பெண்களை இழிவுபடுத்தும் சனாதனி ஜெகதீப் தன்கர்!

-சாவித்திரி கண்ணன்

அதிகார மமதையும், ஆணவமும் கொண்டவர் ஜெகதீப் தன்கர்! உட்கார்ந்திருப்பது உயர்ந்த பதவி! ஆனால், பேசும்  பேச்சுக்களோ தரை டிக்கெட்..! ஆதிக்க சுபாவத்தை அடிக்கடி வெளிப்படுத்தி அசிங்கப்பட்டாலும், திருந்தாதவர். பெண்களை இழிவுபடுத்தும் சனாதன சல்லித் தனங்களை சலிப்பின்றி செய்யும் இவர் குறித்த ஒரு பார்வை;

இவரது ஆதிக்க சிந்தனைப் போக்கை, மேற்கு வங்கத்தில் ஆளுநராக ஆடிய அடங்கா பிடாரித்தனத்தை மெச்சிப் புகழ்ந்து இவருக்கு பாஜக கொடுத்த பரிசே, குடியரசுத் துணைத் தலைவர் பதவி;

பொது வாழ்க்கையில் உயர்ந்த தளத்தில் இருக்கும் பெண்களைச் சீண்டி, அவர்கள் கோபத்தை ரசித்து குஷியாகி, மீண்டும் அவர்களை சீண்டி துன்புறுத்துவது இவருக்கு கை வந்த கலையாகும். அந்த வகையில் மம்தா பானர்ஜியை சீண்டி நன்கு வாங்கி கட்டிக் கொண்டவர் தான் ஜெகதீப் தன்கர்.

உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய வகையில், இவரது பேச்சுக்கள், அணுகுமுறைகளால் பல நேரங்களில் நீதிபதிகள் இவரை எச்சரித்துள்ளனர்.

ஜெயபாதூரி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திரைக் கலைஞர். சத்யஜித் ரேயின் கண்டுபிடிப்பான ஜெய பாதூரி தனது யாதார்த்த நடிப்பாற்றலால் சிகரத்தை தொட்டவர். பல சர்வதேச விருதுகள், 9 பிலிம் பேர் விருதுகள், பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஜெயபாதூரி தன்னுடைய தத்ரூபமான கலை வெளிப்பாட்டில் அமிதாப் பச்சனை மிஞ்சியவர் என்றே விமர்சகர்களால் புகழப்பட்டார்.

அத்துடன் சிறந்த எழுத்தாளர், சமூக அக்கறையுள்ளவர். மக்களுக்காக குரல் கொடுக்கும் இயல்புள்ளவர். ராஜ்ய சபா உறுப்பினராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட பணியாற்றி வருகிறார். மக்களை பாதிக்கும் பிரச்சினைகளில் அர்த்தமுள்ள வகையிலும், ஆழமாகவும் பேசி வருபவர். இந்த காரணத்திற்காக அவர் சூப்பர் ஸ்டார் அமிதாப்பின் மனைவி என்ற அடையாளத்தைக் கடந்து தனக்கென தனி அடையாளமும், மரியாதையும் பெற்றவர்.

தற்போது 76 வயதாகும் இவர் பாராளுமன்றம் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தளத்திலும் ‘ஜெயா பச்சன்’ என்றே அழைக்கப்பட்டு வருகிற போதிலும், இவரை மாநிலங்களவைத் தலைவரான ஹரிவன்ஷ் ஜெகதீப் தன்கர் மட்டும், ”ஜெயா அமிதா பச்சன்” என அழைக்கத் தளைப்பட்டார்.

சென்ற மாதம் ஒரு விவாதத்தில் பேச அழைத்த போது, ”ஜெயா அமிதா பச்சன்” என மீண்டும் அழைத்தார், ஜெகதீப் தன்கர். அதற்கு உடனே எதிர்வினையாற்றிய ஜெயா பச்சன், ”என்னை ஜெயா பச்சன் என அழையுங்கள் சார், அது போதுமானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்த அடையாளம் உள்ளது. ஒரு பெண்ணை அவள் வகிக்கும் பொறுப்புகளாலும், செய்யும் சாதனைகளாலும் புரிந்து கொள்ளுங்கள். எல்லா நிலையிலும் கணவரோடு தொடர்புபடுத்தி தான் பார்க்க வேண்டும், அழைக்க வேண்டும் என்ற புதிய போக்கு வேண்டாம்” என இயல்பாகச் சொன்னார்.

ஆனால், இதை ஒத்துக் கொள்ள மறுத்த ஜெகதீப் தன்கர், உங்கள் கணவர் பெரிய சூப்பர் ஸ்டார். அவரது மனைவி நீங்கள் என்பது பெருமை இல்லையா..? எனக் கேட்டார்.

அதற்கு ஜெயா பச்சன், ”சார், அமிதாப் என்பதன் அர்த்தம் உங்களுக்கு தெரியும். என்னுடைய திருமணம் மற்றும் என் கணவருடைய சாதனைகள் குறித்து  எனக்கு பெருமிதங்கள் உள்ளன. ஆனால், இங்கு நான் மக்கள் பிரதிநிதி. என்னை ஜெயா பச்சன் என்றே யாவரும் அறிவர். அதை நீங்கள் மாற்ற வேண்டாம்…” எனக் கூறினார்.

அதன் பிறகும் ஆகஸ்ட் -5, திங்கள் கிழமை நடந்த விவாதத்தின் போதும், ”ஜெயா அமிதாபச்சன்” என்றே அழைத்தார். அது குறித்து மீண்டும் மறுப்பு தெரிவித்த போது,  ”நாடாளுமன்ற பதிவேட்டில் உங்கள் பெயர் ஜெயா அமிதா பச்சன் என்றே உள்ளது. நீங்கள் அதை முதலில் மாற்றி பதிவு செய்துவிட்டுச் சொல்லுங்கள்” என நையாண்டியாகப் பேசினார்.

தற்போது ஆகஸ்ட் 10 ஆம் தேதி மீண்டும் ”ஜெயா அமிதாபச்சன்” என அழைத்து வம்பு செய்தார் 73 வயது ஜெகதீப் தன்கர். அவர் அழைத்த தோரணையிலேயே, ‘இது உனக்கு பிடிக்காது என எனக்கு தெரியும். ஆனால், நான் அப்படித் தான் அழைப்பேன். நீ கதறினாலும் ஐ டோண்ட் கேர்’ என்பதாக இருந்தது.

இவ்வாறு ஜெயா பச்சன் மக்களின் பிரச்சினைகளை பேச முற்படும் போதெல்லாம், ஜெகதீப் தன்கர் அதை திசை திருப்பும் விதமாக தனிப்பட்ட முறையில் ஜெயா பச்சனை சீண்டி, அவரை தான் ஒரு நடிகையாக மட்டுமே பார்ப்பதாகவும், அதுவும் நடிகர் அமிதாப்பின் மனைவி என்பதை அடிக்கடி நினைவூட்டியுமே பேசி, மன வருத்தம் ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதில் மகிழ்ச்சி கொள்கிறார் என்பது நன்கு தெரிகிறது.

இதை சட்டென்று கிரகித்துக் கொண்ட ஜெயா பச்சன், ”என்னை, ‘ஜெயா அமிதாப் பச்சன்’ என்று கூறியதன் தொனி சரியில்லை. நான் ஒரு கலைஞர். எனக்கு உடல் மொழியும், முக பாவனைகளும் நன்கு புரியும். நாங்கள் உங்களுடன் வேலை செய்பவர்கள்தான். நீங்கள் தலைவர் இருக்கையில் இருக்கலாம். அதற்காக உங்களின் தொனியை ஏற்க முடியாது” என்றார் .

இதற்கு ஜகதீப் தன்கர், “ஜெயா ஜி அவர்களே, நீங்கள் இயக்குநர் சொல்லும்படி நடிக்கும் நடிகை. ஆனால், ஒவ்வொரு நாளும் என்னால் உங்களுக்குப் பாடம் எடுக்க முடியாது. நீங்கள் எனது தொனியைப் பற்றி பேசுகிறீர்களா? இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் புகழ்பெற்றவர்.. ஆனால், யாராக வேண்டுமானாலும் இருங்கள். அவையை மதித்து நடக்க வேண்டும் என எச்சரித்தார்.

இந்தப் பேச்சு ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் கண்டணத்தை பெற்றது. இதனால் ஜெயா பச்சன் அவையில் இருந்து வெளி நடப்பு செய்தார். அவரோடு சோனியா உட்பட முக்கிய எதிர்கட்சியினரும் வெளி நடப்பு செய்தனர். வெளியில் வந்த ஜெயா பச்சன்.  ”மாநிலங்களவையை பொறுத்த வரை நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். இருபதாண்டுக்கும் மேற்பட்ட அனுபவம் உள்ளவள். நங்கள் மூத்த குடிமக்கள். எங்களை ஏதோ பள்ளி மாணவர்கள் போல அவர் பார்க்கிறார். எதிர்கட்சித் தலைவர் பேச எழுந்தால் மைக் அணைக்கப்படுகிறது. அவருக்கு மரியாதை தரத் தெரியவில்லை” என வருத்தப்பட்டார்.

இவ்வாறு ஜெயா பச்சன் மக்களின் பிரச்சினைகளை பேச முற்படும் போதெல்லாம், ஜெகதீப் தன்கர் அதை திசை திருப்பும் விதமாக தனிப்பட்ட முறையில் ஜெயா பச்சனை சீண்டி, அவரை தான் ஒரு நடிகையாக மட்டுமே பார்ப்பதாகவும், அதுவும் நடிகர் அமிதாப்பின் மனைவி என்பதை அடிக்கடி நினைவூட்டியுமே பேசிமன வருத்தம் ஏற்படுத்தி, அதில் குளிர் காய்வதில் மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு அரசியல்வாதியாய் அமிதாப் தோற்று பின்வாங்கிய போதிலும், இருபதாண்டுகளுக்கு மேலாக மாநிலங்கள் அவையில் பெண் குலத்தின் குரலாக, மக்கள் பிரச்சினைகளை பேசும் ஜெயா பச்சனின் ஆளுமையை ஐயா ஜெகதீப் தன்கரால் தாங்க முடியவில்லை. ஐயோ பாவம், என்ன செய்வார்… அவர் ஒரு சனாதனி.

ஜெயா பச்சன் கணவர் அமிதாப் மற்றும் மகன்,மகளுடன்.

இதே போல ஒரு முறை காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷைப் பார்த்து ஜெகதீப் தன்கர், “நீங்கள் புத்திசாலி, திறமையானவர். நீங்கள் உடனடியாக வந்து மல்லிகார்ஜின கார்கேவின் இருக்கையில் அமரவேண்டும். ஏனென்றால் கார்கே செய்ய வேண்டிய பணியை நீங்கள் அதிகமாக செய்கிறீர்கள்’’ என்றார்.

இதற்கு உடனே கொதித்து எழுந்து எதிர்வினையாற்றிய கார்கே ”எனக்கு எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை வழங்கியது எங்கள் கட்சியின் தலைமை. என்னை அதில் இருந்து அகற்றி அதில் ஜெய்ராம் ரமேஷை அமர்த்த வேண்டும் என பகிரங்கமாக நீங்கள் வகிக்கும் பொறுப்பை  மீறி கண்ணியக் குறைவாக பேசுகிறீர்கள். உங்களின் மனதில் வர்ணாசிரமம் தான் இருக்கிறது.  ( ஜெகதீப் தன்கரும், ஜெய்ராம் ரமேஷும் பார்ப்பனர்கள்) அதனால் தான் என்னைத் தாழ்த்தி ஜெய்ராம் ரமேஷ் என்னுடைய இடத்துக்கு வர வேண்டும் என்று பேசுகிறீர்கள். வர்ணாசிரமத்தை கொண்டு வரப் பார்க்கிறீர்களா?” எனக் கேட்டார்.

மேற்குவங்கத்தில் இவர் கவர்னராக இருக்கும் போது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மம்தாவை சீண்டி டிவிட்டரில் எழுதுவார். அதனால் கவர்னர் என்றும் பாராமல் மம்தா இவரை ‘பிளாக்’ செய்து அதை பகிரங்கமாக தெரிவித்தார். ஒரு முறையல்ல, பல முறை மம்தாவை வீண்டி வம்புக்கு இழுத்த ஜெகதீப் தன்கரை ‘கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என பிரதமருக்கு கடிதங்கள் எழுதினார் மம்தா.

ஒரு கட்டத்தில் ஜெகதீப் தன்கர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாதபடிக்கு திரிணமுள் கட்சித் தொண்டர்கள் ஜெகதீப் தன்கர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரை’ கேரோ’ செய்தனர். சாலையில் அவர் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் இவரை பழித்து கோஷமிட்டு வெறுத்து ஒதுக்கினர். இதனால் கவர்னர் மாளிகைக்குள்ளேயே இவர் முடங்கி கிடந்த தருணங்களும் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் ”என்னை மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்துக் கொள்ளுங்கள்” என இவரே கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் வைத்தார்.

”நல்லது மகனே, மம்தாவை நீ படுத்திய பாட்டுக்கு உனக்கு வெகுமானம் தர வேண்டுமே. உன்னுடைய சேட்டைகளை இனி நீ, மாநிலங்களவையில் தொடரலாம்” என பாஜக தலைமை வழங்கியதே இந்தப் பதவி. பெரிய பதவியில் அற்பத் தனங்கள் கொண்ட சிறிய மனிதர். அவமானம்.

சாவித்திரி கண்ணன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time