திராவிட மாடலைப் புரிந்துகொள்வோம் – 4
சாதாரண மக்களை முன்னிறுத்தி சிந்தித்து செயல்பட்ட கேரளா மாடல்!கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க, சராசரி மக்களை சக்கையாக பிழிந்த குஜராத் மாடல்! கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அனைவருக்குமாக்கிய கியூபா மாடல்..போன்றவற்றை பார்க்கையில் திராவிட மாடல் எந்த ரகம் எனப் பார்ப்போமா..?
‘மாடல்’ என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
இன்றைய நுகர்வுக் கலாச்சாரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்பதற்கென முன்னிறுத்தப்படும் அழகுப் பதுமைகளை, கட்டுமஸ்தான இளைஞர்களை மாடல் என்றழைக்கிறோம். ஓர் ஓவியருக்கு அல்லது புகைப்பட நிபுணருக்கு மாதிரியாக இயங்குபவரும் மாடல் தான். ஒருவரை மாடல் என்றழைப்பதன் மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை உருவாக்குபவர் என்றும் கொள்ளலாம். உங்களின் கனவு வீடு ஒன்றைக் கட்டுவதற்கு முன், சிறிய நகல் ஒன்றை உருவாக்கிப் பார்க்கிறீர்களே, அதன் பெயரும் மாடல் தான். சமூக-பொருளாதார – அரசியல் தளத்தைப் பொறுத்தவரை, சில அடிப்படை விழுமியங்களை ஏற்றுக் கொண்டு, குறித்த நகர்வுகளை அமைத்துக் கொண்டு, விரும்பிய விளைவுகளை வென்றெடுத்து, முன்னுதாரணமாய் நின்று முனைந்து செயல்படுவதே மாடல் என்றாகலாம்.
கேரளாவின் இடதுசாரி மாடல்;
கடந்த 1970-களிலிருந்து ‘கேரளா மாடல்’ குறித்த உலகளாவிய விவாதம் ஒன்று நடந்தது. அதாவது, மிகக் குறைந்த வருமானமே ஈட்டினாலும், கேரள மாநில மக்கள் எழுத்தறிவு அதிகம் பெற்றிருந்தார்கள். அவர்களின் உடல் நலம் உன்னதமாக இருந்தது. அரசியல் ரீதியாக தன்முனைப்புடன் செயல்பட்டார்கள். கேரளத்தின் பொதுவான மனித மேம்பாட்டுக் குறியீடுகள் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடப்படும் அளவுக்குச் சிறந்தவையாக இருந்தன… என்றெல்லாம் பொருளாதார வல்லுனர்கள் பாராட்டினார்கள்.
கேரளா 1956-ஆம் ஆண்டு தனி மாநிலம் ஆனதிலிருந்து, உடல் நலம், கல்வி எனுமிரண்டையும் முதன்மை விடயங்களாகப் பார்த்தது. இவை தவிர, கேரளம் பெற்றிருந்த உயர்ந்த அடிப்படை ஊதியம், நிலச் சீர்திருத்தம், சாலைகள் விரிவாக்கம், வலுவானத் தொழிற்சங்கங்கள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள், வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள்தான் கேரளத்தை உலகுக்கு உயர்த்திக் காட்டின.
இறப்பு விகிதம் குறைந்து போனதால், கேரள மாநிலத்தின் மக்கள் தொகை உயர்ந்து நின்றது. நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசிகள் வழங்குவது, தொற்று நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறைகள், பேறு காலத்துக்கு முந்தைய மற்றும் பிந்தையச் சேவைகள் போன்றவை அம்மக்களுக்கு எளிதாகக் கிடைத்தன. உலகச் சுகாதார நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவெங்கும் தடுப்பூசிகள் போடப்படுவதற்கு முன்னரே, 1970-களில் கேரள மாநிலம் அங்கே வாழ்ந்த கர்ப்பிணிகளுக்கும், கைக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போட்டு முடித்திருந்தது.
இன்னோரன்ன நடவடிக்கைகளால், கேரள மக்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு உயர்ந்திருந்தது. அவர்கள் குறைந்த அளவிலான தனிமனித வருமானமே ஈட்டிக் கொண்டிருந்தாலும், உயர்ந்த நல்வாழ்வுக் குறியீடுகளைப் பெற்றிருந்ததால், ‘கேரளா மாடல்’ பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. கடந்த 1980 மற்றும் 1990-களில் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் கேரளா மாடல் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அது மூன்றாம் உலக நாடுகளுக்கு உற்றதோர் எடுத்துக்காட்டாக முன்வைக்கப்பட்டது.
‘வளர்ச்சி’ என்பது மக்கள் தாங்கள் வாழ விரும்புகிற வழியில் வாழ்க்கையை வாழச் செய்யும் திறன்களை வழங்க வேண்டும் என்கிறார் அமர்த்யா சென். அவர் அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களை ஓர் எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அவர்கள் சீனர்களை விட, கேரளாக்காரர்களை விட செல்வந்தர்கள்; ஆனால் இவர்கள் இருவரையும் விட கருப்பினத்தவர்களின் ஆயுட்காலம் குறுகலானது. ஏழ்மை என்பது குறைந்த வருமானம் கொண்டிருப்பது அல்ல; மாறாக, திறன் இழப்பு தான் ஏழ்மை என்கிறார் சென்.
அதே போல, ”பஞ்சம் என்பதை உணவுப் பற்றாக் குறை என்று புரிந்து கொள்வதை விட, உணவை வாங்கிக் கொள்ளும் பொருளாதாரச் சக்தி மற்றும் நிலையானச் சுதந்திரம் ஆகியவற்றை இழப்பது தான் பஞ்சம் எனக் கொள்ள வேண்டும்” என்கிறார். பொருளாதார மாற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஊதியத்தையும், உரிமைகளையும் வளர்த்தெடுப்பது தான் சிறந்த வழி என்கிறார் சென்.
‘உலகமயமாதல் செல்வச் செழிப்பை உருவாக்கித் தருவதாகவும், பலரை பணக்காரர்கள் ஆக்குவதாகவும்’ அதன் ஆதரவாளர்கள் பூரிப்படைகிறார்கள். ஆனால், எதிர்ப்பாளர்களோ ”உலகமயமாக்கல் என்பது ஏழை நாடுகளின் வளங்களைச் சுரண்டி, சூழியல் நலத்தைச் சீரழித்து, உலகின் மீது வணிகத் தன்மையையும், போட்டி மனப்பான்மையையும், முதலாளித்துவச் சுரண்டலையும், நுகர்வுக் கலாச்சாரத்தையும் சுமத்துகிறது” என்கின்றனர்.
மூன்றாம் பார்வையாக, அமர்த்யா சென் கல்வி, உடல் நலம் போன்றவற்றுக்கான சமூகச் செலவுகளை அதிகப்படுத்தி அதையே நவீன உலகின் பொருளாதார வெற்றியின் அடிப்படையாகப் பார்க்க வேண்டும் என்று வாதிடுகிறார். மக்களின் வருமானம், அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு, மொத்த தேசிய உற்பத்தி (ஜி.என்.பி.) போன்றவற்றை விட, மக்களின் அன்றாட வாழ்வில் வளர்ச்சி ஏற்படுத்தும் நல்ல விளைவுகளையே பொருளாதார நலத்தின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் சென். இதைத் தான் அன்றே செய்தது கேரளா மாடல்.
அதனை அடியொற்றித் தான் கேரளம் இப்போதும் சிந்திக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் வரை கேரளத்தின் நிதி அமைச்சராகப் பணியாற்றிய தாமஸ் ஐசக் இப்படிக் கூறுகிறார்: “கேரளாவைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு ஒரு தகவல், குடிமக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பான அனைத்து சமூகக் குறியீடுகளிலும் கேரளா இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமல்ல, அது தேசிய சராசரியை விட வேகமாக வளர்ந்து வருகிறது. கேரளாவில் தனிநபர் வருமானம் 60% அதிகம். சம பங்கு வளர்ச்சியுடன் முன்னேறுவதற்கு எடுத்துக்காட்டு கேரளா” (தீக்கதிர், 18.07.2024).
அடிப்படை தேவைகளை நிறைவேற்றிய கியூபா மாடல்;
கேரளா மாடல் மேற்கத்திய நாடுகளில் தீவிரமாக விவாதிக்கப்பட்ட அதே நேரத்தில், கியூபா என்கிற ஒரு சிறிய நாடு, உலக வல்லரசான அமெரிக்காவின் எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி திறம்பட இயங்கிக் கொண்டிருந்ததும் உலகெங்கும் உற்று நோக்கப்பட்டது. கியூபா 1970 முதல் 1985 வரை கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் பெருமளவு வெற்றி கண்டது. இல்லாமையை இல்லாமலாக்கிய அந்நாடு, தொழிலாளர் கூட்டுறவு அமைப்புக்களைத் தோற்றுவித்து, தமக்கான வேலைகளை உருவாக்கி உன்னதமாக இயங்கியது.
அமெரிக்க–சோவியத் பனிப் போரின் போது கியூபா சோவியத் ஒன்றியத்தின் உதவியோடு தான் நிலை நிற்க முடிந்தது. அதே போல, கியூபாவின் அடிப்படை பொருளாதார அமைப்பில் பெரிய மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. சோவியத் ஒன்றியம் தகர்ந்தபோது, அவர்கள் வழங்கிய மானியங்கள் மறைந்து, உள்நாட்டு உற்பத்திப் பொருளான சர்க்கரையின் விலையும் குறைந்து. கியூபாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 33 விழுக்காடு சரிந்தது.
ஆனாலும், இன்றளவும் வீட்டு வசதி, போக்குவரத்து போன்றவை கியூபாவில் மலிவாக இருக்கின்றன. அரசு மானியத்தோடு கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள் மக்களுக்கு தேவையான அளவு கிடைக்கின்றன. கடந்த 2010-களில் தனியார் சொத்துக்களும், அந்நிய முதலீடுகளும் அனுமதிக்கப்பட்ட நிலையில், 2021-ஆம் ஆண்டு மனித வளர்ச்சிக் குறியீட்டில் 191 நாடுகள் கொண்ட பட்டியலில் கியூபா 83-வது இடத்தைப் பெற்றது.
சாதாரண மக்களை முன்னிறுத்திச் சிந்தித்த, செயல்பட்ட கேரளா மாடல், கியூபா மாடலைப் போலல்லாமல், இந்தியாவில் இன்னொரு மாடல் ஏகத்திற்கும் புகழ்ந்துரைக்கப்படுகிறது. அது நரேந்திர மோடி முதல்வராகப் பணியாற்றி முன்னின்று நடத்திய குஜராத் மாடல்.
மேற்குறிப்பிட்ட இடதுசாரி மாடல்களிலிருந்து பெரிதும் மாறுபட்ட இந்த இந்துத்துவா வலதுசாரி மாடல் தனியார் மயத்தைப் போற்றியது. மோடியின் கீழ் குஜராத் உலக வங்கியின் ‘எளிதாக வியாபாரம் செய்யும்” (“ease of doing business”) தரப் பட்டியலில் முதன்மை வகித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிலங்களும், வரிச் சலுகைகளும் வாரி வழங்கப்பட்டன. முதலீடுகளைக் கவர்வதற்காக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவீனப்படுத்தப்பட்டன.
மோடி அரசுக்கு எதிராக மதவாதக் குற்றச்சாட்டுகள் எழுந்த போதெல்லாம், மேற்படி குஜராத் மாடல் கொடி உயர்த்திக் காட்டப்பட்டது. உண்மையில், கல்வி, ஊட்டச்சத்து, தனிமனித முன்னேற்றம், ஏழ்மை ஒழிப்பு போன்றவற்றில் குஜராத் பின்தங்கியிருந்தது. ஐந்து வயதுக்கும் குறைவானக் குழந்தைகளில் சற்றொப்ப 45 விழுக்காடு பேர் குறைந்த உடல் எடை கொண்டவர்களாகவும், 23 விழுக்காடு பேர் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும் துன்புற்றதாக மாநில பட்டினிக் குறியீடு கணக்கெடுப்பு தெரிவித்தது. இந்திய அரசும், யுனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்தியக் கணக்கெடுப்பின்படி, மோடி அரசு குஜராத் குழந்தைகளுக்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்கத் தவறிவிட்டது என்று கண்டறியப்பட்டது.
கடந்த 2001 முதல் 2011 வரையிலானக் காலக்கட்டத்தில் ஏழ்மை ஒழிப்பு, பெண்கள் எழுத்தறிவு போன்ற பல்வேறு விடயங்களில் குஜராத் மாநிலம் தேக்க நிலையில் தத்தளித்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு, அம்மாநிலம் ஒட்டுமொத்த இந்தியாவில் ஏழ்மையில் 13-வது இடத்தையும், கல்வியில் 21-வது இடத்தையும் பெற்றிருந்தது. அதே ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டில், 21 இந்திய மாநிலங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தையேப் பிடித்தது குஜராத்.
குஜராத் மாநில அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் பிற மாநிலங்களைவிட மோசமாகவே இருந்தது. குஜராத் அரசின் சமூக நலக் கொள்கைகள் இசுலாமியர்களை, தலித் மக்களை, ஆதிவாசிகளை உள்ளடக்காமல், பெரும் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கியது. முன்னேற்றம் என்பது நகர்ப்புற நடுத்தர வர்க்கத்துக்கு மட்டுமானதாகவே இருந்தது. கிராமப்புற மக்களும், ஒடுக்கப்பட்டச் சாதிகளைச் சார்ந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டனர்.
மோடி அரசு தேசிய சராசரியைவிடக் குறைவாகவே கல்விக்கும், சுகாதாரத்துக்கும் செலவிட்டது. பனிரெண்டு ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராகப் பணியாற்றி முன்னெடுத்த இந்த குஜராத் மாடலின் படுதோல்விகளை மறைப்பதற்காக, 2020-ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் நகருக்கு வந்தபோது பிரதமர் மோடி ஏழைகளையும், அவர்களின் குடியிருப்புக்களையும் அகற்றினார். அந்நகரைச் சுற்றி சுவர்கள் எழுப்பியும், திரைச்சீலைகள் கட்டியும் குஜராத் மாடலை மறைக்கப் போராடினார்.
வறுமைக் கோடு தொடர்பாக இந்தியாவிலுள்ள 21 மாநிலங்களில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவில் 44 விழுக்காடு மக்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை. மோடியின் சொந்த மாநிலமான குஜராத் கடைசி இடத்தில் உள்ளது. அங்கே வெறும் 33 விழுக்காடு ஏழைகளுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கிறது. அதேபோல, உணவு பாதுகாப்பிலும் அம்மாநிலத்தின் 69 விழுக்காடு பேர் போதிய உணவில்லாமல் தவிக்கின்றனர் என்று கண்டுபிடித்திருக்கின்றனர் (தீக்கதிர், 20.07.2024).
வட மாநிலங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் ‘சண்டிபுரா’ வைரஸால் போதுமான அளவு மருத்துவக் கட்டமைப்பு இல்லாத குஜராத் மாநிலம் உருக்குலைந்துள்ளது. ஆனால் கேரளா கடந்த இரண்டு ஆண்டுகளாக நிபா, குரங்கு காய்ச்சல் உள்ளிட்ட புதியவகை வைரஸ்களை அதிரடி முடிவுகளுடன் தங்கள் மாநிலத்தை விட்டு துரத்தியது மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்குப் பரவாமலும் பார்த்துக் கொண்டது. “இதனால் சமூக வலைத்தளங்களில் புதிய வைரஸ்[சைக்] கட்டுப்படுத்த கேரள மாடலில் இருந்து குஜராத் மாடல் பாடம் கற்க வேண்டும் என்ற கருத்துக்கள் கிளம்பியுள்ளன” (தீக்கதிர், 21.07.2024).
“தாழக் கிடப்பாரை தற்காக்கும்” இடதுசாரி மாடல்களும், உச்சத்தில் இருப்பாரை உயர்த்திப் பிடிக்கும் வலதுசாரி மாடல்களும் கோலோச்சும் இன்றைய உலகில், எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க விரும்பும் திராவிட மாடலை எப்படிப் புரிந்து கொள்வது? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
கட்டுரையாளர் சுப. உதயகுமாரன்
அணுசக்திக்கு எதிரான மற்றும் பசுமை அரசியல் செயல்பாட்டாளர்.
கேரள மாடலை பின் பற்ற தமிழ்நாடு கம்யூனிஸ்ட்டுகள் , திமுக முதல்வரிடம் வலியுறுத்த வேண்டும் விளைநிலங்களை பறித்து ஏர்போர்ட் சிப்காட் அமைப்பதை மார்க்சிஸ்ட்டுகள் ஏன் எதிர்க்க வில்லை? சித்தாந்தத்தை கழட்டிப் போட்டுவிட்டன கட்சிகள். லஞ்சம் மது- வை ஒழிக்க யாருக்கு யோக்கியதை இருக்கு?
நாம் வாழுகிற நிலத்தில் விளைவிக்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும் அதாவது உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களும் அனைத்து மக்களுக்குமான தேவையை முன்னிறுத்தி திட்டமிட்டு உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட எல்லா பொருட்களையும் மக்கள் அனைவருக்கும் சமமாக விநியோகம் செய்ய வேண்டும். இதை பொருளாதார ரீதியில் சொல்ல வேண்டுமென்றால் Production & Distribution & Planning – இதை ஒருங்கிணைத்தால் மட்டுமே இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் சுபிட்சமாக வாழ முடியும்.
இதைத்தான் காரல் மார்க்ஸ் கம்யூனிசம் என்று சொல்கிறார். இந்த சித்தாந்தம் மட்டுமே மனித குலத்திற்கு நிம்மதியான வாழ்க்கையையும் ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயமாகவும் சாதி மத இல்லாத குற்றச் செயல் இல்லாத சமூகமாக மலர முடியும்..
இந்த சிந்தனையை மக்கள் மத்தியில் விதைக்காமல் மதத்தைச் சொல்லி, சாதியை சொல்லி, தனி மனித துதி பாடி, மக்களின் சிந்தனையை மழுங்கடித்து அரசியல் கட்சிகள் பிழைப்பு நடத்துகின்றன.