விளை நிலங்களை விலை நிலமாக்க புதிய மாநகராட்சிகள்!

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவின் வேறந்த மாநிலத்தை விடவும். கடந்த 3 ஆண்டுகளில்,  மக்களின் கடும் எதிர்ப்பை மீறி 28 பேரூராட்சிகள் புதிய நகராட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன. 10 புதிய  மாநகராட்சிகள் உருவாகி உள்ளன. கிராமப் புறங்களை விழுங்கி பெரு நகரமயமாக்குவதில் யாருக்கு ஆதாயம்? இதன் பின்னணி என்ன..?

திமுக ஆட்சியில் கடந்த மூன்றே ஆண்டுகளில் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி , திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 10 நகராட்சிகள்  மாநகராட்சிகளாக உருவாக்கம் கண்டுள்ளன.

ஒவ்வொரு நகராட்சி உருவாக்கமும் சரி, மாநகராட்சி உருவாக்கமும் சரி இவற்றின் அருகில் உள்ள கிராமங்களை விழுங்கியே உருவாக்கப்படுகின்றன. தமிழகத்தில் திமுக அரசு படுவேகமாக இயற்கை அழிப்பை நிகழ்த்திக் கொண்டுள்ளது.

இதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சியானது உருவாக்கம் பெற்றுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 கிராம ஊராட்சிகளையும், திருண்ணாமலை மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகள் சிலவற்றையும் ஒன்றிணைத்து  தான் திருவண்ணாமலை மாநகராட்சி உருவாக்கம் பெற்றுள்ளது.

நாமக்கல் நகராட்சி மற்றும் 12 கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி உருவாக்கம் கண்டுள்ளது.

காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு கிராமப் பேரூராட்சிகள், ஐந்து கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி உருவாக்கம் கண்டுள்ளது.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் வரை தென் இந்தியாவின் ஒரே மாநகராட்சியாக விளங்கியது சென்னை மட்டுமே.

1970 வரையிலுமே கூட தமிழகத்தின் ஒரே மாநகராட்சியாகத் திகழ்ந்தது சென்னை மட்டுமே.

1971 ல் காலாச்சார நகரமாகிய மதுரை நகரம், மாநகராட்சியாக பரிணாமம் பெற்றது. அதன் பிறகு பத்தாண்டு இடைவெளிக்கு பிறகு தொழில் நகரமான கோயம்பத்தூர் மாநகராட்சி அந்தஸ்த்து பெற்றது. இதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து 1994 ல் தான் திருச்சி, சேலம், திருநெல்வேலி  ஆகியவை மாநகராட்சிகளாயின! இதன் பிறகு 14 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தான் 2008 ல் ஈரோடு,திருப்பூர், தூத்துகுடி,வேலூர்  ஆகியவை மாநகராட்சிகளாயின!

இதன் பிறகு தான் பெருநகரமயமாக்கம் சற்று வேகம் பெற்று 2014 ல் தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சிகளாக்கப்பட்டது. 2019 ல் நாகர்கோவில், ஆவடி, ஓசூர் ஆகியவை மாநகராட்சிகளாயின! இவை நான்காண்டு இடைவெளிகளில் அடித்தடுத்து அறிவிக்கப்பட்டன.

ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ மூன்றே ஆண்டுகளில் அதிரடியாக 10 மாநகராட்சிகள் உருவாகப்பட்டுள்ளதானது உள்ளபடியே பெரும் அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக உள்ளது.

ஏனெனில், ஏற்கனவே மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் எதிர்பார்ப்புகள் எதுவும் நிறைவேறவில்லை என்பதுடன் யாதொரு வளர்ச்சியும், வாழ்க்கை தரமும் உயரவில்லை. இதில் ஆதாயமடைந்தவர்கள் ரியல் எஸ்டேட் தரகர்கள் மட்டுமே. வீட்டு வரி உயர்வு, சுகாதாரச் சீர்கேடுகள், சேரிகள் உருவாக்கம், தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவையே மக்களுக்கு கிடைக்கும் பரிசுகளாக உள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றது தொடங்கி நகரமயமாக்கமும், விவசாய பூமியை தொழில் துறைக்கு தாரை வார்த்து கொடுக்கும் போக்கும் மிகவும் அதிகரித்துள்ளது.

புதிய மாநகராட்சிகள் புதிய சேரிகளை தோற்றுவிக்கின்றன.

 

பழைய மாநகராட்சிகளைக் கூட அப்படியே விட்டு வைக்காமல் கிரேட்டர் மாநகராட்சிகளாக விரிவாக்கம் செய்து சுற்றுவட்டார கிராமங்களை விழுங்கி செரிக்கிறார்கள். அந்த வகையில் திருச்சி மாநகராட்சியை கிரேட்டர் திருச்சியாக அறிவிக்கப் போவதாக அறிவிப்பு வந்தவுடனேயே அதவத்தூர், கிழக்குறிச்சி, திருவெறும்பூர் ஆகியவற்றிலுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம சபைகள் கூடி தங்கள் கிராமங்களை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டாம் என தீர்மானம் இயற்றி, போராட்டம் நடத்தி மன்றாடினார்கள்.

இதே போல புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட தற்போது அறிவிக்கப்பட்ட மாநகராட்சிக்குள் வரக் கூடிய கிராம மக்கள் கொந்தளித்து போராடி வருவதை எல்லாம் ஊடகங்கள் வெளியுலகிற்கு சொல்லுவதே இல்லை. பேரூராட்சிகள் நகராட்சிகளாக்கப்படுவதை எதிர்க்கும் மக்களின் குரல்கள் ஆட்சியாளர்கள் செவிக்கு கேட்பதே இல்லை.

இவர்களின் கொந்தளிப்புக்கு காரணம், பெரு நகரமயமாக்கத்தால்  ஏரி, குளம், கண்மாய்களை அழித்து விடாதீர்கள். வரி உயர்வுக்கு ஆளாக்காதீர்கள். இந்த கிராமங்களின் இயற்கை வளத்தை நாங்கள் இழக்கமாட்டோம். நெல், தானியங்கள், காய்கறிகள் பயிரிட்டு வருவதை தடுக்காதீர்கள், ஆடு, மாடு மேய்ப்புக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள். 100 நாள் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள் என்று கதறுகிறார்கள். எங்கள் கருத்தை அறியாமல் எங்கள் மீது நகரமயமாக்களை திணிக்காதீர்கள் என்கிறார்கள் மக்கள்.

ஆனால், இந்த வேண்டுகோளை அரசாங்கம் காதில் போட்டுக் கொள்வதே இல்லை. முதலமைச்சருக்கு எத்தனை மனுக்கள் போட்டாலும் அவர் அதை ஒருபோதும் பிரித்து பார்க்கமாட்டார். ஊடகச் செய்திகளைக் கூட வாசிக்க ஆர்வமற்ற முதல்வரை தான் நாம் பெற்று இருக்கிறோம்.

இந்த அறிவிப்புகளின் பின்னணியில் இங்கெல்லாம் கால் பதிக்க காத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம் உள்ளது. இதற்கு மத்திய பாஜக அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது. உலக வங்கிகள், மற்றும் நமக்கு நிதி உதவி தந்து நாட்டை கடனாளியாக்கிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் அபிலாசைகள் உள்ளது.

[rb related title=”Also read” total=”2″]

மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால்  பளபளக்கும் சாலைகள், பாலங்கள் உருவாக்குதல், குடி நீர் வசதி செய்தல், குப்பை அகற்றுதல்…ஆகிய விவகாரங்களில் உலக வங்கி கடன், வளர்ச்சி அடைந்த நாடுகள் தரும் கடன், மேற்படி விவகார்ஙக்ளில் ஒப்பந்தக்கார்களிடம் பேரம் பேசி பணம் பார்க்கும் வாய்ப்பு மலர்கிறது. நிலமதிப்பு உயர்வதால் ரியல் எஸ்டேட் தொழில் கொடி கட்டிப் பறக்கும்.. இவற்றில் எல்லாம் ஆனவரை ஆதாயம் பார்க்கவே ஆட்சியாளர்கள் பெரு நகர விரிவாக்கத்தில் பெருவிருப்பம் காட்டுகிறார்கள். இதன் காரணமாக எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பையோ, இயற்கை அழிவுகளை குறித்தோ… இவர்களுக்கு கிஞ்சித்தும் கவலை கிடையாது.

இவசாய பூமியான இந்தியாவில் 1901 ல் நகரமயமாக்கம் என்பது வெறும் 11.4% மாகத்தான் இருந்தது. அதாவது இந்தியாவின் 89 சதவிகிதம் கிராமம் ஆகத் தான் இருந்தது. இந்தச் சூழல் 2001 –ல், இயற்கை சிதைக்கப்பட்டு 71.5% மட்டுமே கிராமங்களாக இருந்தன.

2017 ல் இந்தியாவில் சுமார் 66 சதவிதமே கிராம பகுதிகளாக எஞ்சியது. தற்போதோ சுமார் 60% மாக குறைந்துள்ளது! அதே சமயம் தற்போது நகரமயமாக்கம் தமிழகத்தில் மட்டும் இந்தியாவின் வேறெந்த மாநிலத்தைவிடவும் அதிகமான வகையில் நடந்தேறிய வகையில் 45 சதவிகிதமே கிராம பகுதியாக எஞ்சியுள்ளது. இது பேரழிவின் வேகத்தைக் காட்டுகிறது.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time