இந்தியாவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் புதிதல்ல, எத்தனையோ முறை ஆட்சியாளர்கள் விமர்சனங்களை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்களை கைது செய்துள்ளனர். ஆனால்,அர்னாப் கைதான போது தான் பத்திரிகை சுதந்திரம் குறித்த அக்கரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொத்துக் கொண்டு வருகிறது!
அடடா என்னாமா துடிச்சு போயிட்டாங்க. அர்னாபிற்கு நீதிமன்றம் வெறும் 14 நாட்கள் தான் சிறை என தீர்ப்பளித்தது. அதுவும் ஜாமீன் வேண்டுமென்றால், கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்றது.
ஆனால், அர்னாப் சாதரணமானவரா? ’’விட்டேனா பார்’’ என உச்ச நீதிமன்றத்திற்கே சென்று விட்டார். உச்ச நீதிமன்றமும் அவர் விஷயத்தில் உருகோ உருகென்று உருகிவிட்டது. அர்னாப் வழக்காவது கிரிமினல் வழக்கு! இரு நபர்களின் சாவுக்கு காரணமானவராக அவர்களது குடும்பத்தாரலேயே அர்னாப் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்! ஆனால், பாவம் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வழக்கோ முழுக்க,முழுக்க அநீதியானது. உத்திரபிரதேச ஹத்ராசில் இளம்பெண் கற்பழித்து இறந்த நிகழ்வை செய்தி சேகரிக்க சென்ற ஒரே காரணத்திற்காக வழியிலேயே நிறுத்தி உ.பி.காவல்துறையால் கைது செய்யப்பட்டு தேசப்பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டுவிட்டார்.
இந்த வழக்கு இதே உச்ச நீதிமன்றத்திற்கு கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அதற்கு இந்த உச்ச நீதிமன்றம் சொன்னது ‘’இதை அலகாபாத் கோர்டிலேயோ அல்லது கீழமை நீதிமன்றத்திற்கோ சென்று முறையிடுங்கள்’’
ஆனால்,அர்னாப் வழக்கோ தீபாவளி காலவிடுமுறையால் மூடப்பட்ட உச்ச நீதிமன்றக் கதவுகளை திறக்கச் செய்து அவசர,அவசரமாக நடத்தப்படுகிறது.
இதை உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் துஷ்யந்த் ஆட்சேபித்துள்ளார். ’’உச்ச நீதிமன்றத்தில் எத்தனையோ முக்கியமான பல வழக்குகளெல்லாம் நீண்டகாலமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் இருக்கும் போது,அர்னாப் என்ற தனி மனிதருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். செல்வாக்கானவருக்கு ஒரு நீதி, சாமனியருக்கு ஒரு நீதி என்பதாகிவிடும்’’ என்று அவர் பதிவாளருக்கு கடிதம் எழுதியே ஆட்சேபித்துள்ளார்! பிரசாந்த் பூசனும் இதே கருத்தைக் கூறியுள்ளார்! அது மட்டுமல்ல, பிரபல வழக்கறிஞர் கபில்சிபல் கூட இதே கருத்தை நீதிபதிகளிடமே கூறி, ’’சித்திக் கப்பன் ஒரு மாதத்திற்கும் மேலாக பெயில் கிடைக்காமல் சிறையில் வாடுவது தொடர்பாக நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வந்த போது நியாயம் கிடைக்கவில்லையே’’ என்றார்! ஆனால், நீதிபதிகள் காதில் அது என்னவோ விழுந்ததாகவே தெரியவில்லை. அதனால், அதற்கு பதிலே சொல்லவில்லை!
சதா சர்வ காலமும் நாட்டில் வெறுப்பையும்,துவேஷத்தையும் உருவாக்கி வருபவர் அர்னாப் கோஸ்வாமி! இவரது நடத்தைகள் பற்றி ‘’யார் இந்த அர்னாப் கோஸ்வாமி?’’ என்று நாம் நமது அறம் இணைய இதழில் ஏற்கனவே அவரது அடாவடி ஜர்னலிசம் குறித்து எழுதியுள்ளோம்.
சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அர்னாபின் ஜாமின் மனுவை விசாரித்த போது உதிர்த்த பொன் மொழிகளை கவனியுங்கள்.
’’நம் ஜனநாயகம் அசாதாரண நெகிழ்திறன் கொண்டது. மகாராஷ்டிரா அரசு அவர் தொலைக்காட்சியில் காட்டப்படுபவைகளை பெரிதுபடுத்தக் கூடாது என்று அமர்வு கருதுகிறது. அர்னாப் விஷயம் சாதணமானது.அதற்கு பெயில் மறுக்கப்படுவது நியாயமல்ல’’ என்றது
இத்துடன் நிறுத்தாமல் நீதிபதி சந்திராசூட் “அவரது கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நான் அவரது சேனலை இதுவரைப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் இதில் நீதிமன்றங்கள் இப்போது தலையிடவில்லை எனில், நாம் அழிவின் பாதையில் செல்வதாகவே அர்த்தம், இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அர்னாபின் தனிநபர் சுதந்திரத்தை மறுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதைக் கேள்விபட்ட சித்திக் சேத்தனின் மனைவி ரெய்ஹெனாத் மனைவி பொங்கி கதறிவிட்டார். ‘’இங்கு ஆளுக்கொரு நீதியா? சட்டம் என்பது அனைவருக்கும் சமமென்றால், என் கணவர் கைதை அவரது வீட்டிற்கே தெரிவிக்காமல் அவர் குடும்பத்தாரே தொடர்பு கொள்ளமுடியாமல் இருப்பதை நீதிமன்றம் ஏன் கேட்க மறுக்கிறது. காரணமில்லாத அவரது கைதை ஏன் கண்டிக்கவில்லை.’’ எனக் கூறியுள்ளார். சித்திக் கப்பன் கேரள மொழி பத்திரிகையாளர். எளிய குடும்பத்தை சேர்ந்தவர். நீரிழிவு நோயாளி. தன் 90 வயது தாயாரிடம் ஐந்து நிமிடம் போனில் பேசக் கூட போலீஸ் அவரை அனுமதிக்கவில்லை!
ஆனால்,அர்னாபின் வெறும் 14 நாட்கள் காவலைக் கூட நீதிபதிகள் பெரிய அநீதியாக பார்த்து எட்டே நாளில் அவரை விடுவித்துவிட்டனர். ஆனால்,சித்திக் விடுதலை இன்னும் எப்போது எனத் தெரியவில்லை!
உச்ச நீதிமன்றமே தனக்கு ஓடோடி வந்து மூடப்பட்ட விடுமுறைகால கதவுகளைத் திறந்து விடுதலை செய்கிறது என்றால், அடாவடி அர்னாப் எப்படி தன் தவறுகளை உணர்வார்? அதுவும் நூற்றுக்கணக்கான போலீசார் புடை சூழ்ந்து பாதுகாப்புத் தர, ஏதோ நீதிக்காக போராடி சிறையில் இருந்து வந்தது போல வேனில் ஏறி நின்று கைகளை உயர்த்தி கோஷமிட்டவாறு ஊர்வலமாக வந்தாரே பார்க்கலாம்!
வெளியே வந்ததில் இருந்து அவர் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை உக்கிரத்தோடு தாக்கிவருகிறார்.
‘’உத்தவ் தாக்கரே நான் உனக்கு ஒரு செய்தி சொல்வேன். நீ தோற்கடிக்கப்படுவாய். நீ என்னை கைது செய்தற்காக வெட்கப்பட வேண்டும். சட்டத்தை தவறாக பயன்படுத்தி விட்டாய். அதற்காக நீ என்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை. உன்னால என் நெட்வொர்க்கை தொடக் கூட முடியாது. நான் விரைவில் அனைத்து மொழியிலும் என் சேனலை கொண்டுவர உள்ளேன். சர்வதேச அளவிலும் மீடியாவை உருவாக்கப் போகிறேன்.என்னிடா மோதுகிறாய்…’’ என்று காட்டமாகப் பேசிவருகிறார்.
Also read
தனக்காக உழைத்து,அதற்கான கூலியை எதிர்பார்த்து கையேந்திய ஒரு மனிதனை அலைகழித்து அவனது மரணத்திற்கே தான் காரணமானது தொடர்பாக எந்தவித குற்றவுணர்வுமின்றி ஒரு கிரிமினல் குற்றவாளி ஒரு மாநிலத்தின் முதல்வரையே இப்படிப் பேசமுடிகிறது என்றால், நீதிமன்றமும்,சட்டமும் அவர் விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் என்று அவர் திடமாக நம்புவதாகத் தான் தோன்றுகிறது!
எளிய மக்களின் உரிமைக்காக போராடும் மனித உரிமை போராளிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள்,வழக்கறிஞர்கள்…போன்ற பலரும் ’உபா’ என்ற பயங்கரவாத தடுப்பிற்காக கொண்டுவரப்பட்ட தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அநீதியாக கைது செய்யப்பட்டதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த போது அவற்றை பொருட்படுத்தி, ‘’உடனே அவர்களை விடுவிக்க வேண்டும்’’ என்று சொல்லாமல் மாதக் கணக்கில்…, வருடக் கணக்கில் அமைதி காக்கும் நீதிமன்றம், அர்னாபை, ’’காலதாமதம் செய்யாமல் உடனே விடுவிக்க வேண்டும்’’ என்று சொன்னது இந்தியா முழுமையும் எட்டுதிக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்! அது, ’’சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லையா?’’ என்ற எதிர்வினையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
’அறம்’ சாவித்திரி கண்ணன்
நல்ல விழிப்புணர்வூட்டும் நேர்மையான பதிவு.