கண்ணதாசனை ஒதுக்கி வைத்த இளையராஜா!

-சாவித்திரி கண்ணன்

கண்ணதாசனை தற்போது வானாளவப் புகழ்கிறார் இளையராஜா! ஆனால், அன்று அவரை பெருமளவு விலக்கியே வைத்தார். சில முட்டல், மோதல்கள் இருந்தன. கண்ணதாசனுக்கு மிகக் குறைவே வாய்ப்பளித்தார் ராஜா. இதன் பின்னணி என்ன? கண்ணதாசனின் பேராளுமையால் இளையராஜாவிற்குள் நிகழ்ந்த உளவியல் சிக்கல்களை அலசுகிறது இந்தக் கட்டுரை;

தமிழகத்தின் சமகால வரலாற்றில், வாழும் காலத்திலேயே மக்களால் பெரிதும் போற்றப்பட்ட கவிஞர் என்றால், அது கவியரசர் கண்ணதாசன் தான்! அவர் மீது மக்களுக்கு அப்படியோர் ஈர்ப்பு இருந்தது. தமிழக மக்கள் அவரை கொண்டாடி மகிழ்ந்தனர். சதா சர்வ காலமும் சலிப்பின்றி அவரைப் பேசிப் பேசி குதூகலித்தனர்.

அந்தக் காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி, பல் விழுந்த முதியோர்கள் வரை கண்ணதாசன் செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. ”இது எம்.ஜி.ஆர் பாட்டு”  ”இது சிவாஜி பாட்டு” எனச் சொல்லிய பாமர்கள் கூட, ”இது கண்ணதாசன் பாட்டுப்பா, என்னாமா எழுதி இருக்கான் பாருய்யா..”  எனப் பேசிச் செல்வதுண்டு. இந்தக் காரணத்திற்காகவே எம்ஜிஆர் கண்ணதாசனை விலக்கி வைத்தார்.

அவரது திரைப்பாடல்கள் மீது மக்களுக்கு தீரா மயக்கமே இருந்தது. அது 50 வயதுக்கு மேற்பட்டோரிடம் இன்றளவும் மாறவில்லை. இது தான் அன்றைக்கு வாழ்ந்த கோடிக்கணக்கான தமிழர்களின் அனுபவமாகவும் இருந்தது. கவிஞர் பேச வருகிறார் என்றால், அங்கே மக்கள் கூட்டம் அலைமோதும், கரகோஷங்கள் விண்ணைப் பிளக்கும். இதற்கு நானே நேரடி சாட்சி.

ஆனால், என்னவோ தெரியவில்லை. இப்பேர்ப்பட்ட கண்ணதாசனுக்கு தான் இசை அமைக்கும் படங்களில் மிகக் குறைவான வாய்ப்புகளையே வழங்கினார் இளையராஜா.

இளையராஜா தன் படங்களில் கவிஞர் வாலிக்கே அதிக வாய்ப்புகளைத் தந்தார். அடுத்ததாக கவிஞர் முத்துலிங்கம், புலமை பித்தன் , ஆலங்குடி சோமு, தம்பி கங்கை அமரன்.. என வாய்ப்புகள் தந்தார்.

கவிஞர் வாலி, இளையராஜா, இயக்குனர் மகேந்திரன்

பாரதிராஜா தான் தன்னுடைய முதல் படமான 16 வயதினிலேவுக்கு கவிஞர் கண்ணதாசனிடம் எழுதி வாங்க வேண்டும் என இளையராஜாவை நிர்பந்தித்து கவிஞரிடம் மூன்று பாடல்கள் எழுதி வாங்கினார்.

அதிலே கண்ணதாசன், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக் குஞ்சு வந்ததுன்னு ‘பாடலை எழுதி தந்து சென்றுவிட்ட போது, அதில் சின்ன ‘டெவலப்மெண்ட்’ செய்ய ஆசைப்பட்ட பாரதிராஜாவும் , இளையராஜாவும் அடுத்த நாள் காலை கவிஞர் இல்லம் சென்று அவரை சந்தித்த போது, கண்ணதாசனே அவர்களைப் பார்த்து, ”நேற்றைய பாட்டிலே ஓரிடத்தில், ‘பழைய நினைப்பு தான் பேராண்டி பழைய நினைப்பு தான்…’ என வந்தால் அங்கே நன்றாக இருக்கும்..” எனச் சொல்லவும் இளையராஜாவும்,பாரதிராஜாவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடன் பார்த்து, ”இதைத் தான் உங்க அனுமதி பெற்று சேர்த்துக் கொள்ளலாம் என நினைத்து கேட்க வந்தோம்” என்றார்களாம்..!

பாரதிராஜாவை பொறுத்த வரை கவிஞர் உயிரோடு இருக்கும் வரை அவரைத் தன் படங்களில் தொடர்ந்து பாட்டெழுத வைப்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த வகையில் இளையராஜாவும் அதற்கு உடன்பட்டார். இதே போல சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வலியுறுத்தும் பட்சத்தில் மட்டுமே இளையராஜா கண்ணதாசனுக்கு வாய்ப்பளித்தார்.

மற்றபடி கவிஞரை பெருமளவு தவிர்த்தார். சமீபத்தில் படத் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு நேர்காணலில் தன் அச்சாணி படத்திற்கு இளையராஜாவை ஒப்பந்தம் செய்த போது, இளையராஜா அவரிடம், ”கவிஞர் வாலியை வைத்து எழுதிக் கொள்கிறேன்” என்ற போது, காரைக்குடி நாராயணன், ”16 வயதினிலே படத்திற்கு கவிஞர் கண்ணதாசனிடம் எழுதி வாங்கி இருக்கீங்களே.. பிறகென்ன”  என்ற போது, ”கண்ணதாசனிடம் எல்லாம் என்னால் வேலை வாங்க முடியாது..” என்று மறுத்ததைக் குறிப்பிட்டு இருந்தார்.

கண்ணதாசன் எழுதிய திரையிசைப் பாடல்கள் பிரபலமாகும் போது, அது அதற்கு இசை அமைத்த இசை அமைப்பாளர்களை மீறி,  கவிஞர் கண்ணதாசன் பாடல்களாகவே அதிகம் பார்க்கப்பட்டன. இது எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல் என்றோ, கே.வி.மகாதேவன் பாடல்கள் என்றோ மக்கள் மத்தியில் பேசப்படவில்லை. அந்த வகையில் தன் இசையில் வெளியாகும் பாடல்கள் இளையராஜாவின் பாடல்களாக அறியப்பட வேண்டுமேயன்றி, கண்ணதாசன் பாடல்களாக அறியப்படலாகாது என இளையராஜா கருதினார்.

மேலும், கவிஞர் பாட்டெழுத வருகிறார் என்றால், படத் தயாரிப்பாளர்களே அவருக்கு கார் அனுப்பி பிக் அப் செய்வதில் இருந்து, அவர்  அமர்ந்து பாட்டெழுதுவதற்கென்று மெத்தை போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, அவருக்கு ராஜ உபச்சாரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அவர் பாட்டெழுத வரும் தோரணையே ஒரு கவி ராஜா வருவது போல பார்ப்பவர்களை உணர வைக்கும். அந்த வெள்ளை வேட்டியும், வெள்ளை அல்லது சந்தன நிறச் சட்டையும், ஜவ்வாது வாசனையும், அவர் முகத்தில் தெரியும் ஒரு லஷ்மி கடாட்சமும் பார்ப்பவர்களை தங்களையும் அறியாமல் மரியாதை கொள்ள வைக்கும்… எனப் பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன். அதாவது இருக்கும் இடத்தில் அவர் தான் கதாநாயகன். அப்படிப்பட்ட கவிப் பேராளுமை அவருக்கு இருந்தது. அவரை ஒரு நடமாடும் ஆண் சரஸ்வதியாகவே இசை அமைப்பாளர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பார்த்தனர் என்பது நிகழ்கால வரலாறாகும்.

மேலும் அந்த காலத்தில் இளையராஜா தான் இசையமைக்கும் படங்களுக்கு 5,000 முதல் 8,000 வரை சம்பளம் வாங்கினார் என்றால், கவிஞரோ பாடல் ஒன்றுக்கு ரூ 5,000 சன்மானம் வங்கினார். ஐந்து பாடல்கள் என்றால், அதுவே ரூ 25,000 சன்மானம் பெற்றுக் கொள்வார். இது தவிர அவருடைய உதவியாளருக்கு தனியாக ரூ 500 தர வேண்டும். இதையும் இளையராஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

இதையெல்லாம் விட கவிஞர் கண்ணதாசன் பாட்டெழுத வருவது குறித்த ஒரு பேட்டியில் இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார். நான் ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக இருந்த போது, ஒரு சிச்சுவேஷனுக்காக பாட்டெழுத கவிஞர் கண்ணதாசன் வந்தார். அவர் அங்குள்ள இயக்குனரையோ, இசை அமைப்பாளரையோ சற்றும் பொருட்படுத்தவில்லை. சிகரெட் பற்ற வைத்து ஊதியபடி சிச்சுவேஷன் கேட்டார். உடனே, ஆஷ்ட்ரேயில் தூ, தூவென்று துப்பிவிட்டு, வாயைத் துடைத்துக் கொண்டு, டியூனைக் கேட்டு விட்டு கண்ணை மூடியபடி பாடல் வரிகளை சொன்னார். உதவியாளர் அதை எழுதி தந்தார். எல்லாம் சில நிமிஷங்களில் முடிந்தன. கிளம்பிப் போனார். எனக்கோ என்னடா இவர் இப்படி பிகேவ் பண்ணுகிறாரே என்றிருந்தது. அந்தப் பாடல் தான் ’’தேன் சிந்துதே வானம், உனை, எனை தாலாட்டுதே என்றார்.

குடிப்பதும், சிகரெட் பிடிப்பதும் கண்ணதாசனின் இயல்பாகும். சிகரெட் முடிந்தவுடன் வாயில் இருந்த புகையிலை துகள்களைத் தான் அவர் ஆஷ்ட்ரேயில் துப்பி உள்ளார். மேலும் எழுதக் கூடிய பாடல் குறித்து தான் கண்ணதாசன் தன் முழு கவனத்தை குவித்திருந்தாரேயன்றி, அங்குள்ள முக்கியஸ்தர்களுக்கு முகஸ்துதி செய்யவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

கண்ணதாசனை அவரது அத்தனை பலவீனங்களுடன் தான் சகல இசை அமைப்பாளர்களும், இயக்குனர்களும் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டினார்கள். காரணம், அவரது கவிதையின் பேராற்றல், அதில் வெளிப்படும் கவித்துவம், தமிழ் இனிமை, வாழ்க்கை அனுபவம், தத்துவச் செறிவு எல்லாவற்றுக்கும் மேல் படத்தின் சூழலுக்கு மிகப் பொருந்தி வருவதும் தானே.

இளையராஜாவின் புறக்கணிப்பு கவிஞரை மிக அதிகமாகவே காயப்படுத்தியது. ”புதிய இசை அமைப்பாளர்களின் இசையில் கனம் இருக்கிறதோ, இல்லையோ தலையில் அதிக கனம் இருக்கிறது” என்று ஒரு பத்திரிகையில் கவிஞர் சொல்லும் அளவுக்கு நிலைமை போனது. போதாக்குறைக்கு எம்.எஸ்.வி அவர்களுக்கும் வாய்ப்பு குறைந்ததால் அதுவும் கண்ணதாசனை பெரிதும் பாதித்தது.  ”தம்பி எம்.எஸ்.விஸ்வ நாதனை விஞ்ச இங்கு யாருமில்லை” என்றும் பேசினார். இவை போதாதா இளையராஜாவிற்கு கண்ணதாசனை ஒதுக்கி வைக்க!

எப்படி ஒரு கட்டத்தில் டி.எம்.எஸ்சை இளையராஜா ஓரம் கட்டினரோ, சிவாஜி படத்திற்கு கூட டி.எம்.எஸ்சுக்கு பதில் மலேசியா வாசுதேவனை பயன்படுத்தினாரோ, அதே போன்ற நிலையை கண்ணதாசனுக்கும் உருவாக்கினார். இயக்குனர் ஸ்ரீதரின் பல படங்களின் வெற்றிக்கு கண்ணதாசன் பாடல்கள் மிகப் பெரிய பங்களிப்பை தந்துள்ளன. அப்படிப்பட்ட ஸ்ரீதர் இயக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களில் முழுக்க, முழுக்க கண்ணதாசனை புறக்கணித்து, அனைத்து பாடல்கள் வாய்ப்பையும் வாலிக்கே வழங்கினார் இளையராஜா.

இதற்கிடையில் 1978 ஆம் ஆண்டு ஏ.வி.எம்.ராஜேஸ்வரியில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட கண்ணதானைக் கடந்து சென்ற இளையராஜா கவிஞரிடம் நலம் விசாரிக்க, கவியரசரோ சிரித்துக் கொண்டே சூசகமாக சொன்னார், ”ராஜாக்களின் கவனிப்பு இல்லாமல் கவிஞர்கள் எப்போது நலமாக இருந்திருக்கிறார்கள்” என்று.( ஆதாரம்; வாமனன் எழுதிய திரை இசை அலைகள் பாகம்- 3)

கவிஞரின் இந்த எதிர்வினையானது இளையராஜா ஒருவாறு சமாதானமாக வர உதவியது என்றாலும், பிறகும் கவிஞருக்கு ஓரளவே வாய்ப்பளித்தார். ஒரு முழுப் படத்தில் கண்ணதாசனுக்கும் ஒரு பாட்டு என்ற அளவே வாய்ப்பளித்தார். இதையும் கங்கை அமரன் ஒரு பேட்டியில், ”கவிஞரின் ஆசீர்வாதம் நமக்கு வேண்டும்’ என அண்ணனை சமாதானப்படுத்தி ஒரு படத்தில் ஒரு பாட்டேனும் கண்ணதாசனிடம் எழுதி வாங்குவதை நான் தான் வழக்கப்படுத்தினேன்” எனக் கூறியுள்ளது கவனத்திற்கு உரியது.

இதை இளையராஜாவின் தாழ்வு மனப்பான்மையை எனப் புரிந்து கொள்வதா? அல்லது சுப்பிரியாரிட்டி காம்பளக்ஸ் எனக் கருதுவதா? தெரியவில்லை. இருக்கும் போது அலட்சியப்படுத்திவிட்டு, இறந்த பிறகு உலகிலேயே சிறந்த கவிஞன் என்றும் தமிழ் நாட்டின் பெருமைகளில் ஒருவர் கண்ணதாசன் என்றும் பேசிப் புகழ்வதில் என்ன பயனோ..?

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time