எதுக்கு உள் ஒதுக்கீடு? இதை ஒரு போதும் ஏற்க மாட்டோம். இது பிரித்தாளும் சூழ்ச்சி..என அடித்தளத்தில் உழலும் அருந்ததியர்கான உள் ஒதுக்கீட்டை எதிர்கின்றனர். இதுக்கு என்ன டேட்டா இருக்கு? என்கிறார்கள். இதோ புள்ளி விபரங்கள்! தலித் தலைவர்களிடமும் பார்ப்பனீயம் எப்படி ஆழ ஊறிப் போயுள்ளது..! ஒரு ஆழமான அலசல்;
‘அடித்தளத்திலும் அடி நிலையில் இருக்கும் மக்கள் உயர வேண்டும், முன்னுக்கு வர வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், கச்சை கட்டி எதிர்க்கிறார்கள், தலித் தலைவர்கள். தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை உள் நுழைந்து ஆராய்ந்தால், தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ளேயே ஒரு பிரிவினர் தாழ்ந்த நிலையில் வைக்கப்பட்டு, எந்தப் பலனையும் பெறாமல் இருந்துள்ளனர். ஆகவே, அவர்கள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி அப் பிரிவினர் பயனடைய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் கொந்தளிக்கிறவர்கள் வேறு யாருமல்ல, தலித் தலைவர்களே…!
தலித் மக்களின் தானைத் தலைவியாக தன்னைச் சொல்லிக் கொள்ளும் மாயாவதி, சந்திர சேகர ஆசாத், ராம்தாஸ் அத்தாவாலே, சிராஜ் பஸ்வான், அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் (அவமானம்), டாக்டர் கிருஷ்ணசாமி, செ.கு. தமிழரசன் ஆகியோர் எதிர்க்கின்றனர். இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்த விசிக தற்போது தன்னை மாற்றிக் கொண்டு ஆதரித்து வருவது ஆறுதலாக உள்ளது.
அருந்ததியர்களுக்கு ஏன் உள் ஒதுக்கீடு தர வேண்டும்?
‘தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் முக்கிய பதவிகளில் உயர வேண்டும்’ என்று அரசியல் சட்டத்திலேயே இட ஒதுக்கீடு உருவாக்கிய வகையில் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ் நாட்டில் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக அடிமைத் தளையில் இருந்த அவர்களுக்கு ஒரு பிராயச்சித்தம் கிடைத்து விட்டது என நாமாக நினைத்துக் கொண்டு கள நிலவரம் தெரியாமல் இருந்தது பெரும் கொடுமை.
தாழ்த்தப்பட்டவர்களே தங்களுக்குள் சில தாழ்த்தப்பட்டவர்களை அடக்கி ஒடுக்கி, அவர்கள் மேலெழுந்துவிடாமல் எல்லா வாய்ப்புகளையும் அனுபவித்து வந்துள்ளது காலம் தாழ்ந்து தான் நம் கவனம் பெற்றது.
சேரிகளுக்குள் ஒரு தனிச் சேரியாக மிகவும் தீண்டப்படாதவர்களாக அருந்ததியர் வாழ்கின்றனர். இவர்களை ஆதிதிராவிடர்கள் எனப்படும் பறையர் சாதியினத்தாரும், தேவேந்திரகுள வேளாளர் எனும் பள்ளர் சாதியினரும் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி, ”சக்கிலிப்பய”, ”தோட்டிப் பய” என இழிவாக பேசி வந்துள்ளது தெரிய வந்தது.
தாழ்த்தப்பட்டோரில் பறை சாதியினர் அறிவில் சிறந்தோர், கூர்மையான புத்தி கொண்டோர், இவர்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நல்ல கவனம் பெற்றனர். கல்வி,வேலை வாய்ப்புகளில் முன்னேறினர். நில புலன்கள் வாங்கி ஒரு சிலர் வசதியும் கொண்டனர். அதே போல பள்ளர் சமூகத்தினரும் மேம்பட்ட நாகரீக வாழ்க்கை பெற்று நிலபுலன்களோடு சமூக அந்தஸ்தும் பெற்றுள்ளனர். ‘தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று குரல் எழுப்பி வருகின்றனர் என்றால், சொல்லவும் வேண்டுமா?
ஆனால், சக்கிலியர், தோட்டி, கம்பளத்தார், ஆதி ஆந்திரர் என அழைக்கப்படும் அருந்ததிய சாதியினர்களில் மிகப் பெரும்பான்மையினர் இன்றும் துப்புறவு தொழிலாளர்களாகவோ, சாக்கடையில் இறங்கி மலம் அள்ளுபவர்களாகவோ, மாட்டை அறுப்பவர்களாகவோ, ஊருக்கு ஒதுக்கு புறத்தில் ஆடு, மாடு மேய்பவர்களாகவோ தான் அடி நிலையில் உள்ளனர்.
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தொகை 1, 18, 57,500. அதில் அருந்ததியர்களின் எண்ணிக்கை 18, 61, 457. அதாவது மொத்த தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 15.7 சதவீதமாகும்.ஆனால், 18 சதவிகித தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு ஒரு சதவிகிதம் கூட கிடைக்காத நிலையே இத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பது 2007 ஆம் ஆண்டு வாக்கில் தான் பரவலான கவனம் பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியானது அருந்ததியர் இயக்கங்களான ஆதி தமிழர் பேரவை.. போன்றவற்றோடு இணைந்து பேரணிகள், மாநாடுகள் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி இதை கனிவோடு கவனத்தில் கொண்டார்.
நீதிபதி ஜனார்த்தனம் குழுவை நியமித்து ஆய்வு செய்யச் சொன்னதில் தான் அதிர்ச்சியான உண்மைகள் தெரிந்தன. அருந்ததியின மக்கள் கடையோரிலும் கடையோராக புறக்கணிக்கப்பட்டு வாழ்கின்றனர். 18 சதவிகித இடஒதுக்கீடு பற்றி அவர்களில் பெரும்பாலோருக்கு தெரியவே இல்லை. அப்படியே சிலர் படித்து வந்தாலும் நல்ல மதிப்பெண், பெறுகின்ற பறையர், பள்ளரோடு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆகவே அவர்களுக்கு சுமார் 3சதவிகித இட ஒதுக்கிடு செய்யலாம் என பரிந்துரைத்தார். இதை அப்போது காங்கிரஸ் கூட்டணியில் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த காரணத்தால் மத்திய அரசின் அனுமதியை எளிதில் பெற்று நிறைவேற்றித் தந்தார் கருணாநிதி.

இது மிகப் பெரிய திருப்பு முனையைஅருந்ததியார் வாழ்க்கையில் ஏற்படுத்தியது. 18 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் அது வரை மருத்துவ கல்லூரியில் ஆண்டுக்கு 15 முதல் 17 சீட்டுகளே கிடைத்தது அருந்தது மக்களுக்கு. ஆனால், 3 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்த ஆண்டே அது 86 சீட்டாக உயர்ந்தது. அதே போல பொறியாளர், கல்லூரி பேராசிரியர் ஒவ்வொரு பொறுப்பிலும் இவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் உயர்ந்தது. இவற்றை எல்லாம் பறையர்களும், பள்ளர்களுமே இது வரை தட்டிப் பறித்து வந்துள்ளது அப்போது தான் அம்பலத்திற்கு வந்தது.
”தாழ்த்தப்பட்டோர்களிடையே உள் ஒதுக்கீடு செய்து பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்..” என்கிறார்கள் மாயாவதி, கிருஷ்ணசாமி போன்றோர். ஆனால், நீதிமன்றமோ, ”தாழ்த்தப்பட்டோருக்குள் ஏற்கனவே பிரிவினை இருந்து வருகிறது. அந்த பிரிவினையை களைய சமதளத்தை உருவாக்குவதே இன்றைய தேவை” எனக் கூறியுள்ளது.
இந்த வகையில் ஆந்திராவில் தாழ்த்தப்பட்டோரில் மாலா பிரிவினர் தான் எல்லா வாய்ப்புகளையும் அதிகம் அனுபவித்தனர். மாதிகா பிரிவினரரோ எண்ணிக்கையில் அதிகம் இருந்தும் மிகக் குறைவான வாய்ப்புகளையே பெற்றனர். இதை களைய சந்திரபாபு நாயுடு கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டை முன்பு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதே போல பஞ்சாப் மாநிலத்திலும் தாழ்த்தப்பட்ட சீக்கியர்களில் பால்மிகி, மிஜாபி ஆகியோர் மிகப் பிந்தங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு உள் ஒதுக்கிடு வழங்கப்பட்டதை முன்பு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், இவை யாவற்றுக்கும் தற்போது நியாயம் கிடைக்கும் விதமாக, ”தாழ்த்தப்பட்டோருக்குள் உள் ஒதுக்கீடு செய்யாவிட்டால், ஒது ஒரு பிரிவினருக்கான நீதியை மறுப்பதாகும்’’ என உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு வரலற்று சிறப்பு வாய்ந்தது.
Also read
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போது பல முன்னேறிய சாதிகளும் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குள் அரசியல் அழுத்தம் தந்து நுழைத்துக் கொண்டன. இதையடுத்து சட்ட நாதன் கமிஷன் அமைக்கப்பட்டு பிற்படுத்தப்பட்டோரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டு 20 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. அந்த வகையில் தான் வன்னியர், முக்குலத்தோர் போன்றோர் உரிய வாய்ப்புகளை பெற்றனர் என்பது கடந்த கால வரலாறு. எனவே, எங்கெல்லாம் எளியோர் ஏற்றம் பெற முடியாமல் அடி நிலையில் உள்ளனரோ, அவர்களை ஏற்றம் காண வைக்க முன்னுரிமை தருவதே பண்பட்ட நவீன சமூதாயத்திற்கான அடையாளமாகும்.
சாவித்திரி கண்ணன்
பாட்டுக்கு பல்லவி போல எந்த பிரச்னைக்கும் பார்ப்பனீயம் பார்ப்பனீயம் என்று பாடுவது கடைந்தெடுத்த பித்தலாட்டம்
Excellent view Mr. Saviththiri Kannan