நீர் மேலாண்மையில் தமிழக ஆட்சியாளர்களின் தற்குறித் தனத்திற்கு தற்போதைய காவிரி நீர் தினசரி 15 டிஎம்சி கடலில் சென்று வீணாவதே சாட்சியாகும். காவிரி பாசன கடைமடை பகுதிகளில் பயிர்கள் தண்ணீர் வரத்தின்றி வாடிக் கிடக்கின்றன..! மணல் குவாரிகளின் விளைவால் வெள்ள நிவாரண முகாம்கள்..
காவிரி ஆற்றுப் படுகைகள் மணல் குவாரிகளால் பள்ளத்தாக்குகளாகி கிடப்பதால் காவிரி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து டெல்டா மாவட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் நிவாரண முகாம்களுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். காவிரியில் வரும் தண்ணிர் கிளை ஆறுகள் வழியே வாய்க்கால்களில் பயணப்பட்டு பயிர்களை செழிக்கச் செய்வதே காலாகாலமாக நடைபெற்று வந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் உயிர்களை காவு கேட்டு குடியிருப்புகளை மூழ்கடித்து வருவதை அலசுகிறது இந்தக் கட்டுரை;
காவிரியில் தமிழகத்திற்கான பங்கை கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருவதை நாம் அறிவோம். காவிரி ஒழுங்காற்றுக் குழு ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறக்க பரிந்துரைத்த போதிலும், அதற்கு கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. அதே சமயம் கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்போது பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பியதால், உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி, கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஜூலை 10ஆம் தேதி 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், ஜூலை 29ஆம் தேதி 100 அடியாக அதிகரித்தது. ஜுலை 30-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மேட்டூர் அணை நீர்மட்டம் ஆகஸ்ட் -3 காலை 8 மணி நிலவரப்படி 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.50 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு 1,57,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ள நிலையில், சுமார் 1,50,000 அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 13 முதல்15 டி.எம்.சி வரை காவிரி நீர் கொள்ளிடத்தின் வழியாக வீணாக கடலில் கலக்கிறது.
தலைஞாயிறு, பஞ்சநதிக்குளம், நாலாம் சேத்தி உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு வர வாய்ப்பு குறைவு என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து பின்னர் அங்கிருந்து திறக்கப்பட்டு திருச்சி வழியாக முக்கொம்பு வரும். பின்னர் அங்கிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் கல்லணைக்கும், கொள்ளிடத்திற்கும் செல்லும். கல்லணைக்கு செல்லும் தண்ணீர்தான் கடைமடைக்கு வரும். கல்லணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மிக மிக குறைவான அளவில்தான் கடைமடைக்கு சென்று சேர்கிறது.
சென்ற ஆண்டு சீர்காழி மற்றும் கொள்ளிடம் தாலுகா பகுதிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு 50 நாட்களைக் கடந்தும் சரிவர கடைமடை பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்து சேரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது கவனத்திற்கு உரியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குளம் குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படும் நிலையில், அரசின் திட்டமிடாத செயல் காரணமாக ஒவ்வொரு நாளும் பல டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையாறு என்ற இடத்தில் கடலில் கலந்து வருகிறது.
காவிரியில் வந்த தண்ணீர் வாய்க்கால் வழியாக தங்கள் பகுதிக்கும் வழக்கம் போல வரும் என எதிர்பார்த்த புதுக்கோட்டை மாவட்டத்தின் கறம்பக்காடு, செரியலூர், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, வல்லவாரி, அரசர்குளம், நாகுடி மற்றும் பல்வேறு பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.
தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மவட்டங்களின் விவசாயப் பகுதிகளுக்கே காவிரி நீர் சரியாக கிடைப்பதில்லை.
காவிரியின் கடைமடை பகுதியான கடலூர் மாவட்டத்தின் வீராணம் ஏரிக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகளும் வாடுகின்றனர். வீராணத்தை நம்பித் தான் சென்னைவாசிகளும் உள்ளனர்.
இது போல திருச்சி மாவட்ட கடைமடை விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து பேசிய திருச்சி செளந்திரராஜன், ”காவிரியில் வரும் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு வராமல் இருப்பது சில ஆண்டுகளாவே தொடர் நிகழ்வாக உள்ளது. மழை காலம் வருவதற்கு முன்னால் கிளை ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை பார்வையிட்டு நீர்வரத்தின்மையால் புல்.பூண்டுகள்,செடிகள் முளைத்தும், மண்மேடிட்டும் இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்து நீர்வழிப் பாதையை செப்பனிட்டு வைக்க வேண்டியது பொதுப் பணித் துறையின் தலையாயக் கடமை. ஆனால், நீண்ட கால அனுபவங்கள் இருந்தும் துரைமுருகன் , எ.வ.வேலு போன்ற அமைச்சர்கள் இதில் எந்த அக்கறையும் காட்டாமல் அலட்சியம் காட்டுவது மன்னிக்க முடியாத குற்றமாகும்” என்றார்.
காவிரி ஆற்றுப் படுகைகளிலும், அதன் கிளை ஆற்றுப் படுகைகளிலும் எங்கு எங்கெல்லாம் மணல் குவாரிகளை அமைத்து சட்டப் பூர்வமாக கொஞ்சமும்,சட்ட பூர்வமற்ற முறையில் அதிகமாகவும் மணலை அள்ளி பள்ளத்தாக்குகளாக்கிவிட்டனர் ஆட்சியாளர்கள். அதன் பலனாகத் தான் காவிரி நீர்வரத்து பகுதியில் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் நுழைந்துள்ளது. சாலைகள் விழுங்கப்பட்டுள்ளன. சிறு,சிறு பாலங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளன. வெள்ள நிவாரண முகாம்களில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளில் காவிரியில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து சுமார் 80 முதல் 100 டி.எம்.சி வரை கடலில் வீணாவதை தடுக்க ஆங்காங்கே ஏழட்டு கீ.மீ இடைவெளியில் தடுப்பணைகள், கதவணைகள் கட்டினால் நீரை சேமிக்கலாம் என பொதுப் பணித்துறை முன்னாள் பொறியாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளை அமைப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவேணும் அமைச்சர் துரைமுருகனும், முதல்வர் ஸ்டாலினும் கதவணை, தடுப்பணைகள் விவகாரத்தில் காட்டினால் ஏப்ரல், மே மாதங்களில் கர்நாடகாவிடம் மடிப் பிச்சை கேட்க வேண்டிய அவலத்தை தவிர்க்கலாம்.
சாவித்திரி கண்ணன்
தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற வுடன் மக்கள் அதிக அளவில் எதிர்பார்ப்புகளுடன் இருந்தனர். காரணம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆனால் அவருடைய செயல்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை தவிடு பொடி ஆக்கின. தற்போது அக்கட்சியில் அமைச்சராக உள்ள துரைமுருகன் மிகவும் அனுபவம் உள்ளவர் .அவரிடம் நீர் நிலைகளை காப்பாற்றுவதற்கான ஒரு துறை உருவாக்கப்பட்டு அதன் அமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர் பதவியேற்ற நாளிலிருந்து நானும் சட்டசபையில் இருந்தேன். ஒவ்வொரு மானிய கோரிக்கையின் போதும் நீர்நிலைகளை காப்பாற்ற அவர் எடுத்துக் கொண்ட முயற்சியை அவருக்கே உரிய பேச்சாற்றலை பயன்படுத்தினார். புள்ளி விவரங்களை கூறி நீர்நிலைகளை நேர் படுத்தியதாக பதிவு செய்தார். அப்போது நீர் நிலைகளில் தூர் வரப்பட்டதாகவும் ஆகாயத் தாமரைகள் அகற்றப் பட்டதாகவும் தெரிவித்தார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பல்வேறு சொந்த காரணங்களுக்காக கடந்த ஒரு வருடத்தில் சாலை மார்க்கமாக காரில் வேலூர், திருச்சி, மதுரை, தேனி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வர நேரிட்டது. அப்போது நான் தெரிய வந்தது. சட்டசபையில் துரைமுருகன் கொடுத்த புள்ளி விவரங்கள் அத்தனையும் பொய் என்று.
நான் சென்று வந்த வழித்தடங்களில் இருந்த ஆறுகளில் தண்ணீர் இல்லை. ஆனால் தூர்வரப்பட்டதற்கான அறிகுறி எதுவுமே இல்லை. தண்ணீர் இருந்த இடத்தில் ஆகாயத்தாமரைகள். பல இடங்களில் தண்ணீர் அதன் போக்கில் செல்வதற்கு வழி இல்லாமல் செடி கொடி என அடைப்புகள். சுமார் 60 ஆண்டு கால அரசியல் அனுபவம் இதில் பல ஆண்டுகள் அமைச்சர் பொறுப்பு, வகித்த,வகித்துக் கொண்டிருக்கும் துரைமுருகன் துறையே இந்த லட்சணத்தில் என்றால் மற்ற துறைகள் பற்றி கேட்கவா வேண்டும்?
மெனக்கெட்டு நீர்நிலைகளை சீர் படுத்தா விட்டால் தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தாலே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக ஆட்சியாளர்களுக்கு காது கேட்குமா?
மணற் கொள்ளைக்கு துணை போவதாகவும் ஒழுங்காக ஏரி மற்றும் குளங்களில் தூர் வாரததும் இதற்கு காரணம் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை சரி செய்ய அரசு ஆர்வம் காட்டினால் நல்லது.
மணற் கொள்ளைக்கு துணை போவதாகவும் ஒழுங்காக ஏரி மற்றும் குளங்களில் தூர் வாரததும் இதற்கு காரணம் என பல அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனை சரி செய்ய அரசு ஆர்வம் காட்டினால் நல்லது.
அனுபவஸ்தர் , மிகுந்த சொல்வாக்கு உள்ளவர் இன்றைய நீர்வளம் துறை அமைச்சர்.
அவரின் அனுபவம் செல்வாக்கு எல்லாம் சம்பாத்தியத்தில் மட்டுமே உள்ளது. இந்த வயதிலும் கிஞ்சித்தும் பொது நல நோக்கு ஒன்று என்பதே இல்லை.