அமெரிக்க அதிபர் தேர்தல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. எந்த ஒளிவுமறைவுமின்றி இனவெறி, போர்வெறி, பெண்ணிய எதிர்ப்பு, சர்வாதிகாரம் ஆகியவற்றை டிரம்ப் வெளிப்படுத்துகிறார். ஆனால், இதற்கு நேர்மாறாக கமலா ஹாரீஸ் வெளிப்படுவது மிகவும் ஈர்ப்பைத் தருகிறது;
அமெரிக்க அதிபர் தேர்தல் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ஜனநாயக காவலனாக இருக்கிறதோ, இல்லையோ…, ஆனால், அவ்வாறான தோற்றம் அதன் மீது படிந்துள்ளது என்பதாலும், அமெரிக்காவானது அனைத்து நாட்டு அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் சக்தியாக இருப்பதாலும் அமெரிக்க அதிபர் தேர்தல் அனைத்து தரப்பினராலும் உற்று கவனிக்கப்படுகிறது!
இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று வருபவரின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒரு பக்கம் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்குமான போர்,
மற்றொரு பக்கம் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்துக் கொண்டிருக்கும் தீவிர தாக்குதல்..
இதற்கிடையே மூன்றாம் உலக நாடுகள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகள்..
அத்துடன் அமெரிக்காவில் வாழும் சராசரி மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
இவை குறித்த ஒரு சரியான புரிதல் இருப்பவர் அமெரிக்க அதிபராக வருவதே சிறப்பாக இருக்கும்.
ஆனால், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப் செய்யும் பிரச்சாரங்கள் அதிரடி ரகமாக இருக்கிறது! அவரது பேச்சில் அகங்காரமும், ஆணவமும் தூக்கலாகத் தெறிக்கிறது! இனவெறி உணர்வும், பகை உணர்வும், வெறுப்புணர்வும் பிரச்சாரங்களில் தூக்கலாக உள்ளது.
அதுவும் தனக்கு போட்டியாளரான கமலா ஹாரிஸை அவர் ஒரு கம்யூனிச பூதமாக சித்தரிப்பது சிரிப்பை வரவழைக்கிறது…!
”அவள் ஒரு தீவிர இடது பைத்தியம், அவள் எப்போதாவது பதவிக்கு வர வாய்ப்பு கிடைத்தால் நம் நாட்டை அழித்து விடுவாள். அவள் முற்றிலும் பயங்கரமானவள். அவர், பெர்னி சாண்டர்ஸை விட தாராளவாதி, அவள் எப்போதாவது உள்ளே நுழைந்தால், அவள் இந்த நாட்டை மிக விரைவாக அழித்து விடுவாள். இந்த பயங்கரமான துணை ஜனாதிபதி, இந்த கொடூரமான பைடனால் நியமிக்கப்பட்டாள். கமலா ஹாரீஸ் எப்போதும் பொய் சொல்வாள். அவளை ஒருபோதும் நம்ப முடியாது. அவள் தலைமை தாங்க தகுதியற்றவள். இன்னும் ஒரு வருடத்தில் நம் நாட்டை அழித்து விடுவாள். இந்த நாடு அழிந்து விடும். நான் கமலாவுக்கு சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் உங்களை எங்கும் விரும்பவில்லை. கமலா, நீ நீக்கப்பட்டாய். இங்கிருந்து வெளியேறு…’’
பொதுவாக டிரம்ப் ஒரு இரக்கமற்ற மனிதர். வெள்ளை இன வெறியர். கறுப்பின மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்துபவர். பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்படுவதை ஆதரிப்பவர். எளிய, நடுத்தர வர்க்க மக்களின் பிரச்சினைகள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாதவர்!
ஆனால், கமலா ஹாரிசோ டிரம்புக்கு நேர் எதிரானவர். அவரே மூன்று இனத்தின் கலவையாக உள்ளார். தாய் வழியில் இந்தியர், தந்தை வழியில் ஆப்ரிக்கர், மணந்த கணவன் வழியில் அமெரிக்கர்! ஆகவே அடித்தள மக்கள், பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைத்து தரப்பினரையும் ஆழமாக உணர்ந்துள்ளவர். இருபதாண்டுகள் களமாடிய அரசியல் அனுபவம், இருபதாண்டுகள் பெண்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர் அனுபவம், பல மாகாணங்களில் தலைமைப் பொறுப்பில் இருந்த அனுபவம் கமலா ஹாரிசுக்கு உள்ளது. அதனால் தான் கறுப்பின மக்கள் அவரை ஆதரிக்கின்றனர். ஜனநாயக விரும்பிகள் அவரை நேசிக்கின்றனர். இளம் வயதினர் அவரை கொண்டாடுகின்றனர்.
குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளரும், டிரம்பின் நண்பருமான ஜே.டி.வான்ஸின், குழந்தை இல்லாத பெண்கள் ஆட்சி செய்யத் தகுதியற்றவர்கள் கமலாவைத் தாக்கி பேசிய வீடியோ தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது. பெண்கள் கமலாவிற்கு ஆதரவாக கச்சை கட்டி வருகின்றனர்.
கருக் கலைப்பு தொடர்பான கமலா ஹாரிஸின் கருத்து புரட்சிகரமானது மட்டுமல்ல, மிக நியாயமானதும் கூட! ”கர்பத்தை கலைப்பதும், தாய்மையை விரும்புவதும் பெண்ணின் உரிமை. பெண்ணின் உடல் மீது ஆதிக்கம் செலுத்த சட்டத்திற்கோ, அரசுக்கோ அனுமதியில்லை” என பேசி வருவது குறிப்பிடத்தக்கது. ”துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவேன்” எனச் சொல்லி உள்ளதும், ”நடுத்தர பிரிவினரின் பொருளாதார பிரச்சினைகளுக்கு அக்கறை எடுத்து தீர்வு காண்பேன்” எனக் கூறி உள்ளதும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
பைடன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து கமலா களத்திற்கு வந்த இரண்டு நாட்களுக்குள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக கிடைத்துள்ளது. கமலா ஹாரீஸ் நன்கொடை பெறுவது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து 44 ஆயிரம் கறுப்பின பெண்கள் தங்கள் பங்களிப்பை அவருக்கு வழங்கியுள்ளனர் என்பது அமெரிக்காவில் அரசியல்வாதிகள் மக்களுக்கு பணம் தருவதில்லை. மக்கள் தான் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு நன்கொடை தருகின்றனர் என்பதையும், கமலா ஹாரிசுக்கு 58 ஆயிரம் நபர்கள் தன்னார்வலர்களாக தங்களை பதிவு செய்து கொண்டதன் மூலம் அங்கு பணம் பெற்றுக் கொண்டு யாரும் தேர்தல் பணியாற்றுவதில்லை என்பதையும் உணர முடிகிறது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல் குறித்த கமலாவின் பார்வை மிக நேர்மையானது. அதுவும் போரில் இதுவரை 38,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டும், 86,000 பேர் போரால் படுகாயமடைந்தும், 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்து பசி, பட்டினியும், தொற்று நோய்களில் உழலும் கொடூர சூழலில் – காசா போர் தொடங்கி 270 நாட்கள் ஆகியுள்ள நிலையில் – கமலா ஹாரீஸ், இஸ்ரேல் அதிபர் நேதன்யாகுவிடம் பேசிவிட்டு ஊடகங்களிடம் பேசுகையில்,
“தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருக்கிறது. ஆனால், கடந்த 9 மாதங்களாக காசாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மிக முக்கியம். அங்கு பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அப்பாவி குழந்தைகளின் உயிரிழப்பு, பசி கொடுமை, புலம் பெயரும் மக்கள் என இந்த கொடுமையை எல்லாம் பார்த்துக் கொண்டு உணர்ச்சியற்றவர்களாக நாம் இருக்க முடியாது. குறிப்பாக நான் அமைதியாக இருக்க மாட்டேன். இந்த போர் முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது. பேச்சு வார்த்தைகள் மூலம் போர் நிறுத்தப்பட்டு, பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் நேரம் நெருங்கி விட்டது. பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டும் நேரம் இது” என்று கூறியுள்ளார்.
Also read
இப்படி ஒரு அமெரிக்கத் தலைவர் பேசுவது என்பது அபூர்வத்திலும் அபூர்வமாகும். இதனால். தனக்கு யூதரக்ளின் ஆதரவு குறையும், அவர்களிடம் இருந்து தேர்தல் நிதி கிடைக்காது என்பதை உணர்ந்தும், மனித நேயத்தை மீட்டெடுக்கும் விதமாக இவ்வாறு பேசுவது தான் தலைவருக்குள்ள பண்பாகும்.
கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் அமெரிக்க அதிபராவது நமக்கும் பெருமைக்குரிய விஷயமே!
சாவித்திரி கண்ணன்
Leave a Reply