கற்பழிப்பில் ஈடுபடும் கவர்னர்களை சட்டம் பாதுகாக்குமா?

-ஹரி பரந்தாமன்

மேற்குவங்க ஆளுநர் மாளிகையின் பெண் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார் ஆளுநர். ”அரசியல் சட்டம் கவர்னரை பாதுகாக்கிறது. இந்த வழக்கை காவல்துறை விசாரிக்க முடியாது” என்கிறார் அவர். மம்தா பானர்ஜியோ கவர்னரை தண்டிக்க துடிக்கிறார். அலசுகிறார் ஹரி பரந்தாமன்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அனைவருக்கும் இடையில் ஒரு போட்டி நிலவுகிறது. எவர் மிக அதிகமாக மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவது என்பதே. அந்தப் போட்டி! மேற்கு வங்கத்தின் ஆளுநர் விவகாரமோ வேறு மாதிரியானது.

மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருப்பவர் ஆனந்த போஸ். ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் ஆளுநரின்  பேரில் ஒரு புகாரை 2-5-2024 அன்று காவல் துறையிடம் அளித்துள்ளார். அந்த புகாரில், ஆளுநர் அவர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது.  ஆளுன்ர் மாளிகையில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரியும் தன்னிடம் ஆளுனர் தொடர்ந்து அத்துமீறல் செய்ய முயற்சிக்கிறார். இது தொடர்பாக நான் பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் அவர் கேட்க தயாரில்லை. என்னைப் போல வேறொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஒரு குற்றவியல் வழக்கை  கொல்கத்தா காவல்துறையினர் பதிவு செய்தனர். அந்த வழக்கை  8 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு புலனாய்வு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆளுநர் ஆனந்த போஸ்

இது தொடர்பாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார் கொல்கத்தா நகரின் துணை காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி . அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேற்சொன்ன குற்றச்சாட்டுகள் பற்றிய விவரத்தையும் அது தொடர்பாக காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக பேசினார்.

இதனை ஒட்டி ,மேற்கு வங்கத்தின் கவர்னர் ஆனந்த போஸ் அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா  பேனர்ஜிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் குற்ற வழக்கிலிருந்து முழு பாதுகாப்பை அரசமைப்புச் சட்டம் கூறு 361 (2) கவர்னர்களுக்கு அளிக்கிறது என்று கூறி இருந்தார். எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மேற்சொன்ன காவல்துறை அதிகாரி இந்திரா முகர்ஜியும் மற்றும் கொல்கத்தா நகரின் காவல்துறை ஆணையரும் செயல்படுவதாக குற்றம் சுமத்தி அவர்களின் பெயரில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜியை அறிவுறுத்தி இருந்தார் கவர்னர்.

மேற்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பின்னர்  கவர்னர் மாளிகைக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாக பொதுவெளியில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. ”கவர்னர் பதவிக்கே இழுக்கான செயல் இது. கவர்னர் மாளிகையின் புனிதம் அவரால் பாதிக்கப்பட்டுள்ளது”  என்றார். இந்த குற்றச்சாட்டை ஒட்டி, ”கவர்னர் பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கையையும் முன் வைத்தார் மம்தா பேனர்ஜி.

இந்நிலையில் கவர்னர் ஆனந்த போஸ் அவர்கள் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜியின் பெயரில்  ஜூன் 28 இல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்து , மம்தா பானர்ஜி இந்த குற்ற சம்பவத்தை பற்றி பேசுவதற்கு தடை உத்தரவையும் பெற்றார்.

இந்த தடை  தடை உத்தரவினை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வுக்கு மேல் முறையீடு செய்துள்ளார் மம்தா பானர்ஜி.

”சமீபத்தில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கவர்னர் மாளிகைக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது உகந்ததாக இல்லை” என்று கூறினார். மம்தா பானர்ஜி. காரணம் ,பெண்கள் எவரும் கவர்னர் மாளிகைக்கு வர அச்சப்படுவதாக கூறினார் . ”எனவே, பதவிப் பிரமாணம்  செய்து வைப்பதன் பொருட்டு கவர்னரே சட்டசபைக்கு வர வேண்டும் அல்லது பதவிப் பிரமாணம் எடுக்கும் அதிகாரத்தை சபாநாயகருக்கு  அளிக்க வேண்டும்” என்று கேட்டார் மம்தா பானர்ஜி. இதை ஒட்டி மேற்குவங்க சட்டசபையில் மிகப்பெரிய  விவாதத்தை எழுப்பியது  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.

குற்ற வழக்கை கவர்னரின் மீது பதிவு செய்துள்ள கவர்னர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஊழியர் , குற்ற வழக்குகளில் இருந்து கவர்னருக்கு அளிக்கப்படும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்தப்பெண் ஊழியர் தன் மனுவில் கூறியுள்ளவை பெரும் பேசுபடு பொருளாகியுள்ளது.

”கவர்னர்களுக்கு தரப்படும் இந்த அரசியல் சட்டப் பாதுகாப்பு நியாயமற்றது. எனில் எங்களைப் போல பாதிக்கப்படுபவர்களின் நிலை என்ன? இதற்கு ஒரு தீர்வு சொல்லியே ஆக வேண்டும்.” எனக் கேட்டுள்ளார்.

உண்மை தான். குற்றச் செயல்கள் செய்யும் கவர்னர்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக கருதும் போக்கு இருக்குமானால் அங்கு வேலை பார்க்கும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு? என்ற கேள்வி சிவில் சமூகத்தை உலுக்க வல்லது. கவர்னர் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டவர் என்றால், அது, அவர் குற்றச் செயல்கள் செய்வதற்கு கொடுத்த லைசென்ஸ் ஆகிவிடாதா? பாஜக கவர்னர்கள் பலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நிலையில், கடைசி வரை தண்டிக்கப்படாமல் தப்பித்த சம்பவங்கள் பல என் நினைவில் நிழாலாடுகின்றன.

இதையடுத்து உச்ச நிதிமன்றம்  கவர்னர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேற்கு வங்க அரசுக்கு தடை இல்லை எனக் கூறியது கவனிக்கதக்கது.

சமீப காலத்தில் அமெரிக்காவில் நடந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ, தங்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தியாக கடந்த 2020ம் ஆண்டு  அரசு ஊழியர்கள் உட்பட பலர் குற்றம் சாட்டினர். இதுதொடா்பாக விசாரிக்க நியூயார்க் அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் விசாரணைக்  குழுவை அமைத்தார். அந்தக் குழு அரசு ஊழியா்கள், புகார் அளித்த பெண்கள் உள்பட 179 பேரிடம் விசாரணை நடத்தியதோடு குற்றம்சாட்டப்பட்ட கவர்னரிடமும் விசாரணை நடத்தியது. சுமார் 5 மாத விசாரணையின் முடிவில் கவர்னர் மீதான குற்றச்சாட்டை அக் குழு உறுதி செய்தது. இதையடுத்து, தொலைக்காட்சியில்  தோன்றிய கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ, தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுவல்லவா உண்மையான ஜனநாயகம். இது போல ஏன் இங்கும் நடக்கக் கூடாது.?  இந்த விவகாரத்தில் கவர்னரை ராஜுனாமா செய்யும்படி குடியரசுத் தலைவரோ, பிரதமரோ அறிவுறுத்தல் வழங்கலாம்.

இதற்கிடையில் மேற்குவங்க சட்டசபையால் போடப்படும் சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் ஆண்டு கணக்கில் இருக்கிறார் கவர்னர் என்று குற்றம் சுமத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்து உள்ளது மேற்கு வங்க அரசு.

இதில் உச்ச நீதிமன்றத்தை அணுகிய உடன் ஒரு சில சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் தருவதும், ஒருசிலவற்றை அதற்கு பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்புவதும் என்ற சட்டத்துக்கு புறம்பான நடைமுறையை கடைப்பிடிப்பது கவர்னரின் வழிமுறையாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது மேற்கு வங்க அரசு .இந்த வழக்கையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின் அமலுக்கு வந்த அரசு அமைப்பு சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டார்கள். எதிர்க்கட்சிகள் மாநில அரசை ஆட்சி ஆட்சி செய்யும் நிலை 1967 ஆம் ஆண்டிற்கு பின் பல மாநிலங்களில் உண்டாயிற்று. அப்போதெல்லாம் அந்த மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் பிணக்குகள் இல்லாமல் இல்லை.

ஆனால், பாஜகவின் மோடி  2014 இல் ஆட்சிக்கு வந்த பின் , எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பிரதான எதிர்க்கட்சி போல செயல்பட ஆரம்பித்தார்கள் ஆளுனர்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசை எதிரி நாட்டைப் போல நினைத்து செயல்பட்டார்கள்.  ஒன்றிய அரசின் அனுமதி இல்லாமல் இவ்வாறெல்லாம் இந்த ஆளுநர்கள் செயல்பட இயலாது. ஆளுநர்களை எதிர்த்து தொடர்ச்சியாக ஒவ்வொரு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதில் மேற்குவங்க ஆளுநர் அந்த மாநில அரசின் முதல்வரின் மேல் வழக்கு போடும் நிலைக்கும் சென்றார். அந்த வகையில் அவர் மற்ற ஆளுநர்களை விட வித்தியாசப்பட்டு நிற்கிறார்.

மேற்படி வழக்கில் மேற்குவங்க அரசுடன் கேரள அரசும், தெலுங்கானா அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து கொண்டுள்ளன. மாநில அரசுகள் இயற்றும் சட்டத்திற்கு — குறிப்பாக இச்சட்டங்கள் மாநில அரசின் வரம்புக்குள்  இயற்றும் சட்டத்திற்கு —ஒப்புதல் தராமல் ஆண்டு கணக்கில் கவர்னர்கள் வைத்திருப்பது அரசமைப்புச் சட்டப்படி சரிதானா? என்று தீர்மானிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது .இதை காலதாமதம் இன்றி தீர்மானிப்பது  கூட்டாட்சி தத்துவத்திற்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் வலு சேர்க்கும்.இதை உச்ச நீதிமன்றம் விரைவில் செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

முன்னாள் நீதிபதி,
சென்னை உயர் நீதிமன்றம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time