ஓட்டுக்கு கொஞ்சம்! கார்பரேட்டிடம் தஞ்சம்!

-சாவித்திரி கண்ணன்

பட்ஜெட்டாம் பட்ஜெட்! இது  சீனிப் பட்டாசு தான்! ஏழைகளை மரித்துவிடாமல் வைத்துக் கொள்ள அவ்வப்போது சற்று கஞ்சியை ஊத்தி காப்பாற்றவும், பணக்காரன் இலையில் கணக்கு வழக்கின்றி நெய் மணக்கும் பால் பாயாசத்தை அள்ளி ஊற்றவும் தெரிந்த கலையைத் தான் கச்சிதமாகச் செய்கிறார்கள்; மத்திய பட்ஜெட் ஒரு அலசல்;

தனி நபர் சம்பாத்திய வரிவிதிப்பை பொறுத்த வரை அடிப்படை வருமானம் ரூ.3 லட்சம் வரை வரி இல்லை என்பதில் எந்த மாற்றமும் செய்யாதது கீழ் அடுக்கில் உள்ள நடுத்தர வர்க்கத்திற்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

# ரூ.0 – 3 லட்சம் வரை – வரி இல்லை
# ரூ.3 லட்சம் முதல் 7 லட்சம் வரை – 5% வரி
# ரூ.7 லட்சம் முதல் 10 லட்சம் வரை – 10% வரி
# ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை – 15% வரி
# ரூ.12 லட்சம் முதல் 15 லட்சம் வரை – 20% வரி
# ரூ.15 லட்சத்துக்கும் மேல் வருமானம் – 30% வரி

நியாயமாக பார்த்தால் ஆண்டுக்கு 8 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு முழு வரிவிலக்கு தந்திருக்க வேண்டும். இதனால், அரசுக்கு பெரிய இழப்பு எதுவுமில்லை. கைக்கும், வாய்க்குமாக வாழும் நடுத்தர வர்க்கத்திடம் இருந்து புடுங்குவதை நிறுத்தி விட்டு, கார்ப்பரேட்களுக்கு தரும் வரிச் சலுகைகளை குறையுங்கள்!

தங்கம்,வெள்ளி இறக்குமதிக்கு வரி குறைத்திருப்பது நடுத்தர வர்க்கத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும்.

விவசாயத்தை தொடர்ந்து கார்ப்பரேட்களின் காலடியில் வைப்பதையே இந்த பட்ஜெட்டும் செய்கிறது. விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக, உயர் விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவ நிலைகளையும் தாக்குப் பிடிக்கக் கூடிய, 109 புதிய பயிர் ரகங்களும், தோட்டக் கலை பயிர்களும் அறிமுகப்படுத்தப்படுத்த போகிறார்களாம். அடுத்த பாராவோ, ‘அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 1 கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்கிறது.

யார் கேட்டார்கள் இந்த உயர் ரக விதைகளை? கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபமடையும் உயர் ரக விதைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு திணிக்கும் வரை இயற்கை விவசாயம் என்பதை கற்பனை கூட செய்ய முடியாது. ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு வரப் போவதில்லை! உயர் ரக விதைகள், அதற்கேற்ப வீரியத் தன்மை கொண்ட ரசாயன உரங்கள் திணிக்கப்படும் போது இயற்கை விவசாயம் அழிவுக்கே செல்லும்.

இயற்கை வேளாண்மைக்கு தேவை அடிப்படையிலான உயிரி இடுபொருள் மையங்கள் 10,000 உருவாக்கப்படும் என்பதை நிச்சயம் வரவேற்கலாம்.

வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாம். ‘இது போல விவசாயிகளுக்கு தருகிறோம் என்ற போர்வையில் விவசாய உற்பத்தியில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தருவது தானே உங்க வழக்கம்’.

விவசாய விளை பொருட்களுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயம் என்பதை பத்தாண்டுகள் கடந்த நிலையில், இன்னும் கூட சாத்திஒயப்படுத்த முடியாத அரசகாத் தான் இந்த அரசு உள்ளது.

புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது இந்திய மருத்துவ முறையில் புற்று நோயை தீர்க்கும் மருந்து, மாத்திரைகளை முடக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்பதும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது என்பதும் நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் என்பதில் ஐயமில்லை.

25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதாம்! அதாவது, லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதாம்!
தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரியும் குறைக்கப்படுகிறதாம். சூரிய எரிசக்தி உற்பத்திக்கான உபரி பாகங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்க பரிசீலிக்கப்படுகிறதாம்…! இதில் இர்உந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது இத்தகைய தொழிகளில் உள்ள மோடியின் நண்பர்களான அதானி,அம்பானி போன்ற கார்ப்பரேட்கள் தந்த அழுத்தங்கள் இதன் பின்னணியில் இருக்கக் கூடும்.

திவால் நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண கூடுதல் தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்பது கூடுதல் தகிடுதத்தங்கள் அரங்கேற உள்ளன என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்காக 10 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
வீட்டுவசதி திட்டத்தில் 1 கோடி நகர்ப்புற ஏழை மக்கள் பயனடைவர் என்பது பாஜக கட்சியில் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் கிடைக்கவுள்ள கொடை என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஆந்திரப் பிரதேச மறு சீரமைப்பு சட்டத்தின்படி, அம்மாநிலத்தின் புதிய தலைநகரை உருவாக்க நடப்பு நிதியாண்டில் சிறப்பு நிதியுதவியாக பல்வேறு மேம்பாட்டு முகமைகள் மூலம் ரூ.15,000 கோடி ஒதுக்கப்படும். விசாகப்பட்டினம்-சென்னை தொழில்துறை வழித்தடத்தில் கோப்பர்த்தியில் தொழில் முனையம் அமைக்கப்படும்..என்பது பாஜகவுடன் கூட்டணி கண்டதன் மூலம் தன் மாநில நலன்களுக்காக சந்திரபாபு நாயுடு சாதித்துக் கொண்டார் என்பதையே உணர்த்துகிறது. ஆந்திர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியே!

பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதும், பீகாரில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.26,000 கோடி ஒதுக்கப்படுவதும், பீகாரில் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக 11,500 கோடி ரூபாய் நிதியுதவியை அள்ளிவிடுவதும் மோடியின் ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதன் வாயிலாக நிதீஸ்குமார் செய்த நிர்பந்தங்கள் என நாம் புரிந்து கொள்ளலாம்.

அதே சமயம் ஒரு தொகுதியில் கூட எங்களை வெற்றி பெற வைக்காத தமிழகத்தை நாங்கள் வஞ்சித்து பாடம் புகட்டுவோம் என நிர்மலா சொல்லாமல் செய்து காட்டி உள்ளார்! என்ன தான் பிறப்பால் தமிழச்சியாக இருந்தாலும் தேசிய கட்சியில் அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் தமிழ் நாட்டுக்கென நல்ல திட்டங்களையும், நிதியையும் நிர்மலாவால் ஒதுக்க முடியவில்லை என்பது இத்தகு கொத்தடிமைத்தனத்தில் உழல்வதற்கான பரிசு தான் அவரது நிதி அமைச்சர் பதவி என நம் மக்கள் புரிந்து கொண்டால் சரி!

ஓட்டு விழுவதற்கு கொஞ்சம்! ஓட்டுக்கு பணம் தந்து உதவும் கார்பரேட்களிடம் தஞ்சம், மக்கள் நலனுக்கோ பஞ்சம் என்பதாகவே பஜெட் போடப்பட்டுள்ளது.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time