வயநாடு பேரழிவுக்கு என்ன காரணம்? ஏன் ஏற்பட்டது?

-ச. அருணாசலம்

மூன்று நாள் பெரு மழையில் முடிவுக்கு வந்தது பலரது வாழ்க்கை. மிகப் பெரிய மானுடப் பேரழிவை கேரளாவின் வயநாடு கண்டுள்ளது. மலைப் பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற நிலச்சரிவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.  இவற்றை எப்படி தவிர்க்கலாம்..? என்ன செய்ய வேண்டும்..?

கேரள மாநிலத்தின் வயநாட்டில் கடந்த மூன்று நாட்களாக பெய்த அதீத மழையும் அதையொட்டிய நிலச்சரிவும், முண்டக்காடு, சூர்ல் மலை, மற்றும் அத்தி மலை கிராமங்களை முற்றிலுமாக அழித்து இருந்த இடம் தெரியாமல் புதைத்து விட்டது.

இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர், இறந்தவர் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் அவலமும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை காயமுற்றோர் எண்ணிக்கை 200-ஐ தொட்டுள்ளது. காணாமற்போனோரின் எண்ணிக்கை விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

இன்னும் நீடித்து கொண்டிருக்கும் கன மழையினூடே மீட்பு பணிகளை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முடுக்கி விட்டுள்ளன, பேரிடர் மீட்பு குழுக்களும் , இராணுவ மற்றும் கடல், ஆகாயப் படைகளும் இந்தப் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் – மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ல் இதே மே. தொடர்ச்சி மலைப் பகுதியில் இடுக்கி மாவட்டத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 65 மனித உயிர்களை பலி கொண்டது நினைவிருக்கலாம். தமிழ் நாட்டிலும் ஊட்டி, குன்னூர்,கோத்தகிரி, கொடைக்கானல்,வால்பாறை போன்ற பகுதிகலில் அடிக்கடி நிலச்சரிவுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 

இப்படி நிலச் சரிவுகள் தொடர்கதையாக நிகழ்வது எதைக் குறிக்கிறது?

நிலச்சரிவுகளை, பெருவெள்ளம் போல் கண்காணிக்கவோ, துல்லியமாக கணிக்கவோ முடியாது என்பது உண்மையானாலும் ஆபத்தை எதிர் நோக்கி அரசு எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசும் மக்களும் எடுத்தனவா என்பது பெரிய கேள்வியாகும். .

இந்தப்பேரழிவு இயற்கையின் சீற்றமா அல்லது மனித செயல்களால் விளைந்த விபரீதமா என்ற கேள்வி தொடர்ந்து நம்மை துரத்துகிறது எனலாம்.

 

மீட்பு பணிகள், நிவாரணங்கள், உதவிகள், குறைபாடுகள் விமர்சனங்கள் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து இத்தகைய பேரிடர்களை முற்றிலும் களைய முடியாவிடினும் வெகுவாக குறைக்க நாம் செய்யத் தவறியன யாவை என சிந்திக்க வேண்டிய தருணம் இது!

இங்கு நாம் என்று குறிப்பிடுவது, அரசுகள் (மாநில மற்றும் ஒன்றிய அரசுகள்) அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை உள்ளடக்கிய மக்களையும் சேர்த்தே தான் குறிப்பிடுகிறோம்.

வயநாடு பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை ஆய்வாளர்கள் அவ்வப்போது  எச்சரித்து வந்ததை அரசும் சரி, மக்களும் சரி பொருட்படுத்தவே இல்லை. பசுமை போர்த்திய இயற்கை மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளில் நிலத்தை ஆழத் தோண்டி, கட்டிடங்களை எழுப்புவதும், இதற்கு தடையாக உள்ளதாகக் கருதி மரங்களை தாறுமாறாக வெட்டி வீழ்த்தியதன் விளைவாகவும் அப்பகுதியின் நில அமைப்பியலே மாறியுள்ளது. மண்ணின் நிலச் சரிவைத் தாங்கும் திறனும் பாதிப்படைந்துள்ளது.

இந்திய துணை கண்டத்தில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்த பேரிடர்களை களையும் பொருட்டு 2011ம் ஆண்டு ஒன்றிய அரசு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சூழலியல் வல்லுனர் குழுவை (Western Ghats Ecology Expert Panel) மாதவ் ராவ் காட்கில் தலைமையில் அமைத்தது .

இக்குழு அறிவித்த பரிந்துரைகளை “ காட்கில் அறிக்கை” என்று அறியப்பட்டது.

இவ்வறிக்கை மே. தொடர்ச்சி மலைப் பகுதியை அதன் சூழலை, அங்கு வசிக்கும் மக்களை கருத்தில் கொண்டு மூன்று பகுதிகளாக பிரித்தது. (ESZ1, ESZ2,ESZ3) ஒவ்வொரு பகுதியிலும் சூழலை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டது.

இயற்கைச் சூழலின் தன்மையைப் பாதுகாக்க அங்கு கட்டுமான பணிகள், கல்குவாரிகள் கூடாது என்றது., மலையையும், மண்ணையும் பாதுகாக்க பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என்றது.

பொருளாதார உணர்வயப்பட்ட மண்டலங்களில் (ESZ) நகர்ப்புற கட்டுமானங்கள், வணிக கட்டமைப்புகள் மற்றும் பாறைகளை உடைத்தல் நொறுக்குதல் போன்ற சுரங்க நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதித்த காட்கில் அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பை கிளறியது.

அனைத்து மாநிலங்களும் – கேரளம், கர்நாடகம் , தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா , கோவா – இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர்.

அரசியல் கட்சிகள், அவர்கள் மார்க்சிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியானாலும் சரி, இரு அமைப்புகளும் விவசாயிகளின் பேரில், தொழிலாளர்களின் பேரில் காட்கில் அறிக்கையை எதிர்த்து போராட்டங்களில் குதித்தனர். மற்ற மாநில அரசியல் தலைவர்களும் இதையே செய்தனர். இதற்கு ஒரே விதி விலக்காக திகழ்ந்தவர் முன்னாள் கேரள முதல்வர்,

முதுபெரும் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர் தோழர் வி.எஸ் . அச்சுதானந்தன் ஒருவர் தான்! முழுமையாக காட்கில் அறிக்கை பரிந்துரைகளை அமல் படுத்த குரல் கொடுத்தார்.

ஏழை சொல் அம்பலமேறாது என்ற கணக்கில், கிளம்பிய போராட்டங்களை சமாளிக்க , அரசியல் கட்சிகளை அவர்களுக்கு பின்னால் இருந்த பணம் படைத்த ‘வளர்ச்சி தாதாக்களை’ சமாளிக்க மன் மோகன் சிங் அரசு, காட்கில் அறிக்கையை மறு ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இவ்வறிக்கை “கஸ்தூரி ரங்கன் அறிக்கை” என்றழைக்கப்பட்டது .

இவ்வறிக்கையில் பொருளாதார உணர்வயப்பட்ட மண்டலங்கள் (ESZ) என்ற பகுப்பை விட்டுவிட்டு 37% பகுதியை மட்டும் சுற்றுச்சூழல் உணர்வயப்பட்ட பகுதி (Ecologically Sensitive Area) என்றும், இதை தவிர்த்த எஞ்சியுள்ள பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகளை, வளர்ச்சி நடவடிக்கைகளை கல் குவாரி மற்றும் அணைக் கட்டுமான நிகழ்வுகளை , சுற்றுலா தள கட்டுமானங்கள் ஆகியவை இயற்கைக்கு ஊறு விளைக்காத வகையில் நடத்தலாம் என்று பரிந்துரைத்தது.

இத்தகைய விதி தளர்வுகள் மூலம் “வளர்ச்சி நடவடிக்கைகள்” என்ரா பெயரில் ஆபத்தான கட்டுமானங்கள் இடர் வயப்பட்ட பகுதிகளில் நடந்தேற வழி வகுக்கப்பட்டது. இதற்குப் பின்னால் இருந்த வலிமை மிக்க கட்டுமான கும்பல் construction mafia ( பண முதலைகள் மற்றும் அரசியல் வாதிகள்) வெற்றிக் களிப்பில் மிதந்தனர்.

காரணம், கஸ்தூரிரங்கன் அறிக்கை இத்தகைய இடர்நிறைந்த பகுதிகளில், மாநில அரசுகள் உயரதிகாரிகள் குழுவை (high level authority) அமைத்து, அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் வளர்ச்சி நடவடிக்கைகளை அனுமதித்து கண்காணிக்க வழி வகுத்தது தான்.

இது ஊழலுக்கு, அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-பணக்காரர்கள் ஒட்டுறவை தண்ணீர் விட்டு வளர்க்கும் செயலன்றி வேறல்ல! இந்த குழுக்களால் விவசாயிகளின், ஆதிவாசிகளின், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த உபயோகமும் இல்லை. மாறாக, இவர்களது பெயரைக் கூறி அரசியல்வாதிகளும், பணமுதலைகளும், அதிகாரிகளின் கூட்டு மூலம் வளர்ச்சி அடைவர்.

இரண்டு அறிக்கைகளும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பேசினாலும், அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், கட்டுப்பாடுகளில், தடுப்பு நடவடிக்கைகளில் முற்றிலும் மாறுபடுகின்றன.

# காட்கில் அறிக்கை , இப்பகுதியை தரம் பிரித்து உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் “வளர்ச்சி” நடவடிக்கைகள் சிலவற்றிற்கு தடையும், மற்ற நடவடிக்கைகளுக்கு கண்டிப்பான கட்டுப்பாடும் விதித்து இயற்கையை பேண பரிந்துரைகள் செய்தது.

# கஸ்தூரிரங்கன் அறிக்கையோ, இயற்கையைப்பேணும் பொழுதே வளர்ச்சி பாதிக்கப்படாதவாறு முன்னேறுவதை மையமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இடர்பகுதியின் அளவை குறைத்து, மற்ற பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க விதிகளை தளர்த்துவதன் மூலம் இயற்கைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சம நிலை பேணப்படும் என ஜால்சாப்பு செய்தது.

இதனுடைய வெளிப்பாடுதான் வயநாட்டு நிலச்சரிவு என்பதை உணரும்பொழுது வேதனையாக உள்ளது.

கஸ்தூரிரங்கன் அறிக்கையை தூக்கிப் பிடித்தவர்கள் – அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, காங்கிரசாராக இருந்தாலும் சரி, இந்தப் பேரழிவிற்கு பதில் கூற வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை கடைப் பிடித்ததால் இயற்கை பேணப்பட்டதா ? சமநிலை எட்டப்பட்டதா? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

ஏனெனில், இக் கட்சிகளின் நிலைப்பாடு ஆட்சியிலிருப்பதை பொறுத்து மாறுபடுகிறது எனலாம்.

கேரள முன்னாள் முதல்வர் ஊம்மன் சாண்டியும் இன்றைய முதல்வர் பினாரயி விஜயனும் இவ்விரு அறிக்கைகளையும் ஆதரித்தும் சில வேளைகளில் எதிர்த்தும் பேசி வந்தனர் என்பது வரலாறு. இதனால் கொள்கை முடிவுகள் எதிர்பார்த்த விளைவுகளை கொடுப்பதற்கு முன் சமரசங்களால் தோல்வியடைந்தன.

விளைவு விபரீதமானது, பலியானது எளிய மக்களே அன்றி வேறு யார்?

இந்தப் பேரழிவில், இயற்கை சீற்றத்தில் பருவநிலை மாற்றத்திற்கு பங்கில்லையா? அதை மனித முயற்சி தடுத்திருக்குமா? என்ற கேள்வி நியாயமானது தான். ஆனால், பருவநிலை மாற்றத்திற்கான காரணமான புவி வெப்பமடைவது நாம் எதிர் கொள்ளும் சவால் ஆகும்.

எல் நினோ (El Nina) கடல்நீர் வெப்பமடைவதால் ஏற்படும் சுழற்சி மாற்றத்தால் மழைக் குறைவையும், வறட்சியையும் குறிக்கிறது. இதனால் 1997-1998 மற்றும் 2015-2016 காலங்களில் வயநாடு பாதிப்படைந்தது.

லா நினா (La Nina) கடல்நீர் குளிர்வதால் ஏற்படும் சுழற்சி மாற்றத்தால் அதீத மழையை கொட்டுகிறது. இதனால் நிலச்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதை குறிக்கின்றது. இந்த நிலையினாலும் வயநாடு 2010-2011, 2020-2021 காலங்களில் பாதிப்படைந்ததுள்ளது. இப்பொழுது மீண்டும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது .

ஆக இவ்விரு நிலைகளுமே இந்தியாவை குறிப்பாக மேற்கு தொடர்மலைப் பகுதியை, வயநாட்டை, பாதிக்கும் பொழுது இதை எதிர்கொள்ள இந்திய மக்களும், அரசுகளும் இயற்கையோடு இயைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டுமே ஒழிய, இயற்கைக்கு புறம்பான வளர்ச்சியில் மோகம் கொண்டு அலைவதில் பயனில்லை .

இந்த பாடத்தை மீண்டும், மீண்டும் பல உயிர்களை பலி கொடுத்த பின்னரும் உணரவில்லை என்றால், விடிவு காலம் நமக்கு உண்டா?

சுற்றுச் சூழலை பாதுகாத்து பேணுவதும், நீர்நிலைகளை கட்டிக் காப்பதும் , சுவாசிக்கும் காற்றை மாசுபடாமல் பாதுகாப்பதும் நமக்கு மட்டுமல்ல, நமது வருங்கால சந்ததியினர்க்கும் உதவக் கூடிய செயல்களாகும் என்பதை நினைவில் கொண்டு விதிகள் சமைப்போம், அதை இறுகப் பற்றி ஒழுகுவோம்!

கட்டுரையாளர்; ச. அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time