மின்சாரத்தை எட்டா கனியாக்கும் மின் திருத்த சட்டம்!

- பீட்டர் துரைராஜ்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  மின்சார திருத்தச் சட்டத்தால் இனி மின்சார கட்டணங்கள் தாறுமாறாக உயரவுள்ளன! ’’அப்படி உயர்த்தும் போது மானியம் தருவோம் கவலப்படாதீர்கள்’ ’என்கிறது அரசு! இப்படித்தான் சமையல் எரிவாயு  விலை  உயர்த்தபட்ட போது அதற்கான  மானியத்தை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவோம் என்று சொல்லப்பட்டது. பிறகு  அப்படி செலுத்தி வந்த மானியம் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் ரூ.25 மட்டுமே! ஆனால், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு நாம் தரும் பணம் ரூ.610.  இதே நிலை நாளை மின்கட்டண விவகாரத்திலும் நடக்கவுள்ளது.

அதாவது, இனி மின்சாரத்துறை தனியார் முதலாளிகளின் வேட்டைக் காடாகவுள்ளது! நாடு விடுதலை அடைந்தபோது  நகரங்களில் மட்டுமே மின்சாரம் இருந்தது; வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருந்தது. இப்போது தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களிலும் மின்சாரம் உள்ளது.எல்லா வீடுகளுக்கும் மின்வசதி உள்ளது.மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து இதைச்   சாத்தியமாக்கின. அரசியல் அமைப்புச் சட்டப்படி மின்சாரம் என்பது பொதுப்பட்டியலில் உள்ளது.1948 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சார சட்டத்தினால் எளிய மக்கள் பலன் அடைந்தார்கள்.

1962 ம் ஆண்டு முதல்  விவசாயத்திற்கும் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. 1970 களின் முற்பகுதியில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டு தமிழக அரசு செயல்பட்டது. மின்சாரம் வழங்குவது மாநில அரசின் ஒரு துறை மூலம் செயல்படுத்தப்பட்டது.1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) உருவானது. 2010 முதல் தமிழ்நாடு மின்உற்பத்தி,மின் பகிர்மான கழகம் (TANGEDCO) என்ற பெயரில் இது செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு நூறு சத  விலையில்லா மின்சாரம் , அநேகமாக தமிழ்நாட்டில்தான் வழங்கப்படுகிறது. வீடுகளுக்கு  நூறு யூனிட் வரை மின்சாரத்தை தமிழ்நாடு இலவசமாக வழங்குகிறது. குடிசைகளுக்கு ஒரு விளக்கு, கைத்தறி,விசைத்தறிக்கு மின்சார சலுகைகளும்  வழங்கப்படுகின்றன. வழிபாட்டு தலங்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது.  மாநில அரசுகள்  இப்படிப்பட்ட சலுகைகள் வழங்குவதற்கு வேட்டு வைக்கப்போகிறது மத்திய அரசு,  கொண்டு வந்துள்ள மின்சாரச் சட்டம்.

“இந்தியா முழுவதும் மின்சாரத்தை உற்பத்தி செய்வது, எடுத்துச் செல்வது, விநியோகிப்பது என  அனைத்தையும் ஒரே நிர்வாகத்தின் கீழ்  பொதுத்துறைகள்தான் செய்து வந்தன. மின்நிலையங்கள், கோபுரங்கள், கம்பித் தடங்கள்,மின்மாற்றிகள்,மின்வாரியக் கட்டங்கள் என கோடிக்கணக்கான சொத்துகள் அரசிடம் உள்ளன; அதாவது இவை  மக்களின் சொத்துகள். இவைகளை வைத்து தனியார் இலாபம் சம்பாதிக்கும் வகையில், இந்தச்  சட்டத்தை மத்திய கொண்டு வர உள்ளது” என்கிறார் தொழிற்சங்கத் தலைவரான  ஏஐடியுசியைச் சேர்ந்த  டி.எம் மூர்த்தி.

“அப்படியே சொத்துகளை விற்க முடியாது.எனவே உற்பத்தி தனி,எடுத்துச் செல்வது தனி, விநியோகம் தனி பிரித்து தனித்தனியாக தனியாருக்கு கொடுத்து விடலாம்.பெயர் மட்டும் அரசுக்குச் சொந்தமாக  இருக்கும். மற்ற எல்லா வேலைகளையும் பிரித்து, பிரித்து தனியாருக்கு கொடுத்து விடுவார்கள்.இதனால் பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படும். உற்பத்தி, விநியோகத்தை தனியாருக்கு கொடுப்பது நாட்டிற்கும் நல்லது இல்லை;அதில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமல்ல,பொது மக்களுக்கும் நல்லது இல்லை. இனி மின்சாரத்திற்கு செல்போனுக்கு ரீ சார்ஜ் கட்டுவதுபோல, முன்கூட்டியே பணம் கட்டினால் தான் மின்சாரம் வழங்கப்படும். கேபிள் டி.வி ஆபரேட்டர்களைப்போல மின்சாரத்தையும் ஊருக்கு ஒருவர் உரிமம் எடுத்து விற்பனை செய்யும் நிலை ஏற்படும். இந்த சட்டத்தையு எதிர்த்து நவம்பர் 26 ம் நாள் பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது ” என்று டி.எம்.மூர்த்தி குறிப்பிட்டார்.

2003 ம் ஆண்டு பாஜக அரசு மின்சார சட்டத்தை கொண்டு வந்தது.மானியத்தை குறைப்பதற்காகவும், மின் உற்பத்தியில் தனியாரை ஊக்குவிப்பதற்காகவும், ஒரு மத்திய ஒழுங்காற்று அமைப்பை ஏற்படுத்தவும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.2020ம் ஆண்டு இதில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.சூரிய மின்சாரம், காற்றாலை மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கு முக்கியத்துவம் தருதல்; மானியத்தை நுகர்வோர் கணக்கில் நேரடியாக செலுத்துதல்,தனியாருக்கு தரவேண்டிய பணத்தை மாநில அரசுகள் தருவதை உறுதிப்படுத்துதல், கடுமையான தண்டனை வழங்கும் அதிகாரம் கொண்ட வலிமையான மத்திய ஒழுங்காற்று ஆணையத்தை அமைத்தல்(Electricity Contract Enforcement Authority)  என்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.

ஏற்கெனவே 56 அமைச்சகங்களில் 419 திட்டங்களுக்கு மானியம் வழங்குவதை மத்திய அரசு நெறிப்படுத்தி இருக்கிறது. அதே போல மாநில அரசுகள் நுகர்வோருக்குத் தர வேண்டிய மானியத்தை அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தலாம். ஆனால் மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தரவேண்டிய தொகையை  தந்து விட வேண்டும் என்கிறது இந்த புதிய சட்டம். எளிதாக வியாபாரம் செய்ய ஏதுவாக தேவையான மாற்றங்களை தருவதற்காக இந்தச் சட்டம்  கொண்டு வரப்படுகிறது என்கிறது மத்திய அரசு.

இந்த சட்டம் அமலானால் இலவச மின்சாரம் தொடருமா ? சுயேச்சையான மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து, ஏழை மக்களுக்கு விரோதமான கொள்கைகளை அமலாக்கச் செய்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது.

இந்தச் சட்டம் மின்சார வாரியங்களை கடனிலிலிருந்து மீட்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று மத்திய அரசு கூறிகிறது.”தனியார் நிறுவனங்கள்தான் பெருமளவில் கடன் பாக்கியை வைத்துள்ளன ” என்கிறார் டி.எம்மூர்த்தி்.

‘தமிழ்நாட்டில் மின்வெட்டும், மின் கட்டண உயர்வும்’ என்ற நூலை எழுதியவர் சா.காந்தி.இவர் தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கத்தில் இருந்து செயல்பட்டவர்; ஓய்வு பெற்ற பொறியாளர்.”அரசு ,சூரிய மின்சாரத்தை ஊக்குவிப்பதாகச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்களை மானியமாக தனியாருக்கு வழங்குகிறது.இதனால் அதானி பலன் அடைந்துள்ளார். காற்றாலை மின்சாரத்திற்கும் அரசு மானியம் தனியாருக்கு தருகிறது.இப்படி தனியாருக்கு தரும் பணத்தை அரசு மின்சார வாரியத்திற்கு கொடுத்தாலே புதிய மின் திட்டங்களை உருவாக்க முடியும். இதே மின்சார வாரிய ஊழியர்கள்தானே  மின் உற்பத்தியில் ஏற்கெனவே சாதனை செய்து இருக்கிறார்கள்” என்றார்.

ஊழலுக்காக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம்

கடனில் இருப்பதால்தானே இப்படி ஒரு முடிவை அரசு எடுக்கிறது என்று தோணலாம். ஆனால்,என்னுடைய ‘ஊழல் மின்சாரம்’ என்ற ஆவணப்படம் யூ டியூபில் கிடைக்கிறது.பாருங்கள்.அரசு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தனியாரிடம் இருந்து அதிக விலைகொடுத்து மின்சாரம் வாங்கி, குறைந்த விலைக்கு நுகர்வோருக்குத்  தருகிறது.இதனால் கோடிக்கணக்கான ரூபாய் மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் கையூட்டிற்காகவே அதிகாரிகளும்,ஆள்வோரும்  மின் உற்பத்தி செய்யும் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள்.நிர்வாகச் சீர்கேட்டை சரி  செய்ய வேண்டும். மாறாக தனியாருக்கு கொடுப்பது தீர்வாகாது.தனியாருக்கு மின்சாரம் உற்பத்தி செய்ய கடன் வழங்கும் வங்கிகள் அரசுத் திட்டங்களுக்கு தராதா என்ன ? மின் உற்பத்தி அரசின் வசம் இருக்க வேண்டும்.மத்திய அரசு மாநில அரசுகள் மின் உற்பத்தி செய்வதை தடுக்கக் கூடாது ” என்றார் சா.காந்தி.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time