இத்தனை சிறிய எலுமிச்சைக்குள் எத்தனை பயன்கள்!

-அண்ணாமலை  சுகுமாரன்

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடியது எலுமிச்சை. இது பித்தத்தைப் போக்கும், புத்துணர்ச்சி தரும், தலைவலி தீர்க்கும், வாந்தியை நிறுத்தும், உடல் சூட்டைக் குறைக்கும்,  வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும்…! இந்தக் கட்டுரையில் எலுமிச்சையின் இன்னும் பல சிறப்புகளை பார்ப்போம்.

சித்த மருத்துவத்தில் பழம் என்றால் அது எலுமிச்சையைத் தான் குறிக்கும்.  சித்த மருத்துவ நிபுணத்துவம் என்பது  சித்த வைத்தியத்துடன் நின்று விடுவதில்லை. சித்த மருத்துவத்தின் தத்துவங்களில்  சிறந்து  விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்றவற்றை ஐயந்திரிபுர  கற்றுணர வேண்டும்.  இவை அத்தனையிலும் எலுமிச்சை உபயோகம் உள்ளது.

எலுமிச்சை வெறும் சாதாரண கனியல்ல, மாம்பழம் வாழப்பழம் போல் உண்பதற்காக மட்டும் உருவானதல்ல.  அது ஒரு ஜீவனுள்ள கனி. கனிகளில் பறித்த பின்னும் ஜீவனுடன் இருப்பது எலுமிச்சைதான். அது மங்களகரமானது. மஞ்சள் நிறமே நேர்மறையான எண்ணங்களைத் தூண்டக்கூடியது. அந்த நிறத்தில் தான் எலுமிச்சை உள்ளது.

அது மட்டுமா? திருஷ்டி தோஷத்தைப் போக்க வணிக நிலையகளிலும் வீடுகளிலும் தவறாமல் எலுமிச்சை வாசலில்  இடம் பெற்றிருக்கும். நமக்கு ஏதாவது குறை இருந்தாலும் எலுமிச்சையில் சக்தியை ஏற்றித் தரும் பழக்கமும் இன்னும் இருக்கிறது. அதை மந்திரித்து தருவது என்பார்கள்.

நாம் வாழ்த்து பெற பெரியவர்களை எலுமிச்சை பழம்  தந்து பார்ப்போம். அவர்கள் நமக்கு ஆசி அளித்து எலுமிச்சையை வழங்குவார்கள். என்னமோ அதில் சக்தி இருப்பதை நம் மக்கள் தொன்மை காலம் முதல் அறிந்து உபயோகித்து வருகிறார்கள். வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமக்கு துணை வருவது  வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இதயத்தை பாதுகாக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். பொதுவாக எலுமிச்சையில் வைட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக் கூறுகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் கிடைக்கும்.

உடல் எடை குறைக்கவும், எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். இருமல், சளி இருந்தால் விலகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது.


ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு. எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.இதில் அதிகம்  உள்ள  வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. அதே சமயம் அதிகமாக எலுமிச்சை எடுத்துக் கொள்வது சிறு நீரகத்தை பாதிக்கும்.

எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும்.

மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம். குளிக்கும் போது  எலுமிச்சை தோலை உடலில் தேய்த்து குளிக்கலாம். உடம்பும் சுத்தமாகும். கிருமிகளும் நீங்கும். சந்தையில் எலுமிச்சை சோப்புகளும், ஷாம்புகளும் ஏராளம் உள்ளன.

வறட்சியான சருமம் கொண்டவர்கள் எலுமிச்சையை தவிர்க்க வேண்டும்.

எலுமிச்சை பழச்செடி ஒரு சிறிய செடிவகை ஆகும். குறு மரம். இதன் பழங்கள் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும்.  எலுமிச்சையின் தோற்றம், தாயகம்  சரிவர  தெரியவில்லை, இருப்பினும் எலுமிச்சை முதலில் வடகிழக்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் வளர்ந்ததாக கருதப்படுகிறது.

எலுமிச்சையின் மரபணு ஆய்வு, இது கசப்பான ஆரஞ்சு (புளிப்பு ஆரஞ்சு) மற்றும் சிட்ரான் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கலப்பினமாகும் என்று தெரிவிக்கிறது.அதிக உஷ்ணமுள்ள பள்ளத்தாக்குகளில் இது ஒரு காட்டுச் செடி போல வளர்ந்து பழங்களுடன் காட்சியளிக்கிறது.இந்தப் பழம் சாதாரண காய்கறிகளைப் போல் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றது.

பல வகையான எலுமிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் நாம் நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை ஆகிய இரண்டை மட்டும்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

மூலிகையின் பெயர் :- எலுமிச்சை.
தாவரப்பெயர் :- CITRUS MEDICA.
தாவரக்குடும்பம் :- RUTACEAE.
பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பழம்

காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சள் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும். வாயுவை அகற்றும், பசியை உண்டாக்கும்.

விரல் சுற்றிக்கு உதவும்,  நீரிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரை சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் சிறிது உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும்.

வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது. இலையைப் புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும், தழும்புகள் குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத் தான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி எலுமிச்சை எடுத்துக் கொள்வது வயிற்று பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடும். ஜீரண சக்திக்கு ஊறு விளைவிக்கும். இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். அப்படிப்பட்டோர் தவிர்க்கலாம் அல்லது குறைவாக பயன்படுத்தலாம்.

இது சமையலில், உணவுகளுக்குச் சுவை சேர்ப்பதற்காகப் பயன்படுகிறது. ரத்த அழுத்தம் குறைந்த தலைச் சுற்றல் இருக்கும்போது எலுமிச்சை சாறைக் குடித்தால் உடனடியாக உங்களது ரத்த அழுத்தம் சமநிலையை அடையும்.

மேலும், எலுமிச்சை சாறு உடல் நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மிகுந்த பயன்தரும் ஒரு பானமாகும். வயிற்றில் புண் இருப்பவர்கள் எலுமிச்சை சாறை அதிகம் சேர்த்துக் கொள்ள கூடாது.  எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.

இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும்.  பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும்.


மெல்போர்ன் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் ரோஜர் ஷார்ட், சில சொட்டு எலுமிச்சை சாறு மிக விலை மலிவான முறையில் கருத்தடை சாதனமாகவும், எய்ட்ஸ் கிருமி கொல்லியாகவும் பயன்படும் என்று கண்டுபிடித் துள்ளதாகவும்  பரிசோதனைச் சாலையில், எலுமிச்சை சாறு மிகவும் சக்திவாய்ந்த முறையில், மனித விந்துவையும், ஹெச்ஐவி கிருமியையும் கொல்கிறது என்றும், எலுமிச்சைச் சாற்றை கருத்தடை சாதனமாக உபயோகப்படுத்துவது புதிய கண்டுபிடிப்பு அல்லவென்றும், பழங்காலம் தொட்டு உபயோகப்பட்டு வருவது என்றும், சமீபத்தில் இது அறியப்படாமல் போய்விட்டது என்றும் அவர் கூறியதாக ஒரு தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 வருடங்களுக்கு முன்னர், மத்தியதரைக்கடல் பெண்கள், எலுமிச்சைச் சாற்றையே மிகவும் பொதுவான கருத்தடை சாதனமாகப் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் தெரிகிறது. சில கோயில்களில் ஸ்தல விருஷமாகவும் எலுமிச்சை மரம் இருக்கிறது.

கிராம்பு போன்ற இந்தியாவின் நறுமணப்பொருள்கள் போல இந்த எலுமிச்சையும் பண்டைய நாளில்  முக்கியமாக விளங்கி இருக்கிறது .
எலுமிச்சையின் தோற்றம் தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக இந்தியா மற்றும் மலேசியா பகுதிகளில் இருந்தது என நம்பப்படுகிறது.

எலுமிச்சை பழத்தின் உலகளாவிய பரவல் மற்றும் அதன் வரலாற்றை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை பார்ப்போம்;

அரேபியர்கள் மூலம் எலுமிச்சை வட ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயின் வரை பரவியது.

எகிப்தில் கி.மு. 700 ஆண்டுகளுக்கு முன்பே எலுமிச்சை பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.ரோமானியர்கள் காலத்தில் எலுமிச்சை ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு பரவியது. இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் எலுமிச்சை பயிர் செய்யப்பட்டது.

பட்டுப் பாதை போன்ற வர்த்தக பாதைகள் மூலம் எலுமிச்சை பல்வேறு நாடுகளுக்கு பரவியது.கடல் வழி வர்த்தகம் மூலமும் எலுமிச்சை உலகின் பல பாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு, பல நூற்றாண்டுகளாக வர்த்தகம், குடியேற்றங்கள், பயணங்கள் மூலம் எலுமிச்சை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி, இன்று உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பழமாக மாறியுள்ளது. அது  இப்போது தமிழ் நாட்டிற்கு மட்டும்  உரியதல்ல, உலகளாவிய பயன்பாடு கொண்டது ஆகிவிட்டது.

எலுமிச்சை உண்மையில்  பிரபஞ்ச  ஆற்றலை  சேமிக்கும்  ஒரு சிறிய storage battery  போல  விளங்குகிறது. சிறிது நேரம்  ஒரு எலுமிச்சையை கையில் வைத்து பிரார்த்தனை செய்து ஒரு நோய் வாய் பட்டவரிடம் தந்து பாருங்கள். அவரிடம் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம். எலுமிச்சை இன்னும் புரிந்து கொள்ளவேண்டிய  ஒரு கனி . !

கட்டுரையாளர்;  அண்ணாமலை  சுகுமாரன்

நம்ம ஊரு மூலிகைகள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time