சுகப் பிரசவங்கள் குறைவதற்கு இத்தனை காரணங்களா?

-கு.சௌமியா

சிசேரியன் அதிகரிக்கிறது. சுகப் பிரசவம் குறைகிறது.. இதற்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்கலாம். அப்படி விவாதிக்கும் போது சிலர் குற்றவுணர்வால் குறுகிப் போக வேண்டியிருக்கும். பொதுவாக பெண்கள் சிசேரியனை விரும்புவதில்லை. அது அவள் மீது எவ்வாறு திணிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்;

“20 ஆண்டுளுக்கு முன்பு பெண்கள் அதிக அளவில் வேலைகளை செய்ததால் அதிகளவில் சுக பிரசவம் நிகழ்ந்தது. ஆனால்< கால மாற்றத்தால் தற்போது உள்ள பெண்களுக்கு பணிச்சுமை பெருமளவில் குறைந்து உள்ளது. முன்பெல்லாம் பெண்கள்   பிரசவக்  காலங்களின்   போது  அதிக  வேலை  செய்வார்கள். குடம் தூக்குவது போன்ற  வேலைகளில்  பிரசவத்திற்கு  முந்தைய  நாள்   வரை   செய்வார்கள்.  ஆனால்,  அவ்வாறான பணிச்சுமைகள்  பெண்களுக்கு  இப்போது இல்லை. இதனால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெறுவது அதிகரித்துள்ளது’’ என மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்கு   வலிமையான கண்டனங்கள்  எழுந்துள்ளன.  மாதர்  சங்கங்கள், முற்போக்கு  இயக்கங்கள்  அமைச்சரின் கருத்துக்கு   கடுமையான  கண்டனம்  தெரிவித்துள்ளனர்.

பணிச்சுமை  குறைந்ததால்  தான்   சிசேரியன்  அதிகரிப்பா?

காலங்காலமாக  பெண்ணின் உடல் மீதும்,  அவளது  கருப்பையின்  மீதும்  தன்  சொந்த  கருத்துகளை  திணிப்பதை  சமூகம்  வழக்கமாக  கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியே  சுகாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியின்  பேச்சும் .

அமைச்சர்  சொல்வது  போல் பெண்களுக்கு  பணிச்சுமை  குறைந்துள்ளதா?

நிச்சயமாக இல்லை.  முன்பை  விட   அதிகமாக  உழைக்க   வேண்டிய  நிர்ப்பந்தம் பெண்களுக்கு  ஏற்பட்டுள்ளது. பல்வேறு  துறைகளில்  இன்று  பெண்கள்  பணிபுரிவதை   பார்க்க முடிகிறது. அலுவலகப்   பணிகள், களப்பணிகள்,  மருத்துவமனைகள், தொழிற்சாலைகள்  என  பெண்களின்  உழைப்பு  இச்சமூகத்தில்  நிறைந்துள்ளது.  ’வைட்  காலர்’   வேலைகள்  என்று சொல்லக்கூடிய  பணிகள் மட்டுமல்ல,  அமைப்பு  சாரா  தொழில்களில்  பெண்கள் அதிகமாக பணியாற்றி வருகிறார்கள்.

பெண்களின்  உழைப்பை  மலிவானதாக  தொழில் நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன. ஒரே வேலை செய்தாலும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஊதிய பாரபட்சம் நிலவுகிறது.

விலைவாசி  உயர்வு,  குடும்ப  பாரம் போன்ற  நிர்பந்தத்தால்  அதிக  நேரம்  பொருளாதாரத்தை  ஈட்ட   பெண்கள்   உழைக்க  வேண்டியுள்ளது. வேலை  என்பது  பெண்களுக்கு  பொருளாதார விடுதலையை  ஏற்படுத்தித்  தரும் என்று  சொல்லப்பட்டாலும், பெண்களின்  உழைப்பையும்  உடல்  ஆரோக்கியத்தையும் பணிச்சுமை  சுரண்டுகிறது.

வீட்டு வேலைகளில் பெண்கள். நன்றி; இந்து தமிழ் திசை

பொருளாதார   விடுதலையை  கொடுக்க   வேண்டிய   வேலை, உடலை  உருக்குலைப்பது  ஒருபுறமிருக்க,   இவ் வலிகளிலிருந்து   வெளிவர  ஆறுதலாக   இருக்க வேண்டிய  குடும்பமும்  தன்  பங்கிற்கு   பெண்ணின்   உழைப்பை  உறிஞ்சுகிறது.  இவையெல்லாம் கவனத்தில்  கொண்டால்   வேலை செய்யும்  பெண்கள்  இரட்டை  உழைப்பை  செலுத்துகிறார்கள்.  இப்படிப்பட்ட பெண்களுக்கும் சுகப் பிரசவம் கைகூடுவதில்லை.

நாளெல்லாம்  உழைத்து  களைத்து  ஓய்வெடுக்க  நேரமில்லாத  பூ கட்டி விற்கும்  அக்கா,  வீட்டு  வேலையை  தன்   வீட்டிலும்  பொருளாதாரத்திற்காக  நான்கைந்து   வீடுகளில்  செய்யும்  அம்மா,   படித்துகொண்டே  அம்மாவுக்கு  உதவியாக  சிமெண்ட்  கலவை  கலக்கும்  என் அருமை தங்கை  ஆகியவர்களின்    வலியை  நேரடியாக  பார்க்காததால்,  உணராததால்   உதிர்ந்த  வார்த்தைகளே அமைச்சரின்  பேச்சு  என்பதில்  மாற்றுக்  கருத்து  இல்லை.

பணிச்சுமை  குறையவில்லை,  அப்படியிருக்க  சிசேரியன்  அதிகரிப்பதற்கு  என்ன காரணம்?

இன்றைய  இந்தியா  அறிவியலில்  வளர்ந்துள்ளது, ஆனால்  மக்கள் நலனிலும் பகுத்தறிவிலும்  முற்போக்கான  மாற்றங்கள்  இன்னும்  பெரிதாக  நிகழவில்லை. காயும்  பழமும்  சாப்பிடுவதே   ஏழை  எளிய  மக்களுக்கு  பல  நாட்கள்  கனவாகவே   இருக்கிறது.  விலைவாசி  உயர்வினால்  போதுமான  வருமானமில்லாததால்  ஊட்டச்சத்தான  உணவை சாப்பிட  முடிவதில்லை. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் காரணமாக மண் சத்திழந்து போனதால் சாப்பிடும் உணவின் தரமும் குறைந்துள்ளது.

வீட்டு ஆண்களுக்கு சத்தான உணவைத் தந்துவிட்டு, மிஞ்சிப் போன பழையதை சாப்பிடும் பெண்கள் இன்றும் உள்ளனர். ஆண்கள் வெளியில் இஷடத்திற்கு வாங்கி சாப்பிடக் கூடியவர்களாகவும், பெண்களோ தங்களை வருத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு நல்ல உண்வைத் தரக் கூடியவர்களாகவும் உள்ளனர்.

இதனால் பொதுவாகவே  பெண்கள் உடல் வலிமையை  இழந்துள்ளனர்.  ஏழை  எளிய  பெண்களுக்கான  மகப்பேறு  உதவித்தொகை  திட்டம்  அரசால்  கொண்டு வரப்பட்டாலும்,  நடைமுறைப்படுத்துவதில்   சிக்கல்கள்  இருக்கின்றன. உதவித் தொகை  வங்கி  கணக்கில்லா  பெண்களுக்கு  செல்வதில்  சிக்கல்  உள்ளதாக  கள நிலவரம்  சொல்கிறது. இது  விளிம்புநிலை  பெண்களின் சிக்கல்  என்றால்  நடுத்தர  வர்க்க  பெண்களில்  சிக்கல்  வேறு  விதமாக உள்ளது.  எந்நேரத்தில்  குழந்தை   பிறந்தால்  குடும்பத்திற்கு  நல்லது  என்று  ஜோசியர்  பெண்ணின்  கருப்பையை கட்டுப்படுத்தும் விதமாக  முடிவெடுப்பார். இதற்கெதிராக  வாயைத்  திறக்கமுடியாத  பெண்கள்  தன்  குடும்பத்தின்  நிர்பந்தத்தால்  சிசேரியன்  மூலம்  குழந்தை  பெற்றுக் கொள்ள  சம்மதிக்கிறார்கள். இவையெல்லாம்  சிசேரியன்  அதிகரிப்பதற்கான  சமூக  காரணங்கள்.

சிசேரியன்  செய்வதற்கான  மருத்துவ  காரணங்கள்  என்ன?  விளக்குகிறார் மருத்துவர்  அனுரத்னா,  ”தமிழ்நாட்டை  பொறுத்தவரை  சுகாதாரத் துறை  சிறப்புடன் இயங்கி வருகிறது.  முன்பை  விட  தாய்சேய்  இறப்பு  விகிதம்  குறைந்துள்ளது. இதனை  அமைச்சரும்  அவரது  பேச்சில்  ஒப்புக்  கொள்கிறார்.  ஈருயிர் துடித்துக்  கொண்டிருக்கையில்    ஒரு   மருத்துவராக உயிரை   பாதிக்கும்  எந்த முயற்சியையும்  எடுக்க  முடியாது.  10  சதவீதம்  ஆபத்திருந்தாலும்  சிசேரியன்  மூலம்   உடனே  குழந்தையை  வெளியில்  எடுக்க  தான்   பார்ப்போம். அந்நேரத்தில்  சுகப்பிரசவ   செய்வதற்கான  முயற்சி   எடுப்பதற்கான   வாய்ப்புகள்   குறைவு.   உயிருக்கு   சிறிதேனும்  ஆபத்து நேராமல்  இருக்க  மருத்துவர்களாகிய   நாங்கள்  அறிவியலை   கையிலெடுக்கிறோம்.  சிசேரியன் மூலம் தாய்  சேய் நலன்  பாதுகாப்பதோடு  பிரசவிக்கும்  கால  அளவும்  குறைகிறது. பணிச்சுமைக்கும்  சிசேரியனுக்கும்   தொடர்பு  இல்லை”  என்று  கூறுகிறார்.

சில தனியார் மருத்துவமனைகளில் சுகப் பிரசவத்திற்கு வாய்ப்பு இருந்தாலுமே கூட பணம் அதிகம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சிசேரியனை கட்டாயப்படுத்துவதும் நடக்கிறது.

ஆக, நவீன விஞ்ஞான வளர்ச்சியால் மிக்சி,கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்றவை வேலைகளை எளிமைப்படுத்தி உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆயினும், பெண் என்பவள் எப்போதும் வேலை பார்த்த வண்ணம் தான் உள்ளாள். பெரும்பாலான குடும்பங்களில் அறிவிக்கப்படாத வேலைக்காரியாகத் தான் செயல்படுகிறாள். இதனால், அவளுக்கு நல்ல உண்வை சாப்பிடுவதற்கும்,  உடற்பயிற்சி செய்வதற்கும் கூட நேரம் இருப்பதில்லை. சில  குடும்பங்கள் பெண்ணானவள் உடற்பயிற்சி செய்வதை அனுமதிப்பதில்லை.

சுகாரத்துறை  அமைச்சர்  என்ற  உயர்  பொறுப்பில் இருந்தாலும், இந்த சமூகத்தில் ஆண்களின் பொது புத்தியில் படிந்திருக்கும்   ஆணாதிக்க  பார்வைக்கு மா.சுப்பிரமணியனும் விதிவிலக்கில்லை என்பதே உண்மை!

கட்டுரையாளர்; கு.சௌமியா

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time