செபியை சீர் குலைத்த அதானியின் ஆதிக்கம்!

-ச.அருணாசலம்

அரசாங்கத்தையே விலைக்கு வாங்கியுள்ள அதானிக்கு செபி தலைவரை விலைக்கு வாங்க முடியாதா? பிரதமரே தனக்கு ஏவாளி தான் எனக் காட்டும் அதானிக்கு முன்பு செபி தலைவர் மாதபி பூரிபூச் எந்த மூலைக்கு..? அரசின் ஒவ்வொரு அமைப்பையும் அதானிக்கு கீழே கொண்டு செல்லும் சூழ்ச்சியின் துவக்க புள்ளியே..இது;

செபி தலைவர் மாதபி புச்சும், அவரது கணவரும் பெர்முடா மற்றும் மொரிஷியஸை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் ரகசியமாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிதிகள் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி, ரவுண்ட்-டிரிப்பிங் நிதிகள் மூலம் பங்கு விலைகளை உயர்த்தப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குகள் தொடர்பாக செபி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருக்க, செபி தலைவர் மாதபி பூரி புச் அதானியின் சகோதரர் உடன் தொழில் கூட்டாளியாக இருப்பது காரணமாக இருக்கலாம். செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரி புச், அவரின் கணவர் ஆகியோர் அதானி நிறுவனத்தின் வெளிநாட்டு நிறுவனங்களில் பங்கு வைத்திருப்பதன் காரணமாகவே அதானி தொடர்புடைய பங்குதாரர்களுக்கு எதிராக செபி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். இந்தப் பிரச்சினையை சற்று ஆதியோடந்தமாக பார்ப்போம்;

அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளை அம்பலப்படுத்தி , ஹிண்டன்பர்க் நிறுவனம் 24/01/2023ல் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானியின் பங்குகள் சரிவை சந்தித்தன. பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களின் நிலை பரிதாபத்திற்குள்ளானது!

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அனாமதேய கம்பெனிகளை (shell companies) நிறுவி மணி லாண்டரிங் (பண மோசடி) முறையில் விதிகளுக்கு புறம்பாக கௌதம் அதானியின் மூத்த அண்ணன் வினோத் அதானி, அதானி குழும பங்குகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களை விசாரிக்க உச்ச நீதி மன்றம் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBIஐ பணித்தது நினைவிருக்கலாம்.

பல மாத இழுத்தடிப்புக்குப்பின் ‘செபி ‘, அனாமதேய கம்பெனிகளின் பின்னே இருக்கும் உண்மையான முகம் யாருடையது என்று எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை, கோழி முதலா? முட்டை முதலா? என சிக்கல்தான் மிஞ்சியது என உச்ச நீதி மன்றத்திடம் கூறியது.

உச்ச நீதி மன்றமும், தனிக்குழுக்களை (SIT) அமைத்து விசாரணையை முடுக்காமல்செபியை நம்பி ஏமாந்ததா? அல்லது சட்டி சுட்டது, கை விட்டது என ஒதுங்கியதா என்பது பெரிய புதிராகவே இருக்கிறது!

இந்நிலையில் , ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஒரு குண்டை தூக்கி போட்டது. செபி அமைப்பு அதானி பினாமிகளை விசாரணை செய்யத் தயங்குவது , அத்தகைய அனாமதேய நிறுவனங்களில் செபி தலைவர் திருமதி. மாதபி பூரி புச் முதலீடு செய்திருப்பதனாலா? என்ற கேள்வியை எழுப்பி பலரது தூக்கத்தை கலைத்து விட்டது.

இந்த தகவல் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியிலும் , நடுத்தர மக்கள் மத்தியிலும் அறிவார்ந்த மக்கள் கூட்டத்திடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி யின் தலைவரே அனாமதேய திறுவனங்களுடன் பல ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதும், அவற்றில் -அதன் வண்டவாளங்கள் முற்றிலும் அறிந்த பின்னரும்- முதலீடு செய்திருப்பது,

அதை வெளியுலகிற்கு கூறாமல் மறைத்து வைப்பது, உச்ச நீதி மன்றத்தில் இந்த தகவலை கூறாமல் இருந்தது, தனது கணவரான திரு. தாவல் புச் டைரக்டராக உள்ள பிளாக் ஸ்டோன் கம்பெனிக்கும் அதானி குழுமத்திற்கும் உள்ள உறவு தெரிந்த போதும் அத்தகைய நிறுவனங்களை ஆதரிப்பது, சலுகைகள் கொடுப்பது, விதிகளை தளர்த்தியோ, மாற்றியோ சலுகைகள் செய்திருப்பதையும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அம்பலப் படுத்தி உள்ளது.

உயர் மற்றும் கண்காணிப்பு அல்லது விசாரித்து தீர்ப்பு வழங்கும் பொறுப்புகளில் உள்ளவர்கள் , தங்கள் முன் வரும் வழக்குகளில் கடுகளவு சம்பந்தம் அல்லது தொடர்பு இருந்தாலும் அத்தகைய வழக்குகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதே (recuse ) நியாயமான நடைமுறையாகும் .

ஏனெனில், இது அக்கறை முரண் அல்லது ஆதாய முரண் என்பதால் நீதியரசர்களும், தீர்ப்பாயங்களின் தலைவர்களும் இத்தகய நிலையிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு

விசாரணைகளை வேறு ஒருவர் கையில் ஒப்படைக்க முன் வருவர்.அதுவே நியாயமான விசாரணைக்கும், இயற்கையான நீதி பரிபாலனத்திற்கும் வழி வகுக்கும்.

ஆனால், இங்கே மோசமான புகார்கள் எழுந்த பின்னரும் பதவி விலகாமல் பதவியில் ஒட்டிக் கொண்டு இருப்பது நடக்கிறது, எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய தன்னிலை விளக்கங்களை இப்பொழுது வேண்டா வெறுப்பாக அரைகுறையாக வெளியிடுவது நடக்கிறது!

சாதாரண அரசு ஊழியர் அரசுக்கு தெரியாமல் சொத்துக்கள் வாங்கினால் அவர் மீது பாயும். ஒழுங்கு நடவடிக்கை மாதவி பூரி மீது பாயாத தேன்?

தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆதாயம் அடைவதும், முறைகேடுகளை மூடி மறைப்பதும் கிரிமினல் நடவடிக்கைகள் இல்லையா?

மோடி அரசும் , நிதி அமைச்சகமும் உறங்கிக் கொண்டிருக்கிறதா? அல்லது இவற்றை தெரிந்தே அனுமதிக்கின்றனவா?

இதற்கு முன்பு தேசீய பங்குச்சந்தை தலைவராக (NSE) இருந்த  சித்ரா ராமகிருஷ்ணா பங்கு வர்த்தகம் தொடர்பான ரகசிய தகவல்களை பரிமாறி பல்லாயிரம் கோடி சுருட்டி இப்பொழுது கம்பி எண்ணிக் கொண்டிருப்பது,

முன்னாள் ஐசிஐசிஐ வங்கி தலைவரான திருமதி. சந்தா கொச்சார் வீடியோகான் நிறுவனத்திற்கு பல நூறு கோடிகள் வங்கி கடன் கொடுத்த முறைகேட்டில் அவரது கணவரான திரு. தீபக் கொச்சாருடன் கைது செய்யப்பட்டது

இவையெல்லாம் மோடி ஆட்சியின் அமிர்த காலத்தில் நாரீ சக்திகளின் வெளிப்பாடா? அல்லது நம்மை – நாட்டு மக்களை – முட்டாள்கள் என நினைத்து ஏய்க்கின்ற செயல்களா?

இப்பொழுது செபி தலைவராக இருக்கும் மாதவி பூரி புச்சும் இதற்கு முன் ஐசிஐசிஐ வங்கியில் பணி புரிந்ததாக கூறப்படுகிறது.

இவரும் இவரது கணவரும் ஐஐம் (Indian Institute of Management) ல் படித்து பட்டம் பெற்றவர்கள், இவர்கள் சிங்கப்பூரிலும் லண்டனிலும் பணி புரிந்திருக்கிறார்களாம். இவர்கள் இருவரும் சேர்ந்து அகோரா கன்சல்ட்டிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இதில் 99% பங்கு மாதவி பூரியினுடையது.

இதன் டைரக்டர் (இயக்குனர்) கணவர் தாவல் புச். இவர் முன்னாளில் யுனி லீவர் கம்பெனியில் சப்ளை செயின் மேலாண்மை பொறுப்பில் பத்தாண்டுகள் லண்டனிலும், சிங்கப்பூரிலும் இருந்திருக்கிறார்.

இவ்விருவரும் 2015 வாக்கில் சுமார்₹ 60 கோடி குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டீஸ். பண்டின் (GDOF) துணை பண்டான ஐபிஇ ப்ளஸ் பண்ட் (IPE Plus Fund) ல் முதலீடு செய்கின்றனர்!( இவ்வளவு பணம் இவர்கள் உண்மையில் சம்பாதித்தா என்பது வேறு கதை).

இந்த பண்டு வினோத் அதானி தொடங்கி நடத்தும் 13 அனாமதேயக்கம்பெனிகளில் ஒன்றாகும் .

ஹிண்டன்பர்க் , அதானி குழுமத்து முறைகேடுகளை, அவற்றில் முதலீடு செய்திருக்கும் செபி நிறுவன தலைவரே விசாரிப்பது அக்கறை முரண் இல்லையா? என கேள்வியை கேட்டவுடன் மாதவி புச்சும் அவரது கணவரான தாவல் புச்சும் கூட்டாக மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். அதில் எங்களுக்கும் அதானி குழுமத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக் கூறியிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள ஹிண்டன்பர்க், அதானி குழுமத்து பண்டுகளில் முதலீடு செய்துள்ள இத் தம்பதியர் தெரியாமல் செய்யவில்லை, ஏனெனில், இந்த பண்டுகளை நிர்வகிப்பவர்

செபி தலைவர் மாதவி புச்சின் கணவர் தாவல் புச்சின் பால்ய கால நண்பர் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதானி குழுமத்தின் உயர் அதிகார பொறுப்பில் உள்ளவர்.

அடுத்து , மாதவி புச் பேரிலுள்ள பங்குகளை , செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருந்த வரை தன் வசமே வைத்திருந்த மாதவி புச் செபி தலைவராக பொறுப்பேற்ற பின்தான் தனது கணவர் பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.

கூட்டுக் களவாணிகளான கணவனும், மனைவியும்.

அடுத்து , அகோரா கன்சல்ட்டிங் நிறுவனத்தை இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வரும் மாதவி , தனது பங்குகளை (99%) தனது கணவர் பெயருக்கு மாற்றி விட்டேன் என்றும், கணவர் ( தாவல புச்) தனது கன்சல்ட்டிங் தொழிலை இந்த நிறுவனம் மூலம் செய்கிறார்.

எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கூறினாலும், இந்தியாவிலுள்ள விசில் ப்ளோயர் (whistle blower) கொடுக்கின்ற தகவல்களின்படி, மாதவி பூரி புச் தனது தனிப்பட்ட மின் அஞ்சல் முகவரி (e mail id) மூலமாக இன்றளவும் இந்த நிறுவனத்தின் கன்சல்ட்டிங் வேலைகளை செய்கிறார. இதன் மூலம செபியின் தலைவராக இருந்து கொண்டே கன்சல்ட்டிங் தொழிலும் செய்வதை மாதவி புச் மறுக்க முடியுமா?

இதன் மூலம் இந்திய முதன்மை நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் சம்பாதித்த தொகை எவ்வளவு ? எந்த இந்திய நிறுவனங்களுக்கு இவர் ஆலோசனை வழங்கினார் என்று பொது வெளியியில் மாதவி கூற வேண்டாமா? என்ற கேள்விகளை மீண்டும் ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ளது!

இத்தகைய அக்கறை முரண்கள் (conflict of interest) இருப்பதால் தான் செபியினால் உச்ச நீதிமன்ற ஆணைப்படி அதானி குழுமத்தின் மீதான விசாரணைகளை முழுமையாக இறுதிவரை (logical conclusion ) நடத்த முடியவில்லை.

கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப் போல் பொதுமக்கள் அனைவரும் செபியின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணுகையில், இந்திய அரசோ, மோடி அரசின் நிதி அமைச்சகமோ இது குறித்து கருத்து எதுவும் கூறாமல் கள்ள மௌனம் காக்கின்றனர்.

ராஜீவ் சந்திரசேகர், சுதன்சு திரிவேதி, ரவி சங்கர பிரசாத் போன்ற சில்லுண்டிகளை வைத்து செபி தலைவருக்கெதிரான ஹிண்டன்பர்க் கேள்விகளையும், எதிர்கட்சியான காங்கிரஸ் எழுப்பும் சந்தேகங்களையும் ஏதோ வெளிநாட்டு சதியாக சித்தரித்து ‘ தேச பக்தி ‘ வேடம் போடுவது யாரையும் திருப்தி படுத்தவில்லை!

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புழங்கும் இந்திய பங்குவர்த்தக சந்தையின், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நிலையை நோக்கி நகர்கின்ற நாட்டின், ஒழுங்குமுறை ஆணையமான செபி உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தன்வசம் வைத்திருக்க வேண்டும். இந்த நம்பிக்கையை பேணுவதும், கட்டி காப்பதும் அரசின் கடமை மட்டுமன்று, நீதி மன்றங்களின் பொறுப்பு!

எனவே, இதிலுள்ள புதிர்களை விடுவிக்க , சந்தேகங்களை களைய ,உண்மையை வெளிக் கொண்டுவர, செபியின் நடு நிலைமையான ஒழுங்கை நிலைநாட்ட நமக்கு ஒரே வழிதான் உள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலம் பார பட்சமின்றி, தங்கு தடையின்றி, முழு வீச்சில் இதில் விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் .ஆனால் அத்தகைய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டிய இடத்தில் இன்று ஆட்சியாளர்கள் உள்ளனர்!

மோடி அரசு , இந்த பிரச்சினையில் தனக்கு பொறுப்பு உள்ளதை மறந்து , அதைக் கடந்துவிட எத்தனிக்கிறது.

முன்பு (24/01/2023) ஹிண்டன்பர்க் அதானி குழுமத்தின் மிகப்பெரிய மோசடியை அம்பலப்படுத்திய போதும் சரி, இப்பொழுது செபி யின் நடுநிலை தவறிய சமரசப் போக்கையும் அதன் அடிப்படையான அக்கறை முரணையும் வெளிஉலகிற்கு காட்டிய பின்பும் சரி, மோடி அரசு வாய்மூடி மௌனமாக இருக்கிறது.

எதிர்கட்சியினர் மீதும்,எளியோர் மீதும் பாயும் மோடி அரசின் புலனமைப்புகள் செபி பிரச்சினையில் பேசாமலிருப்பது மோடானி (MODANI) என்ற அடைமொழிக்கு பொருத்தமாக உள்ளது.

நாட்டின் வளங்களை எல்லாம் சட்டங்களை வளைத்து அதானிக்கு வழங்கும் மோடி அரசு,

முக்கியமான – கட்டுமானம்,எரி சக்தி, துறைமுகம்,ஏர் போர்ட், டேட்டா சென்டர், பாதுகாப்புபோன்ற – துறைகளில் அதானியின் ஏக போகத்தை வளர்க்கும் மோடி அரசு,

அதானியின் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விசாரிக்காமல் முடக்கி வைக்கும் மோடி அரசு,

உள் நாட்டில் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் அதானியின் ஆதிக்கத்தை நிலை நாட்டும் மோடி அரசு,

அதானியின் மீது அரசு அமைப்புகளே தொடுத்த வழக்கில் அதானிக்கு ஆதரவாக எட்டு (8) வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி அருண் மிஸ்ராவிற்கு , தேசீய மனித உரிமை ஆணையத்தலைவர் பதவி வழங்கி கொண்டாடும் மோடி அரசு,

இந்த பிரச்சினையிலும் செபி தலைவரின் நடவடிக்கை மூலம் அதானியை காப்பாற்றுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஆனால், இன்று நிலைமை 2023 போல் இல்லை என்பதே சற்று நம்பிக்கையை மக்களுக்கு கொடுக்கிறது.

மோடானி என்ற முகமூடியை தளராத முயற்சி மூலம் கிழித்தெறிய முயல்வது எதிர்கட்சிகளின் கடமை, அது மக்களின் கடமையும் ஆகும் !

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time