீனமாக இருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் சிறப்பாக வேலை செய்தன.
மீனவர்கள், ஆதிவாசிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினம், சுற்றுச் சூழல் என பலதரப்பட்ட மக்கள் இயக்கங்கள் பாஜகவிற்கு எதிராகத் திரண்டன. ஒரு சில இயக்கங்கள் உறுதியான நிலையெடுத்து, மிரட்டலையும் மீறி வெளிப்படையாக செயல்பட்டன. ஒருசில அமைதியாக செயல்பட்டன. அதற்கேற்ற வெற்றி தேர்தலில் கிட்டியுள்ளது. ஜனநாயகத்தை, அரசியலமைப்பை பாதுகாக்கும் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும்.
இந்தியாவை ஒரு முக்கோண வடிவ பிரமிடாக நாம் உருவகம் செய்து கொண்டால், அதன் மேலே உள்ள மூன்றில் ஒரு பகுதியில் உயர்சாதி, உயர்மட்ட வர்க்கம், நகர்ப்புற மக்கள் என உள்ளனர். இவர்கள் தான் நீதிபதிகளாகவும், ஊடகத்திலும், கட்சிகளிலும், அலுவலர்களாகவும், உயர்ந்த பதவிகளிலும் உள்ளனர். இந்த மூன்றில் ஒரு பிரிவினர் பாஜகவிற்கு வாக்கு அளித்துள்ளனர். கீழே இருக்கும் மூன்றில் இரண்டு பங்கு பிரிவில் ஏழைகள், தலித்துகள், கிராம மக்கள், பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாம் பேச வேண்டும். சமூகத்தின் வளங்களை இவர்கள் பெறுவதும் அவசியம். 21 ஆம் நூற்றாண்டு அடித்தட்டு மக்களுக்கானது என்ற கருத்து உருவாக வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
இனி என்ன செய்ய வேண்டும்?
எதிர் கட்சிகள் திறனற்று உள்ளனர். இனி அவர்கள் அடுத்த தேர்தலைப் பற்றி தான் கவலைப்படுவார்கள். நமக்கு முன்பு வாய்ப்புகளும், சவால்களும் உள்ளன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பழைய திராவிட கட்சிகள் களைப்படைந்து விட்டன. அவைகள் தம்மை கருத்தியல் ரீதியாக புதுப்பித்துக் கொள்ளவில்லை. திராவிட கொள்கைகளோடு சுற்றுச்சூழல் கொள்கைகளை இணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
திமுக, அதிமுக கட்சிகளில் இறை நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளனர். இவர்களை பாஜக குறிவைக்கிறது. கேரளாவில் சபரிமலை பிரச்சினையை வைத்து பாஜக செயல்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைத்தல், ஒன்று சேர்த்தல், எடுத்துக் கொள்ளுதல் என்ற கொள்கைப்படி செயல்படுவது போல, பாஜக மற்ற அரசியல் கட்சிகளை தமதாக்கிக் கொள்கிறது.
ஐம்பதுகளில் ‘அமைப்புக்கு எதிரான’ (anti establishment) வாய்ப்பை இடதுசாரிகள் பயன்படுத்திக் கொண்டனர். தற்போது அதையும் பாஜகவே எடுத்துக் கொள்கிறது. அரசியல் கட்சிகள் அந்நியமாகி விட்டனர். தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அதைப் பற்றி பேசினால் போதும். அதுவரை திமுக போன்ற அரசுகள் செய்வதை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஆம் ஆத்மியும் மற்ற அரசியல் கட்சியைப் போன்றது தான். அதைப் பற்றி கூடுதலாகச் சொல்ல ஏதுமில்லை.
தற்போது கொண்டு வரப்படுள்ள குற்றவியல் சட்டங்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறது. காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரத்தைத் தருகிறது. சிறிதும், பெரியதுமாக நாம் செய்ய வேண்டியது ஏராளமாக உள்ளன.
பாரத் ஜோடா அபியான் பிப்ரவரி 2023 ல் உருவான போது ஏழாண்டு முடிவில் அதாவது 2030 ல் அரசியல் அமைப்பை பாதுகாக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஒரு கோடி பேர் முன் வர வேண்டும் என நினைத்தோம். தேச விரோத கருத்தியலைக் ஆர்எஸ்எஸ் வைத்துள்ளது. நாம் அதை எதிர்கொள்ள பாரத் ஜோடோ அபியான்- உடன் இணைய வேண்டும். இது ஒரு அமைப்பு அல்ல. ஒன்றாக இணைந்து பணி புரிவதற்கான இயக்கமாகும்.
பாஜக பல கற்பிதங்களை இங்கு உருவாக்கி வைத்துள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை தொடர்பாக, வேலை வாய்ப்பு தொடர்பாக உருவாக்கி வைத்துள்ள கட்டுக் கதைகளை உடைப்பதற்கான வேலைத் திட்டங்களை வகுப்பதும் இத்தகைய போராட்டத்தின் ஒரு பகுதி தான்.
திராவிட இயக்கங்களின் பிராமண எதிர்ப்பு அரசியலை எப்படி பார்க்கிறீர்கள்..?
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானவர்களாக பார்க்கத் தேவையில்லை. இதனால், அதில் உள்ள நல்லோரும் பாதிக்கப்படுவார்கள்! பொதுவாக பிராமண சமூகத்தில் பெரும்பாலானவர்கள் தங்களை மற்றவர்களைக் காட்டிலும் உயர்வானவர்களாகவும், மற்றவர்களை தாழ்த்தி வைப்பவர்களாகவும், வாய்ப்புகள் அனைத்தையும் தமக்கே உரித்தாக்கிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள்! இந்த நாட்டில் மொத்தத்தில் உயர்சாதியினர் 20 சதவிகிதம் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் 80 சதவிகிதமானவர்களுக்கான வாய்ப்புகளையும், வசதிகளையும் எடுத்துக் கொள்கிறார்கள்!
Also read
இந்த 20 சதவிகித உயர் சாதியினரிலும் கொஞ்சம் ஏழைகளும், கொஞ்சம் நடுத்தர பிரிவினரும் உள்ளனர். நல்ல மனம் படைத்தோரும் உள்ளனர். இவர்களைத் தவிர்த்து இதற்குள் உள்ள சுமார் 3 சதவிகிதத்தினரே இந்த சமூகத்தின் அனைத்து தளத்திலும் தங்கள் அதிகாரத்தை செலுத்துகின்றனர். அரசாங்கத்தின் உயர் அதிகார மையங்களில் அதிகாரிகளாக, முக்கிய தொழில் குழுமங்களில் உயர் பொறுப்பில் உள்ளவர்களாக, டாக்டர்களாக, வழக்கறிஞர்களாக, பேராசிரியராக, ஊடகங்களின் ஆசிரியர்களாக தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள். இதைத் தான் பிராமணிசம் என்கிறோம். இது பிராமணர்களிடம் மட்டுமின்றி பிராணரல்லாதோரிடமும் உள்ளது. இதை நாம் நிச்சயமாக எதிர்த்தாக வேண்டும்.
தொகுப்பு; பீட்டர் துரைராஜ்
அருமை.
நீண்ட நாள் எதிர்பார்த்தது இவரின் கட்டுரைகள்.
அவற்றின் தொடக்கமாக இந்த பேச்சு கட்டுரை இருக்கட்டும்
யாதவ் கூற்று ‘செவிடன் காதில் ஊதும் சங்குதான்.