மோடி பாணியில் பயணித்த லேடி ஷேக் ஹசீனா!

-ச.அருணாசலம்

மக்கள் புரட்சிக்கு முன்பு ராணுவம் மண்டியிட்டது. இரும்பு பெண்மணி என்று இறுமாந்திருந்த பங்களா தேச பிரதமர் ஷேக் ஹசீனா மக்கள் சக்திக்கு முன்பு வெறும் துரும்பானார். மோடி பாணியை அப்படியே காப்பியடித்த ஹசீனா உயிருக்கு பயந்து இந்தியாவில் அடைக்கலம். வங்க தேசத்தில் என்ன நடக்கிறது..?

ஷேக்  ஹசீனாவின் மக்கள் விரோத சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர். மாணவர் போராட்டத்தை ஒடுக்க  ஷேக் ஹசினா உத்திரவின் பேரில் காவல் துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சோர்ந்தனர்.  இதன் காரணமாக வங்கதேசம் முழுவதும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 500 காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன. ராணுவத்தின் துப்பாக்கி சூட்டால் மக்கள் போராட்டத்தை கட்டுபடுத்த முடியவில்லை. ’’மக்களை தாக்க வேண்டாம்’’ என முன்னாள் ராணுவ தளபதிகள் களத்தில் குதித்தனர். ராணுவமும் பிரதமர் பேச்சை கேட்க மறுத்தது. பிரதமரை பாதுகாக்க வழியில்லை என கை விரித்தது ராணுவம். ஹசீனா இந்தியாவில் அடைக்கலமாகியுள்ளார்.

ஜனவரி 2024ல் – நடந்த தேர்தலை முக்கிய எதிர்கட்சிகள் புறக்கணித்த சூழலில் முறைகேடாக வெற்றி பெற்று நான்காவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த ஹசீனாவின் இன்றைய சரிவு எதிர்பாராதது அல்ல.

வங்க தேச விடுதலைப்போரில் (1971)பங்கு பெற்றவர்களின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கும் வண்ணம் 30% இட ஒதுக்கீடு செய்வதை எதிர்த்த மாணவர்களின் போராட்டம் உண்மையில் ஹசீனா ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்க்கும் மக்கள் போராட்டத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்தது.

கடந்த 2009 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருந்த அவாமி லீக் கட்சியும் அதன் தலைவரான ஷேக் ஹசீனாவும் வங்க தேச பொருளாதாரத்தை தலை நிமிரச் செய்தார் என ஒரு சிலர் பாராட்டினாலும், அந்த வளர்ச்சி சமதளத்தில் இல்லை. வங்க தேசத்தில் பெருகி வளர்ந்து வந்த வேலையில்லா திண்டாட்டமும், ஹசீனாவின் எதேச்சதிகார போக்கும், எதிர்கட்சிகளை (தலைவர்கள், தொண்டர்கள்) சிறையிலடைப்பதும், பொய்வழக்குகள் மூலம் எதிராளிகளின் குரல் வளையை நெறிப்பதும் மக்கள் மத்தியில் பெருத்த கோபத்தை கிளறியது. மக்கள் தங்களது எதிர்ப்பை, தங்களது அதிருப்தியை, தங்களது எண்ணங்களை எதிரொலிக்க எந்த சுதந்திரமும் இல்லாத நிலையில் மாணவர் போராட்டம் அவற்றுக்கெல்லாம் ஒரு வடிகாலாக வந்து சேர்ந்தது!

அன்று பாகிஸ்தானின் அங்கமாக இருந்த கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்ட வங்க தேசம் பாகிஸ்தானின் எதேச்சதிகார ஆட்சியை எதிர்த்து , ஜனநாயக உரிமைகளுக்காக போராடியது.  குறிப்பாக கிழக்கு பாக்கித்தான் தேர்தலில் வென்ற முஜிபுர் ரகுமானை பதவியேற்க விடாமல் தடுத்த யாகியாகான் அரசை எதிர்த்து, வங்க தேச மக்கள் கிளர்ந்து எழுந்தனர் 1971ல்.

முஜிபுர் ரகுமானை வஞ்சகமாக கைது செய்து சிறையிலடைத்து , வங்க மக்கள் மீது ராணுவ அடக்கு முறையை ஏவிவிட்ட பாகிஸ்தானின் ராணுவத்தலைமைக்கு எதிராக போராடிய கிழக்கு வங்க மக்களுக்கு இந்தியா உதவியது. பிரதமர் இந்திராவின் முயற்சியால் , பாக். ராணுவம் முறியடிக்கப்பட்டு கிழக்கு வங்கம் விடுவிக்கப்பட்டது, வங்க தேசம் (பங்களா தேஷ்) தோன்றியது, முஜிபுர் ரகுமான் அதன் பிரதமரானார்.

முக்தி வாகினி (Mukti Bahini) என்றழைக்கப்பட்ட கொரில்லாப் படை வீர்ர்கள் பாக்.ராணுவத்திற்கெதிராக போராடினர் , இவர்களை வங்க தேச விடுதலை போராளிகள் என முஜிபுர் அரசு அறிவித்து , அவர்தம் குடும்பத்தினருக்கு, வங்க தேச அரசு துறைகளிலும், திட்டங்களிலும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தது, இட ஒதுக்கீடும் செய்தது.

பங்க பந்து (Banga bandhu- வங்கத்தின் நண்பன்) என்று பாராட்டப்பட்ட முஜிபுர் ரகுமான் பிரதமராக பொறுப்பேற்ற சில ஆண்டுகளிலேயே ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச்சென்றார். 1971ல்தோன்றிய முஜிபுர் ஆட்சியில் மனித உரிமை மீறல்களும், எதேச்சதிகாரமும், அடக்குமுறைகளும் 1974ம் ஆண்டுவாக்கில் பெருக தொடங்கின.1975ல் பல கட்சி முறையை ஒழித்து ஒற்றை கட்சி ஆட்சி முறையை முஜிபுர் ரகுமான் வங்க தேசத்தில் ஏற்படுத்தினார்.

மக்கள் தலைவராக உயர்ந்து, மக்கள் விரோதியாக மாறிய முஜிபூர் ரகுமான்.

அவாமி லீக் கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளும் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது , சென்சார் முறை அமலுக்கு வந்தது, பாராளுமன்ற முறை மாற்றப்பட்டு அதிபர் ஆட்சி முறை அமலுக்கு வந்தது, முஜிபுர் ரகுமான் வங்க தேச அதிபரானார். நீதித்துறையின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. தொழிலாளர் விவசாய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தடை செய்யப்பட்டன, இடதுசாரி செயல்பாடாளர்களை ஒடுக்க ஜத்திய ரக்கி பகினி (Jatiya Rakkhi Bahini) என்ற வன்முறை கும்பலை அரசே உருவாக்கி, இடதுசாரிகளை வேட்டையாடியது. வங்க தேசத்து மக்கள் முஜிபுர் ரகுமானை வெறுத்து ஒதுக்க தொடங்கினர் . புதிய ஆட்சி முறை வந்த ஏழாவது மாத்த்தில் முஜிபுர் ரகுமான் ஆகஸ்டு 15,1975ல் படுகொலை செய்யப்பட்டார்.

இத்தகைய இட ஒதுக்கீடு பின்னாளில் பல குளறுபடிகளை சந்தித்தது, விடுதலை வீரர்கள் பட்டியலில் அவாமி லீக் கட்சியாளர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டதால் நாளடைவில் இந்த ஒதுக்கீடு (reservation) நியாயங்களை இழந்து அவாமி லீக் கட்சியினருக்கு அரசு வழங்கும் சலுகையாக மாறியது!

இந்தச் சீரழிவை எதிர்த்த குரல் நீண்ட காலத்திற்கு முன்பே எழுந்தது. 2018ல் ஷேக் ஹசீனா அரசு இந்த இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்தது. அந்த அரசாணையை 2024 ஜூன் வங்க தேச உயர்நீதி மன்றம் (High Court) ரத்து செய்தது, முன்பிருந்த கோட்டா (இட ஒதுக்கீட்டை) முறைக்கு மீண்டும் உயிர் கொடுத்தது. இதை எதிர்த்து கிளர்ந்தெழுந்த மாணவர்கள் போராட்டம் சரியாக ஜூன் 6ல் தொடங்கியது.

 

அகங்காரத்தின் உச்சியில் இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா, போராடும் மாணவர்களை சமாதானப்படுத்தவில்லை. மாணவர்களை அழைத்து பேசாமல் அவர்களை துரோகிகள் (razakar) என்று வசை பாடினார்

மாணவர்களுக்கெதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்!

சத்ர லீக் (அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு) உறுப்பினர்களை போரிடும் மாணவர்கள் மீது ஏவி விட்டார். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என முத்திரையிட்டு கைது செய்தார் ஷேக் ஹசீனா!

போராட்டத்தை ஒடுக்குவதற்காக ‘இன்டர்நெட்’ சேவையை முடக்கி வைத்தது வங்க அரசு.

பத்திரிக்கையாளர்களை, சமூக ஊடகங்களை தடை செய்தார். இதற்கு முன்னரே , வங்க தேச எதிர்கட்சிகள் ஒவ்வொன்றாக பொய் வழக்குகள் மூலம் முடக்கப்பட்டன, எதிர்கட்சி தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களது தனிமனித மற்றும் சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டன. பி். என். பி. எனப்படும் வங்க தேச தேசீய கட்சியை தடை செய்தனர், அதன் தலைவர் முன்னாள் வங்க தேச பிரதமர் கலீதா ஜியா மீது ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். உடல் நலக் குறைவிற்கான மருத்துவ வசதிகளும் சிகிச்சைகளும் அவருக்கு மறுக்கப்பட்டது.

மோடியைப் போலவே கார்ப்பரேட்களை போஷிப்பது, மக்கள் போராட்டங்களை ஒடுக்குவது, ரசு அமைப்புகளைக் கொண்டு எதிர்கட்சி தலைவர்கள் மீது வழக்கு, ரெய்டு, சிறை எனத் துன்புறுத்துவது, ஆதரவாளர்களுக்காக அதிகார துஷ் பிரயோகம் செய்வது, ஊடகங்களை விலை பேசி துதிபாட வைப்பது, மதவெறி சக்திகளை வளரவிட்டு, சிறுபான்மை இந்துக்களை தாக்க அனுமதித்துக் கொண்டு மதச் சார்பின்மை வேஷம் போடுவது, வங்க இஸ்லாமிய மக்களை விரோதியாக பார்க்கும் மோடி அரசுடன் நெருக்கம் பாராட்டுவது..என ஜகத்ஜால வித்தை காட்டிய ஹசீனா இன்று வங்க மக்களால் கடுமையாக வெறுக்கபடுகிறார்.

நோபல் பரிசு பெற்றவரும் , வங்க மக்களின் வாழக்கையில் கிராமீன் வங்கி மூலம் ஒளியேற்றியவருமான பொருளாதார விற்பன்னர் முகம்மது யூனுஸ் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையிலடைக்கப்பட்டார். காரணம், அவர் ஹசீனாவின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்தது தான்.

தனது செயல்களை விமர்சிப்பவர் யாராயினும் அவர்களை அடக்கி ஒழிப்பதை தமது அரசியல் வியூகமாக ஷேக் ஹசீனா கடைப்பிடித்ததால் , அவர் ஜனவரியில் நடத்திய தேர்தலும் சுதந்திரமற்ற, நேர்மையற்ற தேர்தலாக நடந்தேறியது. எதிர்கட்சிகள் சில தடை செய்யப்பட்டன,

எதிர்கட்சிகள் பல இந்த தேர்தலை புறக்கணித்தன!

ஒற்றைக் குதிரையாக ஓடி தன்னை வெற்றியாளராக அறிவித்துக் கொண்டார் ஷேக் ஹசீனா! நான்காவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்து தனது அகங்காரத்தை , ஆளுமையை வெளிப்படுத்தினார்.

இவர் இந்தியாவுடன் போட்ட மின்சக்தி வாங்கும் ஒப்பந்தம்(அதானி நிறுவனம் மூலம் இந்தியா அளிக்கும் மின்சக்தி) , இந்தியா ,நேபால், பூட்டான் தொடர் பாதையில் வங்க தேசத்தை இணைத்த ஒப்பந்தம், ஆகியவற்றால் மேலும் வலுப்பெற்று ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய திட்டங்கள் இந்தியாவிற்கு சாதகமாக வங்க தேச நலன்களுக்கு எதிராக உள்ளது என்ற எண்ணம் தீத்சா நதிநீர் பங்கீட்டில் இந்தியா (வங்கதேச கோரிக்கைகளுக்கு ) விட்டுக் கொடுக்காமல் கறாராக இருந்ததால் மேலும் வலுப்பெற்றது.

இந்திய ஆட்சியாளர்கள் இந்திய சிறு பான்மையினரான இஸ்லாமியரை சதா சர்வகாலமும் பாகுபடுத்தி சிறுமை படுத்துவதும், வங்க மக்களை இந்திய நாட்டுக்கெதிரான கறையான்கள் என்று வசை பாடுவதும், அவர்களை இந்திய அரசியலில் பகடைக் காய்களாக சித்தரிப்பதையும் வங்க மக்கள் விரும்பவில்லை.

வங்க தேசத்தை இந்துக்களை அடக்கி ஒடுக்கும் நாடு என சித்தரித்து குடியுரிமை திருத்தம் கொண்டு வந்த பாஜக ஆட்சியாளர்களுடன்- கை கோர்த்துக் கொண்டு ஷேக் ஹசீனா அரசு ஒப்பந்தங்கள் போடுவது வங்க தேச நலனுக்கு எதிரானது என்ற எண்ணத்திற்கு வங்க மக்கள் வந்துள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் அரசு ஆதரவு அமைப்பான சத்ர லீக்கின் கண் மூடித்தனமான தாக்குதலில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இத்தகைய வன்முறை வங்க தேச மக்களை ஹசீனா அரசிற்கெதிராக ஒன்றுகூட வைத்தது. அதே சமயம் ஷேக் ஹசீனாவிற்கு இந்திய ஆட்சியாளர்கள் ஆதரவளிப்பதும், வங்க மக்களை சினத்திற்குள்ளாக்கியது. எனவே, ”ஹசீனா பதவி விலக வேண்டும்” என்ற கோரிக்கை ”இந்தியாவின் சொற்படி நடக்கும் ஹசீனா பதவி விலக வேண்டும்” என்பதாகவே முடிகிறது! ஹசீனாவை ஆதரித்து துதி பாடிய ஊடக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன, மக்களால் என்பது கவனத்திற்கு உரியது. அதிகாரத் திமிரில் ஆட்டம் போட்ட 20 க்கு மேற்பட்ட அவாமி லீக் தலைவர்கள் போராட்டக்கார்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

உலக நாடுகள் பலவும் ஐ.நா பொதுச்செயலரும் புதிதாக அமையும் அரசு வன்முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி “மாற்றத்தை” ஏற்றுக் கொண்டு வரவேற்றுள்ளனர்.

இந்திய ஆட்சியாளர்கள் ஹசீனாவுக்கு அடைக்கலம் தந்துள்ளதும், வங்க மக்களின் உணர்வை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும், இதன் காரணமாக அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் தாக்கப்படுவதை பொருட்படுத்தாதும் பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.

”ஷேக் ஹசீனா விலகியது இந்திய தேசீய நலன்களுக்கு நல்லதல்ல, வரவிருக்கும் ஆட்சி இந்தியாவிற்கு அனுசரணையாக இருக்குமா” என்ற கருத்துக்களை சில ஊடகங்கள் முன்வைக்கின்றனர்.

ஹசீனா ஆட்சிக்கு எதிரான மக்கள் கோபத்தை, ” இது முழுக்க, முழுக்க அமெரிக்க ஏகாதிபத்திய சதி…” என்று வங்க கம்யூனிஸ்டு கட்சி கூறுகிறது. இது மக்களிடம் இருந்து அந்தக் கட்சி எந்த அளவுக்கு அன்னியப்பட்டுள்ளது என்பதையும், இந்த எழுச்சியை பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு அது பின் தங்கி இருப்பதையுமே காட்டுகிறது.

முகம்மது யூனுஸ்

இந்த நிலையில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் முகம்மது யூனுஸ் போராட்டக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் பொருளாதார, வங்கி சார்ந்த பல உயரிய பதவிகளை முகமது யூனுஸ் அலங்கரித்துள்ளார். பாரீசில் நடைபெற்று வரும ஒலிம்பிக் போட்டிகளின் ஆலோசகராகவும், தூதராகவும் செயல்பட்டு வருகிறார் முகமது யூனுஸ். ஹசீனா அரசு இவர் மீது ஏராளமான வழக்குகள் போட்டு சிறையில் தள்ளியதால், இவருக்கு மக்கள் அனுதாபம் கூடியது. இவரது தற்காலிக நியமனம் மக்கள் வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன ஒரு துரதிர்ஷ்டமெனில், வங்க தேசத்தில் இந்த மக்கள் புரட்சியின் மூலம் ஒரு சிறந்த மக்கள் தலைவர் கிடைத்துவிட்டார் என யாரையும் அடையாளம் காண முடியவில்லை. பார்ப்போம்.

ச.அருணாசலம்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time