காற்றும் ஓர் உணவே – இதை கற்றுணர்ந்தால் கொரொனா தூசே!

 சாவித்திரி கண்ணன்

நம் உடலுக்கு வாயால் நுகரப்படும் திட உணவு, திரவ உணவை விடவும் முக்கியமான வேறொரு உணவு உள்ளது. அது நம் நாசியால் நுகர்ந்து நுரையீரலுக்கு உணவாகும் காற்றாகும்.காற்றை எப்படி நம் உடலுக்கு கையாள வேண்டும் என்பதை மட்டும் ஒருவர் உணர்ந்து கொண்டால், அவரால் உலகில் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளமுடியும் என்பது சித்தர்கள் வாக்கு!

உங்கள் கண்களை மூடி நீங்கள் மூச்சை எவ்வாறு உள்ளுக்கிழுத்து வெளிவிடுகிறிர்கள் என்பதை ஆழ்ந்து பாருங்கள்! ஒவ்வொரு சுவாசத்தையும் அனுபவித்து உணர முடிந்தவர்களின் சித்தம் வெகு தெளிவாக இருக்கும்!

மூச்சை சிறப்பாக கையாள்வதற்கு யோகாசனங்கள் அல்லது பிரணாயாமங்கள் அவசியமாகும். மூச்சை சிறப்பாக கையாள முடிந்தால், நம் உணர்வுகளையும், உடலையும் சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்! நடிகர் சிவகுமார் அவர்கள் சினிமா துறையில் இருந்த போதும் நெறிபிறழாமல் வாழ்ந்தார் என்றால்,அதற்கு அவர் சிறுவயது முதல் செய்து வந்த மூச்சு பயிற்சி மற்றும் யோகாசனங்களும் முக்கிய காரணமாகும்!

நம்மில் எத்தனைபேருக்கு நுரையீரலுக்கு தூய ஆரோக்கியமான காற்றுணவை தரும் வாய்ப்புள்ளது…?

நுரையீரலால் பெறப்படும் காற்றுணவே நம் உடலுக்கு மிகப் பெரும் பலத்தைத் தருகிறது! மூளையை சுறுசுறுப்பாக்குகிறது! சித்தத்தை தெளிவாக வைக்கிறது! மலைபோன்ற உறுதியை மனத்திற்குத் தருகிறது ! தன்னைத் தானறியும் நுண் உணர்வை மேம்படுத்துகிறது. நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் ஓய்வில்லாமல் உழைக்கும் அளப்பரிய ஆற்றலை அள்ளி வழங்குகிறது. ஆனால் இவ்வளவு பெருமைவாய்ந்த, செலவில்லாத காற்றுணவை நம்மில் எத்தனைபேர் முறையாகவும், முழுமையாகவும் உட்கொள்கிறோம்?

சுவாசத்தின் அளவே ஆயுளை நிர்ணயிக்கும்!

நம்மில் பலர் நம் நுரையீரலின் மொத்த கொள்ளவுக்கு மூன்றில் ஒரு பங்கு காற்றையே சுவாசிக்கிறோம். அதாவது மேலெழுந்தவாரியாகத் தான் சுவாசிக்கிறோம். ஆனால் நாம் எந்த அளவுக்கு அதிகமாக காற்றை நுகர்ந்து நுரையீரலுக்கு பரிமாறுகிறோமோ அந்த அளவுக்கு பலம் பெறுவோம் ஆழ்ந்தும், நிதானமாகவும் சுவாசிப் பவனின் ஆயுள் அதிகரிக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமல்ல, உயிரினங்களுக்கும் பொருந்தும் கோட்பாடாகும். நிமிடத்திற்கு 38 முறை மூச்சிழுத்து விடும் முயலின் ஆயுள்காலம் 8 ஆண்டுகளே! ஆனால், நிமிடத்திற்கு 5 முறை மட்டுமே சுவாசிக்கும் ஆமையின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாகும்! நீர்வாழ் விலங்கினமான ஆமையை தெய்வாம்சம் பொருந்தியதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆமையின் நீர் வழித்தடத்தை பின்பற்றியே பல நாடுகளை கண்டறிவார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சராசரி மனிதன் நிமிடத்திற்கு 18 முறை சுவாசிக்கிறான். மனிதன் நடக்கும்போது வேகத்திற்கேற்ப சுவாசம் 50% அதிகரிக்கும். படுத்தாலோ சுவாசம் பாதியளவாகிவிடும். ஆகவே ஒருவர் படுக்கும் நேரத்தை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறாரோ அந்த அளவுக்கு ஆயுளும் ஆரோக்கியமும் பெறுவார். நிமிடத்திற்கு 9 முறை சுவாசிப்பவர் ஓங்கிய ஆயுள் பெறுவார் அதனால்தான் இன்றும் கூட வள்ளலார் வழியில் மரணமில்லா பெருவாழ்வுக்கு முயற்சிப்பவர்கள் தூக்கத்தை கணிசமாகவோ அல்லது முற்றாகவோ துறந்துவிடுகிறார்கள். (படுத்த படுக்கையாய் இருக்கும் நோயாளியும் கூட ஓரளவு உடல்தேறியவுடன் முதலில் உட்கார்ந்து ஓய்வெடுக்கவும், பிறகு உலாத்தியபடியே உடலைத் தேற்றவும் வேண்டும்.)

ஆன்மிகத்தில் இருப்பவர்களின் முதல்படியே வாயால் உட்கொள்ளும் உணவுகளைக் குறைத்து நாசியால் நுகரும் காற்றின் அளவை அதிகப்படுத்துவது தான். சராசரியாக நாம் ஒருமுறை சுவாசத்தில் 500 மில்லி காற்றை உள் இழுக்கிறோம் என்றால் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் இதைக்காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக மூச்சிழுப்பார்கள்!

நம் நுரையிரலில் காற்றையடைத்து வெளியேற்றும் கலை ஒன்று தெரிந்தால் போதும் கடைசி காலம் வரை காலனை காலால் மிதிக்கும் பேராற்றலோடு திகழலாம்!

சித்தர்களும், யோகிகளும், தவஞானிகளும் இந்தக் கலையை கைவசப்படுத்தியவர்களே!

உடம்பை பேண முடியாதவர்களால் அறிவில் உயர்ந்தோங்க முடியாது. இதனால்தான் திருமூலர்,

உடம்பால் அழியில், உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்றெழுதினார்.

நம்மில் பெரும்பாலோர் உடம்பினை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை உடம்பு விஷயத்தில் அவ்வளவு அலட்சியமாக உள்ளனர். அப்படி அலட்சியப்படுத்தியவர்கள் எவ்வளவு பெரிய பதவி, அந்தஸ்த்து, செல்வம், பெருமை பெற்றிருந்தாலும் அது எதனாலும் அவர்கள் இழந்த உடல் நலனை மீட்டெடுக்கவே முடியாது.

நம் உடல் என்பது மிக உன்னதமானது. அண்ட சராசரங்களின் அம்சமும் இந்த எண்ஜான் உடம்பிற்குள் உள்ளது. இயற்கையின் பேராற்றல் நிறைந்த பொக்கிஷமே இவ்வுடல். இவ்வுடலை பேண உள்ளத்தை தூய்மையாக வைத்திருத்தல் அவசியம். உடல் நலத்திற்கான நிபந்தனையாகவே உள்ளத் தூய்மையை அறிந்து கொள்வோம்.

இயற்கையின் பேராற்றலும், மனித உடலும் வேறுவேற்றல்ல, இயற்கையின் பேராற்றலே இணையற்ற மருத்துவராய் நம் உடலில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டுள்ளது….!

’அறம்’ சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time